Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை ராணுவம் நடத்தும் இனப்படுகொலை தடித்த தோலையும் ஊடுருவி ஐநாவை ஒப்புக்கெனும் குரல் கொடுக்க வைத்திருக்கிறது. இந்தியாவோ குடியரசுக்கொண்டாட்டங்களில் மூழ்கிக்கிடக்கிறது. தமிழ் மக்கள்

 எரிந்துகொண்டிருக்கையில் தமிழினத்தலைவர்(!) பிடில் கச்சேரி நடத்திக்கொண்டிருக்கிறார் இறுதிவேண்டுகோள் என்ற தலைப்பில். மாண்வர்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள், குடியரசுதினத்தை மறுத்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியிருக்கிறார்கள் மக்கள். பலருக்கு புறியவில்லை அடுத்து எப்படி போராடுவதென்று? சேலம் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் புறியவில்லை, ஆயிரம் ஆயிரம் பேர்களை கொன்று குவிப்பவர்களுக்கு பத்துப்பேரின் பட்டினிப்போராட்டம் உரைக்கப்போவதில்லை என்று. ஆயுதங்கள் அனுப்பியதும், அதை இயக்க தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பியதும், களத்தில் பணியாற்ற ராணுவ அதிகாரிகளையே அனுப்பியதும் அம்பலப்பட்ட பின்னரும் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் போராட்டங்கள் வீணானவை என்பது புறிந்திருக்கவேண்டும். பிரணாப் முகர்ஜி தன்னுடன் இந்திய அரசின் பரிசாக 120 கவசவாகனங்களை எடுத்துச்சென்றிருக்கும் பின்னராவது…….

 

பிராந்திய வல்லரசாக முறுக்கிக்கொண்டிருக்கும் இந்தியா சுய நிர்ணய உரிமைப்போராட்ட இயக்கங்களை நசுக்கியே வந்திருக்கிறது. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் இன்னும் நசுக்கிக்கொண்டிருக்கிறது. இந்திய தரகு முதலாளிகளின், பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்காக எதையும் செய்து கொடுக்கத்தயாராக இருக்கிறது மண்மோகன் அரசு. துரோக காங்கிரஸ் மட்டுமல்ல பாசிச பிஜேபி தொடங்கி போலிகள் ஊடாக அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இதற்கு விலக்கல்ல. இலங்கையை ஒட்டச்சுரண்டுவதற்கு அங்கே அமைதி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் ராஜபக்சேவுடன் இணைந்து கொண்டு நரவேட்டை ஆடிவருகிறார்கள். நக்சல்களையும் மாவோயிஸ்டுகளையும் எதிர்கொண்டுவரும் இந்திய அதிகாரவர்க்கத்திற்கு புலிகள் மேலோங்கிவருவதை தடுப்பதும், அவர்களை ஒழிப்பதும் தேவையாயிருக்கிறது, குறிப்பாக நேபாளப்புரட்சிக்குப்பிறகு. தமிழக ஓட்டுக்கட்சிகள் நடத்தும் போராட்டங்களெல்லாம் கிள்ளிவிட்டுப்பின் ஆட்டப்படும் காரியவாத தோட்டிலாட்டல்கள் என்றானபிறகு அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது போல் நடிக்கும் தேவையும் இல்லாமல் போய்விட்டது. சரி, இங்கு போராடுபவர்கள் சுயநிர்ணய உரிமை வேண்டியா போராடுகிறார்கள்? இலங்கை தமிழர் பிரச்சனையின் ஆழ அகலங்களை புறிந்துகொள்ளாமல் ஏதோ தமிழர்களை கொல்கிறார்களாம் என்று தன்னிரக்கம் மேலிட செயல்படுபவர்களால் எதை தீர்க்கமாக முன்வைக்க முடியும்? ஈழத்திற்கு குரல் கொடுப்பவர்களால் காஷ்மீரத்திற்கு குரல் கொடுக்க முடியுமா?

