ஈழத்தமிழ் மக்கள் மீத இலங்கை அரசால் ஏவிவிடப்பட்டிருக்கும் போர் நடவடிக்கைகள் எட்டாம் தேதியோடு நிறுத்தப்படவேண்டும், இல்லையேல் 9ஆம் தேதி  வழக்கறிஞர்கள் முல்லைத்தீவு நோக்கி பயணம் செல்வோம் என தூத்துக்குடி மற்றும் கரூர்  வழக்கறிஞர்கள் சங்கங்களில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தார்கள். இதன்படி இன்று கரூரில் எட்டுவழக்கறிஞர்களும், தூத்துக்குடியைச்சேர்ந்த ஆறு வழக்கறிஞர்களும் முல்லைத்தீவு நோக்கி காலை பத்து மணிக்கு கிளம்பினர். இந்த வழக்கறிஞர்களில் முருகேசன் கருர் (மனித உரிமைப் பாதுகாப்பு மையம் - ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) ம.உ.பா.மையத்தின் அமைப்பாளர், ராமச்சந்திரன் தூத்துக்குடி ம.உ.பா.மையத்தின் செயலாளர், ஹரி ராகவன் தூத்துக்குடி ம.உ.பா.மையத்தின் தலைவர் மற்றும் செல்வம்,வேலு ம.உ.பா.மையத்தின் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். சற்று முன்னர் கிடைத்த தகவலின் படி இந்த வழக்கறிஞர்கள் சுமார் ஐம்பது கி.மீட்டர் வரை கடலுக்குள்  சென்றுள்ளனர். ஒன்றரை நாளில் முல்லைத் தீவு அடைந்து விடுவதாக திட்டம்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜூ படகில் சென்று கொண்டிருக்கும் வழக்கறிஞர்களிடம் செல்பேசியில் பேசினார். அவர் நமக்குத் தந்துள்ள தகவலின் படி எப்படியும் முல்லைத் தீவு செல்வது என அவர்கள் உறுதியுடன் உள்ளதாகவும் இதை வைத்து போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கு தங்களது இந்த சாகசப் பயணம் வழிவகுக்கும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை வழக்கறிஞர்கள் இன்று ஈழப்பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருக்கும் அரங்கில் படகில் சென்று கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் செல்பேசி ஸ்பீக்கர் மூலம் உரை நிகழ்த்தி அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாளை நீதிமன்ற பணிக்கு வழக்கறிஞர்கள் திரும்புவதாக இருந்த திட்டமும் இந்தப் படகு பயணத்தின் மூலம் ரத்தாகலாம் என்றும் தெரிகிறது.

 

 

india-srilanka1

 

 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இந்தப் படகு பயணத்தைப் பற்றி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும் தெரிகிறது. தமது உயிரைப் பற்றி கவலைப்படாமல் சில வழக்கறிஞர்கள் ஏதாவது செய்து போரை நிறுத்த வேண்டும் என துடிப்பது ஓட்டுக்கட்சிகளுக்கும், மத்திய அரசுக்கும் கேட்கப்போவதில்லை.  அப்படி கேட்கும் அளவு         பெரும் எழுச்சியை தமிழக மக்கள் எழுப்புவார்கள் என்ற நம்பிக்கையோடு சில வழக்கறிஞர்கள் தம் உயிரைப் பணயம் வைத்து இந்த சாகசப்பயணத்தை துவக்கியிருக்கிறார்கள். மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள்தான்   சிதம்பரம் நடராசர் கோவிலை அரசு வசம் ஆக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.