10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

தப்புத் தாளமும்,வழி தவறிய பாதமும்

தமிழ் மக்களைக் காக்க வக்கற்ற `சோளக்காட்டு பொம்மை` அரசியல், இதே ஐரோப்பிய நகரங்களில் `பொங்கு தமிழாக` யுத்தப் பிரடணம் செய்து விட்டு இன்று யுத்த நிறுத்தத்தைக் கோருகிறது. இன்றைய உலக ஒழுங்குக்கான நிகழ்ச்சி நிரலை

 புரிந்து கொள்ள முடியாத நெருப்புக் கோழிகளாகத் தலைகளைப் புதைத்த புலம் பெயர் தமிழர்கள், புலிகளைக் காப்பாற்றும் பேராசைகளால், வன்னி மக்களின் இரத்த சகதிக்குள் தம் தலைகளை அறியாமல் புதைப்பதை தீவிரப்படுத்துகிறது.

 

உலகமே சுற்றி நின்று புலிகள் மீது போர் தொடுப்பதாகக் கூறுகின்ற இவர்களே அவர்களிடம் கருணை மனுக்களைக் கொடுக்கின்ற பரிதாப நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளனர். சுட்டுவிரலை நீட்டி இந் உலகத்திடம் தமிழ் மக்களின் தார்மீக உரிமைகளைக் கோர முடியாத புலிகள், தம் கைவிரல்களுக்குள்ளேயே தமது கதையை மெளனமாக எண்ணத் தொடங்கி விட்டனர்.

 

புலிகளின் கைகளில் மாட்டியிருக்கும் வன்னி மக்கள் - அவர்களின் வெளியேற்றத்துக்கான மறுப்பு, சிங்கள பெளத்த இனவாதிகளின் இன அழிப்புக்கான துரும்புச் சீட்டாகவும், புலிகளின் தொண்டைக் குழிக்குள்ளே மாட்டியிருக்கும் `நரகத்து முள்` ளாகவும் மாறியிருப்பதை இவர்களால் இப்பொழுதும் உணர முடியவில்லை. 60 வருடகால தமிழ் தலைமைகளின் தொடர்ச்சியான வரலாற்றுத் தவறுகளின் தொடரில், இந்த மக்களின் பல்லாயிரம் சடலங்களைக் தாண்டி வர புலிகள் துணிகிற இந்தத் துணிகரமும், அதற்கு ஆதரவான போராட்டங்களும் திசை தவறியப் போன போராட்டங்களாகவே அமையும். இறுதியில் தமிழ் மக்களுக்கே விரோதமான மிக மலிவான ஈன அரசியலாக மாறும்.

 

கிராமம் கிரமாகத் தமிழ் மக்களை கைது செய்து, தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமை புரிந்து இன அழிப்பில் ஈடுபட்ட மக்கள் விரோத சிங்கள இனவெறி இராணுவம் இன்று வன்னி மக்களை வெளியேற்றக் கோரி 48 மணித்தியாலத்தை வரலாற்றில் முதன் முதலாக வழங்கியதன் `இனவாத சாணக்`கியத் தார்ப்பரியத்தை புரிய முடியாத தமிழர்களின் முட்டாள் தனத்தை, அவர்களின் வெறுங்கை முழத்தை என்னவென்பது. எதுவுமே செய்ய முடியாது திண்டாடும் நிலையைச் சரிக்கட்ட வெளிநாடுகளின் இனவாதச் சுனாமிக் கருத்தியலை உருவாக்க மட்டுமே இவர்களால் முடிகிறது. இதுவும் வன்முறையை எட்டும் பட்சத்தில் ஈவிரக்கமற்ற நாடுகடத்தல்களாகவே போய்முடியும்.

