டால்ஸ்டாய் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஞானி. டால்ஸ்டாய் சிந்தனைகள் அத்தனையும் ஏழை மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டது. உழைப்பாளி ஏழையாகவும், சோம்பேறி பணக்காரனாகவும் திரிந்ததை டால்ஸ்டாய் கண்கள் உற்று நோக்கியபடி இருந்தது.

 "பாட்டாளி மக்கள் மற்றும் உழைப்பாளர்களைப் பற்றி நாம் ஆய்வு செய்து சித்தரிக்கின்றோமே தவீர, அவர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டிய கடமையுடையவர்கள் நாம் என்ற உணர்வே நம்மிடம் இல்லாமல் போய்விட்டது" என்று கடுமையான குற்றச்சாட்டுக்களை மானிட சமூகத்தின் முன் வைக்கிறார் டால்ஸ்டாய். 

 

உழைப்புப் பகிர்வு என்பது (Division of Labour) பாட்டாளி வர்க்கத்திடம் திணிக்கப்பட்டு தாங்கள் மட்டும் சுகபோக விருந்து, விழா, இரசனைகள் என கும்மாளமிடும் பணம் படைத்தவர்களின் விகார குணங்களை கேள்விக்குட்படுத்துகிறார் டால்ஸ்டாய். 1886- இல் "இனி நாம் செய்ய வேண்டியது என்ன?" என்ற நூலை எழுதி முடித்த போது அவை ரஷ்யாவில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருக்க முடியாது. 

 

எல்லாவற்றையும் விமர்சிக்கிறார் டால்ஸ்டாய். 

"ஏழைகளைப் பிடித்து இராணுவத்தின் சேவைக்காக என்று இழுத்துச் செல்லும் வன்முறை நிர்ப்பந்தம்." 

 

"நிராயுதபாணிகளை அச்சுறுத்தும் ஆயுதந்தரித்த அரசுப்படைகள்."

 

"வறியோரை அடிமையென இஷ்டம் போல் ஆட்டிப்படைக்கும் மேல் மட்டத்தின் ஆதிக்க திமீர்."

 

"சமயம் மக்களை முட்டாளாக்கும் வஞ்சகத்தன்மை." 

 

இப்படி கோபம் கொப்பளிக்க நூல் முழுவதும் வார்த்தைகளை சாட்டைகளாக்கி நம்மை நோக்கி வினாவாக விளாசுகிறார் டால்ஸ்டாய்.

 

சில அறிவு ஜீவுகள் சொல்கிறார்கள் "அறிவுத் திறமையால் சிலர் உழைக்கிறார்கள். இதில் சமய குருமார்களையும், மடத்தை சேர்ந்தவர்களும் ஆன்மீக உழைப்பில் இருப்பதாக கதை விடுகிறார்கள்." 

 

கவிதை, இசை, சிற்பம், ஓவியம் படைக்கும் கற்பனைவாதிகளையும் அவர்கள் திறமைக்கேற்ற உழைப்பு அவை என்கிறார்கள். சமூதாயத்தில் இன்னார் இன்னாருக்கு என்று உழைப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், உடல் உழைப்பு பாட்டாளிகளிடம் மட்டுமே இருக்கிறது. வசதி படைத்தவனெல்லாம் இதுவும் உழைப்பைப் போன்றது தான் சமாதானம் சொல்ல முயல்கிறார்கள். 

 

மதவாதிகளுக்கு எங்களுடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு பதிலாக மறு உலகத்தில் இன்புற்றிருக்க இன்றைய வாழ்வில் தங்களை துன்பப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்று சமாதானம் சொல்கிறார்களே தவீர, பாட்டாளிகளுடைய கவலைகளையும், வறுமைகளையும் தீர்ப்பதற்கு என்ன செய்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் என்ன பதிலை சொல்லிவிட முடியும்.

 

இதோ விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரைகளையும், சங்க இலக்கியங்களையும், சங்கீத கீர்த்திகளையும், புராதன இலக்கியங்களையும் ஒரு பாட்டாளிக்கு எந்த விதத்திலாவது உபயோகப்படுமா? 

 

பிரபல ஐரோப்பிய ஓவியர்கள் வரைந்த நிர்வாணப் பெண் சித்திரங்களையும், போர் காட்சிகளையும், இயற்கை சித்திரங்களையும் பஞ்சணையில் அமர்ந்துக் கொண்டு ´ஒயின்´ சாப்பிட்டபடி கலைவுணர்வோடு பாட்டாளியால் இரசிக்க முடியுமா? உங்களுடைய இரசனைகள், பொழுதுபோக்குகள், உங்களுடைய படைப்புகள், உங்களுடைய சிந்தனைகள், உங்களுடைய உழைப்புகள் பாட்டாளிவர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த வித்ததில் உபயோகப்படுகிறது? 

