04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

தமிழ் மக்களை கொன்றுகுவிக்க ஏகாதிபத்தியம் காட்டும் பச்சைக்கொடி

எமது உற்றார், உறவினர், சுற்றத்தார், எம் இன மக்கள், மக்கள் எல்லாம் எம் கண் முன்னால் கணம் கணம் கொல்லப்படுகின்றனர். இதை நாம் தடுக்க வக்கற்று நிற்கின்றோம். இதைச் செய்பவர்களுக்கு எதிராக, சுதந்திரமாக எம் சொந்தக் உணர்வுடன் போராடமுடியாது தடுக்கப்படுகின்றோம்.

குறுகிய வட்டம், குறுகிய சிந்தனை, மறைமுக எதிரி பற்றிய நல்லெண்ண பார்வைகள், எல்லாம் இன்றும் புலியூடாக சிந்திக்கின்ற பார்க்கின்ற அவலம். தொடர்ந்தும் மனித அவலத்தை புலிக்கு ஊடாகவே, பார்க்கப்படுகின்ற அவலம்;. இப்படி மனித அழிவிலும், அதை சொல்வதிலும் சுதந்திர மனிதனாக மக்கள் மாறவில்லை.

 

இருந்த போதும், விடுதலைப் புலிகள் கூவி இனி விடியாது என்பது அனைவருக்கும் தெட்டத் தெளிவாகிவிட்டது. பேரினவாதமோ கொக்கரிக்கின்றது. எம் பரிதாபகரமான நிலையோ, இதுதான். இந்த நிலையில் மக்களை விடுவி அல்லது அனைவரையும் சேர்த்தே கொல்வோம் என்கின்றது சிங்கள பேரினவாதம். அதற்கு மேலாக அங்கே உள்ளவர்கள் அனைவரும் புலிகள் என்று முத்திரை குத்தி, அழிக்கத் தயாராகின்றது பேரினவாத பாசிசம்.

 

எப்படி, எந்த நிலையில் மக்களை கொல்வது என்பதற்கு பேரினவாதம் நாள் குறிக்கின்றது. இதற்கு துணையாக சிங்கள பேரினவாதத்தை ஏகாதிபத்தியம் கைதூக்கி விடு;கின்றது. ஆயுதங்களை கைவிட்டு சரணடையக் கோருகின்றது. இன்னும் சிறிது காலத்தில் புலிகள் வரலாறு முடிந்துவிடும் என்கின்றது. சண்டை செய்து அழியப் போகின்றாயா? அல்லது சரணடைந்து துரோகியாகிறாயா? என்று பகிரங்கமாகவே எக்காளமிடுகின்றது.

 

இதை நீ மறுத்தால் மக்கள் கொல்லப்படுவது தவிர்க்கமுடியாதது என்கின்றது. அதற்கு புலிகளே பொறுப்பு என்கின்றது. இப்படி ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசு வரை திமிராகவே எமக்கு பதிலளிக்கின்றது.

 

கொத்துகொத்தாக மடிந்து போகும் அப்பாவி மக்கள், கதறும் குழந்தைகள், ஈவிரக்கமற்ற மனிதப் படுகொலைகள் இதன் பின்னணியில் அரங்கேறுகின்றது. யுத்தம் செய்பவர்கள் அனைவரும், அதை ஆதரிக்கின்ற கூத்தாடிகளும், பந்தை அங்குமிங்கமாக அடிக்கின்றனரே ஒழிய, மனிதப் படுகொலையை தடுத்து நிறுத்த மறுக்கின்றனர்.

 

பாசிசப் புலிகள் அழுங்குப்பிடியாக மக்களை விடுவிடுக்கவே மறுக்கின்றது. மனித அவலத்தைக் காட்டி, பேரினவாதத்தின் கொட்டத்தை உலகுக்கு நிறுவி, அதை தடுத்து நிறுத்திவிட முடியும் என்று சபதம் எடுத்து நிற்கின்றனர். மனித படுகொலைக்கான வேள்விக் கிடங்கை இப்படி புனிதப்படுத்துகின்றனர். மனிதப் பிணம் வீழ்ந்த வண்ணம் உள்ளது.

 

பாசிசத்தை உலகில் விதைத்தவர்கள், எப்படி உலகில் இருந்து மனிதத்தை தம் பக்கம் திரட்ட முடியும். தமிழன் மட்டும் தம் உற்றார் உறவினர் சுற்றத்தாருக்காக, ஏதோ ஓரு நம்பிக்கையில் வீதிகளில் இறங்குகின்றனர். 

 

புலிகளுக்கோ தலைக்கேறிய பாசிச பித்தம் தெளியவில்;லை. மக்களை ஓடுக்கிய தோற்றத்தை எண்ணிப் பார்க்க தயாராகவில்லை. பாசிசப் பித்து மக்களை அழிப்பதையே கோருகின்றது. இதனூடாக தான் விடுதலையை அடைய முடியும் என்று நம்புகின்றது.