 

இந்தியாவில் மேலெழும்பிவரும் தமிழ் இனவாதக் கருத்தியல், அங்கிருக்கும் மக்கள் அமைப்புக்களைக் கூட கால் இடற வைக்கிறது.. இனிவரும் காலங்களில் கண்ட நகர்வால் - சுனாமியால்- நகர்ந்து விட்ட பெருந் தொகையான நிலக்கீழ் மசகுப்படிவங்கள் தென்கிழக்காசியாவின் மடியில் கிடப்பதால், தென்கிழக்கு ஆசியாவின் - அரசியல் - சூறவளி வேகத்தைப் பெறும். இலங்கையின் கடல் பிரதேசங்கள் சீனாவுக்கும் குத்தகைக்குப் போவதால், இலங்கையில் எண்ணையின் முதல் தோண்டல் இந்தியாவுக்கும் போவதால் சீன - இந்திய தென்னாசியாவுக்கான சதுரங்க ஆட்டமும் இதற்குள் நேரடியாகவே சூடுபிடித்திருக்கிறது.

 

இரு துருவ உலக ஒழுங்கில் தமிழர் பிரச்சனையின் ஆடுகளத்தில் குதித்த அமெரிக்க - இந்திய (ரசிய சார்பு) ஆடுகளம், 92ல் 16 துண்டுகளாக சிதறிய ரசியாவை அடுத்து அமெரிக்க ஒரு துருவ ஆட்டத்தில் 94ல் பதவிக்கு வந்த சந்திரிக்கா அரசும் அதற்குளேயே ஆடவேண்டி களமாகவே அது அமைந்தது. ஆனால் இன்று மகிந்தாவுக்குகோ இது ஒரு புதிய ஆட்டத் தொடராகும்!. இன்றைய ஆட்டத்தில் புலிகளை அகற்றல் இந்திய, சீனாவின் கை ஓங்கிய விருப்பாக இருப்பதால், இது தென்கிழக்கு ஆசியப் பிராந்திய விருப்பாகவும் இருப்பதால் புலிகளின் பழைய வகையான கட்டுப்பெட்டி அரசியல் இனிச் சாத்தியமற்றது.

 

சீன, இந்திய நலன்களை மீறி புலிகளைக் காப்பாற்றும் எந்தப் பெலனும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிடமும் கிடையாது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் புலிகளின் ஆதரவாளர்களால் நடாத்தும் பொம்மலாட்டப் போரட்டங்ளும், யுத்த நிறுத்தத்துக்கான எஜமான் விசுவாச முயற்சிகளும் வெறும் புஸ்வானமாகவே முடியும். வன்னி மக்களை குறைந்தளவு சாவோடு மீட்கும் அடுத்தகட்ட நடவடிக்கை ஆரம்பமாகி இது அசைக்கவே முடியாத அவர்களின் எதிர்காலக் கனவின் தீர்க்கமான தீர்மாணமாகும். இது சிங்கள மற்றும் சிறுபான்மை மக்களின் ஐக்கியத்தைக் கொண்டிராத புலிகளுக்கு இன்றைய படு தோல்வியாகவும், காலனித்துவத்ததுவத்துக்கு எதிரான மக்கள் அமைப்பு ஆதரவைக் கொண்டிராத ஏனைய அனைத்து அரசு சார்பு குழுக்களுக்கும் இது எதிர்கால மாபெரும் தோல்லியாகவும் அமையும்.

 

இன்று வன்னி மக்களின் நிலைமை மிகவும் அபாயகரமானது. யுத்தக் களமோ அந்தகார நிலையை எட்டிவிட்டது. இலங்கையில் இரண்டாது தேசிய பெரும்பான்மை நிலையிலிருந்த ஓர் தேசிய இனம், கண்மூடித்தனமான யுத்த தந்திரோபயத்தால் நான்காவது இடத்துக்கு வரும் அபாயத்தையும் எட்டியுள்ளது. யுத்த நிறுத்தம் சாத்தியமற்ற நிலையில், வன்னி மக்களைக் காப்பாற்றுவது தமிழ் தேசியத்தின் முதன்மைக் கடமை என்பதை எந்தத் தமிழனும் மறந்து விடக்கூடாது. யானையே தலையில் மண்னை வாரிக் கொட்டுவதைப் போல வன்னி மக்களை நாமே இழப்போமானால் எங்களைப் போல மாங்காய் மடையர்கள் யாருமே உலகத்தில் இருக்கமாட்டார்கள்.