 

இதற்கெல்லாம் பாட்டாளிகள் கேள்வி கேட்க வேண்டும். 

 

"பாட்டாளியான நாங்கள் உங்களுக்கு தரவேண்டிய உணவுகளை உழைக்கப்போவதற்கு முன்பு உங்கள் ஆன்மீக உழைப்பின் பலன் எங்களுக்குத் தேவை. எங்கள் பணியில் நாங்கள் வலுவுடன் இயங்க எங்களுக்கு சமயப் பயிற்சி கொடுங்கள். சமூதாய வாழ்க்கையில் சட்டம், ஒழுங்கு இருக்கச் செய்யுங்கள். எங்கள் வேலைக்கு தேவையான விஞ்ஞான வழிமுறைகளைச் சொல்லித் தாருங்கள். 

 

இசை, இலக்கியம், ஓவியம், சிற்பம் போன்ற கலைகளினால் கிடைக்கக்கூடடிய ஆறுதலும், ஆனந்த அனுபவமும் எங்களுக்கும் கொடுங்கள். இகவாழ்க்கையில் அர்த்தங்களை நாங்களும் ஆய்வு செய்து கொள்ள எங்களிக்கு நேரம் இருப்பதில்லை. அதையும் எங்களுக்கு கொடுங்கள். பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, இயந்திரத் தொழில் நுட்பம், உபகரணங்கள் பணிமுறைகளை சீர்திருத்திக் கொள்வதற்கும், என் வாழ்க்கை நடைமுறைகளில் முன்னேற்றம் ஏற்படுத்திக் கொள்வதற்கும் தேவையான சங்கதிகளை சொல்லித் தாருங்கள். 

 

கவிதை, இசை, சிற்பம், ஓவியம் இவற்றை இரசிக்க கற்றுக் கொடுங்கள். எங்கள் வாழ்க்கைக்குத் தேவைப்படும் மன எழுச்சிகளையும், ஆறுதல்களையும் எங்களுக்கு கொடுங்கள். கலைப்பொருட்களை எங்களுக்கும் கொடுங்கள். இவையெல்லாம் இல்லாமல் எங்களால் எங்கள் பணிகளை செய்ய முடியாது. நீங்கள் தரும் அறிவும் மற்றும் ஆன்மீக போதனைகளும் அதன் மூலம் நீங்கள் அனுபவிக்கும் வசதிகளையும் எங்களுக்கும் கொடுக்கும் வரையில் நாங்கள் உழைத்து உற்பத்தி செய்த தானியங்களையும் மற்றைய உணவு வகைகளையும் உங்களுக்கு கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள் என்கிறார் டால்ஸ்டாய். 

 

பாட்டாளிகளும் இப்படியொரு கோரிக்கையை முன்வைத்தால் சமூகத்தில் எப்படி இருக்கும்? டாய்ஸ்டாய் சொல்வதில் எந்த அநீதியும் கிடையாது தான். 


ஆளும் வர்க்கம் ஏற்க முடியுமா இக்கோரிக்கைகளை. டால்ஸ்டாய் குடும்பத்திலேயே அவருக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. வசதி படைத்த டால்ஸ்டாயின் புரட்சி மிக்க கருத்துக்களுக்கு அவரின் மனைவி, பிள்ளைகளிடம் இருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. மனைவிக்கும் டால்ஸ்டாய்க்கும் இவ்விஷயத்தில் ஏகப்பட்ட கருத்து வேறுபாடு இருந்தது. ´கூந்தல் இருப்பவள் அள்ளி முடிக்கிறாள்´ என்பது போல... "அவனவன் வாழ்க்கையை அவனவன் பார்த்துக் கொள்ளப் போகிறான். எதற்கு சீண்டிப்பார்த்துக் கொண்டு இருக்கிறாய்" என்று கோத்து வாங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் வாதங்களை அவர் ஏற்கவில்லை. வெளி இடங்களில் பிரபுக்கள், சர்ச்சில் இருந்த குருமார்கள், அரசாங்கம் அனைத்தும் டால்ஸ்டாய் கோட்பாடுகளை எதிர்த்தன. இருப்பினும் உண்மை உண்மைதான் என்று அஞ்சாமல் தன்னுடைய கருத்துக்களை எழுதிக் கொண்டே இருந்தார். 

 

"பாட்டாளி மக்கள் மற்றும் உழைப்பாளர்களைப் பற்றி நாம் ஆய்வு செய்து சித்தரிக்கின்றோமே தவீர, அவர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டிய கடமையுடையவர்கள் நாம் என்ற உணர்வே நம்மிடம் இல்லாமல் போய்விட்டது" டால்ஸ்டாய் கூற்றில் 100% உண்மை இருக்கிறது தானே!


தமிழச்சி
02/02/2009