Language Selection

குமுதம் சஞ்சிகைக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் வழங்கிய பேட்டி, தமிழ் மக்களையே கேனப்பயலாக்குகின்றது. விடுதலைப்புலிகள் தவறுகளை எல்லாம் உணர்ந்து திருந்தி விட்டதாக கூறுகின்ற, பிழைப்புத்தனத்தை அம்மணமாக்கிவிட்டது. பலர் புலிகள் திருந்திவிட்டதாக கூறி, தமிழ் மக்களாகிய நாம் எல்லோரும், முஸ்லீம் மக்கள் உள்ளிட புலியின் பின் அணிதிரள்வதுதான் பாக்கி என்கின்றனர். 

தமிழ் மக்களே! முஸ்லீம் மக்களே! வாருங்கள் புலிகளுடன் சேர்ந்து போராட! என்றனர். எம் ஓற்றுமைக்கு தடையாக இருந்தவர்கள் எம்முடன் இல்லை என்றனர். நாங்கள் எந்த தவறும் இழைக்காதவர்கள், இருந்தும் தவறுகளை திருத்திவிட்டோம் என்றனர். இப்படி பிழைப்புவாத பொறுக்கிகளின் வில்லுப்பாட்டு ஒருபுறம்.

   

புலிகளோ நாங்கள் கடைந்தெடுத்த பாசிட்டுகள் தான் என்பதையும், எந்த உண்மையையும் பொய்யாக பிரச்சாரம் செய்யும் கோய்பல்ஸ்சுகள் தான் என்பதையும், நடேசன் தன் பொலிஸ் மொழியில்  அறிவித்துள்ளார். மனிதவிரோதமே எம் சொந்த மொழி. தமிழினம் அழிந்தால் என்ன, செத்தால் என்ன, நாங்கள் மனித விரோதிகளாகவே தொடர்ந்தும் இருப்போம் என்பது புலிகளின் இலட்சிய தாகம்.

 

ஐயோ தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றனர், ஆக்கிரமிப்பு யுத்தம், தற்காப்பு யுத்தம்,  புலிகளை விட்டால் வேறு என்ன செய்ய முடியும், புலிகள் திருந்திவிட்டனர், புலிகளை திருத்த புலிக்குள் சேர வேண்டும், உங்களிடம் என்ன தீர்வு உண்டு, எத்தனை பேர் உள்ளீர்கள் என்ற பலவித கூச்சல்கள் ஊடாகவே பிழைப்புவாதம், பாசிசத்தை நக்குகின்றது. 'சுதந்திர" ஊடகவியல் முதல் இடதுசாரிகள் வரை, பிழைப்புவாதக் கூச்சலை எழுப்பிக் கொண்டு, புலிப் பாசிசத்தின் பின் ஒடுகின்றனர். எங்கே ஒடுகிறோம் என்று தெரியாது, பலர் அம்மணமாகவே ஒடுகின்றனர்.

 

அவர்களுக்கு ஒரு வழியை பொலிஸ்காரன் நடேசன் திறந்து காட்டுகின்றார். புலிப் பாசிசத்தை 'பிரபானிச" தத்துவமாக அறிவித்து, அதை 'பிரபானிசமாக" அறிமுகம் செய்ய நடேசன், எம் மக்களின் போராட்டதை அழித்ததை தம் பெருமையாக கூறுகின்றார். அதை அவர் குமுதம் பேட்டியில் 'முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் இரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது பாரிய நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டார். இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்."

 

உலகத்தில் தம்மைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் கேனயன்கள் என்ற நினைப்பு.  புலி இயக்கத்தின் பெயரை பயன்படுத்தி தீய சக்திகள் தானாம், இந்த மனித விரோத செயலை செய்தவர்களாம். சரி யார் இந்த தீய சக்திகள்!? முதலில் ஒரு கேடுகெட்ட பாசிசப் பொறுக்கி தான், இதை இப்படிக் கூறுவான். தமிழ் மக்களின் அக்கறையுள்ள எவரும் இப்படிக் கூறமுடியாது. இப்படி எல்லாக் குற்றங்களையும் மூடிமறைத்தும், அதை தாமல்ல என்று மறுத்தும், அவற்றை தீய சக்திகளின் செயலாக கூறுகின்றவர்கள், நாளை முழுமையான துரோகிகளாக பிழைப்புவாதிகளாக சந்தர்ப்பவாதிகளாகவே இருப்பர். இதை நாம் கருணா ஊடாக காணமுடியும். அவன் இன்று எதை கூறுகின்றானோ, அதை நடேசன் வெள்ளோட்டமாக கூறுகின்றார். 

 

தமிழ் மக்களுக்கு எதிரான தீயசக்தி யார்? தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைத்த, அந்த தீய சக்தி யார்? வேறு யாருமல்ல. நீங்கள் தான்.

