Language Selection

வினவு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மார்ச்-2, 2008 தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறியது.

பிப்ரவரி-2, 2009 தில்லைவாழ் அந்தணர்களின் இடுப்பிலிருந்து சிதம்பரம் கோயிலின் சாவிக் கொத்து இறங்கியது. நாம் நினைவில் வைத்துக் கொள்ளத் தோதாக இரண்டு முக்கியமான நிகழ்வுகளும் 2ம் தேதியிலேயே நடக்கும் படியாக செய்திருக்கிறான் இறைவன். எல்லாம் அந்த ஆடல்வல்லானின் திருவருள்!

 

தீட்சிதர்களிடமிருந்து கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலைய ஆட்சித் துறையின் கைகளுக்கு மாற்றும் தீர்ப்பை வழங்கியவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி. ஏற்கெனவே ஸ்வாமி பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் இவர்தான் என்பது இங்கே நினைவுகூறத்தக்கது. தீர்ப்பு கிடைத்த ஒரு வாரத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

thillai1

 

என்ன ஆச்சரியம்! 2 ம் தேதி இரவே கோயிலின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள அரசாங்கம் முடிவெடுத்துவிட்டது. 3 ம் தேதி விடியும் வரை தள்ளிப்போட்டால் அதற்குள் தீட்சிதர்கள் ஒரு ஸ்டே ஆர்டரை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்களோ என்று அரசாங்கத்துக்கு பயம்! அவாள் மேட்டர் என்றால் கோர்ட் கதவுகள் அர்த்த ராத்திரியிலும் திறக்குமே! சங்கர ராமனைப் போட்ட சங்கராச்சார்ய ஸ்வாமிகளுக்காக ஸண்டே யில் ஸிட்டிங் போடவில்லையா சென்னை உயர்நீதிமன்றம்!

ஆனபடியினாலே, 2 ம் தேதி ராத்திரி 8.30 க்கெல்லாம் அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி கோயில் வாசலில் ஆஜராகி விட்டார். ஆனால் அதற்கு முன்னமே நமது தோழர்கள் கோயில் வாசலில் வெடி வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று வஜ்ரா வேன், ஸ்டிரைகிங் போர்ஸ், வெள்ளை வண்டி, நீல வண்டி என ஒரு போலீசு பெரும்படை கோயிலை சுற்றி வளைத்தது. மொத்தம் சுமார் 600 போலீசார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் சாவியை தீட்சிதர்கள் E.O கையில் கொடுக்கவேண்டும். அதை வாங்கிக் கொடுக்கத்தான் இத்தனை ஏற்பாடு.

“எங்களுக்கு ஆர்டர் காப்பி வரவில்லை” என்று வாதாடினார் தீட்சிதர்களின் வக்கீல். “இந்த ஆர்டர் காப்பியை நீங்கள் வாங்காவிட்டால் கோயில் கதவில் ஒட்டிவிட்டு அடுத்த ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்றார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். சாவி கைமாறியது.

மறுநாள் காலை செஞ்சட்டை அணிந்த தோழர்கள் கோயில் வாசலில் திரண்டிருந்தனர். கூட சிவனடியார் ஆறுமுகசாமி. காவலுக்கு வந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி நரேந்திரன் நாயர் “சிவப்பு சட்டை போட்டவங்கள்லாம் கோயிலுக்குள் போகக்கூடாது” என்று தடுத்திருக்கிறார். “அப்படி எந்த சட்டத்தில் இருக்கிறது?” என்று கேட்டிருக்கிறார்கள் தோழர்கள். போலீசிடம் போய் சட்டம் பேசலாமா? உடனே தகராறு. அனைவரும் கைது. முழக்கங்கள்… வாசலில் காத்திருந்த டி.வி காமெராக்கள் எல்லாவற்றையும் படம் பிடிக்கவே, உடனே அனைவரையும் விடுவித்தார் ஏ.எஸ்.பி.