 

வன்னிக்குள் 4 இலச்சம், 5 இலச்சம் மக்கள் இருப்பதாக் சொல்லி, புலிகள் நிவராணப் பொருட்களையும் நிதிகளையும் அரசிடமிருந்து, அரசு சார்பற்ற மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பெற்று தமது இலாபக் கணக்கை பெருக்கி வந்தனர். இன்றோ அரசு ஒன்றரை இலட்சம் மக்கள் மட்டுமே இருப்பதாகக் கூறி தனது யுத்தத்தின் நட்டக்கணக்கை சரி கட்டிவிடப் பார்க்கிறது. இந்தக் கண்ணாம் பூச்சி விளையாட்டுக்கு வெளியே, புலம் தமிழ் மக்களதும், தமிழ் நாட்டுமக்களதும் அரசியல் விவேகமற்ற வெறும் இனவாத வடிவிலான கொந்தளிப்புப் போராட்டங்கள் இனப்பிளவின் ஆழத்தை அகலமாக்கி வருகிறது. வன்னி மக்களின் அவலத்தையும், அவர்கள் மீதான யுத்த மிலேசத்தனத்தையும், தென்னிலங்கை மக்களினதும் அது சார்ந்த அரசியல் குழுக்களினதும் மனச்சாட்சியின் ஆன்மாவை உறுத்துகின்ற வகையிலோ அல்லது சிந்திக்க வைக்கின்ற வகையிலோ எந்தப் போரட்டத்தையும் தமிழ் நாட்டிலும் சரி புலம் பெயர் நாட்டிலும் சரி கணமுடியவில்லை. புலிகள், தமிழ் மக்களை விடவேண்டு மென்ற `நேசமுரண்பாட்டை` தூக்க முடியாத இவர்களின் எந்தப் போராட்டமும் இன்று முற்போனதே அல்ல! தமது வரட்டுக் கெளரவத்தையும், வெடுக்குத்தனமான பிடிவாதங்களையும் தூக்கிப் பிடடித்துக் கொண்டு நடத்தும் எல்லா விதமான போராட்டங்களும் நாளை நாம், தமிழன் தமிழன் என்று சொல்லிச் செல்லியே செத்தோம் என்பதே எமது தலைவிதியாகப் போய் முடியும்.

 

புலிகள் வன்னிமக்களை அகற்றிவிட்டு, தாமே தமது நிலைமைகளிலிந்து மீண்டுவருவதற்கான திட்டங்களைத் தீட்டவேண்டும். வன்னி மக்களை கிடுக்குப் பிடிக்குள் வைத்திருப்பதால் பயங்கரவாதிகள் என்பது உங்களாலேயே உறுதிசெய்யப்பட்டு, எந்தவிதமான கோரிக்கைகளையும், நிபந்தனைகளையும் விதிக்கமுடியாத ஓர் அகோரமான யுத்தத்துக்கு வழிவகுக்கும். ஓர் மெளனமான சூழலுக்குள்ளேயே மிகப் பெரிய இன அழிவு, "மீட்பு யுத்தத்தால்" மூடி மறைக்கப்படுவிடும். இதன் பின் சரணடைபவர்களைக் கூட விசாரணைக் கென்று அழைத்துச் சென்று கொன்று புதைப்பதை கேட்பாரற்ற தாக்கிவிடும்.

 

மகிந்தாவின் "இதுதான் தருணம்" என்ற அரசியலைப் போக்கை புரிந்து கொள்ள முடியாத தமிழர்களை நினைத்து, அழுவதா? சிரிப்பதா? என்று புரியவில்லை.

சுதேகு
040209

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்