10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

அன்று உண்ட நஞ்சும், இன்று மூண்ட தீயும்...

அன்று சிவகுமாரன் உண்ட நஞ்சு, அவன் கையில் இருந்த ஆயுதம் அவன் மனதில் இருந்த உறுதியான போராட்ட உணர்வு இவைகள் அனைத்தையும் மீறி அவனை மரணத்துக்குத் தள்ளியது. அவன் அன்று எடுத்த எடுப்பில் தனது உயிரை மாய்த்து

 

விடவில்லை. அவன் உண்ட நஞ்சு கூட ஒரு நொடிப் பொழுதில் தன்னை அழித்துவிடும் நஞ்சாகக் கூட அது இருந்திருக்கவில்லை!

 

சிறையும் வீடுமான அவனது போராட்ட வாழ்கை, அன்றைய மிதவாதத் தமிழ்த் தலைமைகளின் மீதான வெறுப்பு ஒர் ஆயுதப் போராட்டத்துக்கான அவசர வருகையாகவே அது இருந்தது. அவன் மரணப்படுக்கையில் இருந்த போது கூட, அவனது உயிர் மீண்டு வருவதற்கான மாற்று மருந்துகளும் அவனுக்கு அருகிலேயே இருந்தன. ஆனால் அவன் சந்தோசமாக தமிழ் மண்ணுக்காக இறந்து போவதையே விரும்பினான்.

 

அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவதால், சிறையிலிருந்தும், சித்திரவதைகளிலிருந்தும் தான் மீண்டு வர முடியாதென்றும், இனித் தன்னால் இந்த மக்களுக்காக போராடுவதற்கான எந்தச் சந்தர்ப்பத்தையும் இந்த அரசு விட்டுவைக்காது என்பதையும் உணர்ந்தான். அதனால் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்தத் தமிழ் மக்களுக்காகக் கொடுத்து விடுவதால், தன்னைப் போல ஆயிரம் ஆயிரம் சிவகுமாரன் பிறப்பார்கள் என்று நம்பினான்.

 

பிறந்தார்கள்! பல்லாயிரக்கணக்கான சிவகுமாரன்கள் கழுத்தில் நஞ்சோடு போராடினார்கள் !!- புலி வடிவில். புலிகள் 91ல் குடாநாட்டில் தமது நிர்வாகத்தை அமைத்தும் இருந்தனர். 91-94 ஆண்டுக் காலங்களில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் தேடித் தேடிப் புலிகளால் பலியெடுக்கப்பட்ட போது...

 

 அன்றைய சமூக நெருக்கடியால் தனது கவிதைகளோடு தன்னையே தீயிட்டு எரித்தாள் சிவரமணி. பெண்ணாயப் பிறந்த இந்தச் சிவரமணி இட்ட தீ அன்று எந்த மதுரையையும் எரித்து விடவில்லை!. எந்தச் சலசலப்பும் இல்லாத அவளது மரணம் எவர்களுக்கும் எந்தவித அரசியல் இலாபங்களையும் ஈட்டித்தர முடியாத ஒரு மரணமாக இருந்து விட்டதை இன்று வரலாறு சுட்டிக் காட்டி நிக்கிறது.

 

சிவகுமாரனுக்குப் பின்னரான 35 வருட கால ஆயுதப் போராட்டத்தின், தமிழ் போரினவாத மக்கள் விரோத அரசியல் இன்று தமிழ் மக்களையே தற்கொலையாக நிறுத்தி வைத்துள்ளது. புலிகளின் தலைமை மீதான நெருக்கடி, அவர்களின் வாழ்வா சாவா என்ற பிரச்சனையை தமிழ் மக்களின் உயிர்களின் மீது முடிச்சாகப் போட்டு வைத்துள்ளது புலிகள்.

 

புலிகள் போட்ட கணக்கு பிசகாகிப் போன நிலையில், இன்று இதற்கான விடைகளை மேலும் சிக்கலாக்கி விட்டது. கூட்டுவதா? கழிப்பதா? பிரிப்பதா? பெருக்குவதா? எதுவுமே தெரியாத சூணியக் கணக்காகக் குழப்பியடித்து விட்டார்கள்.

 

குழப்பத்தோடு குழப்பமாக முத்துக்குமாரனும் தீக்குளித்து விட்டான்! தமிழ் நாட்டில் கொட்டைப் பாக்கின் துள்ளலாகத் துள்ளிய ஓட்டுக் கட்சிகளின் அரசியற் பிழைப்புக்கு கிடைத்து விட்டது இலட்டு.


முத்துக்குமாரனின் மரணம் புலிகள் மக்களை விடவேண்டும் என்ற தார்மீகப் பொறுப்புக்கு அப்பாற் பட்டதாம்!. "புலிகளின்: சுயநிர்ணயக் போரிக்கைக்கும்" ,"இந்திய மேலாதிக்கத்துக்கு எதிரானது" மட்டும் தானாம். ஐயோ பாவம்! ஒரு பத்திரிகையாளனின் -பெண்ணே நீ - கோழைத்தனமான தற்கொலை!, மாவோவின் வார்த்தைப் பொறுக்கலுக்குள் பொருத்திவிடும் மாயாஜாலங்கள்!!. மாவோ கூட இன்றிருந்தால் இவற்றைப் பார்ப்பதற்கு அவருக்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.

