லங்கை அணியுடன் கிரிக்கெட் விளையாட உள்ள இந்திய அணி தோல்வியடைந்து சிங்கள அணி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இந்தியர்கள், இந்தியர்களாக அங்கீகரிக்கப்படும் தகுதியுடையவர்கள்,

 சிங்களர்கள் வெற்றியடையவே விரும்பும் போது ஒரு இந்தியனாக நானும் சிங்களர்களின் வெற்றியை விரும்புவது தவறில்லை என்று நம்புகிறேன்.

எனது ஜெய் ஹிந்த் வெறியை இங்கு பறைசாற்றுவதில் பெருமையடைகிறேன்.

தேச பக்தியுள்ள இந்தியர்களின் நல்லாதரவையும் இங்கு வேண்டுகிறேன்.

அங்கே படுகொலை செய்யப்படும் ஒவ்வொரு குழந்தையின், ஒவ்வொரு மகனின்/மகளின், ஒவ்வொரு கனவனின்/மனைவியின் உடலிலும் இந்திய துப்பாக்கி தோட்டாக்களும், பீரங்கி குண்டு சில்லுகளும் இருக்கும் என்பதை எண்ணி நாம் புளங்காகிதப்பட வேண்டிய நேரமிது.

இந்தியர்களாகிய நாம் இல்லாத இடமே இல்லை என்பதை எண்ணி பெருமைப்பட வேண்டிய நேரமிது. சந்திரனில் மட்டுமா நமது கருவிகள் தரையிறங்கியுள்ளன?

இதோ சிங்களர்களின் கைகளிலிருந்த இந்திய துப்பாக்கிகளின் கத்திகள்கூட ஈழத் தமிழ் பெண்களின் மார்புகளையும், யோனிகளையும் பதம் பார்த்து நமது இந்திய கருவிகளின் அடையாளத்தை சதையிறக்கிச் சென்றுள்ளன. ஜெய் ஹிந்த்!!



*****************



இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது பிரதேச ஆதிக்கத்தை நோக்கமாக கொண்டதே ஆகும். இது தெரிந்திருந்தும் இந்தியாவிடமிருந்து எதையாவது பெற்று தப்பித்துவிடலாம் என்பது போல மாயையை உருவாக்கும் ஈழ ஆதரவு ஆட்களை இங்கு கடுமையாக விமர்சிக்கிறேன்.

உலகளவில் விடுதலை போராட்டங்களின், தேசிய விடுதலையின் எதிரி ஏகாதிபத்தியம் எனில் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க அடிவருடியான இந்தியாதான் எதிரி. அப்படியிருக்கு அமெரிக்க, இந்திய ஆதரவை வேண்டி நிற்பது ஏமாற்றே ஆகும்.

இந்த உண்மையை உற்று நோக்கும் திரணியற்ற, உரக்க அறிவுக்கும் துணிவற்ற ஈழ ஆதரவு ஆட்களை மிகக் கடுமையாக விமர்சிக்கிறேன். புலம்பி திரிவதில் எந்த பிரயோசனமும் இல்லை. பின் மண்டையில் துப்பாக்கி வைத்து மிரட்டும் ஆண்டையிடம் நியாயம் பேசுவதற்கு ஒத்த நாய்த்தனம் இது. சாவின் விளிம்பில் நம்மிடம் தெரிக்க வேண்டியது தார்மீக அவேசம்தானேயொழிய கழிவிரக்கமல்ல.

ஈழ விடுதலை என்பது மக்களை சார்ந்து நின்று மக்களால் பெறப்படவேண்டும். மாறாக மக்களின் சார்பில் நாம் பினாமி யுத்தம் நடத்தி பெற முடியாது. விடுதலை புலிகளின் அரசியல்லற்ற ஆயுத சாகச வழிபாடு இன்று ஈழ விடுதலையை கரை சேர்த்துள்ள இடம் இதுதான்.

இந்த வாழ்வா சாவா தருணத்திலாவது தமது தவறுகளை பரிசீலனை செய்து விடுதலை புலிகள் சரியான நிலைப்பாட்டுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் சந்தர்ப்பவாதத்தின் கடை கோடி எல்லைக்கு சென்றனர் புலிகள்.

