தில்லையில் குடிகொண்டிருக்கும் நடராஜர் பார்க்கும் கண்ணுள்ளவராக இருந்திருந்தால் கோவிலுக்குள்ளேயே தீட்சிதர்கள், செய்யும் கொடூரங்களையும் காமக்களியாட்டங்களையும் கண்டு கண்ணீர் வடிப்பதை பக்தர்கள் காண நேர்ந்திருக்கும்.
சிதம்பரம் நகரின் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் இளங்கோ பெயர் குறிப்பிட்டு தீட்சிதர்கள் நடத்திய கொலை கொள்ளை கொழுப்பெடுத்த விளையாட்டுக்களை புகார் மனுவாக முதல்வர்க்கு அனுப்பியிருக்கிறார். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் தங்கம் வேய்ந்த கூரைகளையும் சொத்தாகக் கொண்ட தில்லை நடராஜர் கோயிலையும் உண்டியல் வைக்காமல் பக்தர்களிடம் வசூலித்த பணம் நகைகளையும் பல்லாண்டு காலமாக ஆண்டு அனுபவித்து வந்தனர் தீட்சித பார்ப்பனர்கள். கடவுளையே முகம் சுழிக்கச்செய்யும் இந்த கொட்டங்களை அடக்குவதற்கு நாத்திகர்கள் வரவேண்டியிருந்தது. தேவாரத்திருவாசகம் பாடி மூடிக்கிடந்த கதவை திறந்ததாக நம்பப்படும் கோவிலில் தேவாரத்திருவாசகங்களை பாட அனுமதி மறுக்கப்பட்டது. அப்படி ஒரு முயற்சியில் அடித்து விரட்டப்பட்ட ஆறுமுகச்சாமி என்ற சிவனடியார் வழியாக புரட்சிகர கம்னியூஸ்டுகளில் கைகளுக்கு அந்தப்பிரச்சனை வந்தது முதல் தொடங்கியது போராட்டம். தில்லை மக்களையும், பக்தர்களையும் இணைத்துக்கொண்டு நடந்த அந்த தொடர் போராட்டம் இறுதியில் தீட்சிதர்கள் தமிழுக்கு இடமில்லை என்று யாரை அடித்து விரட்டினார்களோ அந்த ஆறுமுகச்சாமி தீட்சிதர்கள் முன்னால் யானையில் அழைத்துவரப்பட்டு தமிழில் பாடவைக்கப்பட்டார். இதைச் சாதிப்பதற்கு கடும் போராட்டங்களை நடத்தவேண்டியிருந்தது.கொடும் நரித்தனங்களையும் குயுக்திகளையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் அதோடு முடிந்துவிடவில்லை. தொடர்ந்தது, தொடர்கிறது.
கருவறைக்குள் நுழைய முன்ற நந்தனை எரித்துக் கொன்றுவிட்டு ஜோதியில் கலந்துவிட்டதாக கதை கட்டி அதையே புராணமாகச் சொல்லி பக்தர்களை ஏமாற்றும் தீட்சிதர்களின் கொட்டத்தை அடக்கும் முயற்சியில் அடுத்தக்கட்ட வெற்றியாக அமைந்ததுதான் கடந்த திங்களன்று வழங்கப்பட்ட தீர்ப்பு. அதன்படி இன்னும் ஒருவார காலத்திற்குள் சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவதன் மூலம் இதுவரை தீட்சிதர்களின் கையிலிருந்த கோவில் அரசின் கைகளுக்கு போகிறது. தீர்ப்பு வந்த அன்று மாலையே தில்லை நடராஜர் கோவிலுக்கான இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணகுமார் என்பவர் நியமிக்கப்பட்டார். அன்று அறநிலையத்துறையின் உத்தரவுடனும் போலிஸ் காவலுடனும் தமிழ் பாட வந்த ஆறுமுகச்சாமியை தடுக்க கும்பலாக திரண்டு வாசலை அடைத்து அடாவடித்தனம் செய்த தீட்சித சண்டியர்கள், இன்று அதிகாரியின் நியமன உத்தரவை அதிகம் எதிர்ப்புக்காட்டாமல் பெற்றுக்கொண்டிருப்பது அவர்கள் ஆடிப் போயிருக்கிறார்கள் என்பதற்கான சான்று.
ஆனாலும் இது இறுதி வெற்றியல்ல. சிதம்பரம் கோவில் மட்டுமே இலக்கும் அல்ல. காஞ்சி ஜெயேந்திரனின் ஆபாச லீலைகளும், கேரள கண்டரரு மோகனருவின் அந்தரங்க லீலைகளும் அம்பலப்பட்டு நாறியதைப்போல் பெருங்கோவில்களின் நெடுங்கதவுகளுக்குப்பின்னால் புதைந்து கிடக்கும் அசிங்கங்களும் தீண்டாமைக்கொடூரங்களும், கொலைகளும் அம்பலப்படுத்தப்படவேண்டும். ஒண்டக்குடிசையின்றி கோடிக்கணக்கானோர் சாலையோரம் குடியிருக்கும் நாட்டில் கோவில்களுக்கு ஏக்கர்கணக்கில் நிலமும், பல கோடிக்கணக்கில் சொத்தும் இருப்பதும்; குந்துமணித்தங்கமில்லாமல் திருமணமாகமுடியாமல் பெண்கள் முதிர்கன்னிகளாய் உலாவரும் நாட்டில் கோவிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டிருப்பதும் தன்மானமுள்ள மக்கள் முன் விடப்பட்டுள்ள சவால். அந்த சவால்கள் நேர்செய்யப்படுவதுவரை போராட்டங்கள் தொடரும். ஓயாது