ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ. பிறந்தவர் எவரும் என்றாவது ஒரு நாள் மரிக்கப் போகிறோம் என்றாலும் அனைவரும் வாழவே விரும்புகிறோம்.

 வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிருள்ள மனதனுக்கு மரணம் என்றால் அச்சம்தான். இயல்பான வாழ்க்கையில் முதுமை காரணமாகவோ, உடலை வதைக்கும் நோய் காரணமாகவோதான் பெரும்பான்மையினர் இறக்கிறார்கள். ஏகாதிபத்தியங்களின் உலக மேலாதிக்கத்திற்காக நடத்ததப்படும் போரில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இங்கு இறப்பு கொலையாக மாறி நிற்கிறது. ஈழத்தில் முல்லைத்தீவில் அடைக்கலம்புகுந்திருக்கும் மக்களை இப்படித்தான் இலங்கை ராணுவம் கொன்று வருகிறது.

fire1

 

மரணத்தின் காரணங்களும், தோற்றுவாய்களும், தருணங்களும் இயற்கையால், அநீதியான இந்த சமூக அமைப்பால் செயல்படுகின்றன. இந்த சமூக அமைப்பின் அநீதிகளை எதிர்த்துப் போராடும் போராளிகளோ தமது உயிரை முன்னறிந்து இழப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். ஒடுக்குமுறைகளைக் கண்டு குமுறும் உள்ளம் தனது உயிரை துச்சமென மதித்து துறப்பதற்கு மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது. தனிப்பட்ட வாழக்கைப் பிரச்சினைகளுக்காகவும், சமூகக் காரணங்களுக்காகவும் தற்கொலை செய்வதில் பாரிய வேறுபாடு இருக்கிறது. அதே சமயம் இரண்டுமே தன்னுயிரை வதைக்கும் சமூகக் கொடுமைகளை இறப்பதன் மூலம் தண்டிக்க நினைக்கிறது.

 

முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கவில்லை. உணர்வுப்பூர்வமாக சிந்தித்து, தனது மரணம் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் எழுச்சியை கற்பனை செய்து, அது நிச்சயம் நிறைவேறும் என்ற கனவுடன் தன்னைப் பொசுக்கியிருக்கிறார். மரணத்துக்கு முந்தைய சில மணித்துளிகளுக்கு முன்னால் கூட மருத்துவர்களிடமும், போலீசிடமும் தனது அரசியல் கோரிக்கைகளை நிதானமாக பேசியிருக்கிறார். அவரது கடிதம் ஈழமக்களைக் காப்பாற்ற முடியாமல் இருக்கும் சிக்கலை எல்லாக் கோணங்களிலும் விவரிக்கிறது. துரோகம் செய்யும் இந்தியாவைக் கண்டித்தும், அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் சர்வதேச சமூகத்தை கேள்வி கேட்டும், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை போர்க்குணமிக்க போராட்டத்தை துவங்குமாறு கோரியும், இந்தப் போராட்டத்தினூடாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கையையும் விவரிக்கும் அந்தக் கடிதத்தை படிக்கும்போது நம் நெஞ்சம் பதைக்கிறது.

 

காவிரிப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியார் பிரச்சினையிலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பதை நினைவுபடுத்தும் முத்துக்குமார் தமிழகத்தில் இருக்கும் மற்ற மொழி பேசும் மக்களை சகோதரர்களாக விளித்து ஈழத்திற்கான நியாயத்தைப் புரிந்து கொண்டு ஆதரிக்குமாறு வேண்டுகிறார். இதன் மூலம் சிவசேனா, நவநிர்மான் சேனா போன்ற இனவெறிக்கட்சிகள் தமிழகத்தில் தலையெடுக்க முடியாமல் செய்யலாம் என்று சுட்டிக்காட்டுகிறார். தீக்காயங்களால் கருகியிருக்கும் தனதுஉடலை புதைக்காமல் அதை ஒரு அரசியல் குறியீடாக்கி போராடுமாறு மாணவர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.

