ஒரு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் விளையாடிய பிரேசில் அணி காலிறுதியிலோ அல்லது அறையிறுதிப் போட்டியிலோ தகுதி பெறுவதற்கு டை பிரேக்கரில் பெனால்டி கோல் அடிக்க வேண்டிவருகிறது. ஐந்து வாய்ப்புக்களில் மூன்று

 கோல்கள் அடிக்கப்படுகின்றன. நட்சத்திர வீரர்களான சீக்கோவும், சாக்ரடீசும் கோல் அடிக்கத் தவறியதால் பிரேசில் தோல்வியடைகிறது. கால்பந்தை மதம்போல நேசிக்கும் நாட்டு ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற சோகத்துடன் அந்த வீரர்கள் நாடு திரும்புகின்றனர். விமானநிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எவரும் அந்த நட்சத்திர வீரர்களைத் திட்டவில்லை. அவர்கள் பிடித்திருந்த பதாகைகளில் ” சீக்கோ, சாக்ரடீஸ்! இப்போதும் நீங்கள்தான் சிறந்த வீரர்கள்”என்றிருந்தது. ஒரு பெனால்டி ஷூட்அவட்டில் கோலடிக்கத் தவறியதை வைத்து ஒரு கால்பந்து வீரனை மதிப்பிட முடியாது என்ற ரசனைத் தரம் பிரேசில் மக்களிடம் இருந்தது.

 

ஆனால் ஏழாயிரம் கோடியை பிக்பாக்கட் அடித்த ஒரு திருடன் தங்களுக்கு வேலையளித்து ஐந்திலக்க சம்பளத்தை அளித்தான் என்ற ஒரே காரணத்திற்காக அவனது சிறை வாசலுக்கு முன்பாக பொக்கே வைத்து கண்ணீர் விடும் அற்பங்களை என்னவென்று சொல்வது?

சத்யத்தின் திருட்டு ஓனர் ராமலிங்க ராஜூ இருக்கும் ஹைதராபாத் சிறை வாயில்தான் இந்தக் கூத்து நடைபெறுவதாக பத்திரிகைகள் படத்துடன் செய்திகளை வெளியிடுகின்றன. அக்டோபர் 2 இல் காந்தி சமாதிக்கு முன்பு அஞ்சலி செலுத்துவது போல இனி ஜனவரி மாதம் ஐதராபாத் சிறைக்கு முன்பு வருடா வருடம் சத்யத்திற்கான அஞ்சலிக் கூட்டம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. சத்யமேவ பிக்பாக்கட் ஜெயதே!

சத்யம் ஓனரின் ஊழல் இந்தியக் கார்ப்பரேட் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும், ஐ.டி துறைக்கே மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தியதாகவும் பாரத தேசத்தின் புண்ணிய ஊடகங்கள் புனித வேடத்தை அளவு கடந்து ஏற்றி வருகின்றன. இந்திய முதலாளிகள் இதற்கு முன்னர் ஊழல் ஏதும் செய்ததில்லையா என்பதை விட மோசடி செய்யாமல் எந்த முதலாளி முன்னேறியிருக்கிறான்? மோசடிகளில் சாதனை படைத்த அம்பானி இல்லையா? தனது மாட்ரிக்ஸ் பினாமி நிறுவனங்களின் மூலம் ரிலையன்சின் பங்குகளை வைத்துக்கொண்டு பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப பங்குகளை விற்றோ, வாங்கியோ மதிப்பை செயற்கையாக ஏற்றி, காலி அட்டை டப்பா மற்றும் மணலை இறக்குமதி செய்வது என்ற பெயரில் ஏற்றுமதி வரி சலுகையை மோசடியாகப் பெற்று, கனரக எந்திரங்களை வரியில்லாமல் இறக்குமதி செய்வதற்கு ராஜிவ்காந்தி மூலம் அந்தச் சட்டத்தையே தற்காலிகமாக இரத்து செய்து, ஐ.எஸ்.டி போன் கால்களை உள்ளூர் கால்களாக மாற்றி சில நூறு கோடி ரூபாய்களை அடித்த அம்பானிக்கு நிகர் யார்? அம்பானி அளவுக்கு ‘திறமை’ ராமலிங்க ராஜூவுக்கு இல்லெயன்று வேண்டுமானால் சொல்லலாம். உண்மையில் இன்று இந்திய முதலாளிகளில் கொடிகட்டிப் பறப்பவர்கள் அனைவரும் இந்தப் பிக்பாக்கட் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள்தான். இந்த இமேஜை மறைப்பதற்குத்தான் ஊடகங்கள் இந்திய கார்ப்பரேட் உலகம் இப்போது வெட்கித் தலைகுனிவதாக ஃபிலிம் காட்டுகின்றன. சத்யமேவ முடிசவுக்கி ஜெயதே!

சுடுகாட்டுக்கூரை ஊழல் இந்திராகுமாரி, வருமானத்திற்கு அதிகமாய் சொத்து சேர்த்த ஊழல் ஜெயலலிதா, அப்புறம் கண்ணப்பன், செங்கோட்டையன், ஊழலை வெளியே தெரியாமல் சாதிக்கும் தி.மு.க தளபதிகள் முதலான தமிழகத்து அரசியல்வாதிகளின் ஊழலெல்லாம் இந்திய முதலாளிகளின் ஊழலோடு ஒப்பிடும்போது வெறும் தூசு. 1992இல் போலி வங்கி ஆவணங்களை வைத்து பலநூறு கோடிகளை இரண்டு மூன்று நாள் கைமாற்றி பங்குச் சந்தையில் ஊழல் செய்த ஹர்ஷத் மேத்தா பட்டைநாமம் போட்ட பணம் எவ்வளவு என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது. அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படியே அந்தத் தொகை 4,100 கோடி. மற்றும் இதில் மறைமுகமாக உள்குத்து வேலைகள் செய்த வங்கி முதலளிகள், அதிகாரிகள் பலர் இன்று வரை தண்டிக்கப்படவில்லை.சத்யமேவ ஜேப்படி ஜெயதே!

