வன்னி மக்களின் அவலம், அவர்கள் எதிர் கொள்கின்ற உணர்வுகளில் ஒரு சிறு துளியை பகிர்ந்து கொள்ளும் உணர்வுகளுடன், பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். புலிகள் தாம் ஏற்படுத்திய மனித அவலத்தை, தம் பாசிச வலையமைப்பு ஊடாகவே, மக்களுக்கு இந்த உணர்வுகளை கொடுத்துள்ளனர். ஆனால் அது அவர்களுக்கு எதிராக மாறிவருகின்றது.

இந்த மனித அவலத்தில் இருந்து வன்னிமக்களை மீட்க முடியாது என்ற தெளிவும், அது சார்ந்த பட்டறிவும், உணர்வாகி மக்களை புலிகள் விடுவிக்க கோரும் உணர்வாக புலிக்கு எதிராக மாறிவருகின்றது.

 

மக்களின் அவலத்தை பார்த்து போராடச் சென்றவர்கள், புலிகளுமல்ல, புலியிசத்தை ஏற்றுக் கொண்டவர்களுமல்ல. மாறாக புலிகள் தம் பிரச்சாரத்துக்காக உருவாக்கியுள்ள மனித அவலத்தை பார்த்து, அதற்கு எதிரான உணர்வுகளுடன் ஈடுபடுகின்றனர்.

 

காலகாலமாக சிங்கள பேரினவாதம் கையாண்டு வந்த தமிழின அழித்தொழிப்பு, அது கட்டவிழ்த்துவிட்ட கொலைவெறியாட்டங்கள், சொந்த அனுபவமாக கொண்ட மக்கள் இவர்கள். இன்று வன்னி மக்களின் அவலத்திற்கு எதிராக போராடுவது இயற்கை. அந்த வகையில் புலிப்பாசிச அரசியலுக்கு வெளியில், இதற்கு எதிரான உணர்வுடன் வீதியில் இறங்குகின்றனர்.

 

இந்த உணர்வை ஏற்படுத்தி புலிப்பாசிசத்தை காப்பற்ற வேண்டும் என்பது, புலிகளின் தணியாத தாகம். இந்த தாகத்தை நிறைவு செய்யவே, புலிகள் அந்த மக்களை தம் தற்காப்பு அரணாக நிறுத்தி பலியிடுவது மக்கள் முன் மெதுவாக இன்று அம்பலமாகத் தொடங்கியுள்ளது.

 

இது முதலில் இரண்டு தளத்தில் இந்த வெடிப்பு பிரதிபலிக்கின்றது

 

1. புலம்பெயர் நாட்டில் மக்கள் பங்கு கொள்ளும் போராட்டங்களின், பின்னணியில் இது  வெளிப்படுகின்றது. மக்களை பாதுகாக்க கோரும் மக்களின் இயல்பான கோசமும், புலிகள் முன்வைக்கும் பாசிச கோசத்துக்கு இடையில் இது வெடித்துக் கிளம்புகின்றது.

 

2. போராட்டத்துக்கு தலைமை தாங்க முனையும் இங்கு பிறந்து வாழ்ந்த இளைஞர்களிடையே இது பிரதிபலிக்கின்றது. புலிப் பாசிசகோசத்தை முன்வைத்து தம்மால் தலைமை தாங்க முடியாது என்பதை, அவர்கள் முகத்தில் அடித்தால் போல் கூறத்தொடங்கியுள்ளனர். அவர்கள் தாம் வாழும் நாட்டின் ஜனநாயக உணர்வுகளின் அடிப்படையில், புலிகளின் பாசிசத்தை நிராகரித்து மக்களை பாதுகாக்கும் போராட்டத்தை கோருகின்ற நிகழ்வுகள் முரண்பாடுகள், இந்தப் போராட்டங்களின் பின்னணியில் நிகழ்கின்றது.

 

இப்படி போராட்டத்தின் பின்னணியில் இரண்டு அடையாளப்படுத்தப்பட்ட, போக்குகள் உருவாகியுள்ளது. இப்படி தமிழ் மக்களை பாதுகாக்கவல்ல புலிகளை பாதுகாக்க முனையும் கூட்டத்துக்கும்;, தமிழ் மக்களை பாதுகாக்க கோரும் கூட்டத்துக்கும் இடையில்; முரண்பாடாக மாறி அது வெளிப்டுகின்றது.

