எட்டு நாட்களாக நீடித்த லாரி உரிமையாளர், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் வேலைநிருத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது கண்டு மக்கள் நிம்மதியடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பண்டிகை காலங்களில்

 

 லாரிகள் வேலைநிருத்தத்தினால் ஏற்பட்ட பொருட்தட்டுப்பாடும், விலையேற்றமும் மக்களை வதைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக பண்டிகைகள் என்பது ஓய்வின்றி உழைத்துக்களைக்கும் மக்களுக்கு கொஞ்சம் இழைப்பாறலை தருகின்ற இடைவெளி. அந்த இடைவெளியில் உண‌வுப்பொருட்கள் உள்ளிட்ட தட்டுப்பாடும் விலையேற்றமும் அவர்களை கலக்கமடையச்செய்தன. ஆனால் மத்தியதரவர்க்கத்திற்கோ காரில் சென்று ரிலையன்ஸ் பிரஷில்(!) வாங்கி பொம்மைகளைப்போல் குளிர்பெட்டிகளில் அடுக்கிவைத்திருப்பதால் பெட்ரோலும் எரிவாயு உருளையுமே அவர்கள் பிரச்சனைகளாக இருந்தன. எந்த அரசு வந்தாலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் பொருளாதார கொள்கைகளால் மக்கள் வாழ்விலிருந்து பிய்த்தெறியப்பட்டு அவதியுற்றுவரும் போதும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், வரிவிதிப்புகள், எல்லாவற்றையும் தனியார்மயமாக்கல் போன்றவைகளால்  மக்கள் அவதியுற்று வரும் போதும் அவற்றையெல்லம் கண்டு கொள்ளாத ஊடகங்கள் போராட்டம், வேலைநிருத்தம் என்றால் மட்டும் மக்கள் அவதியுறுவதாக கொட்டைஎழுத்துகளில் வருத்தப்பட்டு பாரம்சுமக்கின்றன.

 

கில இந்திய மோட்டார் காங்கிரஸ் டீசலுக்கு பத்து ரூபாய் விலைகுறைப்பு, வரிகுறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிருத்தி வேலைநிருத்தத்தை அறிவித்தபோது அதை கண்டு கொள்ளாத நடுவண் அரசு பின்னர் அத்தியாவசியப்பொருட்கள் சட்டத்தைக்காட்டி மிரட்டியது. தலைவர்களை கைதுசெய்தது. சில மாநிலங்கள் கூட எஸ்மா போன்ற சட்டங்களை கையிலெடுத்தது. போராட்டத்தை கைவிட்டால்தான் பேச்சுவார்த்தை என்று முதலில் விரைப்புக்காட்டிவிட்டு பின்னர் பேச்சுவார்த்தை நடத்தியது. கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பையடுத்து எட்டுநாள் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

 

கச்சாஎண்ணெய் பீய்ப்பாய் ஒன்றுக்கு 150 டாலரை தொட்டபோது ஏறியவிலை தற்போது 40 டாலராய் இருக்கும் போதும் அதற்க்குத்தகுந்ததுபோல் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுக்கிறது அரசு. எண்ணெய் நிருவனங்கள் இழப்பை சந்திக்கின்றன என்ற இசைத்தட்டு கீரல் விழுந்த பிறகும் மாற்றப்படவேயில்லை. மானியம் கொடுக்கப்படுவதினால்தான் இந்தவிலையிலாவது விற்கப்பட‌ முடிகிறது என்பதெல்லாம் ஏமாற்றுவேலை. உண்மையில் எண்ணெயின் மீது விதிக்கப்படும் வரிகளால்தான் இந்தியப்பொருளாதாரமே உயிருடனிருக்கிறது. இறக்குமதிவரி உள்ளிட்டு எண்ணெயின் மீது விதிக்கப்படும் வரிகள் எண்ணெயின் சர்வதேச விலையைவிட ஒன்றரை மடங்கு அதிகம். இந்தியாவின் மொத்த  வரிவருவாயில் எண்ணெய்வர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்த பெரும் பங்களிப்பாகும். பொருளாதாரத்தில் பாதாளத்தில் இருக்கும் பாக்கிஸ்தானில் கூட லிட்டர் 25 ரூபாய்க்கு விற்கப்படும்போது இந்தியாவால் ஏன் முடியாது? ஏனென்றால், அரசின் ஊதாரித்தனமான செலவுகளை எண்ணெய்வரிகள் தான் ஈடுகட்டுகிறது. உண்மை இப்படியிருக்கையில் லிட்டருக்கு பத்து ரூபாய் குறையுங்கள் என்று கோரிப்போராடுவது எப்படி சரியானதாக இருக்கும்? எண்ணெய்விலையை உச்சியில் வைத்திருக்கும் வரிவிதிப்பு முறையை நீக்குவதற்கு அல்லவா போராடவேண்டும். நீங்கள் என்ன விமானம்  ஓட்டி வாழ்க்கை நடத்த சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு மட்டும் விலையை குறைப்பதற்கு?  லாரி ஓட்டி சொகுசாக இருப்பவ‌ர்களாயிற்றே.

 

உங்கள் போராட்டத்தின் விளைவுகள் உழைக்கும் மக்களை பாதித்த அளவிற்கு உங்கள் கோரிக்கைகள் அவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. உழைக்கும் மக்களோடு ஒப்பிடுகையில் நிறைவாக இருக்கும் உங்களை தன்னுடைய தாக்குதலிருந்து தள்ளிவைத்திருக்கிறதா உலகமயம்? பின் ஏன் நீங்கள் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை தள்ளிவைக்கவேண்டும்.

வேலைநிருத்தம் திரும்பப்பெறப்பட்டது இதற்கான தொடக்கமாய் அமையவேண்டும்.