1996இல் சி.ஆர்.பி கேபிடல் நிறுவனத்தின் தலைவர் சி.ஆர்.பன்சாலி ஸ்டேட் வங்கியின் கணக்குகளை வைத்து கூடுதல் பணம் எடுத்து திருப்பி அடைக்கும் ரீஃபண்ட் வாரண்ட் சலுகையின் மூலம் 1031 கோடியை சுருட்டினார். அரசியல்வாதிளை சரிக்கட்டி யூனிட் ட்ரஸ்ட் இந்தியாவின் நிதியை சில மோசடிப்பங்குகளில் முதலீடு செய்ய வைத்ததில் அந்நிறுவனத்திற்கு 64 கோடி நட்டம் ஏற்பட்டது. இறுதியில் இந்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து 3,300 கோடியைக் கொட்டி அந்நிறுவனத்தை காப்பாற்ற வேண்டியதாயிற்று. இதிலும் எந்த முதலாளிகளும் தண்டிக்கப்படவில்லை. சத்யமேவ களவானி ஜெயதே!

2001இல் ஹர்ஷத் மேத்தாவின் சீடப்பிள்ளை கேதன் பரேக் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளிலிருந்து சுருட்டிய 3,800 கோடிபணத்தை வைத்து பங்குச் சந்தையில் மோசடி செய்தார். இதிலும் வங்கி அதிகாரிகள், மோசடியினால் ஆதாயம் அடைந்த முதலாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை. 90களின் பிற்பகுதியில் இந்தியாவெங்கும் தேக்குமரம் வளர்ப்பு, வைப்புத்தொகையை பல மடங்கு திருப்பித்தருதல் என்ற பெயரில் பல்வேறு பெனிபிட் நிறுவனங்கள் முளைவிட்டு பல ஆயிரம் கோடி மக்களை பணத்தை ஸ்வாஹா செய்தன. அனுபவ் பவுண்டேசன், ராயப்பேட்டை பெனிபிட் பண்ட் போன்ற நிறுவனங்களை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். இந்த நிறுவனங்களின் தமது ஓய்வூதியப் பணத்தை போட்டு ஏமாந்த நடுத்தர வர்க்கப் பெரிசுகள் இன்றும் பனகல் பார்க்கில் சந்தித்து தமது பணம் கிடைக்காதா என்று பேசி வருகின்றனர். இந்த 420 நிறுவனங்களின் பணத்தை சுருட்டிய திரைப்பட நட்சத்திரங்களும், முதலாளிகளும் இன்றும் சொகுசாகத்தான் வாழ்கின்றனர். சத்யமேவ மொள்ளமாறி ஜெயதே!

1999இல் இந்திய முதலாளிகள் சங்கம் (சி.ஐ.ஐ) கே.வி.காமத் எனும் (ஐ.சி.ஐ.சி.ஐ) தரகு முதலாளி தலைமையில் ஒரு குழு அமைத்து அன்றைய நிதி அமைச்சரிடம் ஒரு அறிக்கையைத் தந்தது. அதில் இந்திய அரசுக்கு சொந்தமான யூகோ வங்கி, இந்தியன் வங்கி உட்பட ஆறு வங்கிகள் நலிவடைந்து விட்டதாகவும் அவற்றை மூடிவிடுவது நாட்டுக்கு நல்லது என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில் வேலை செய்யும் ஊழியர்கள் அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்பி விடவும் பரிந்துரைத்த்து. நாட்டு நலன் மீது முதலாளிகளுக்கு என்ன ஒரு அக்கறை என்று யோசித்தால் இதில் உள்ள அயோக்கியத்தனம் தெரியாது. ஊர் முழுக்க கடன் வாங்கியவன் கடன் தொல்லையால் தற்கொலை செய்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கடன் கொடுத்தவனை கடன் வாங்கியவன் கொலை செய்வதை கேள்விப்பட்டிருக்கிறோமா? அதுதான் இது, அவன்தான் இவன்! அதாவது அரசு வங்கிகளின் 99ஆம் ஆண்டுக் கணக்குப்படியே சுமார் 58,554 கோடி ரூபாயைக் கடனாக பெற்ற இந்திய முதலாளிகள் அவற்றைத் திருப்பித்தராமல் வராக்கடன் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். மேற்கண்ட சி.ஐ.ஐ முதலாளி சங்கத்தில் உறுப்பினராக உள்ள பெரியமுதலாளிகள் மட்டும் 25,000 கோடி கடன் வாங்கி கோவிந்தா போட்டிருக்கிறார்கள். சத்யமேவ பீரோபுல்லிங் ஜெயதே!

மூடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்தியன் வங்கியின் வாராக்கடனில் முன்றில் ஒரு பங்கை இந்த சி.ஐ.ஐ சீமான்களில் 15 பேர் வாங்கியிருக்கிறார்கள். யூனைடெட் இந்திய வங்கியின் வராக்கடனில் ஐந்தில் ஒரு பங்கு கடனை இருபதே முதலாளிகள் சுருட்டியிருக்கின்றனர். மொத்தத்தில் இந்திய அளவில் சுமார் ஐம்பது முதலாளிகள் காந்தி கணக்கில் கடன் வாங்கி ஸ்வாஹா செய்திருக்கின்றனர். இப்படி வாங்கிய கடனை கட்டுவதற்குப் பதில் வங்கிகளையே மூடிவிடலாமென்றால் இந்திய முதலளாகளை மலை முழுங்கி மகாதேவன்கள் என அழைக்கலாமே? இன்றைய கணக்குப்படி இந்திய முதலாளிகள் திருப்பிக் கட்டாத கடனின் அளவு மூன்று இலட்சம் கோடியைத் தாண்டுகிறது. இந்திய அரசு வங்கிகளில் மக்கள் போடும் பணம் 78%, முதலாளிகள் போடும் பணம் வெறும் 6% மட்டுமே. ஆனால் வங்கிகள் கொடுக்கும் கடனில் 90% முதலாளிகளுக்குதான் போகிறது. இப்படி நாட்டு மக்களின் இரத்தத்தை சுவைக்கும் இந்த பண வெறியர்கள்தான் இந்தியாவின் இலட்சிய புருஷர்களாம். சத்தியமேவ பிராடு ஜெயதே!

கந்து வட்டிக்காரனிடன் சில ஆயிரங்கள் கடன்வாங்கியதற்கே இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்யும் நாட்டில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து விட்டு குஷாலாக வலம் வரும் முதலாளிகளை என்னவென்று சொல்வது? அடுத்து இந்திய அரசுக்கு வரும் வரிப்பணத்தில் 85% பங்கை பொதுமக்கள்தான் கட்டுகின்றனர். இதுவும் முதலாளிகள் அரசுக்கு தொழில் நிமித்தமாக கட்டும் வரியை மக்கள் மீது சுமத்துவதைச் சேர்த்துத்தான். ஆனால் முதலாளிகள் நேரடியாக அரசுக்கு கட்டும் வரியின் பங்கு வெறும் 15% மட்டும்தான். சாரமாகச் சொல்வதென்றால் வரிக்குறைப்பு, வரிச்சலுகை, ரயில்வே சரக்குக் கட்டணச் சலுகை, மின்கட்டணச்சலுகை, தண்ணீர்சலுகை, புதுப்புதுச் சாலைகள், வங்கிக்கடன் தள்ளுபடி, மானிய விலையில் கச்சாப் பொருள், லாப உத்திரவாதம், ஏற்றுமதிக்கு சுங்கத் தீர்வைச் சலுகை, கறுப்புப் பணத்திற்கான வரிச்சலுகை என எல்லா சலுகைகளையும், இலவசங்களையும் அனுபவிப்பது இந்திய முதலாளிகள்தான். மேலும் சாதாரண நடுத்தர மக்கள் கூட தொழில் வரி கட்டும் போது முதலாளிகள் கட்டுவதில்லை. கட்டவேண்டாம் என சலுகையும் உண்டு. தொழில் வரி ஏய்ப்பு மூலம் முதலாளிகள் குவித்த கருப்புப் பணம் 80,000 கோடி ரூபாய் என 96 இல் திட்டக்கமிஷன் துணைத்தலைவராக இருந்த மதுதண்டவதே அறிவித்தார். இன்று இந்திய முதலாளிகள் சுவிஸ் வங்கிகளில் சேர்த்திருக்கும் கருப்புப் பணம் முப்பதிலிருந்து எண்பது இலட்சம் கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. சத்யமேவ திருட்டு ஜெயதே!

இத்தகைய பின்னணியில் இருந்து பார்க்கும் போது ராமலிங்க ராஜூவின் ஏழாயிரம் கோடி ஸ்வாஹா என்பது வெறும் ஜூஜூபிதான். 80களின் பிற்பகுதியில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஊழியர்களை வைத்து சத்யத்தை ஆரம்பித்த ராமலிங்க ராஜூவின் சத்யம் இன்று 53,000 ஊழியர்களை கொண்டிருக்கும் மாபெரும் நிறுவனமாக வளர்ந்த கதைதான் தற்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. இதன் புள்ளி விவரங்கள் நீங்கள் அறிந்ததே. இந்த விவரங்களிலிருந்து நாம் உண்மையைத் தேடுவோம். இன்றைய செய்திப்படி சத்யமில் 53,000 ஊழியர்கள் வேலை பார்க்கவில்லையாம். 40,000த்திற்கும் குறைவானோர்தான் வேலைபார்ப்பதாகவும் மீதிக் கணக்கில் 20 கோடி ரூபாய் ஊதியம் கொடுத்ததாக கள்ளக்கணக்கு காண்பித்திருக்கிறார்கள். இதைவிடுத்து நாம் பார்க்கவேண்டிய முதல விசயம் சத்யத்தை நான்காவது பெரிய ஐ.டி நிறுவனமாக உலகம் மதிப்பிடுவதற்கு ராமலிங்க ராஜூ தனது நிறுவனத்தின் மதிப்பை பொய்க்கணக்குகளை வைத்து ஊதிப் பெருக்கினார். இதை உண்மையென நம்பி நடுத்தர வர்க்கம் சத்யத்தின் பங்குகளை அதிக விலை கொடுத்து அதாவாது ஏமாந்து வாங்கியது. இதில் ராமலிங்க ராஜூ அன்ட்கோ எவ்வளவு சுருட்டியது என்பது தெரியாது. ஏனெனில் தனது பொய்க்கணக்கு வெளிஉலகிற்குத் தெரியப் போகிறது என்பது தெரிந்த உடனே அல்லது அதற்கு சில காலம் முன்பே நல்லவிலைக்கு தனது பங்குகளை விற்றுவிட்டார். 2001இல் ராமலிங்க ராஜூவிடம் இருந்த சத்யத்தின் பங்குகள் 25.6%. இதைத்தான் மோசடி செய்து நல்ல விலைக்கு விற்று 2009இல் 3.6% என குறைத்துக்கொண்டார். இதிலும் இரண்டு விசயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று தனது அதிக பங்குகளை நல்லவிலைக்கு விற்று ஏமாற்றியது, இரண்டாவது குறைவான பங்குகளை வைத்துக் கொண்டே சத்யத்தை ஆதிக்கம் செய்து 7000 கோடி ரூபாயை ஸ்வாஹா செய்த்து. சத்யமேவ ஸ்வாஹா ஜெயதே!