 

இதன் பின்னணியில் இந்தியா தன் காய் நகர்த்தல்கள் ஊடாக தமிழ் இனத்தினை அழித்து, தன் மேலாதிக்கத்தை நிறுவிவருகின்றது. அவனவன் தன் நோக்கத்தை பூர்த்தி செய்கின்றான். 1980 களில் தொடங்கி இந்த மேலாதிக்கத்தை நிறுவ வழங்கிய உதவி தான், இன்று அழித் தொழிப்பாக நடக்கின்றது. அன்று தமிழனுக்கு, இன்று பேரினவாதத்துக்கு. அன்றும் இன்றும் தாம் யாருக்கும் உதவவில்லை என்று மறுப்பு. இப்படி மறுப்புகள், புலிகள் முதல் இந்தியா வரை ஒரு இனத்தின் அழிவில் அரங்கேறுகின்றது.

 

மறுபக்கத்தில் புலியை அழிப்பதில், ஆளும் வர்க்கத்தின் உலகம் ஒன்றுபட்டு நிற்கின்றது. புலிகளின் பாசிச நடத்தைகளின் மேல், அவை தம் செங்கம்பளத்ததை விரித்து படுகொலைக்கு பச்சைக் கொட்டி காட்டுகின்றது.

 

இந்த நிலையில் மலடாகிப் போன தமிழன், செக்கு மாடுகளாக புலியை சுத்துகிறார்கள். அறிவு, நாணயம், நேர்மை எதுவுமற்ற வகையில், சுய அறிவற்ற நிலையில் புலிக்கு பின்னால் வால்பிடித்து போராடுகின்றனர். எப்படி தமிழ் மக்கள் நடக்கும் படுகொலையில் இருந்து மீள்வார்கள்!?

 

இழிவைத் தரும் போராட்டங்கள்

 

ஆயிரமாயிரமாக சொந்த உறவுகளுக்காக வீதிகளில் இறங்கும் மக்கள், புலிகளைச் சுற்றி வந்து தண்ணி பாய்ச்சுகின்றனர். வாய்க்கால்கள் இன்றி, அவை வீணாகிக் போகின்றது. இதன் விளைவு என்ன? முடிவு தான் என்ன?

 

இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து,  அதை புலிப் பாசிச போராட்டமாக மாற்றியது. இன்று அவர்களை அழித்தொழிக்கும் செயலை, எதிர்க்கத் தயாரற்று புலிகளைச் சுற்றும் மாடுகளாக சுற்றுகின்றனர். ஏகாதிபத்தியத்தை எதிர்க்காத போராட்டங்கள்!, இந்தியாவை எதிர்க்காத கோசங்கள்!, வெட்கக்கேடான அரசியல்! 

 

தேசத்தை தேசியத்தை அழித்தொழிப்பது உலகமயமாக்கலின் அடிப்படையான விதி. இந்த எல்லைக்குள் புலிகளை வளர்த்து, தேசத்தின் சமூகக் கூறுகளை இல்லாதாக்கினர். வெறும் பயங்கரவாத நடவடிக்கையை தேச விடுதலைப் போராட்டமாக்கினர். லும்பன் நடைமுறைகளை மக்களுக்கு எதிராக்;கி, மாபியத் தனத்தை புகுத்தியவர்கள், அதையே பாசிசமாகினர். இப்படி புலிகளை பாலுட்டி வளர்த்த எகாதிபத்தியங்கள், இன்று அழிக்கின்றனர். அதை நக்கி வாழ்ந்த புலம்பெயர் புலிப்பினாமி உடம்புகள், விசுவாசத்துடன் ஏகாதிபத்திய எதிர்ப்பை வெளியிட மறுக்கின்றனர். இந்த வகையில் ஏகாதிபத்தியம் என்று சொல்லாத போராட்டம், இந்திய விஸ்தரிப்புவாதம் என்று சொல்லாத, அவர்களின் விசுவாச எல்லைக்குள் போராட்டங்கள்.

 

யார் யுத்தத்தை செய்ய துணையாக நிற்கின்றானோ, அவனிடம் கருணை வேண்டுகோள்கள், கவன ஈர்ப்புகள். யுத்தத்தை நிறுத்து என்ற புலம்பல் போராட்டங்கள். ஏகாதிபத்தியத்தின் தயவின்றி இந்தியா இலங்கையில் யுத்தத்தை செய்யவில்லை. இதெல்லாம் தமிழனுக்கு தெரியக்கூடாது என்பதில் உள்ள அக்கறையுடன் தான், தமிழ் மக்கள் காயடிக்கப்படுகின்றனர். 