“யாரும் வெடி வெடிக்க கூடாது” என்று அடுத்த உத்தரவைப் பிரகடனம் செய்தார் ஏ.எஸ்.பி. “இந்த வழக்கை நடத்தியது நாங்கள். 20 ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தை காதைப்பிடித்து இழுத்து வந்து நீதிமன்றத்தில் பேச வைத்தது நாங்கள். இன்று இந்து அறநிலையத்துறையின் கையில் சாவியை வாங்கிக் கொடுத்திருப்பது நாங்கள். இது எங்கள் வெற்றி. அதை நாங்கள் கொண்டாடுவோம். நீங்கள் யார் கேட்பதற்கு?” என்று முகத்தில் அடித்தாற்போலக் கேட்டார் வழக்குரைஞர் ராஜு (மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்)

“எனக்கு அதைப்பத்தியெல்லாம் தெரியாது. லா அண்டு ஆர்டர்தான் என்னுடைய பிரச்சினை” என்றார் ஏ.எஸ்.பி.

” லா அண்டு ஆர்டரை சிதம்பரம் போலீசு பாதுகாக்கும் லட்சணம் எங்களுக்கு தெரியும். எவனாவது சொம்பு திருடினால் முட்டியை உடைப்பீர்கள். அம்மன் தாலியை தீட்சிதர்கள் திருடி விட்டதாக ஒரு தீட்சிதரே புகார் கொடுத்திருக்கிறார். கைது செய்திருக்கிறீர்களா? திருட்டு, விபச்சாரம், கொலை என்று எத்தனை வழக்குகள் தீட்சிதர்களுக்கு எதிராக இருக்கின்றன, ஒரு வழக்கையாவது சிதம்பரம் போலீசு நடத்தியிருக்கிறதா? உங்களுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் நாங்கள் வழக்கு போட்டிருக்கிறோம். அதுவாவது உங்களுக்கு தெரியுமா? வெடி வெடிப்பதுதான் லா அண்டு ஆர்டர் பிரச்சினையா?” என்று வெடித்தார் ராஜு.

இதற்கு மேல் ஒரு போலீசு அதிகாரி பேச வேண்டிய வசனத்தை பேசினார் ஏ.எஸ்.பி. “வெடித்தால் கைது செய்வேன்”

“கோயில் வாசலில் நானே வெடியைக் கொளுத்துகிறேன். முடிந்தால் கைது செய்யுங்கள்” என்றார் ராஜூ.

“கோயிலுக்கு உள்ள்ளே வெடிச்சா அர்ர்ரஸ்டு பண்ணுவேன்னு சொன்னேன்” என்று உறுமி ஜகா வாங்கினார் ஏ.எஸ்.பி வடிவேலு.

வெடிகள் முழங்கின. கோயில் வாசலில் நின்று கொண்டிருந்த சிவனடியார் ஆறுமுகசாமியின் காலில் விழுந்து திருநீறு வாங்கினார்கள் பக்தர்கள் “மலையைப் புரட்டிட்டீங்க சாமி” என்று அவரைப் பாராட்டினார்கள்.

“எதுவும் என் செயல் அல்ல, எல்லாம் இந்த ம.க.இ.க கட்சி தோழர்கள், வக்கீலு தம்பி அவுங்கதான் செஞ்சது” என்றார் சிவனடியார்.

“எல்லாம் அவன் செயல்” என்ற வசனத்தை அல்லவா சிவனடியார் பேசியிருக்க வேண்டும். பேசவில்லையே, இதுவும் அவன் செயலோ!

தீட்சிதப் பார்ப்பனர்களின் ஆயிரமாண்டு ஆதிக்கத்தை வீழ்த்தி ஆலயத்தை அறநிலையத்துறையின் கையில் ஒப்படைத்திருப்பது அவனும் அல்ல, சிவனும் அல்ல, எவனும் அல்ல… அது ம.க.இ.க வும் அதன் தோழமை அமைப்புகளும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்களும்தான் என்பதை இந்து அறநிலையத்துறையின் அதிகாரிகள் அனைவரும் அறிவார்கள். இதற்காக நூறு முறை அவர்கள் நன்றியும் கூறிவிட்டார்கள்.