கார்ப்பரேட் கம்பெனிகளை கவனிக்கும் அமைச்சகம், கம்பெனிகளின் பதிவாளர், வருமானவரித் துறை, செபி, அமலாக்கப்பிரிவு செயலகம் போன்ற பல கண்காணிப்பு நிறுவனங்களையெல்லாம் ஏமாற்றித்தான் ராமலிங்க ராஜூவின் திருட்டு ராஜ்ஜியம் சில ஆண்டுகளாக வளர்ந்திருக்கிறது. இவ்வளவு பெரிய மோசடியையே இந்த அமைப்புக்கள் கண்டுபிடிக்கவில்லை என்பதிலிருந்து இவற்றின் யோக்கியதையையும், ஆற்றலையும் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் எல்லாத் துறைகளும் ஊழல் என்று சலித்துக் கொள்ளும் எவரும் முதலாளிகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகள்தான் நாட்டின் எல்லா ஊழல்களுக்கும் அடிப்படை என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அடுத்து சத்யத்தின் மோசடியை இதுவரை கண்டுபிடிக்காத இந்நிறுவனங்கள்தான் ராமலிங்க ராஜூவின் மாபெரும் திருட்டை புலனாய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்களாம். இதிலிருந்து இந்த விசாரணை பல பத்தாண்டுகளுக்கு நடக்கும் என்பதையும், அந்தக் காலத்தில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து ராமலிங்கராஜூ ஓட்டை வழியாக தப்பித்து வருவதும் நடக்கப் போகிறது. இந்தியாதான் விசாரணைக் கமிஷன்களை வைத்து அவற்றின் தீர்ப்பை குப்பைக் கூடைக்கு அனுப்புவதில் பிரபலமான நாடாயிற்றே! சத்யமேவ எஸ்கேப்பு ஜெயதே!

தனது ஒப்புதல் கடிதத்தில் கம்பெனியின் நலனுக்காக சில தவறுகளை செய்துவிட்டேன் என்று கௌரவம் சிவாஜி கணேசன் போல சென்டிமெண்ட்டாக நடிக்கும் ராஜூ உண்மையில் எல்லா மோசடிகளையும் கனகச்சிதமாக, புத்திசாலித்தனமாகத்தான் செய்திருக்கிறார். இவரது இயக்குநரவையில் இருந்தவர்களெல்லாம் ஏதோ “கோட்டாவில்” வந்த தற்குறிகளல்ல. சத்யத்தை அலங்கரித்த இயக்குநர்களில் முன்னாள் கேபினட் செயலாளர் டி.ஆர்.பிரசாத், ஹார்வர்டு பேராசிரியர் கிருஷ்ண பலேப்பு, ஐ.டி.குருவான வினோத் தாம், இன்டர் நேஷனல் ஸ்கூல் ஆஃப் பிசினசின் ராம் மோகன்ராவ் வரை எல்லாம் மெகா அறிவாளிகள்தான். இவர்களெல்லாம் சத்யமின் பிராண்டு மதிப்பை ஏற்றிவிடுவதற்கு காரணமானவர்கள். இப்படித்தான் நீயுயார்க் பங்குச்சந்தையில் கூட சத்யமின் பங்குகள் பட்டியிலிடப்பட்டது. இவர்கள் அனைவரும் ராமலிங்க ராஜூவின் களவாணித்தனத்திற்கு உடந்தையாக இருந்த்தோடு அதில் ஆதாயமும் அடைந்திருக்கிறார்கள். இந்த இயக்குநர்களும் மோசடி வெளிவரும் காலத்திற்கு முன்பேயே தம்மிடமிருந்த பங்குகளை நல்ல விலைக்கு விற்றிருக்கிறார்கள். ராஜூவின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக சத்யமின் துணைநிறுவனங்கள் தங்களிடம் அடமானமாக வைத்திருந்த 2.45 இலட்சம் பங்குகளை வங்கிகள் 300 கோடிக்கு விற்றன. இப்படி பட்டைநாமம் போடப்பட்ட மக்கள் காசு சத்யத்திற்கு போயிருக்கிறது. சத்யமின் 17 நிர்வாக இயக்குநர்களும் தங்களிடமிருந்த 60 இலட்சம் பங்குகளை 2008ஆம் ஆண்டிலேயே விற்றுவிட்டனர். சத்யத்தின் முன்னாள் சி.இ.ஓ ராம் மைனாம்பதியும் 9 இலட்சம் பங்குகளை 40 கோடிக்கு விற்றிருக்கிறார். சத்யத்தின் மோசடி நிதிக்கணக்குகள் பின்னாளில் வெட்டவெளிச்சமாகும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் அதன் பங்குகளுக்கு நல்ல விலை இருக்கும்போது இந்த அயோக்கிய சிகாமணிகள் சாமர்த்தியமாக விற்றிருக்கிறார்கள். இதிலிருந்து தெரியும் உண்மை என்னவென்றால் உலப்புகழ் பெற்ற பிசினஸ் கல்லூரிகளில் 420 வேலைகளை எப்படி திறமையாக செய்வது என்பதைத்தான் கற்றுக்கொடுக்கிறார்கள் போலும்!சத்யமேவ 420 ஜெயதே!