 

இலங்கையும் புதிய சூழலுடன் இருக்கிறது. முன்பிருந்த நிலமை அங்கில்லை. சற்றேரக்குறைய புலிகள் ஒடுக்கப்பட்டுவிட்டனர். இனி நேரடி யுத்தத்திற்கோ இலங்கை ராணுவத்தை பயங்கொள்ளவைக்கும் ராணுவ நடவடிக்கைக்கோ திரும்ப மிக நீண்ட காலம் பிடிக்கலாம் புலிகளுக்கு, அல்லது இயலாமலும் போகலாம். அதுவரை தற்கொலை தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளுமே வழியாகலாம். கர்ணாவைப்போல் ஒரு கோடாரிக்காம்பை பிடித்து அரசியல் தீர்வாய் காட்டிவிட்டு முதலாளித்துவப்படையெடுப்பும், இனஅழிப்பும் முன்னைக்காட்டிலும் தீவிரப்படுத்தப்படலாம். இது தான் முப்பதாண்டுகால போராட்டத்தின் முடிவா? உலகிலேயே பலம் மிகுந்த விடுதலை இயக்கம் என்று விதந்தோதப்பட்ட புலிகளின் ராணுவ பலம் ஏன் தமிழ் ஈழத்தை சாதிக்கமுடியவில்லை? புலிகளின் ராணுவ பலம் தான் இலங்கை தமிழர்களின் இன்றைய இழிநிலைக்கு காரணமாகி நிற்கிறது. தமிழ் மக்களின் எந்தப்போராட்ட வடிவமும் இன்று பயங்கரவாதமாக மொழிமாற்றம் பெற்றிருக்கிறது. மக்களை நம்பிப்போராடாமல் ஆயுதத்தை நம்பிப்போராடியதால்தான் நெருக்கடி வந்தபோது எதிர்கொள்ளமுடியாமல் தமிழ்நாட்டு ஓட்டுப்பொறுக்கிகளின் தினப்படி நாடகங்களை கண்டு எப்படியும் போரை நிறுத்திவிடுவார்கள் என நம்பினார்கள். இந்தியபேரரசு எங்களை கைவிடாது என்று அறிக்கையாய் விட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழ் ஈழம் தமிழ் மக்கள் என்பது போய் இந்துக்கள் என்று கூறியாவது தம் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவேண்டுமென்று பாசிச இந்து வெறியர்களுக்குக்கூட வால் பிடிக்கத்தயாராயினர். இவைகளெல்லாம் எதைத்தெளிவாக்குகிறது? ராணுவ பலத்தைவைத்து மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்துவிடமுடியும் என்பது அடிப்படையிலேயே தவறான வாதம் என்பதைத்தான். இன்று ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டும் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாகியும் நொருங்கிக்கிடக்கிறது ஈழம். இதை வெற்றி எனக்கொண்டாடும் சிங்கள் பேரினவாத அரசின் அழைப்பின்படி இலங்கை சென்றிருக்கிறார் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அதுவும் 120 கவசவாகனங்களை பரிசாக எடுத்துக்கொண்டு.

இந்த நிலையில் தமிழக மக்கள் செய்யவேண்டியது என்ன? இலங்கை தமிழ் மக்களை அணிதிரட்டி இன அழிப்புக்கு எதிராக சுயநிர்ணய உரிமை கோரும் போராட்டங்களை நடத்த உணர்வும் தம்பும் ஊட்டவேண்டிய கடமை தமிழக மக்களுக்கு இருக்கிறது. அதை எப்படிச்செய்வது? ஓட்டுக்கட்சிகள் அடிக்கும் கூத்துகளாக போராட்டங்களை குறுக்கிவிடாமல் நடுவண் அரசுக்கு நெருக்கடியை தரக்கூடிய போராட்டங்களை நடத்தவேண்டும். அத்தகைய போராட்டங்களை ஏற்கனவே புரட்சிகர அமைப்புகள் நடத்திக்கொண்டிருக்கின்றன. அவர்களோடு இணையட்டும் உங்கள் கரங்கள். அந்த முழக்கங்கள் இந்திய அரசை உலுக்கும் போது, இலங்கை த்தமிழர்கள் மீண்டெழுவர் பீனிக்ஸ் பறவையாய்.