ஒரு பத்தாண்டுகள் பின்னே போவோம். 1997 - அதுவும் கலைஞர் ஆட்சிதான். அப்போது இதே சிதம்பரம் கோயிலில் அறநிலையத்துறையின் அதிகாரி நியமிக்கப்பட்டார். கோயிலுக்கு உள்ளே போய் அறிவிப்புப் பலகையை மாட்டினார் அந்த நிர்வாக அதிகாரி. அடுத்த கணமே அந்தப் பலகையை உடைத்தெறிந்து அவரையும் விரட்டினார்கள் தீட்சிதர்கள். அந்த அப்பாவி அதிகாரி மிகுந்த நம்பிக்கையுடன் காவல் நிலையத்திற்குச் சென்று 3 தீட்சிதர்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தார். தீட்சிதர்களைக் கைது செய்ய போலீசு மறுத்துவிட்டது.

அதன்பின் சட்டமன்றத்தில் காங்கிரசு கட்சியின் “சூத்திர” எம்.எல்.ஏ அழகிரி தீட்சிதர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார். “தீட்சிதர்கள் கோயிலைத் தவிர வருமானத்துக்கு வேறு வழியில்லாத ஏழைகள். அவர்கள் மீது அரசு கருணை காட்டவேண்டும்” என்று கோரினார். கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்ளும் முயற்சி அத்தோடு கைவிடப்பட்டது. தீட்சிதர்களின் மீது அறநிலையத்துறை அதிகாரி கொடுத்த புகாரை “விவரப் பிழை” (mistake of fact) என்று கூறி கிழித்தெறிந்த்து போலீசு.

அதே தீட்சிதர்கள். அதே திமுக ஆட்சி.

இதோ, தில்லைக் கோயிலின் உள்ளே நிர்வாக அதிகாரியின் அலுவலகம் தயாராகி விட்டது. அடையாளமாக பக்தர்களிடமிருந்து காணிக்கைகளை வாங்கத் தொடங்கினார் அறநிலையத் துறையின் நிர்வாக அதிகாரி. சிறிது நேரத்தில் சேர்ந்த தொகை சில ஆயிரங்கள். 2007 ம் ஆண்டு மூழுவதும் தில்லை நடராசர் கோயிலுக்கு பக்தர்கள் மூலம் வந்த காணிக்கை என்று தீட்சிதர்கள் கொடுத்திருக்கும் கணக்கு என்ன தெரியுமா? 2007 ம் ஆண்டின் மொத்த காணிக்கை வரவு ரூ. 37,199. செலவு 37,000. கையிருப்பு 199 ரூபாய்!

“பரமேஸ்வரன் ஆனந்த நடனம் ஆடறார் பாருங்கோ” என்று தமிழிலும், “தி காஸ்மிக் டான்ஸ் ஆப் லார்டு ஷிவா” என்று ஆங்கிலத்திலும், இன்னும் எல்லா உலக மொழிகளிலும் வருசம் பூரா பேசி தீட்சிதர்கள் வசூலித்த தொகை வெறும் 37,199 ரூபாய்தானாம். அதாவது தினமொன்றுக்கு 100 ரூபாய். நடைபாதை பிள்ளையார் கூட உட்கார்ந்த இடத்தில் 400, 500 வசூல் பண்ணுகிறார். நம்ம நடராசப் பெருமானோ நாள் முழுவதும் டான்ஸ் ஆடுகிறார். இருந்தாலும் தினசரி வசூல் நூறு ரூபாய்தான் என்றால் நம்ப முடிகிறதா?

உண்டியலே இல்லாத தில்லைப் பெருங்கோயிலில் நேற்று உண்டியலை வைத்து விட்டது அறநிலையத்துறை. “நடராசனை எடுத்திருந்தால் கூட ஏதாவது பரிகாரம் செய்து கொள்ளலாம். உண்டியலை வைத்துவிட்டால் இதற்கு வேறு பரிகாரமே இல்லையே” என்று பதறியிருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

“உண்டியல் வைக்கணும்னு கோர்ட் ஆர்டர்ல இல்லை” என்று ஆட்சேபித்திருக்கிறார்கள் தீட்சிதர்களின் வக்கீல்கள்.