அமெரிக்காவில் தவறான வியாபார உத்திகளுக்காக குற்றம்சாட்டப்பட்ட புகழுடைய மைக்ரோசாப்ட்டின் பில்கேட்சும், ஈராக்கில் குண்டு போட்டு பல இலட்சம்பேரைக் கொன்ற பில் கிளிண்டனும் ஐதராபாத் வந்தபோது ராமலிங்கராஜூவை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார்கள். இப்படி உள்ளூர் பிக்பாக்ட்டை உலகறிந்த கேடிகளோடு சேர்த்து செல்வாக்கை அளித்தவர்கள ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும், தற்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டியும் முதன்மையானவர்கள். சத்யத்தின் அசத்யம் வெளியான பிறகு இருவரும் ராஜூவுக்கு யார் அதிக சலுகை அளித்தார்கள் என்று மாறி மாறிக் குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள். இதிலிருந்து இருவரும் உதவியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இப்படி அரசியல் தலைகளுக்கு தீனி போடும் கலையில் வித்தகராய் இருந்த ராஜூ அதன்மூலம் பல கோடி ஆதாயம் அடைந்திருக்கிறார். தற்போது போயஸ் தோட்டத்தில் அடைக்கலம் போயிருக்கும் புண்ணாக்கு கம்யூனிஸ்ட்டுகளான சி.பி.எம் கட்சிக்கு கூட ராமலிங்கராஜூ ஐந்து இலட்சம் நன்கொடை கொடுத்திருக்கிறாராம். சத்யமேவ ஊழல் ஜெயதே!

ராமலிங்க ராஜூவின் மகன்கள் நடத்தி வரும் மைடாஸ் இன்ஃப்ரா, மைடாஸ் புராபர்டீஸ் இரண்டு நிறுவனங்களையும் எட்டாயிரம் கோடி ரூபாய் கொடுத்து சத்யம் வாங்குவதாக இருந்த போதுதான் ராமலிங்க ராஜூவின் மோசடி லீலைகள் வெளியே கசியத்துவங்கின. இதில்தான் ராஜூவின் மெகா கொள்ளை தேவரகசியமாய் மறைந்திருக்கிறது. ராஜூ தனது நிறுவனத்தின் வருடாந்திர நிதி அறிக்கையில் ஏழாயிரம் கோடி கையிருப்பாக உள்ளது என்று காண்பித்தாரா, அதை சுருட்டினாரா, அப்படி சுருட்டியதை வெளியே மறைப்பதற்க்காக அதே தொகையை வைத்து தனது குடும்ப நிறுவனங்களை வாங்குவதாக செட்டப் செய்தாரா, அல்லது அந்தத் தொகையை சுவிஸ் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதை ஈடு செய்வதற்காக இத்தனை லீலைகளில் ஈடுபட்டாரா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத, யாரும் கண்டுபிடிக்க முடியாத விசயங்களாகும். ஏனெனில் இந்த மோசடிகள் அனைத்தும் ராஜூ கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்திலிருந்துதான் ஊடகங்கள் யூகிக்கின்றன. நாளேயே இந்த வாக்கு மூலத்தை ராஜூ மறுக்கலாம். முக்கியமாக இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்து அவர் போலிஸ் டி.ஐ.ஜியின் முன் சரண்டைவதற்கு முன்பு இரண்டு நாட்கள் இருந்திருக்கிறது. இந்த அவகாசத்தில் ராஜூ சட்டரீதியான முன்தயாரிப்புக்களை தாராளமாக செய்திருக்க முடியும். இந்த அவகாசத்தை ஆந்திராவின் முதல்வர் தனது மகனுக்காக ராஜூ செய்த தொழில் சலுகைகளுக்க்கான நன்றிக் கடனாக அளித்திருக்கிறார். மேலும் இதுவரை இந்த வழக்கு ஆந்திர மாநிலத்தின் போலீசு கையில்தான் இருக்கிறது. ராஜூவைக் காவலில் எடுத்து போலீசு விசாரித்த போது ராஜூ பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றோ எனக்கு நினைவில் இல்லை என்றோதான் தெரிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு அவர் வழக்கறிஞர்களால் கனகச்சிதமாக தயாரிக்க்கப்பட்டிருக்கிறார். இந்தியாவின் காலணாவுக்கு பெறாத பொருளாதாரச் சட்டங்களை ஏமாற்றியே ஒரு திருட்டு சாம்ராஜ்ஜியத்தை கட்டியவருக்கு ஆந்திரப் போலீசின் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாதா என்ன? சத்யமேவ ஆப்பு ஜெயதே!

ராஜூவின் மகன்களது நிறுவனங்களுக்கு ஆந்திராவின் பல நீர்த்தேக்கம், சாலை அமைப்பு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பணமதிப்பு நாற்பாதாயிரம் கோடிக்கும் மேல். குறிப்பாக ஐதராபாத்தின் மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்பட்டிருப்பது முக்கியமான ஒன்றாகும். டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு கிலோமீட்டருக்கு 100 கோடி என செலவாகியிருக்கும் போது ஐதராபாத் திட்டத்திற்குமட்டும் ஒரு கிலோ மீட்டருக்கு 210 கோடி என ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதை சுட்டிக்காட்டிய டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் இயக்குநர் ஸ்ரீதரன் காங்கிரசு அரசால் மிரட்டப்பட்டிருக்கிறார். இந்த திட்டத்திற்காக தேவைக்கதிகமான நிலங்களை மைடாசுக்கு ஒதுக்கப்பட்டதையும் ஸ்ரீதரன் எதிர்த்திருக்கிறார். ஆந்திராவில் மட்டும் மைடாசுக்காக 6000 ஏக்கர் நிலங்கள் அத்தனையும் பல ஆயிரம் கோடி மதிப்புடையவை பல திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. தென்னிந்தியாவில் மட்டும் மைடாசின் கையில் 17,000 ஏக்கர் நிலங்கள் இருக்கிறது. இவற்றில் சில மாநிலங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவும் பணியும் மைடாஸ் எடுத்திருக்கிறது. ஐதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசு மைடாசுக்கு பல ஆயிரம் கோடி பணம் கொடுக்குமாம். அதை பல ஆண்டுகள் கழித்து  மைடாஸ் அடைக்குமாம். இடையில் கணிசமான லாபம் மைடாசின் கையில் சேருமாம். அவலையும் உமியையும் ஊதி விற்பதற்கு இதை விட பொருத்தமான எடுத்துக்காட்டு உண்டா? சத்யமேவ அல்வா ஜெயதே!