 

அன்று முஸ்லீம் மக்களிடம் உடுத்த உடையைத் தவிர அனைத்தையும் சூறையாடியது யார்?  அவர்களை கொள்ளையிட்டு, சொந்த மண்ணில் வாழ முடியாதபடி 24 மணி நேரத்துக்குள் துரத்தியவர்கள் யார்?  நீங்கள் தான். செய்த நீங்கள், இன்று உங்கள் பெயரைப் பயன்படுத்தி அந்த தீய சக்தி பற்றி, கோயபல்ஸ்களாக மற்றவனுக்கு கதை சொல்ல முனைகின்றீர்கள்.

 

தமிழ்மக்கள் இன்று கோரமாக துடிக்கத்துடிக்க மரணித்துப்போக காரணமாக இருக்கும் தீய சக்திகளும் நீங்கள் தான். இந்த நிலையிலும் ஈவிரக்கமற்ற பாசிட்டுகளாக குலைப்பதை இந்த பேட்டி மீள அம்பலமாக்குகின்றது. அன்று ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லீம் மக்களை  துரத்திய புலிகள், அவர்களின் சொத்தைக் கொண்டு தலைவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்ததையும், நடேசனின் ஊண் உடல் கூட அதில் தான் வளர்ந்தது.

 

ஆனால் அந்த மக்கள் ஒரு சதமின்றி அகதியானார்கள். 17 வருடங்களாக தொடரும் அகதி வாழ்வு. இந்த இழிவை ஏற்படுத்திய நீங்கள், இன்றும் அதே வெறியுடன் கொக்கரிக்கின்றீர்கள். 'எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார்"  என்று வேறு புலுடா. முஸ்லீம் மக்கள் இரவோடிரவாக துரத்தியடிக்கப்பட்ட 1990 ம் ஆண்டு புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்குடா இருந்ததுடன், புலிகளின் தலைவர் உட்பட அனைத்து தீய சக்திகளும் அங்கு மக்களின் ஓற்றுமைக்கு வேட்டு வைத்த வண்ணம் இருந்தனர். தலைவர் இன்றி அணுவும் நகராது என்று கூறுகின்ற புலி முட்டாள்கள், இதில் மட்டும் தலைவருக்கு தெரியாது நடந்ததாம். இது தீய சக்திகளின் செயலாம்;. ராஜீவை கொன்றபோது, அதை செய்தது நாங்கள் அல்ல என்றனர். அதை செய்தது தீய சத்திகள் என்றதுடன், அந்த தீய சக்தியாக புதியஜனநாயகம், புதியகலாச்சாரம் வெளியிடும் குழுவே இந்தக் கொலையை செய்ததாக கூறியவர்கள் தான் இவர்கள். இதே போல் 1987 இல் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர் கோரி நடத்திய போராட்டத்தை, தீய சக்திகளே வழிநடத்தியதாக கூறியவர்கள் இதே புலிகள் தான்.   

 

உண்மையே பேசமுடியாத, கேடுகெட்ட பாசிசப் பொறுக்கிகள் தாம் செய்ததை மறுப்பதும், அதை மற்றவர் தலையில் போடுவதும் இந்த பொய்யர்களின் 'விடுதலை" அறமாகிவிட்டது.
 

முஸ்லீம் மக்களை வெளியேற்றியது தீயசக்தி என்று கூறி, தமது இந்த மனிதவிரோதமான  கேவலமான செயலை நியாயப்படுத்துகின்றனர்.

கருணா உள்ளிட சேர்ந்து செய்த இந்த ஈனச்செயலை, இன்றும் மனித விரோதிகளாகவே இருந்து அணுகுகின்றனர். தேசியப் போராட்டத்தின் ஒற்றுமையை சிதைத்தவர்களாக, அதன் தோல்விக்கு காரண கர்த்தக்களாகவே இருந்துள்ளனர், இருக்கின்றனர்.

 

இன்றுவரை அந்த மக்கள் அங்கு வாழ அங்கீகரிக்க மறுக்கும் அதே பாசிச அரசியல்.  'இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்." அவர்கள் பெயரால், பாசிச பொழிப்புரை. 'எம் அரவணைப்பில்" என்ன தற்கொலைக் குண்டை, அணைத்து வைத்து வெடிக்க வைக்க போகின்றீர்களா? எல்லாவற்றையும் கோயபல்ஸ் பாணியல் கூறுகின்ற புலி பாசிட்டுகள், திருந்திவிட்டதாக, தவறுகள் உணர்ந்துவிட்டதாக, கூறிப்பிழைக்கும் கூட்டம் மட்டும் எம்மத்தியில் குறையவில்லை.

 

பி.இரயாகரன்
23.01.2009