“கோயில் வரவு செலவுக்கு இனி நான்தான் பொறுப்பு. உண்டியல் வைப்பது எங்க அதிகாரம். எந்த இடத்தில் வைக்கலாம்னு வேணா நீங்க சொல்ல்லாம்” என்றிருக்கிறார் நிர்வாக அதிகாரி. “அப்டீன்னா இங்க வைங்க” என்று இடம் காட்டினாராம் ஒரு தீட்சிதர். “நாங்க வைக்கவே கூடாதுங்குறோம். நீ எதுக்குடா எடம் காட்றே?” என்று சொல்லி அந்த தீட்சிதரை காட்டு காட்டுன்னு காட்டியிருக்கிறார்கள் சக தீட்சிதர்கள்.

கும்மிருட்டாக இருக்கும் கருவறையில் கற்பூரத்தைக் கொளுத்தி சிறிது நேரம் சாமியின் மூஞ்சிக்கு நேரே காட்டினால்தான் “இறைவனின் திருமுகத்தை” பக்தர்களால் பார்க்க முடியும். “கோயிலே நம்ம கைய விட்டு போயாச்சு. இந்த மூஞ்சிய பக்தன் பாத்தா என்ன, பாக்காட்டி என்ன” என்ற டென்சனில் தீட்சிதர்கள் ரெண்டு நாளாக சரியாக சூடம் காட்டுவதில்லையாம். உடனே பக்தர்கள் நிர்வாக அதிகாரியிடம் புகார். “சூடம் எரிந்து தீரும்வரை காட்டுங்கள்” என்று தீட்சிதர்களுக்கு உத்தரவிடுகிறார் நிர்வாக அதிகாரி.

நந்தனை எரித்த அந்தணர் குலத்தின் வாரிசுகள் இப்போது நெருப்பே இல்லாமல் எரிகிறார்கள்.

தில்லை மக்களுக்கோ உற்சாகம். தோடுடைய செவியன் காட்சி தருவதை நம்பமுடியாமல் கண்ணைக் கசக்கிவிட்டுக் கொண்ட அப்பரைப் போல, இந்தக் காட்சிகளையெல்லாம் நம்பமுடியாமல் கண்ணைக் கசக்கி விட்டுக்கொள்கிறார்கள் கோயிலுக்கு அடிக்கடி வந்த போகும் பக்தர்கள்.

தில்லைவாழ் அந்தணர்கள் இப்போது சென்னை வாழ் அந்தணர்கள், டெல்லி வாழ் அந்தணர்களாகிவிட்டார்கள். இந்த தீர்ப்புக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறார்கள். வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இங்கே முடியாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போவார்கள். அமைச்சர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரையும் இந்நேரம் சந்தித்திருப்பார்கள். லாபி வேலை செய்யத் தொடங்கிவிட்டது.

இனி என்ன நடக்கும்? அப்பீல் ஜெயிக்குமா? அது எப்படி நமக்குத் தெரியும்? அதெல்லாம் அந்த ஆடல்வல்லானுக்குத்தான் வெளிச்சம். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் மறுபடியும் ஹை கோர்ட் படியேறத் தயாராகி விட்டார்கள். வழக்கு செலவுக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாயாக மக்களிடம் நிதி திரட்டும் பணியை மறுபடியும் தொடங்கி விட்டார்கள் எங்கள் தோழர்கள்.

இன்று காலை தினமணி இரண்டாம் பக்கத்தில் இருபுறமும் தீட்சிதர்கள் புடை சூழப் பத்திரிகைகளுக்குக் காட்சி கொடுத்திருக்கிறார் அன்னை ஜெயலலிதா.

“சிதம்பரம் ஆலய நிர்வாகத்தை அரசு ஏற்றுக் கொள்ள வற்புறுத்திய சிவனடியாரும் மற்றவர்களும் தீர்ப்பின் வெற்றியைக் கொண்டாட ஈ.வெ.ரா சிலைக்கு மாலை அணிவித்த்தில் இருந்தே அவர்களது உள்நோக்கம் தெளிவாகிறது” என்று சாடியிருக்கிறார் பா.ஜ.க மாநிலத்தலைவர் இல.கணேசன்.

“கோயிலை மீண்டும் தீட்சிதர்கள் கையில் ஒப்படைக்க பொதுநல வழக்கு போடுவேன்” என்று பொதுநலத் தொண்டர் சுப்பிரமணிய சாமி சாமியாடியிருக்கிறார்.

அடுத்த ராமர் பாலம் தொடங்கிவிட்டது?