Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வெளியேற்றத்தை புலி மறுக்கின்றது. யுத்தநிறுத்ததை அரசு மறுக்கின்றது. மக்கள் என்ன செய்வது? புலியும், அரசும் தத்தம் தரப்பு நியாயத்தையும், காரணத்தையும் சொல்லி மக்களை பலியிடுகின்றது. மக்கள் தரப்பு நியாயத்தை கேட்பார் யாரும் கிடையாது. அதற்காக குரல் கொடுப்போர் கிடையாது.

மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால், அரசு மற்றும் புலியல்லாத ஒரு சூனியப்பிரதேசத்துக்குள் மக்களைச் செல்ல அனுமதிக்க வேண்டும். இது மட்டும்தான் மக்களை அழிவில் இருந்து காப்பாற்றும்.

 

இதைக் கோராத வரை, இதை நடைமுறைப்படுத்தாத வரை, புலி பலிகொடுப்பவராக, அரசு பலியெடுப்பவராக மாறி இரத்த ஆற்றில் அரசியல் செய்வார்கள். அதைத்தான் இன்று செய்கின்றனர்.  

   

எதார்த்தம் ஒன்றாக இருக்க வேறு ஒன்றாக அதைப் புரிந்துகொள்வது, யுத்த நிறுத்தத்தை கோருவதாக உள்ளது. இது மனித அழிவை நடைமுறைப்படுத்துவதாக மாறுகின்றது. 60 வருடங்களுக்கு மேலாக பேரினவாதம் தமிழினத்தை அழித்துவருகின்றது. அதனிடம் மக்களை பலியிட அனுமதிப்பது ஏன்?! இது எப்படி சரியாகும்;. சரி புலிகள் கூறுவது போல், மக்கள் புலிகளுடன் நிற்பதாக வைப்போம். அதற்காக அவர்களை பலியிட வேண்டுமா!? என்ன நியாயம் உண்டு!? மக்களை பாதுகாக்கும் கடமை புலிக்கு கிடையாதா!? மக்களை பாதுகாப்பாக வாழ அனுமதிப்பது, அதை கோருவது கடமையல்லவா. இதையா இன்று கோருகின்றனர் செய்கின்றனர்!? சொல்லுங்கள்.       

 

உண்மையோ இதற்கு வெளியில், மக்கள் விரோத வடிவில் உள்ளது. இந்த யுத்தத்தை செய்பவர்கள் யார்? இந்த யுத்தம் மக்களுக்கானதா!? தேசிய விடுதலைப் போராட்டம் மக்களுக்கு எதிரானதாக மாறிய பின், இதில் எந்த தரப்பையும் ஆதரிக்கவும் பாதுகாக்கவும் முடியாது. 

 

இங்கு மக்களுக்காக மக்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தை செய்யவில்லை. இரண்டு வலதுசாரிய பாசிசக் கும்பல்கள் தமக்குள் மோதுகின்றன. மக்களை பணயம் வைத்து நடத்துகின்ற அழித்தொழிப்பு யுத்தத்தில், மக்களை பலியிடல் புலியின் அரசியலான பின்,  மக்களை மீட்டல் மைய கோசமாகின்றது. மக்களுக்கு வெளியில், எமக்கு எந்த அரசியலும் கிடையாது.  

 

தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம், புலிகளால் மறுக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மக்களை கேடயமாக்கிய பிரச்சாரம், பலியிடல் தான் புலியின் அரசியலாக இன்று அரங்கேறுகின்றது.

 

இந்த நிலையில் மக்களை காப்பாற்ற, அவர்கள் தமக்குள் செய்கின்ற எந்த யுத்த நிறுத்தமும் தீர்வாகாது. மக்களை அவர்களின் பிடியில் இருந்து விடுவிக்க கோரும் போராட்டம் அவசியமானது. மக்களுக்கு இதற்குள் ஒரு தீர்வு கிடையாது. மக்கள் விரோத யுத்தத்தை நடத்துகின்றவர்களின் இன்றைய இருப்புத்தான், தமிழ் இனத்தின் அழிவாக மாறுகின்றது. தமிழ் மக்களை மீட்க கூடிய, பாதுகாக்க கூடிய எந்த நடைமுறையும், இந்த யுத்தத்தை செய்யும் எந்த தரப்பிடமும் கிடையாது.

