Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 2002ல் குஜராத்தில் அரசே முன்னின்று நடத்திய இனப்படுகொலையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடமுடியாது. அதை கலவரமாக காட்ட முயன்று வைக்கப்பட்ட கண்துடைப்பு விசாரணை கமிசன்களை கடந்து மீண்டும்

 அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு குஜராத் மாநில குழந்தைகள் நல அமைச்சர் மாயா கோத்னானிக்கும், விஹெச்பி தலைவர் ஜெயதீப் பட்டேலுக்கும் (மட்டுமா?) தொடர்பு உள்ளதாகவும் விசாரணைக்கு வர மறுப்பதற்காக தலைமறைவுக்குற்றவாளிகள் எனவும் அறிவித்துள்ளது.

 

     நாட்டில் நடந்த பல்வேறு திட்டமிட்ட கலவரங்களுக்கு மத்தியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்டது வேறுபடுத்திக்காட்டப்பட்டது. வேறெந்தக்கலவரங்களிலும்(!) இல்லாத வகையில் குஜராத்தில் குற்றவாளிகள் தாங்களாகவே எப்படி அந்தப்படுகொலைகளை நிகழ்த்தினோம்? எங்கிருந்தெல்லாம் எங்களுக்கு உதவிகள் ஆயுதங்கள் வந்தன? வெளிப்படையாக இயங்குவதற்கான ஊக்கம் எங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? விளைவுகளை எண்ணி பயப்படவேண்டாம் என தைரியமூட்டியது யார்? என்றெல்லாம் தெளிவாக பேட்டியளித்து அந்த ஒளிக்காட்சிகள் தெகல்கா இணையதளம் மூலம் அம்பலப்படுத்தப்பட்டது. ஆனாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, மேன்மக்களாக வலம் வந்தனர்.

    

 

 

 

 

 

 

 

அன்று கரண் தப்பாரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிலிருந்து தண்ணீர் குடித்து வெளியேறினார் மோடி. இன்று சிறப்பு விசாரணைக்குழுவின் விசாரணையை எதிர்கொள்ளமுடியாமல் ஓடி ஒழிந்து கொண்டிருக்கிறார் அவரது அமைச்சர் ஒருவர். இதற்கு குஜராத் அரசின் பதில் என்ன? அமைச்சரவைக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதுதான். ஓடிப்போன அமைச்சரின் உதவியாளர் ஒருவர் அமைச்சர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் ஆனால் அவர் எங்கிருக்கிறார் எனக்கூறும் அதிகாரம் எனக்கில்லை என்கிறார். வழக்கம்போலவே ஊடகங்கள் இந்தச்செய்தியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. பார்ப்பனீயச்சார்பு என்பது ஊடகங்களுக்கு மட்டுமல்ல இந்திய அதிகாரவர்க்கத்தின் இயல்பாகவும் அமைந்திருக்கிறது. அதோடு மட்டுமன்றி பெரும்பான்மை மக்களின் பொதுப்புத்தியிலும் ஏற்றப்பட்டு வருகிறது.

 

     குஜ்ஜார்களின் போராட்டத்தைக்கண்டு நாட்டிற்கு இது அவமானம் என்று கொதித்தெழுந்த நீதிபதியோ, நீதித்துறையோ குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளிகள் எப்படிச்செய்தோம் என நடித்துக்காட்டியதைக்கண்டு கொதித்தெழவில்லையே ஏன்?

 

     அகமதாபாத் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தாய் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனைத்தூக்கில் போடுங்கள் என்றார். இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கிறார்கள் அதை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் சாமியாடும் சாமியார்கள், பெண்சாமியார் பிரக்யா சிங் கின் தந்தை நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியதன் பொருள் என்னவென்று கூறுவார்களா? அதுமட்டுமா? சிவசேனா போன்ற அமைப்புகள் வெளிப்படையாக நிதி திரட்டுகின்றன வழக்கை நடத்துவதற்கு. அத்வானி அந்தப்பயங்கரவாதிக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார். பாஜக தலைவர்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டுள்ளனர். யார் கைது செய்யப்பட்டார்கள்? எந்த அமைப்பு தடைசெய்யப்பட்டது? தடை செய்யபடுவது சிமி க்கு மட்டும் பிறப்புரிமையா?