ராமலிங்க ராஜூ ஏழாயிரம் கோடி ஸ்வாஹா செய்ததை ஆடிட்டிங் செய்து அங்கீகரித்த்து அமெரிக்காவின் பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம்தான். இந்த நிறுவனம் ஏற்கனவே குளோபல் டிரஸ்ட் வங்கி, டி.எஸ்.கியூ சாஃப்ட்வேர் கம்பெனிகளின் ஊழல் வழக்கில் சந்தி சிரித்த நிறுவனம். இதற்காக இன்ஸ்டிடியூட் ஆஃப் சாட்டர்டு அக்கவுன்டன்ஸ் ஆஃப் இந்தியாவின் மூன்று நடவடிக்கைகளில் ஒழுங்கு நடவடிக்கைகளை சந்தித்திருக்கிறது. ஆயினும் இந்த நடவடிக்கைகள் எதுவும் கூப்பர்ஸ் நிறுவனம் தொழில் செய்வதை தடை செய்யுமளவு வீரியம் கொண்டவையில்லை. எல்லாம் கண்துடைப்பு நடவடிக்கைகள் என்பது சத்யத்தின் கணக்குகளை ஆடிட்டிங் செய்த இலட்சணத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஒரு உலகப்புகழ் பெற்ற அமெரிக்க நிறுவனமே ஆடிட்டிங்கில் இத்தகைய மெகா ஊழலுக்கு ஒத்தூதியிருக்கிறது என்றால் மற்ற ஆடிட்டிங் நிறுவனங்களின் யோக்கியதையை விளக்கத் தேவையில்லை. இல்லாத ஏழாயிரம் கோடிரூபாயை இருக்கிறதா, அவை வங்கியில் உள்ளதா, வெறும் பேப்பரில் மட்டும் உள்ளதா, அல்லது ராஜூவின் மோசடி லீலையில் எங்காவது மறைந்திருக்கிறதா என்பதைக் கூட சோதித்தறியாத ஆடிட்டர்கள் இருப்பதைப் பார்க்கும் போது அவர்கள் படிக்கும் சி.ஏவின் இலட்சணம் புல்லரிக்க வைக்கிறது. சத்யமேவ திருட்டு ஜெயதே!

ராமலிங்க ராஜூ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வைத்திருக்கும் சத்யத்தின் பினாமி நிறுவனங்கள் 38க்கும் மேல் உள்ளன. இவற்றின் உடமை,பங்குகள், பரிவர்த்தனை, வங்கிக் கையிருப்பு, பணம் மாற்றுவது எல்லாம் யாரும் புரிந்து கொள்ள முடியாத சூட்சுமங்கள். மேலும் இந்த நிறுவனங்கள் பல வெளிநாடுகளிலிலும் இருக்கிறது என்பதோடு 65க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கும் வைத்திருக்கிறார்கள். இந்த மேட்ரிக்ஸ் வலைப்பின்னல் மூலம்தான் அம்பானி முதல் ராஜூ வரை பல முதலாளிகள் தங்களது திருட்டு சாம்ராஜ்ஜியங்களை கட்டியமைத்திருக்கிறார்கள். மொரிஷியஸ் தீவிலிருந்து இந்தியாவிற்கு வரும் அன்னிய முதலீட்டிற்கு வரி கிடையாது என்பதால் பல பன்னாட்டு நிறுவனங்கள் அங்கே ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தலைமை அலுவலகமா அறிவித்து இந்தியாவின் செல்வத்தை வரியின்றி அள்ளி வருகின்றன. அமெரிக்காவில் கள்ளக் கணக்கு காண்பித்து திவாலான என்ரான் கூட இந்திய முதலாளிகள் மற்றும் அதிகாரிகளின் சுவிஸ் வங்கி கருப்புப்பணத்தை மொரிஷியஸ் தீவு வழியாக மும்பையின் மின் திட்டத்திற்கு முதலீடு செய்த்து. அமெரிக்காவில் என்ரான் திவாலானதால் இந்த மோசடி இங்கே விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ராமலிங்க ராஜூவின் கள்ளப்பணம் கூட மொரிஷியசில் இருக்கும் லேக்வியூ இன்வெஸ்ட்மென்ட்ஸ் முதலான நிறுவனங்களில் பதுக்கப்பட்டிருக்காலம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு மேல் சத்யத்தின் பினாமி நிறுவனம் ஒன்று ஹவாலா பிசினசில் திருட்டுத்தனமாக ஈடுபட்டிருப்பதால் அந்த ஏழாயிரம் கோடி இந்த பிசினசில் புதையுண்டிருக்கலாம் எனவும் பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. சத்யமேவ கொள்ளை ஜெயதே!