 

புலிகள் தம் பாசிச சூழ்ச்சிகள் சூதுகள் மூலம், இந்த போராட்டத்தை மக்களை பாதுகாப்பதற்கு பதில் தம்மை பாதுகாக்கும் வண்ணம் திசைதிருப்புகின்றனர். வாகனங்களில் பொருத்திய ஒலிபெருக்கிகள் மூலம், தாம் விரும்பிய புலிப் பிரச்சாரத்தை செய்கின்றனர். இதை மீறி மக்கள் உணர்வு பூர்வமாகவே, தம் உறவுகளுக்காக போராட முனைகின்றனர்.

 

இந்த முரண்பாடு, மறுபக்கத்தில் புலிகள் மக்களை பணயமாக வைத்திருப்பதும் மக்களிடையே சலசலப்பை உருவாக்குகின்றது. மக்களை யுத்த பிரதேசத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற அடிப்படையான கோசம், மெதுவாக மேலழுகின்றது.

 

உணர்வுகள், உணர்ச்சிகள் என்று, இரண்டு தரப்பும் தத்தம் எல்லைக்குள் சூழ் கொள்கின்றனர்.


புலிகள் காட்டிய மனித அவலத்தை பார்த்து, உறவுகளுக்காக உணர்வுபூர்வமாக களத்தில் இறங்கியவர்கள் மேல், அதை மழுங்கடிக்கும் வகையில் புலிகள் தம் குறுகிய உணர்வுகளை அதற்கு மேல் திணிக்க முனைகின்றனர். இதை மக்கள் தம் எதிர்ப்புகளுடன் அணுகுகின்றனர்.

 

புலிகளின் குறுகிய உணர்வுகள், இந்த மனித அவலத்தை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச்செல்ல முடியவில்லை. மேற்கின் இடதுசாரிகள் கூட இதற்கு ஆதரவாக களத்தில் இறங்கவில்லை. மேற்கில் எந்த நாட்டு மக்கள் போராட்டத்திலும், இடதுசாரிகள் ஊக்கத்துடன் முன்னின்று நடத்தும் போராட்டம், இதன் பின் உருவாகவில்லை.

 

அந்தளவுக்கு அவர்கள் கொண்டுள்ள தெளிவு, புலிகளின் பாசிச வலது கட்டமைப்பிலான அரசியல் தோல்வியாகிவிட்டது. தம் பாசிச வலைப்பின்னல் ஊடாக தமிழ் மக்களை பல வழிகளில் திரட்டும் புலிகள், இதற்கு மேல் அதை சர்வதேசமயப்படுத்த முடியவில்லை. புலிகள் தம் பிரதேசத்தை இழந்து சுருங்கிச்செல்வது போல், மேற்கிலும் இது சர்வதேச ஆதரவை பெறத்தவறிவிட்டது. அடுத்து என்ன என்ற வெற்றிடம்.

 

காட்சிகள், விளம்பரங்கள் மனிதத்தை வெல்ல உதவாது. மாறாக மனித நடத்தைகள் அதை செய்யும். மேற்கு மக்கள் ஜனநாயக பண்பு, இதைத் துல்லியமாக இனம் காண்கின்றது. தமிழ் மக்கள் தம் உறவுகளுக்காக வீதி இறங்குவது தவிர்க்க முடியாத வாழ்வாகிவிட்டது. இது புலிக்கு எதிராக மாறிவருகின்றது.

 

பேரினவாதம் மக்களை புலிகள் விடுவிக்காவிட்டால் அவர்களை சேர்த்தே கொல்லுவோம் என்று கொக்கரிக்கின்ற நிலையில், மக்களை புலிகள் விடுவிக்க கோரும் ஒரு கோசமாக அது மாறி வருகின்றது. புலி தம்மைப் பாதுகாக்க மக்களை பணயம் வைப்பது, மக்களின் பொதுக் கோபமாகி, புலி எதிர்ப்பாக மாறிவருகின்றது. தமிழ் மக்களின் பின்னணியில், மக்களை விடுவித்தலே இன்று தீர்வாக காண்கின்ற போக்கு மெதுவாகவும் ஆழமாகவும் வெளிப்பட்டு வருகின்றது. புலிகள் தாம் வெட்டிய சவக்குழியில் இறங்கி தற்கொலை செய்கின்றனர்.  

 

பி.இரயாகரன்
02.02.2009