 

 

     ஒரு மாநில அமைச்சர் விசாரணைக்குப் பயந்து தலைமறைவாகியதைக் கண்டு எல்லா வாயையும் பொத்திக்கொண்டு கள்ள மௌனம் சாதிக்கும் வானரங்கள், காவல் துறை அதிகாரி கார்கரேயின் மரணத்தில் ஐயம் உள்ளது அதை தனியே விசாரிக்கவேண்டும் என்ற அந்துலேவின் நியாயமான கோரிக்கைக்கு வானத்துக்கும் பூமிக்குமாக எகிரிக்குதித்தனவே ஏன்? காங்கிரசும் அந்துலேவுக்கு தண்ணீர் தெளித்ததே ஏன்?

 

     எல்லவற்றிற்கும் மேலாக இந்த பாசிசத்தை மதம் சார்ந்த விசயமாகவே மக்கள் புறிந்து கொள்கிறார்களே எப்படி? சிறுபான்மை மக்களும் கூட தங்கள் மதத்தை அழிக்க பெரும்பான்மை மதவாதிகள் செய்யும் சதிச்செயல் என்பதாகவே புறிந்துகொள்கிறார்களே எப்படி? நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளுக்கு கைக்கூலியாக சேவகம் செய்ததற்கு பரிகாரமாக அவர்கள் ஏற்படுத்திக்கொடுத்த ஒருங்கமைப்புதான் இந்து மதம் என்பதை புறிந்துகொள்ள மறுப்பதே அதன் முதற்காரணம். சமண பௌத்த மதங்களோடு போட்டிபோட்டு செரித்த மதம் இந்து மதம் என நம்புவது அதன் புராணங்களைப்போன்றே புழுகு மூட்டை. இஸ்லாமிய கிருஸ்தவ மதங்களைப்போன்று சமூகவியல் தத்துவமாக தோன்றி வந்ததல்ல. மண்ணின் மைந்தர்களை அடக்கியாண்டு, கொன்றொழித்து அரசியல் மேலாண்மை பெறுவதற்கான செயல்திட்டமே பார்ப்பனீயம். அந்த பயங்கரவாத பார்ப்பனீயமே மதமாக இந்துமதமாக வேடம் பூண்டு தன் மனிதகுல விரோதத்தன்மையை மறைத்து நிற்கிறது. இதை சிறுபான்மை மதத்துக்கெதிரான பெரும்பான்மை மதம் எனக்கொள்வதும், தம் மதம் சார்ந்து அதை முறியடிக்க நினைப்பதும் முடிவெட்டிக்கொள்வதாகத்தான் ஆகுமேயன்றி தலைவெட்டுவதாய் ஆகாது. இதை புறிந்து கொள்ளாதவரை தெகல்காவின் அம்பலப்படுத்தலுக்கு மக்கள் ஏன் எதிர்வினையாற்றவில்லை என்பதற்கு விடையளிக்கமுடியாது. இதை புறிந்து கொள்ளாவிட்டால் குண்டுவெடிப்பு என்றதும் பயங்கரவாதம் பொடா வேண்டும் தடா வேண்டும் என ‘சோ’தாக்கள் குதிப்பதையும், பெண்சாமியார் கைது என்றதும் பயங்கரவாதத்திற்கு எதிராய் இப்படி ஒரு திட்டமிருந்தால் அதை ரகசியமாக வைக்கவேண்டும் என்று தொனி மாறுவதையும் சரியான திசையில் விளங்கிக்கொள்ளமுடியாது. மாயா கோத்தானி தலைமறைவானாலும், நாளையே சுற்றுப்பயணம் என்று திரும்பி வந்தாலும் அவர்களை சரியான திசைவழியில் அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்தி முறியடிப்பதையே இலக்காக கொள்ளமுடியும். அதுதான் மக்களுக்கு தேவையான வெற்றியாய் அமையும்.