சங்காராச்சாரியாரிடமும், RSS கும்பலிடமும், இந்து பார்ப்பன பயங்கரவாதிகளிடமும் ஆதரவு கோரிப் பெற்றது புலிகளை இன்னும் இன்னும் பலவீனமாக்கவே செய்யும். புலிகளுக்கு ஆதரவான ஜனநாயக சக்திகளை விரட்டியடிப்பதாகவே இந்த நடவடிக்கை இருக்கும்.

இந்திய மேலாதிக்க கனவுகளுக்கும் அதில் பொதிந்துள்ள இந்திய தரகு முதலாளிகளின் பேராசைகளுக்கும், ஏகாதிபத்திய நலன்களுக்கும் எதிராக இந்திய மக்களின் கருத்தை ஆதிக்கம் செய்யவல்ல அரசியல் கொண்ட ஒரு செயல்பாடே இந்திய ஆளும் வர்க்கங்களை ஈழ போராட்டத்தில் பின்னடையச் செய்யும். மாறாக இந்திய ஆளும் வர்க்கங்களிடையே உள்ள சிற்சில முரன்பாடுகளை மட்டும் வைத்தே ஒட்டு மொத்தமாக அவர்களை பின்னடையச் செய்ய முடியும் என்று நம்புவது படு முட்டாள்தனமானது.

ஆனால் அப்படிப்பட்ட நம்பிக்கையைத்தான் ஈழ விடுதலையின் ஒட்டு மொத்த தமிழக பிரதிநிதிகளாக முன்னிறுத்திக் கொள்ளும் பிழைப்புவாதிகள் மக்கள் மனதில் விதைத்து வருகிறார்கள்.

இந்திய அரசை விமர்சனம் செய்வதில் அவர்களுக்கு இத்தனை தயக்கம். அதன் நோக்கங்களை அம்பலப்படுத்துவதற்கு இத்தனை பயம். கிசு கிசு போல பேசுகிறார்கள். ஆணித்தரமாக அடித்து பேச தொண்டை குழி தயங்குகிறது.

ஆனால் இதே வாயால்தான் கூசாமல் தமிழனின் தலைகுனியத்தக்க மோன நிலையை விமர்சிக்கிறார்கள். இது தலைகுனியத்தக்கதுதான் ஆனால் இந்த மோனநிலைக்கு காரணம் மேற்சொன்ன ஆட்களுடைய சந்தர்ப்பவாத, மோசடி அரசியல்தான் என்பதையும், ஏகாதிபத்தியத்தின் நுகர்வு கலாச்சாரம்தான் என்பதையும் விமர்சனம். சுயவிமர்சனம் செய்து கொண்டு தமிழனை விமர்சிப்பதே தகும்.

புலிகளை சிங்களர்கள் அழித்துவிடுவார்கள் என்பதை நான் நம்பவில்லை. அது நடக்கவே நடக்காது. ஆனால் புலிகள் இதே போல செயல்படுவதை தொடர்ந்தால் ஈழ மக்களே அவர்களை வரலாற்றின் பக்கங்களில் கரைத்துவிடுவார்கள். உணர்ச்சிவசப்படும் புலி ஆதரவாளர்கள் யாதார்த்தத்தை கண் கொண்டு நோக்க வேண்டப்படுகிறார்கள்.

இதோ கண் முன்னே ஒரு சமூகம் அழிகப்படுகிறது. இன்றைக்கு சிங்களர்களின் கைக்கு வந்துள்ள பிரதேசங்களில் பன்னாட்டு மூலதனம் வெறி கொண்டு இறங்கும். நுகர்வு கலாச்சாரம் பரப்பப்படும். பல ஆண்டுகளாக யுத்தம் ஏற்படுத்திய காயங்களை ஏகாதிபத்திய நுகர்வு கலாச்சார போதையில் மூழ்கி மக்கள் மறக்க முயலுவார்கள். இதனை எதிர்கொள்ளூம் சரியான அரசியலை கொண்டிராத ஒரு இயக்கமோ ஏகாதிபத்தியத்தின் இந்த தாக்குதலில் பழம் பொருள் காட்சியகத்தின் பெட்டகங்களில் முடங்கிவிடும்.

ஏனேனில் மக்களின் பினாமிகள் வரலாற்றில் அடையாளம் இழப்பதுதான் எப்போதுமே நடந்துள்ளது.

ஆனால் ஈழ விடுதலை? அது வரலாற்றின் தேவை. அது இன்றைக்கு இல்லாவிடிலும் என்றைக்காவது தனக்கான சரியான வாகனத்தை தேர்ந்தெடுத்து கரை சேர்ந்துவிடும்.

அசுரன்