வன்னியில் சாகும் மக்களைச் சொல்லிப்பணம் குவிக்கமுனையும்புலம்பெயர் தமிழ் மாபியாக்கள்.

 

"ஈழப்போராட்டத்தின் கறைபடிந்த வரலாறு குருதியினால் எழுதப்பட்டதாகினும் அஃது ஒரு சில தமிழ்க் குடும்பங்களைச் செல்வந்தர்களாக்கியதில் இலட்சக்கணக்கான மக்களின் தலைகளைக் கொய்தெறிந்துள்ளதுதாம்.என்றபோதும், சிங்களஇனவாத அரசு தமிழ்பேசும் மக்களுக்கான அழிவைத் திட்டமிட்டுச் செய்ததன் பலாபலனேஇஃதென்பதில் எனக்குச் சந்தேகங் கிடையாது."



இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது-இயக்கத்தினது பின்பக்கம் ஒளிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி-இயக்க நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.


எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடும்,இனவாதத்தைத் தூண்டும் சுய அரசியற்றேவைக்ககான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.யுத்தத்தால் தமிழீழம் அமைக்க முடியுமென்றும்,அதற்காகப் புலம் பெயர்ந்தமக்கள் செய்யவேண்டியது தங்குதடையற்ற நிதியளிப்பு ஒன்றே தேவையென்றும் இப்போது புலிப் பினாமிகளால் திட்டமிட்டுப் பிரச்சாரப்படுத்தப்படுகிறது.மிக நுணுக்கமாகக் கட்டியமைக்கப்படும் இத்தகைய தந்திரம் மக்களைக் கொள்ளையடித்துப் பணஞ் சேர்க்கும் மாபியாக்கூட்டத்தை உருவாக்கியுள்ளது!இது,வன்னியில் சிக்குண்ட மக்களைத் தனியே கொல்லவில்லை கூடவே,புலம் பெயர்ந்த மக்களையும் சுரண்டிக் கொண்டேதாம் அங்கு கொலைகளைச் செய்து பணத்தைத் திரட்ட முனைகிறது.




கடந்த காலங்களில் குறிப்பிட்ட இயக்கங்களது தலைவர்களின் சொத்துக்கள் இங்ஙனஞ் சேர்க்கப்பட்டதுதாம்.இது, காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறியபோது, பூர்ச்சுவா வர்க்கக் குணாம்சத்தோடு மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி, மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இயக்கச் சர்வதிகாரமாக மாறியது.இது,மக்கள் போராட்டம்,புரட்சி-விடுதலை என்றதெல்லாம்,தத்தமது இருப்புக்கும்,தமது சொத்தைக் காப்பதற்கான வியூகத்துக்குமானதாகவே இருந்தது.இத்தகையபோக்குள் சிக்கிய இயக்கத் தலைமைகள், மக்களை அழித்த இரத்த வரலாறை எழுதியதைத் தவிர நமது மக்களுக்கு எதை இவர்களால் வழங்கமுடிந்தது?


இந்த மோசமான சமூக விரோத நடவடிக்கைகளைக் கேள்வி கேட்கும் மாற்றுக்கருத்தெழுவதற்கானவொரு சூழல் வலுமூர்க்கமாக அழித்தொழிக்கப்படுகிறது.இது, தேசத்தினது பெயரால்-தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டபடி"புலிகளை எதிர்பவர்கள் தமிழர்களை எதிர்பவர்கள்"என்றும் கருத்துக் கட்டுகிறது.இத்தகைய கருத்துக்களின் பின்னே மறைந்திருக்கும் அதிகார மையம் பாசிசத்தால் தன்னை இருத்திக் கட்டிக்காத்து வருகிறது.இங்கே,மக்களின் துயரங்கள் துன்பங்கள் யாவும் சிங்களப் பாசிச அரசுக்கும்,புலிகளுக்கும் மற்றும் குழுக்களுக்கும் பதவி மற்றும் பொருள் திரட்டும் அரசியல் செய்வதற்கானவொரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பரிதாபம் நிலவுகிறது.அப்பாவி மக்கள் உயிர்வாழ்வதற்காகத் தமது எதிர்கால விடிவை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.வன்னியில் யுத்த வலயத்துள் சிக்குண்ட மக்கள் எங்கேயும் இடம்பெயரமுடியாதளவுக்கு இராணுவத்தினதோ அன்றிப் புலிகளது குண்டோ மிகவும் கறாராகக் கவனித்துக்கொண்டிருக்கின்றன.இவை எந்த நேரத்தில் எப்படி வெடிக்குமென்பதை தற்கொலைக் குண்டுதாரிகளே தீர்மானிக்கிறார்கள்.தத்தமது உடலை எதன் பெயராலும் அழிக்க முனையும் அவர்கள்,பொது மக்களின் உயிரை மசிருக்கும் மதிக்கமாட்டார்கள் என்பதை நாம் தொடர்ந்து கவனிக்க முடியும்!இந்தச் சூழலிலும் புலம் பெயர்ந்த மக்களிடம் பணம் பிடுங்குவதைத் தீவிரப்படுத்தும் மனித நேயமற்ற புலிப்பினாமிகளை என்னவென்பது!

