06082023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

சத்யம்- கேள்விகள் - விடுபட்டவை

சத்யம் கம்ப்யூட்டர் விவகாரம் மும்பை தாக்குதலுக்கு நிகரானது என்று ஆயுள் காப்பீட்டு நிறுவனத் (LIC) தலைவர் டி.எஸ்.விஜயன் தெரிவித்தார். சத்யம் நிறுவனத்தின் 4 சதவீதப் பங்குகள் எல் ஐ சியிடம் உள்ளதாம். இதன் மதிப்பு 8 ஆயிரம் கோடியாகும்.  தற்போது இந்நிறுவனத்தை சீரமைக்க அரசு புதிய இயக்குநர்களை நியமித்ததுள்ள போதிலும், அதை சீர்படுத்த இயலும் என்று தெரியவில்லை என்றும் விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்

-தினமணி (23.01.09)

இந்தியப் பங்குச் சந்தைகளின் மதிப்பு வீழ்ச்சியடையும் போதெல்லாம் இந்திய அரசு எல்.ஐ.சி மூலம் மக்கள் பணத்தை பல நிறுவனங்களின் பங்குகளில் கொட்டி வருகிறது என்பதற்கு இது ஒரு சான்று. இப்படித்தான் பல நிறுவனங்களின் சொத்துக்களில் மக்களின் வரிப்பணம் முறைகேடாக சேர்க்கப்ப்ட்டுள்ளது. இப்போது சத்யம் போட்டிருக்கும் நாமம் எல்.ஐ.சிக்கும் சேர்த்துத்தான் எனும் போது என்ன செய்வது?


சத்யம் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டியது சி.ஐ.டி விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் 12 ஆயிரம் ஊழியர்கள் கூடுதலாக கணக்கில் காட்டப்பட்டதாகவும், இவர்களுக்கு சம்பளம் வழங்கிய விதத்தில் ரூ.20 கோடியை ராமலிங்க ராஜூ தனது கணக்கில் எடுத்துக் கொண்டதாகவும் சி.ஐ.டி தெரிவித்துள்ளது. நிறுவனத்தில் 52 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டாலும் உண்மையில் 40 ஆயிரம் ஊழியர்கள் உள்ளது தெரியவந்துள்ளது.

- தினமணி (23.1.09)

இந்த ரத்த உறிஞ்சி அட்டை அயோக்கியத்தனத்தை ” உழைத்து முன்னேறிய உத்தமர்” ராமலிங்க ராஜூவின் பக்தர்கள், இரசிகர்கள், ஊடகங்கள், பக்தியைப் பரப்பிய கிழக்கு பதிப்பகத்தார் ஆகியோர் என்ன சொல்வார்கள்?


சத்யமின் ராமலிங்க ராஜூ அவரது குடும்பத்தினர் நடத்தி வந்த பல பினாமி நிறுவனங்களிலிருந்து சுமார் 1425 கோடி ரூபாயை கடனாகப்பெற்றிருக்கிறார்.இந்த நிறுவனங்கள் பல ஒரே முகவரியிலிருந்தும் பல முகவரியில்லாமலேயும் நடத்தப்பட்டவையாகும். இல்லாத நிறுவனங்களிலிருந்து எப்படி கடன் வாங்க முடியும்? அல்லது வலது கை யாருக்கும் தெரியாமல் இடதுகைக்கு கடன் கொடுத்ததற்கு ஒப்பானது இது. இந்த உப்புமா கம்பெனிகளுக்கு எப்படி கோடிக்கணக்கான பணம் கிடைத்த்து?

_டெக்கான் குரோனிக்கிள் (23.01.09)

ராஜூ தனது ஒப்புதல் கடிதத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக 2008 ஆம் ஆண்டு கடன்வாங்கியதாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மேற்கண்ட மோசடிக் கடன் 2006ஆம் ஆண்டு புரட்டப் பட்டிருக்கிறது. இந்த நிதியாடல் எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லையாம். வேறு எதற்கு கம்பெனிக்கு கடன் கணக்கு வாங்கி சுவிஸ் கணக்கில் ஏற்றுவதற்குத்தான்.


சி.ஐ.டி போலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலின் படி ராஜூ தனது பெயரிலிருந்த பங்குகளை தனது சகோதரர் சூர்யநாரயணா ராஜூ மற்றும் தாயார் அப்பள நரசிம்மாவுக்கும் மாற்றியிருப்பாதகத் தெரிகிறது. மேலும் புலனாய்வாளர்களின் தகவலின்படி ஐதராபாத் நகரிலும் புறநகரிலும் ராஜூ ஏறக்குறைய 3400 ஏக்கர் நிலங்களை வாங்கியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலங்கள் அத்தனையும் ராஜூவின் குடும்ப உறவினர்கள் மற்றும் பினாமிகளின் பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது.

