Tue01282020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

நாம் எல்லோரும் இலங்கையர்...இலங்கை:உலகை முன்னுதாரணமாக்கொண்டு போரிடுகிறது?

  • PDF

இலங்கையில் சிறுபான்மை இனங்களுஞ்சரி அல்லது பெரும்பான்மை இனமாலுஞ்சரி-இந்த, மக்கள் கூட்டம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்து ஒளிமங்கிக் கிடக்கிறது.பிராந்திய

 நலனுக்கும் பொருட் சந்தைக்கும் நடக்கும் போராட்டத்தில் அந்நியச் சக்திகளே முதன்மையான பாத்திரத்தை இலங்கையில் கொண்டிருக்கும்போது நமக்கான விடுதலை,சுதந்திரம்,சுயநிர்ணயமென்பதெல்லாம் பகற்கனவாகும்.இங்கே, இலங்கை மக்களின் உரிமைகளென்பவை அந்நியச் சக்திகளின் தயவில் பெறும் விடையமல்ல.மாறாக, இலங்கை மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு அரசியற் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கானவொரு மக்கள் எழிச்சியை செய்து இத்தகைய புறச் சக்திகளைத் தோற்கடிப்பதற்கானவொரு அரசியல் விய+கத்தைக் கட்டியமைக்க வேண்டும்.புலிகளல்லாத இலங்கை அரசியற்போக்கில் இது அவசியமானவொரு பணி.இனங்களுக்கிடையிலானவொரு நட்பார்ந்த பரஸ்பரப் புரிந்துணர்வின்றி தொடரப்போகும் மகிந்தா குடும்பத்து அந்நியச் சேவையை முறியடிக்க முடியாது.

இலங்கையில் இன்னொரு பாசிசச் சர்வதிகாரத்தைத் தடுதாட்கொண்ட இராஜபக்ஷயின்பின்னே அணிதிரண்டிருப்பவர்கள் யாவரும் எம்மை அண்மித்துவரும் உலகப் பொருளாதாரப் போக்குகளின் திசைவெளியில் சிக்கிய தென்கிழக்காசியத் தரகு முதலாளியக் குடும்பங்களாகும்.இவர்கள் இலங்கையிலோ அன்றி இந்தியப் பெரு நிலப்பரப்பிலோ ஒரு வகைமாதிரியான தேசிய வாதத்தை முன் தள்ளியபடி தமக்கிசைவானவொரு இராணுவப்படையணியைக் கட்டியுள்ளார்கள்.இந்த இராணுவத்தின் முன் புலிகள்போன்றவொரு அணி அவசியமற்றுப்போனதன் பின்பான காலம், தமிழ் மக்களினது உயிர்களைப் பறித்தாவது புலிகளின் இருப்பை அழித்துவிடுவதில் இன்றைய போர் இதே உலக அரசியலை நகலெடுக்கிறது.இந்த உலக அரசியலை,கடந்த இரு தினங்களாக ஜேர்மனிய முன்ஞ்சன் நகரில் நடைபெறும் பாதுகாப்பு மகாநாட்டினது பேராளர்களின் உரையில் மிக இலகுவாகப் புரியமுடியும்.

ஆவ்கானிஸ்த்தான் அதிபர் கார்சாய்(Karsai),தனது தேசத்தில் 65 மில்லின் மக்களுக்கு 40 பொலிஸ் அலுவலகங்களே இருப்பதால் அங்கே பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகச் சொல்கிறார்,முன்ஞ்சனில்.போதைப்பொருள் பயிரிடும் மேற்குலக அரசியலைப் பயங்கரவாதிகளுக்கானதாகச் சொல்லிவிடும் அவர்,அதைப் பெரும்பாலும் தலிபானுக்குரிய தொழிலாக நிறுவுகிறார்.இங்கே,அமெரிக்கக் குரல் ஓலமிடுகிறது.


ஜேர்மனியப் பாதுகாப்பு மந்திரியோ,அவ்கானிஸ்த்தானில் ஒரு பெண் கல்விக்கூடஞ் செல்லத்தக்க சூழலைத் தாம் செய்துள்ளதாகவும்,இன்று,ஒரு மில்லியன் பெண்கள் பாடசாலைபோவதாகுவும்,குளங்கள்,கால்வாய்கள் கட்டப்பட்டு அங்கே,தேனும் பாலும் ஓடவிடப்படுவதாகவுஞ் சொல்லிக்கொள்கிறார்.இவைகளைத்தொடர மேலுஞ் சிக்கலிடும் தலிபானை முறியடிக்க இன்னும் பெரும் படைகளை அங்கே குவித்து, அப்பாவி மக்களைக் காத்தாக வேண்டுமென்கிறார்.அவ்கான் அரசியல் வரலாற்றைக் கற்பவர்களுக்குத் தெரியும் இவர்களது உண்மையான முகம்.அமெரிக்கா தொடர்ந்த இந்த அரசியல்-பொருளாதார நோக்கங்களுக்கு மேற்குலக நாடுகள் நல்லவொரு முகமூடியை ஜனநாயக மூலகங்கொண்டு தயாரித்து மேலாதிக்க யுத்தத்தைத் தொடர்கிறபோது,அண்ணல் மகிந்த இராஜபக்ஷவுக்குச் சொல்லியா கொடுக்கவேண்டும்?