 

தமிழ் நாட்டில் ஓட்டுக்கட்சி அரசியலுக்காக தீக்குளிச்ச புண்ணியவான்களுக்கு வெளியிலே, புலிகளுக்காகத் தீக்குளித்த அப்பாவிப் புண்ணியவான்! உலகப் புரட்சியை படைக்கப் போவதாகக் கூறுகின்ற `புரட்சியாளர்களுக்கு` கூட இவனது மரணத்தை விட்டால் வேறு வழி இல்லைப் போல் தெரிகிறது! ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. இந்திய மேலாதிக்கம் தமிழ் மக்களுக்கும் மட்டுமானதா? முழு இலங்கை மீதானது என்றால் பரந்துபட்ட சிங்கள மக்களுக்கு இன்றைய நிலைமை பற்றி உங்களின் கருத்தென்ன? தமிழ் பேசும் சிறுபான்மை இன மக்களான முஸ்லீம், மலையக, மலே, பறங்கிய ..... மக்களுக்கான உங்களின் விடை என்ன?

 

இன்னும் சொல்லப் போனால்... இன்றைய தென் கிழக்காசிய பிராந்திய வல்லரசுகளான இந்திய - சீனா மேலாதிக்கத்தில் இலங்கைச் சிங்கள மக்களின் பாத்திரமென்ன? இன்றைய உலக ஒழுங்கமைப்பில் காலனித்துவத்தில் `சுயநிர்ணயக்` கோரிக்கை எப்படிப் பார்ப்பது. நிலப்பிரபுவத்தை வீழ்த்திவிட்டு வளந்து வந்த முதலாளித்துவ ஜனநாயகத்துக்கும், தரகு முதலாளித்துவத்தின் வர்க்கப் பண்புக்கும்: காலனித்துவத்தில் உருவாக்கப்பட்டு பாலுாட்டிச் சீராட்டி வளத்த இந்த முதலாளித்துவ ஜனநாயகத்துக்கும், தரகு முதலாளித்துவ பண்புக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. காலனித்துவத்தில் `சுயநிர்ணயக்` கோரிக்கையை இந்தச் சப்பாணி முதலாளிகளிடம் தள்ளி விட்ட தண்டணையை இன்று இலங்கையில் பாட்டாளி வர்க்கங்கள் நன்றாகவே அனுபவித்து வருகின்றன.

 

இந்தக் கொடிய யுத்தத்தில் பலியெடுக்கப்பட்டவர்கள் வெளிநாடு போகடமுடியாத, இந்தியா மற்றும் தலைநகர் கொழும்பில் வாழ முடியாத வறிய கீழ் நிலை மக்கள்தான் என்பதை ஏன் இன்னும் உணரமுடியவில்லை. புலிகளின் முன்னணி உறுப்பினர்களின் பிள்ளைகளும் உறவினர்களும் வெளிநாடுகளுக்கு இடம் பெயரும் முரண் எதிலிருந்து உருவாகியது. ஆனால் வன்னிமக்கள் மட்டும் யுத்தக் களத்துக்குள்ளோயே நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென்ற முரணும் அதன் ஆசைகளும் எதிலிருந்து உருவாகிறது...

 

இவற்றை எல்லாம் புரிந்து கொள்ள முடியாத ஒரு பத்திரிகையாளன் தீக்குளித்து விட்டான்! என்பதற்காக, இதில் உடைப்பெடுக்கும் உணர்ச்சி வெள்ளத்தில் அள்ளுப்பட வேண்டுமா என்ன? அல்லது இன்று தமிழ் நாட்டில் பூத்துக்கிடக்கும் இனவாத நச்சுக் காளான்களில் ஏதாவது அரசியலை சமைத்துப் பார்க்க வேண்டுமென்ற கட்டாய ஆசைதான் உண்டா?

 

முத்துக்குமாரன் ஈழமக்களின் பிரச்சனையை வைத்து தமிழ் நாட்டில் பிழைப்பு நடத்துவதற்கு எதிராகத் தீக்குளித்தான் என்ற செய்தியும் அரசல் புரசலாக அடிபடுகிறது. அவன் தீக்குளிக்கும் போது அவன் கைகளில் இருந்த துண்டுப்பிரசுரம் இன்னும் வெளிப்படையாக பரவலான மக்களின் பார்வைக்குக் கொண்டு வரப்பப் பட்டிருக்கவுமில்லை. அவனது சொந்தக் கருத்துக்கள் முன்னிலைக்கு வராமலே அவனது கட்டையும் வேகி விட்டது!

 

சிவகுமாரன் உண்ட நஞ்சும், முத்துகுமாரன் இட்ட தீயும் வேவ்வேறு காலகட்டத்தில் நடந்தாலும் சிவகுமாரன் உண்ட நஞ்சு புலியை வாழவைத்தது! முத்துக்குமாரன் இட்ட தீ என்ன செய்யப் போகிறது?ஒருவேளை வரலாற்றுச் சக்கரத்தை தலைகீழாக புரட்டும் சக்தி தமிழனுக்கு வந்துவிடுமோ?

 

சுதேகு
010209


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்