_டெக்கான் குரோனிக்கிள் (23.01.09)

ஆந்திராவில் உழுபவனுக்கு நிலம் சொந்தமாக்கவேண்டும் எனப் போராடிய நக்சல் இயக்கத்தவரை போலி மோதலில் கொலை செய்து ஒடுக்கியிருக்கிறது ஆந்திர அரசு. ஆனால் நகர்ப்புறத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரை கள்ளப்பணத்தில் வளைத்த ஒரு மலை முழுங்கி மகாதேவன் எல்லா கட்சிகளுக்கும், முதலமைச்சர்களுக்கும் நண்பனாகியிருக்கிறார். இதுதான் இந்தியாவின் அரசியல் கட்டமைப்பு! ஏழைக்கு புல்லட், முதலாளிக்கு பட்டுக் கம்பளம்!


சத்யம் ராமலிங்க ராஜூவின் மோசடி வெளியான பிறகு சத்யத்தின் பங்கு ரூ.179ரலிருந்து ரூ.40க்கு சரிந்த்து. மும்பைப் பங்குச் சந்தையும் அன்று 749 புள்ளிகள் சரிந்த்து. தற்போது இரு நிறுவனங்கள் சத்யத்தின் வீழ்ச்சியடைந்த பங்குகளை இலட்சக்கணக்கில் வாங்கி ஒரு ரூபாய் இலாபம் வைத்து முறையே 95, 60 இலட்சங்கள் சம்பாதித்திருக்கின்றனவாம்.

_டெக்கான் குரோனிக்கிள் (23.01.09)

இந்த செய்தியெல்லாம் எதற்காக? எல்லாம் வீழ்ச்சியடைந்த பங்குகளைக்கூட வாங்கி விற்று சூதாடலாம் என்ற மாயையை நடுத்தர வர்க்கத்திற்கு உண்டாக்கத்தான். இழவு வீட்டில் ஜீலேபி விற்கும் இந்த ஆபாசத்தை என்னவென்று சொல்ல?


நாற்பதாயிரம் ஊழியர்களை மட்டும் வைத்து 53,000 ஊழியர்கள் என்று கள்ளக் கணக்கு காட்டி கூடுதலான பொய்யான 13,000 ஊழியர்களுக்கு ஊதியம் கொடுத்த கணக்கில் ராமலிங்கராஜூ ஐந்தாண்டுகளில் அடித்த தொகை எவ்வளவு தெரியுமா? 1200 கோடி ரூபாய். இப்படித்தான் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு (23.01.09) செய்தி வெளியிட்டிருக்கிறது.

இதிலிருந்து நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. நாட்டின் பெரிய ஐ.டி நிறுவனங்களெல்லாம் பல நாடுகளில் பல ஆயிரம் ஊழியர்களை வைத்துள்ளதாகவும், ஆண்டு தோறும் கேம்பஸ் நேர்காணலில் சில ஆயிரம் பேரையும் வேலைக்கெடுத்துள்ளதாக வரும் செய்தி மற்றும் புள்ளிவிவரங்கள் எதுவும் உண்மையாக இருக்க முடியாது என்பதோடு ஊழியர் ஊதியம் என்ற கணக்கில் பல நிறுவன முதலாளிகள் கொள்ளையடிப்பார்கள் என்பதையும் உறுதியாக நம்பலாம்.

சத்யம் ஊழியர்களுக்காக ஹைதராபாத்தில் ” ரேடிகல் டெமாகிரிடிக் கார்பரேட் எம்பளாயீஸ் காங்கிரஸ்” Radical Democratic Corporate Employees Congress ( RDCEC) என்ற தொழிற்சங்கம் கடந்த வாரம் துவக்கப்பட்டிருக்கிறது. சத்யத்திற்கு மட்டுமல்ல மேவரிக் சிஸ்டம்ஸ், ஐகேட் டெக், ஷோபா ரினேய்ஸான்ஸ் இன்பர்மேஷன், ஆக்சென்சர், இன்ஃபோஸிஸ், இன்டர்கேட் கன்ஸ்டரக்ஷனஸ், காக்நிஸன்ட், பி.எம்,டபிள்யு மற்றும பவர் மெக் போன்ற நிறுவனங்களின் ஊழியர்களுக்காகவும் இந்த தொழிற்சங்கம் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. இதன் அமைப்பாளர் பதிரி பேசும் பொழுது, எல்லா பன்னாட்டு நிறுவனங்களிலும் தொழிற்சங்கம் ஆரம்பிப்பதற்கான உரிமை உள்ளது, அந்த உரிமைக்காக ஊழியர்கள் போராட வேண்டும் பாதிக்கப்பட்ட சத்யம் ஊழியர்களுக்கான எல்லா உதவியையும் இந்த தொழிற்சங்கம் செய்யும் எனக்கூறியுள்ளார்.

_டைம்ஸ ஆஃப இந்தியா (23.01.09)

பின்னூட்டம் இட மூல கட்டுரைக்கு வரவும்கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்