வன்னியில் வரம்பின்றித் தொடரும் இனவழிப்புக்குப் பெயர்:"மக்களை விடுவிப்பது,பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும்,மக்களையும் காத்துக்கொள்வது!"இதுவரை,தமிழர்களின் உரிமைகள் குறித்து எதுவுமே சொல்லாத-பேசாத அரச தலைவர் இலங்கையில் இருக்கிறாராவெனக் கேள்வியெழுந்தால்-அத்தகைய தலைவருக்கு உதாரண புருஷர்:அண்ணல் மகிந்தாவே!இவரது வருகைக்குப்பின் இலங்கையர்கள் என்றவொரு தேசிய இனம்தாம் உண்டு.இதைக்கடந்து இலங்கையில் இனங்கள் கிடையாது.


"நாம் எல்லோரும் இலங்கையர்,நமது மொழி சிங்களம்"என்பது அவருக்குப் பின்னால் நிழலாடும் மந்திரம்.


இது,தகவமைக்க முனையும் இலங்கை அவரது அரச ஆதிகத்துக்கு வெளியேதாம் கருக்கொண்டது.பெரும்பாலும் புதியவொரு பொருளாதாரக்கூட்டை நட்போடு வரவேற்ற சிங்கள ஆளும் வர்க்கமானது இந்தத் தெரிவைத் தமது இருப்புக்கு ஆதாரமாகக் கருதியதன் விளைவில்,மகிந்தா இந்தக் கயிற்றில் அழகான இனவொருமைப்பாட்டூஞ்சலைக் கட்டி,அழுது கண்ணீர்விடும் தமிழ் அரசியற் குழந்தைகளை அதிலிட்டுத் தாலாட்டி, விஸ்க்கோத்துக் கொடுக்கிறார்.


இது,புலிகளுக்குக் குண்டுகளைக் கொடுக்கின்ற அதே கையால் வன்னியில் சிறைப்பிடிக்கப்படும் மக்களுக்குக் கணிசமான கல்லறைகளை எங்கோ இடம் புரியாத-திசை தெரியாத திக்கில் கட்டிவைக்கிறது!இது,அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள் செய்த-செய்யும் அதே ஜனநாயக முன்னெடுப்பாக இருப்பதால்,இவர்கள் யாருமே இலங்கைக்கு எதிராக ஒரு மசிரைத்தானும் புடுங்க முடியாது!வன்னியல் மரணிப்பவர்களை அவ்கானிஸ்தானிலும்,காசாவிலும்,ஈராக்கிலும் இத்தகைய தேசங்கள் புதைக்கின்றன.இதன் பின்னாலான உலக ஆளும்வர்க்கத்தின் பெருவிருப்பு ஜனநாயகம் என்பதில் இவர்கள் எல்லோரும் அதையொட்டி அரசியல் செய்ய, இவர்களது "புதைகுழிஜனநாயகத்தை"த்தாம் நாம் மகத்தானதாகக் காணும் சந்தர்ப்பத்தை பி.பி.சி.முதல் சி.என்.என்.வரை தருகின்றன.புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் எந்தக் கூச்சல்போட்டாலும் எவரும் காணப்போவதில்லை!நாம் இவர்களைத்தானே இதுவரை நம்பியிருந்தோம்?எமக்கு இவர்களைவிட்ட இன்னொரு உலகம் தெரியாமலே இப்போதும் இருக்கிறதே-இதுதாம் அடுத்த அவலம்!

 இத்தகைய காலவர்த்தமானத்துள்,கண்டெடுக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை மகிந்தா இராஜபக்ஷ இலங்கைக்குள் சவாரிவிடும்போது,வன்னியில் சாகும் அனைவரும்"புலிப்பயங்கரவாதிகள்"என்பதை உலகமும் ஏற்கிறது.அந்தவகையில் உலகம் புலிகளிடம் கருணை காட்ட முடியாதாம்.எனினும்,இலங்கைக்குள் நிலவும் பாரிய பொருளாதாரச் சமமின்மையானது நிலவுகின்ற ஆட்சியைத் தூக்கியெறியும் வர்க்கவுணர்வாக ஏற்றுமுற்றிருக்கும் தருணங்களில் இந்தத்தேசங்களால்-கட்சிகளால் இத்தகைய கோசங்கள்-இராணுவ முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டு மிகக் கவனமாக மக்களரங்கு வருகிறது.அங்கே, மக்களின் அடிப்படை முரண்பாடு வெறும் இராணுவாதத் தந்திரத்தால் மழுங்கடிக்கப்பட்டு, அதைப் பின் தள்ளி இராணுவாதம் உளவியற் தளத்தில் கூர்மையடைகிறது.இது,இலங்கையில் இன்னொரு சிங்களப் பொற்காலத்தைத் தகவமைக்கிறது சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு.இப்போதைக்குச் சிங்களத் தொழிலாள வர்க்கத்துக்கும் இஃது தேசியப்பசி போக்கிவிடுவதால் அவர்களும் தமது பிள்ளைகளைப் போருக்கு அனுப்பிச் சவப்பெட்டிகளைக் காண அவாவுற்றுக் கிடக்கிறார்கள்.என்னவொரு இலங்கை அரசியல்!எங்கே,மாற்றுத் தலைமைகள்-அரசியல்,இடதுசாரியப் பாரம்பரியம்?