 

மானம் கெட்ட ஏகாதிபத்திய நக்குண்ணித்தனம். தம் மேட்டுக்குடித்தனத்தை போராட்டமாக்கி, அதில் நக்கிப் பிழைக்கும் கூட்டம் மனித அவலத்துக்கு காரணமானவர்களை மூடி மறைக்கின்றது. போராட்டத்தின் அடிப்படையையே மறுக்கின்ற உணர்ச்சிகரமான கோசங்களுக்குள், உண்மைகள் புதைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டு பிழைப்புவாதிகள் மேடையில் செய்யும் உணர்ச்சிப் பேச்சு போல், வீதிக்கு கொண்டு வரும் கோசங்கள். இதனுடன் ஓட்ட முடியாத மேற்கு சமூகங்கள்.

 

மக்களின் உணர்வாக போராட்டத்தை பிரதிபலிக்க முடியாத வகையில், நல்லெண்ண வேண்டுகோள்கள். அரசியல் ரீதியாக போராட மறுக்கின்ற மனுக்கள். இதனால் இந்த அழித்தொழிப்பை தடுக்கமுடியாது.

 

தமிழ் மக்களை விடுவிக்க கோரும் கோசத்தை முன்வைக்க மறுக்கும் புலியிசம்

 

புலிகளின் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களை, புலிகள் விடுவிக்க கோருவதை மறுக்கின்ற எல்லைக்குள் போராட்டம். இது எப்படி மக்கள் போராட்டமாக மாறும். சுற்றி சுற்ற புலியைச் சுற்றி, புலிப்போராட்டம்;. இது அந்த மக்களின் மரணத்தின் எல்லைக்குள், அவர்களை இட்டுச் செல்கின்றது.  

 

மக்களை ஏகாதிபத்தியம் முதல் இலங்கை வரை கொன்று குவிக்கின்றது. கொன்று குவிக்க பச்சைக் கொடி காட்டியுள்ளது. இந்த எல்லையில் இந்த மக்களை விடுவிக்க புலிகள் மறுக்கின்றனர்.

 

அந்த மக்களை விடுவிக்க கோரி, புலிக்கு வேண்டுகோளை விட மறுக்கின்ற போராட்டங்கள்.

 

மக்கள் போராட்டம் என்பதும், அது கொள்ள வேண்டிய அடிப்படையான கோசங்கள் என்ன?

 

1. இலங்கை அரசே யுத்தத்தை நிறுத்து!
2. விடுதலைப் புலிகளே மக்களை விடுவி!
3. சர்வதேச சமூகமே மக்களை பொறுப்பெடு 
 
இந்த எல்லைக்குள் போராட்டத்தை மக்கள் நடத்தியிருக்க வேண்டும். இல்லாத எல்லையில், மக்களை கொன்று குவிக்க உதவும் போராட்டமாகவே போராட்டங்கள் மாறிவிடுகின்றது.

 

மக்களுக்காக போராட மறுக்கும் கோசங்கள், சுற்றிச் சுற்றி புலியை வட்டமிடும் செக்குமாட்டு போராட்டங்கள். 

 

தமிழ்மக்கள் கொல்லப்படுவதை தடுக்க பேரினவாதம் முதல் ஏகாதிபத்தியம் வரை தயாராகவில்லை. ஏகாதிபத்தியமோ இதற்கு பதிலாக புலிகளிடம் ஆயுதத்தை கைவிடக் கோருகின்றது. இதன் மூலம் மனித அவலத்தை நிறுத்தக் கோருகின்றது.  பேரினவாதமோ யுத்தத்தை நிறுத்த முடியாது என்று கொக்கரிக்கின்றது.

 

தமிழ் மக்களி;ன் கதி என்ன!? நீங்கள் என்ன தீர்வை வைக்கின்றீர்கள்!? புலிகள் வைப்பது தானா உங்கள் தீர்வு!? தமிழனாகி நீங்கள் எதை செய்யப் போகின்றீர்கள்!? சொல்லுங்கள். அவர்களை பாதுகாக்க வேறு வழியில்லையா!? அவர்கள் இப்படி சாகத்தான் வேண்டுமா! 

 

கூட்டத்துடன் கூட்டமாக, உணர்ச்சியில் அள்ளுப்பட்டு செல்வதால், இந்த மக்கள் இந்த பேரினவாத படுகொலையில் இருந்து தப்பிவிடுவார்களா!? அந்த மக்கள் கொல்லப்படுவதை தடுக்க உன்னால் முடியாதா? ஏன் புலிகள் அந்த மக்களை விடுவிக்க கூடாது!? ஏன் அதைக் நீ கோரக் கூடாது!?

 

பி.இரயாகரன்
04.02.2009
      


   


பி.இரயாகரன் - சமர்