 

ஆகவே தமிழ் மக்களுக்காக நாம் குரல்கொடுக்க வேண்டும். அவர்களின் நலன்களில் இருந்து, இந்த யுத்தத்தை அணுகவேண்டும். யுத்தத்தை நிறுத்தினால் மனித அவலம் தற்காலிகமாக தடைப்படும்;. ஆனால் நீண்டகால நோக்கில் மனித அவலம் தொடர்வதுடன், அது எல்லையற்ற வகையில் அதிகரிக்கும். கேள்வியே இதுதான், இது குறுகிய அவலத்துடன் முடிவுக்கு வருவதா அல்லது அது பெருகும் வகையில் தொடர்வதை அங்கீகரிப்பதா? இந்த அடிப்படையில் மட்டும் தான், இந்த விடையத்தை எம்மால் அணுகமுடியும்.

 

இதை புரிந்துகொள்ள எம்முன் இருப்பது யுத்தம் செய்யும் இருதரப்பினதும் நடத்தைகள்தான். ஒரு இனத்தை அழிப்பதில் இருதரப்பும் காட்டும் ஈவிரக்கமற்ற அரசியல் நடத்தை நெறிகள், எவையும்  மக்களைச் சார்ந்தவையல்ல. 

 

இந்த நிலையில் யுத்தத்தை நிறுத்தினால், அமைதி வந்துவிடுமா? இது மக்கள் போராட்டமாக மாறிவிடுமா? தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட, தேசிய போராட்டமாக புலிகள் அதை மாற்றுவார்களா?

 

இல்லை. மறுபடியம் இதே அழிவு யுத்தம். அதே மக்கள் விரோத யுத்தம்;. மீண்டும் மக்களை அழிக்கவா, இன்று நாம் யுத்தத்தை நிறுத்தத்தைக் கோருகின்றோம். இதற்கு மாறாக நாம் வேறு எந்த அரசியலையும் ஏன் முன்வைக்கவில்லை.

   

புலிக்கு பின்னால் காவடி அல்லது அரசுக்கு பின்னால் காவடி என்ற, மக்களை அழித்தொழிக்கும் மக்கள் விரோதிகளின் பின்னால் மக்களை அழித்தொழிக்க கரம் கொடுப்பதுதான் தொடருகின்றது. 

 

புலிகள் எதை சொல்லுகின்றனர்? தம்மை அழித்தொழிக்கும் பேரினவாதத்தின் யுத்தத்தை நிறுத்துவதன் மூலம், தமிழ் மக்களை பாதுகாக்க முடியும் என்று பிரச்சாரம் செய்கின்றனர். இதற்காகவே மக்களை புலிகள் பலியிடுகின்றனர் என்ற உண்மை ஒருபுறம். மறுபக்கத்தில் யுத்தத்தை நிறுத்த முடியுமா? புலிகள் தாம் வழிபட்ட ஆயுதங்கள் மூலம், இந்த யுத்தத்தை தடுத்து நிறுத்தமுடியாது என்பதும், மக்களை பலியிட்டே அதை நிறுத்த முனைவதும் வெளிப்படையான இன்றைய புலியின் அரசியலாகிவிட்டது. இந்த நிலையில் இதை எப்படி நாம் ஆதரிக்கமுடியும்.

 

புலிகள் சுயநிர்ணய உரிமைப் போரை மறுத்து அதை அழித்துவிட்ட நிலையில், புலி நடுசந்தியில் அம்மணமாக நிற்கின்றது. இந்த நிலையில் புலி அழிப்பு யுத்தத்தை இந்தியா முதல் ஏகாதிபத்தியங்கள் அனைத்தும் ஆதரிக்கின்றன. புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலைக்குள், அவை தெளிவாக உள்ளன. இந்த நிலையில் புலிகள் மக்களை பணயமாக வைத்திருக்கும் எதார்த்தத்தை சொல்லி, மக்களை விடுவிக்கக் கோருகின்றன.

 

மறுபக்கத்தில் மனித அவலத்தை உருவாக்கி, அதைக் காட்டி பிரச்சாரம் போராட்டம்  செய்வதால் ஏகாதிபத்தியத்தை தலைகீழாக்கி விடமுடியாது. இதற்காக மக்களை பலியிடுவதால் எதுவும் நடக்காது. அரசியல் ரீதியாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட முடியாத புலியிசம், மக்களை பலியிட்டு அதைக் காட்டி போராடுவதை நாம் ஒருநாளும் அங்கீகரிக்க முடியாது. அனுதாபம், உணர்ச்சி அலை, எழுச்சி என எது வந்தாலும், மக்களை பலியிடும் அரசியலை நாம் மறுத்துப் போராடுவோம். அதுமட்டும் தான், அந்த மக்களுக்கான போராட்டம்.   

 

பி.இரயாகரன்
01.02.2009