 


வன்னியில் தொடரும் நாசகார யுத்தம்,இலங்கை அரச வரலாற்றில் என்றுமில்லாதவாறு மனித அவலத்தைத் தொடக்கிவைத்துள்ளது.மக்கள் எதன்பெயராலோ சாகடிக்கப்படுகிறார்கள்.மக்களின் அழிவை வைத்து-அவர்களது பிணங்களை வைத்து அரசியல் செய்யும் ஒவ்வொரு மனதர்களினதும் அக விருப்பும் தாம் சார்ந்தியங்கும் அரசியலுக்கு(முடிந்தவரை மக்களை மொட்டையடித்துப் பொருள் திரட்டுவது) வலுச் சேர்ப்பதில் நியாயங்களை அடுக்குகிறது.எனினும்,அப்பாவி மக்களை எந்த ஊடகத் தர்மமும் தமது வர்க்க நலன்களைக்கடந்து அணுகவதற்கு முனையவில்லை-இந்தச் சோகத்தை வெளிப்படுத்தவில்லை.அதாவது,வன்னி மக்களின் அழிவில் நிதிமூலதனமாகப் புலம் பெயர் மக்களின் குருதி மாறுகிறதை எவரும் அம்பலப்படுத்தவில்லை என்கிறேன்.


வன்னியில் தொடரும் யுத்தங்களின் பின்னே ஏற்படும்"வெற்றி-தோல்விகள்"இலங்கையின் இராணுவப் பிடியிலிருந்து தமிழ் பேசும் மக்களை ஒருபோதும் விடுவிக்க முடியாது.தமிழ்பேசும் மக்கள் தமது விடுதலையை வென்றெடுப்பதற்கான நிபந்தனைகளை உருவாக்காது தமது விடுதலை குறித்த கற்பனைகளை வளர்த்துள்ளார்கள்.புலித் தேசியத்தினூடாகவும்,ஓட்டுக் கட்சிகளின் அற்பத் தனமான பரப்புரைகளாலும் இந்த மக்களின் விடுதலையென்பது வெறும் வடிகட்டிய முட்டாள் தனமான யுத்தங்களால் பெற்றுவிட முடியுமெனுங் கருத்து இன்னும் ஓங்கியுள்ளது.இன்றைய புலிகளின் பின்னடைவு-அழிவினது காலவர்த்தமானத்தில்,எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமெனும் நிலைக்குப் புலிப் பினாமிகள் வந்துள்ளார்கள்!அவர்கள், இப்போது ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவெங்கும் மக்களை ஏமாற்றிப் பணஞ் சேர்க்கிறார்கள்.இதைத் தவிர வேறெதை ஈழப் போராட்டம் நமக்குத் தந்துள்ளது?இலட்சக்கணக்கான பிணங்களின் நடுவே பொருள் குவிக்கப்பட்ட வரலாறாக இந்த ஈழப்போராட்டம் இன்னும் சேடம் இழுக்கிறது!அப்பாவிகள் ஏமாறும்போது ஒருசில புலிப்பினாமி மாபியாக்கள் கோடீஸ்வரர்களாக மாறுவது நிகழ்ந்து விடுகிறது!

இங்கு,இன்னுமொரு கேடான காரியத்தையுங்கூடவே செய்கிறார்கள்.அதுதாம் இனவாதம்!அவசரகால நிதியாக ஆயிரம்-இரண்டாயிரம் யூரோக்களைத் தண்டமாகப்பெறும் ஐரோப்பியப் புலிகள் இன்னும் இனவாதத்தைக் கிளறி"புலி இல்லாத சூழலில் சிங்களவருக்கு அடிமையாகத்தான் வாழவேணும்"எனவே,புலிகளைக் காக்க-ஈழவிடுதலையைப் பெறவென யுத்தகால நிதியெனும் போர்வையில் புலம் பெயர்ந்த மக்களை ஒட்ட மொட்டையடிப்பதில் வேகமாகச் செயற்படுகிறார்கள்.இஃது, உணர்த்துவது என்னவென்றால்-மக்கள் போராட்டமென்பதெல்லாம் பணம் சேர்க்கும் அரசியலாக மாறிவிட்டபின்பு,மக்கள் செத்தாலென்ன-வாழ்ந்தாலென்ன? என்ற அரசியலைத்தாம் உணர்த்துகிறது!இத்தகைய இழி நிலையை, எந்த ஊடகங்கள் அம்பலப்படுத்தி மக்கள் விரோதிகளைத் தண்டிப்பதற்கான முறையில் மக்களை அண்மித்த அரசியலைச் செய்கிறார்கள்?

இன்றைக்கு வன்னியில் செத்து மடியும் மக்கள் ஏதோவொரு விதத்தில் இத்தகைய மக்கள் விரோதிகளுக்குப் பொருள் சேர்க்கும் ஊடகமாக இருக்கிறார்கள்.பிணங்களை வைத்துச் சுனாமி நிதி சேகரித்தவர்கள் எங்கே-எப்படிக் கொழுத்த முதலாளிகளாக மாறினார்களோ அப்படியே இன்னொரு கூட்டம் இந்த வன்னி அவலத்துக்குள் மாறுவதற்கு முனைகிறது!இதுவொரு சாபக்கேடானவொரு இருண்ட சூழல்.தமிழ் பேசும் மக்களின் அனைத்து வகை இருப்பையும் வியாபாரமாக்கும் இந்த மக்கள் விரோதிகள், நமது மக்களின் உண்மையான உரிமைகளுக்காக எப்போதுமே குரல்கொடுக்கவில்லை!மக்களைச் சொல்லிப் பேரம் பேசியவர்கள் இன்று தமது அழிவிலும் தம் விசுவாசிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய மௌனமாக ஒப்புதல் கொடுத்துள்ளார்கள்.இது,உண்மையிலேயே ஒரு கிரிமினல் குற்றம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
10.02.2009