 

வேலைக்காக தட்டச்சு செய்து வாழும் முத்துக்குமாரின் கைகள் தனது 2000 வார்த்தைகள் அடங்கிய மரண சாசனத்தை ஒரு அரசியல் கட்டுரையாக நிதானம் தவறாமல் அடித்திருக்கிறது. முத்துக்குமாருக்கு  பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தாலும் அவர் இந்த தலைவர்களின் மோசடி நாடகத்தை புரிந்தே எழுதுகிறார். குறிப்பாக தி.மு.கவின் உணர்ச்சிப் பசப்பல்கள் வடிவேலு காமடியைவிட கீழாக இருப்பதாக கேலி செய்கிறார். இன்று வழக்கறிஞர்கள் தமிழகமெங்கும் நீதிமன்றங்களை புறக்கணித்து போராடுகின்றனர். தமிழக அளவில் கல்லூரி மாணவர்களும் போராடுகின்றனர்.

 

எனினும் போருக்கெதிராக தமிழகத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளையோ போராட்டங்களையோ இந்திய அரசு கடுகளவும் சட்டை செய்யவில்லை. எத்தனை ஆயிரம் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டாலும், விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டும் வரையில் இந்தப் போரைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் ராஜபக்சே அரசுக்கு உறுதுணையாக நிற்கிறது இந்திய அரசு.

 

முல்லைத்தீவு பகுதியில் சிங்கள இராணுவத்தின் குண்டு வீச்சில் ஒரே நாளில் 300 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், சிவிலியன்களுக்கான பாதுகாப்பு வளையம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ள பகுதிகளில் மக்களுக்கு உணவோ, மருந்துப் பொருட்களோ இல்லை. அதுமட்டுமல்ல, பாதுகாப்புப் பகுதி என்று அறிவித்து விட்டு, அங்கே தஞ்சம் புகுந்துள்ள மக்களின் மீதே ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது சிங்கள இராணுவம். இப்பகுதியின் மருத்துவமனை மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர்களே காயமடைந்துள்ளனர். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதால்தான் இத்தகைய உயிரிழப்புகள் நேருவதாகக் கூறித் தனது குற்றங்களை மறைத்துக் கொள்கிறது சிங்கள அரசு.

 

எனினும் இந்தியா, பாகிஸ்தான், சீனா முதல் அமெரிக்கா வரையிலான நாடுகளின் முழு ஆதரவோடு இந்தப் போரை சிங்கள அரசு நடத்திவருவதால், இந்தப் படுகொலைக்கு எதிராக சம்பிரதாயமான ஒரு கண்டனம் கூட யாரிடமிருந்தும் வெளிவரவில்லை.


குறிப்பாக இந்தப் போரில் சிங்கள அரசு ஈட்டிவரும் வெற்றி குறித்து தமிழகத்தின் பார்ப்பன ஊடகங்கள் மனம் கொள்ளாத மகிழ்ச்சியில் திளைக்கின்றன. அந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ‘அப்பாவித் தமிழர்கள்’ போரினால் பாதிக்கப்படுவது குறித்து பெரிதும் கவலைப்படுவது போல நடிக்கின்றன.

 

இந்தியா இலங்கைக்கு பீரங்கிகள் அனுப்பியிருக்கிறது என்பதும், அதுவும் தமிழகம் வழியாகவே அனுப்பப்பட்டிருக்கிறது என்பதும் இப்போது அம்பலமாகியிருக்கிறது. எனினும் “தமிழ்நாட்டிலிருந்து எந்தவித அரசியல் அழுத்தம் எழுந்தாலும் ராஜபக்சே நடத்தும் இந்தப் போரை எக்காரணம் கொண்டும் தடுப்பதில்லை என்ற முடிவில் இந்தியா உறுதியாக உள்ளது” என்று கூறுகிறது சர்வதேச செய்தி நிறுவனமான ராய்டர்.