ஒரு ஊரில் நூறுபேர் வசிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் பற்பசை நூறு டியூப்புகள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஊரில் பற்பசை தயாரிப்பதற்கு பத்து முதலாளிகள் இருக்கிறார்கள் எனில் அவர்களது ஒரு மாதச் சந்தை நூறு டியூப்களை விற்க வேண்டும். ஆனால் பத்து முதலாளிகளும் தாங்கள்தான் அந்த நூறு டியூப் சந்தையை கைப்பற்ற வேண்டுமென உற்பத்தி செய்தால் ஒரு மாதம் ஆயிரம் டியூப்கள் உற்பத்தியாகும். 900 டியூப்கள் வாங்குவார் இல்லாமல் தேங்க முதலாளிகளுக்கு சிக்கல் வரும். அதற்காக தொழிலாளரை நீக்குதல், விளம்பரம் செய்தல், மற்ற முதலாளிகளை வெல்வதற்கு எல்லா வழிகளையும் கையாளுதல், அந்த ஊரின் அரசனை கைக்குள் போட்டுக் கொள்ளுதல், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்தல், மாற்று முதலாளிகளின் திறமையான நிர்வாகிகளை கொண்டு வருதல் எல்லாம் நடக்கும். முதலாளிகளுக்கிடையிலான இந்தப் போட்டியல் சில முதலாளிகள் தோற்று மண்ணைக் கவ்வ வேண்டும். சிலர் அழிந்து தொழிலாளியாவார்கள். இறுதியில் ஒரு முதலாளி மட்டும் வெல்வான்.

அடுத்து அவன் நூறு டியூப்பற்பசைகளோடு மட்டும் நின்று விட முடியாது. ஏனெனில் சோப் தயாரிக்கும் மற்றுமொரு பெரிய முதலாளி தனது சாம்ராஜ்ஜியத்தை விரிப்பதற்கு பற்பசை தயாரிப்புக்குள் வரலாம். எனவே பற்பசையில் வெற்றி நாட்டிய முதலாளி இப்போது சோப் தயாரிக்கும் போட்டியிலும் இறங்க வேண்டும். இப்படித்தான் முதலாளிகள் சக முதலாளிகளை அழித்து ஏகபோக முதலாளிகளாக மாறி ஒரு நாட்டையே கைப்பற்றி பின்பு பல நாடுகளை வெல்லும் ஏகாதிபத்தியமாக மாறி இன்று மேல்நிலை வல்லராசாகவும் தலையெடுத்து நிற்பதற்கு அடிப்படையாக இருக்கிறார்கள். எனவே மோசடியும், ஊழலும், திருட்டுத்தனமும், முதலாளித்துவத்தை நீடித்திருக்கச் செய்யும் அடிப்படை விதிகள். இப்படித்தான் முதலாளித்துவம் இயங்க முடியும். முதலாளிகள் எல்லாரும் உழைத்து கஷ்டப்பட்டு முன்னேறியதாக கிழக்கு பதிப்பகத்தின் அசடுகள் வேண்டுமானால் கழுதை விட்டைகளாக புத்தகங்களை வெளியிடலாம். ஆயினும் உண்மை அதுவல்ல. ராமலிங்க ராஜூ தனது சத்யம் மென்பொருள் நிறுவனத்தை கட்டியமைத்ததும், அதை விரிவடையச் செய்ததும், அதற்காக ரியல் எஸ்டேட் முதல் மெட்ரோ ரயில் திட்டம் வரை எட்டுக்காலில் பாய்ந்ததும் அதன் போக்கில் சில ஆயிரம் கோடிகளை சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டு, தான் தவறு செய்து விட்டதாக நாடகம் ஆடுவதும் எல்லாம் விதிவிலக்கல்ல. முதலாளித்துவத்தின் விதியே இதுதான். சத்யமேவ அராஜகம் ஜெயதே!

ஏற்கனவே சத்யத்தின் மேல் இத்தகைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டபோது அவற்றை விசாரித்தறிய வேண்டிய அரசு நிறுவனங்கள் எவையும் எதையும் பிடுங்க முடியவில்லை. அதற்காகத்தானே அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சத்யம் தனது பங்குகளை நன்கொடையாக கொடுத்தது. உலக வங்கியின் அதிகாரிகளுக்கும் அப்படிக் கொடுத்த போதுதான் சத்யம் உலகவங்கியின் சேவையிலிருந்து நீக்கப்பட்டது. இதனால் உலக வங்கியொன்றும் யோக்கியவான் என்பதல்ல. அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் அரசுகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மது,மாது,பணம்,வீடு,என எல்லா மாமா வேலைகளையும் செய்து சாதித்துக் கொள்வார்கள். இந்த மாமா வேலையில் இந்தியாவில் அம்பானியும், உலக அளவில் என்ரானும் புகழ் பெற்றவை. ஆனால் இதே மாமா வேலைகளை சக முதலாளிகளின் மீது பிரயோகிப்பதை எந்த முதலாளிகளும் ஒத்துக் கொள்வதில்லை. தங்களுக்குள் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதில் முதலாளிகளுக்கிடையே எழுதப்படாத உடன்படிக்கை உண்டு. ஆனால் இதையும் மீறி மாமா வேலை செய்தால்தான் ஒரு முதலாளி இறுதியில் வெல்லமுடியும் என்பதுதான் யதார்த்தம். அதனால்தான் பிடிபடாதவரை நல்லவன் என்பது முதலாளிகளின் விளையாட்டிற்குப் பொருந்தும். உலக வங்கியே அப்படி மாமா வேலைகள் செய்து பல நாட்டு அரசுகளை அடிபணியவைத்திருப்பதும் இதனால்தான். சத்யமேவ மாமா ஜெயதே!