இன்றைய வன்னிப் போரோடு புலிகள் துடைத்தெறியப்பட்டபின் எஞ்சுவது என்ன?


"காலாகாலமாகத் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்ட அரசியல் வரலாற்றில் புலிகளும் தமக்கான பங்கை உயிர்ப்பலிகளினூடே ஆற்றியுள்ளார்கள்"என்ற சிறு குறிப்பே எஞ்சிவிடும்!இது,தமிழ்பேசும் மக்களுக்கான விடுதலை!போதும்,இதைவிட வேறென்ன அவசியம்?அப்படி அசியமானால் இருக்கவே இருக்கிறது:மாவீரர் கல்வெட்டும்,துரோகிகள் கல்லறைகளும்!இதுவும் போதாதென்றால்,மகந்தா குடும்பத்து அந்நியச் சேவையில்"பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு" இன்னொரு புலிகள் இலங்கை பூராகவும்-அனைத்து இனங்களுக்குள்ளும் உருவாகப்படும்.ஏனெனில் இலங்கையின் உண்மையான பிரச்சனைகள் அப்படியேதாம் இருக்கிறது.இதுதாம் உலகத்துக்கும்,குறிப்பாக அமெரிக்காவுக்குமான இலங்கைச் சூழலாகும்.இனப் பிரச்சனையோடுகூடிய அனைத்து முரண்பாடுகளும் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இலங்கையே அவர்களுக்கு அவசியம்.இதைத்தாம் இந்தியாவுக்கும் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.இந்நியாவில் உறங்கிக்கிடக்கும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பிறிதொரு பாணியில் காஷ்மீரில் விடியும்.


இற்றுவரை ஈழத்தில் ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் உயிர்கள் ஈழக்கோசத்தால் பலியிடப்பட்டுள்ளார்கள்.சுமார்4.5 றில்லியன் ரூபாய் பெறுமதியான உடமைகள் போரினால் நாசமாக்கப்பட்டும்,முப்பதினாயிரம் பெண்கள் விதவைகளாகவும்,கிட்டத்தட்ட அதே தொகை சிறுவர்கள் முடமாக்கப்பட்டும் இந்தத் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்குப் பிரபாகரனும் அவரது தப்பான பதவி ஆசையுமே காரணமானதல்ல.மாறாக,இத்தகைய பிரபாகரன்களை உருவாக்கிய அந்நியச் சக்திகளும்,இலங்கையின் இனவாத அழிப்புமே காரணமாகிறது!இப்போதைக்கு ஒரு பிரபாகரனின் முடிவில், இலட்சக்கணக்கான மக்களின் புதைகுழிகள் தோண்டப்பட்டன.இனிவரப்போகும் பிரபாகரன்கள் இன்னும் எத்தனை புதைகுழிகளைத் தோண்டுவார்களோ அது எவருக்குமே இப்போது புரியாது,அந்த ஆண்டவரைத் தவிர!


இத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமனலாக இருக்கும் அந்நியத் தேசத் தலைமைகளை-இலங்கை அரச அதிபரை மனிதவுரிமைச் சட்டவரைவுகளுக்கொப்ப டென்காக்கில் தண்டித்தாகவேண்டும்?அப்படியா,நல்லது!அதுவும் இவர்களாலேதாம் உருவாக்கப்பட்டது.அங்கே,மிலேசேவிச்சுக்களுக்குத்தாம் கல்லறைகள் கட்டப்படும்.ஜோர்ஜ் புஷ்சுக்கோ, ரோனி பிளேயருக்கோ அன்றி மகிந்தாவுக்கோ அங்கே இடமில்லை.ஏனெனில்,இவர்கள் தாம் "ஜனநாயகத்தை" தத்தமது தேசங்களில் தொட்டிலிட்டுத் தாலாட்டுபவர்களாச்சே!இதற்கு உதாரணமாக:ஈராக்கும்,அவ்கானிஸ்தானும் மட்டுமல்ல இப்போது வன்னியும் இருக்கிறது-வாழ்க, இவர்களது ஜனநாயகம் காசா(Gaza) வழி!

ப.வி.ஸ்ரீரங்கன்
08.02.2009


Last Updated on Monday, 09 February 2009 07:10