 

தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகளும், தி.மு.க அரசும் நடத்தும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை. “வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனன் இலங்கை சென்றால் போதாது; வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்லவேண்டும்” என்ற கோரிக்கையை ஏதோ மிகப் பயங்கரமானதொரு கோரிக்கை போல வைத்தது திமுக அரசு. “பிரணாப் முகர்ஜி இலங்கை செல்கிறார்” என்ற செய்தியை அன்பழகன்  சட்டசபையில் தெரிவித்தவுடனே சட்டமன்ற உறுப்பினர்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

 

ஆனால் பத்திரிகை செய்தியோ இந்தக் கேலிக்கூத்தை அம்பலமாக்கியிருக்கிறது. “புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் வைத்துவரும் கோரிக்கைக்கும் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு விஜயத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் பெரிதும் வலியுறுத்திக் கூறினர்” என்று கூறுகிறது இந்து நாளேடு.  “எங்களுடைய அழைப்பின் பேரில்தான் பிரணாப் முகர்ஜி இலங்கை வந்திருக்கிறார்” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள் இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள். (தி இந்து, ஜன, 2 8) “புலிகள் மீது இந்திய அரசுக்கு எவ்வித அனுதாபமும் கிடையாது. இந்த மோதலில் அப்பாவி மக்கள் பலியாகக் கூடாது என்பது மட்டுமே எமது கவலை” என்று கூறியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.

 

இப்படியாக பிரணாப் முகர்ஜியின் கொழும்பு விஜயம் என்பது திமுகவை சமாதானப் படுத்துவதற்கான ஒரு கண்துடைப்பு நடவடிக்கை கூட அல்ல என்பது அப்பட்டமாக அம்பலமாகிவிட்டது. ஈழத்தமிழர் பிரச்சினையை அரசியலற்ற மனிதாபினமானப் பிரச்சினையாகவும், இந்திய அரசின் கருணையை எதிர்பார்த்துக் காத்துநிற்கும் பிரச்சினையாகவும் தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகள் மாற்றினர். அதனை இந்திய ஆளும் வர்க்கமும் சிங்கள அரசும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு விட்டனர். “போர்நிறுத்தம் கிடையாது, சுயநிர்ணய உரிமையும் கிடையாது. இராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடக்கும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது மட்டும்தான் பிரச்சினை>” என்பதாக பிரச்சினை சுருங்கி விட்டது. “அவ்வாறு மக்கள் கொல்லப்படுவதற்கு யார் காரணம்? சிங்கள இராணுவத்தின் தாக்குதலா அல்லது மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் புலிகளா?” என்பது மட்டுமே இப்போது விவாதத்துக்கு உரிய பிரச்சினையாகச் சுருக்கப்பட்டு விட்டது.

 

தமிழகத்தைப் பொருத்தவரை போர்நிறுத்தம் கோரி, மாணவர்கள் உள்ளிட்ட பல பிரிவினரின் தன்னெழுச்சியான போராட்டங்கள்  நடைபெறுகின்றன. அநீதியான இந்தப்போரை நிறுத்தவேண்டும் என்ற உணர்வு மக்கள் மத்தியில் பரவலாக நிலவுகிறது.


ஈழத்தமிழர் பிரச்சினையை அரசியலற்ற மனிதாபினமானப் பிரச்சினையாக தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகள் மாற்றிவிட்டதால், மேற்கூறிய மக்களின் உணர்வு ஒரு அரசியல் எழுச்சியாக வடிவெடுக்கவில்லை. அந்த அரசியல் எழுச்சியை எழுப்புவதுதான் நமக்குள்ள கடமை.

 

சிங்கள அரசுக்கும், இந்திய மேலாதிக்க அரசுக்கும் எதிரான பிரச்சாரத்தையும் போராட்டத்தையும் மக்கள் மத்தியில் முடுக்கி விடுவதுதான் நமது பணி.  முடங்க வேண்டிய நிர்ப்பந்தம் சந்தரப்பவாதிகளுக்கும் ஓட்டுக் கட்சி பிழைப்புவாதிகளுக்குமதான் இருக்கிறது. இது நாம் செயல்பட வேண்டிய தருணம். சிங்கள இனவெறி அரசுக்கும், அதனுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசுக்கும் எதிரான பிரச்சாரத்தையும் போராட்டங்களையும் நாம் தீவிரமாக நடத்த வேண்டும். எமது அமைப்புக்கள் தமிழகமெங்கும் மக்களி மத்தியில் விரிவான பிரச்சாரத்தை எடுத்துச் செல்வதோடு ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகின்றன. இன்று சென்னையில் எமது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டச் செய்திகளையும், படங்களையும் வரும் நாட்களில் வெளியிடுகிறோம்.