இந்திய மக்களின் பணத்தை பலவழிகளில் சுருட்டி ஏழாயிரம் கோடியை திருடியிருக்கும் இந்த ராமலிங்கராஜூ, அவனது குடும்பத்தினர், ஊழலில் பங்குபெற்ற இயக்குநர்கள், ஆடிட்டர்கள் அத்தனைபேரும் ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் தள்ள வேண்டும். அவர்களது சொத்துக்கள் முழுமையாக கைப்பற்ற வேண்டும். சத்யம் நிறுவனத்தை அரசுடைமையாக்கி அதன் ஊழியர்களின் வாழ்க்கை காப்பாற்றப்பட வேண்டும். இதுதான் இந்த பிக்பாக்ட்டிற்கும் எதிர்காலத்தில் மாட்ட இருக்கும் பிக்பாக்கட்டுகளுக்கும் பாடமாக இருக்கும். ஆனால் நடப்பது வேறு. அது என்ன என்று உங்களுக்குத் தெரியும்.ஆனால் நாம் மேற்கொண்ட முழக்கங்களுடன் போராடுவோம். அப்போதுதான் மோசடி முதலாளிகளின் பயங்கரவாதத்திலிருந்து தொழிலாளர்களையும், ஊழியர்களையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும். சத்யத்தின் பெயரில் உலாவரும் பிக்பாக்கட்டுகளை வீழ்த்துவோம்.

நண்பர்களே,

இந்த நீண்ட கட்டுரையை பொறுமையாகப் படித்ததற்கு நன்றி. எம்மைப் பொறுத்தவரை இந்தக் கட்டுரையை சுருக்கமாகத்தான் எழுதியிருக்கிறோம். இதில் அழுத்தம் கொடுத்து விரிவாக விவாதிக்க வேண்டிய துணை தலைப்புக்கள் நிறைய இருக்கின்றன. இணையத்தில் அப்படி ஒரு நெடிய கட்டுரை எழுதுவது பொருத்தமாக இருக்காது என்பதோடு எமது வேலைச்சுமையும் அதற்கு இடமளிக்கவில்லை. ஆனால் பொதுவில் முதலாளித்துவம் எப்படி இயங்குகிறது, அதில் சத்யத்தின் மோசடி எப்படி கச்சிதமாகப் பொருந்துகிறது என்ற கண்ணோட்டத்தை இக்கட்டுரை அறியத்தரும் என நம்புகிறோம். அதனால் இக்கட்டுரையை பலருக்கும் சுற்றுக்கு விடுவதற்கு உதவுமாறு கோருகிறோம். அப்போதுதான் இணையத்தை இதுபோன்ற பயனுள்ள விசயங்களுக்கு பலமாகப் பயன்படுத்தும் நோக்கில் நாம் வெல்ல முடியும்.

அடுத்து இந்தக் காலம் என்பது முதலாளித்துவம் தனது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடும் காலமாகவும் இருக்கிறது. அதன் ஒவ்வொரு அடியிலும் கோடான கோடி மக்கள் தமது வாழ்வை இழக்கிறார்கள். இந்த இழப்பில் ஏழைகள், நடுத்தர வர்க்கம், விவசாயிகள், சிறிய முதலாளிகள், தேசிய முதலாளிகள் எனப் பலரும் உண்டு. பாதிக்கப்பட்ட இந்தப் பிரிவினரை ஒன்றுபடுத்தும் செயலில் நாம் எந்த அளவு வெற்றி பெறுகிறோமோ அந்த அளவு முதலாளித்துவம் பரப்பிவரும் அநீதியான உலகமயத்தை எதிர்க்க முடியும். அது உலகெமெங்கும் வெற்றிபெறும் பட்சத்தில் நாம் நீதீயான உலகமயத்தை பரப்பமுடியும். அப்போதுதான் ஏழை, பணக்காரன், ஏழை நாடுகள், முன்னேறிய நாடுகள் என்ற பிரிவினையை அழிக்க முடியும்.

அதற்குத்தான் நாம் களத்தில் இறங்கி செயலாற்ற வேண்டியது முன் நிபந்தனையாக இருக்கிறது. அதற்கு முதலாளித்துவத்தின் பயங்கரத்தை அரசியல் ரீதியாக தெரிந்து கொண்டு தெளிவடைவது தேவை. அந்தத் தேவையை சென்னை அம்பத்தூரில் 25.1.09 அன்று நடைபெற இருக்கும் மாநாடு நிச்சயம் நிறைவேற்றும். அன்றைய நிகழ்ச்சி நிரலின் விவரங்கள் கீழ்க்கண்ட சுட்டிகளில் உள்ளன. அனைவரும் வாருங்கள். இணையம் நமது சமூக அக்கறைக்கு ஒரு ஆரம்பமாக இருக்கட்டும். மெய்யுலகம் நமது அக்கறையை செயல்படுத்தும் களமாக மாறட்டும்.

நட்புடன்

வினவு

தொடர்புடைய பதிவுகள்

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!

மு.ப. எ. மாநாடு – பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல்!

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு !

CONFERENCE AGAINST CAPITALIST TERROR!

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

Dr. Rudhran - Satyam - ?!

சத்யம் : பெயில் அவுட் அவசியமா ?

ராமலிங்க ராஜூ கோவிந்தா, கோவிந்தா

முதலாளித்துவம் கொல்லுது - சத்யம் IT ஊழியரின் தற்கொலை

விப்ரோ, சத்யம் போன்ற கம்பேனிகள் மோசடி 420 பேர்வழிகள் - உலக வங்கி அறிவிப்பு!!

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!

இற்று வீழும் முகமுடிகள்

கட்டுரைக்கான ஆதாரங்கள்

ஜனவரி மாத இந்தியா டுடே, அவுட்லுக், தி ஹிந்து, டெக்கான் கிரோனிகில், டைம்ஸ் ஆஃப் இந்தியா, புதிய கலாச்சாரம் இதழ்கள் , புதிய ஜனநாயகம் இதழ்கள் மற்றும் முதலாளிகள் அடித்த வங்கிக் கொள்ளை, ( பு.ஜ.தொமு வெளியீடு)