07042022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

இஸ்ரேலை காக்கும் பைபிள் கனவுகள்

"இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவு குறித்து வியக்கும் நீங்கள், அதற்குக் காரணம் அமெரிக்காவில் இருக்கும் யூத நலன் காக்கும் சங்கங்கள் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் எமக்கு ஆதரவாக இருப்பது கிறிஸ்தவ நலன்காக்கும் சங்கள்கள்தான்." - அமெரிக்காவில் பத்திரிகை நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாகு.

மேற்படி கூற்றில் உண்மையில்லாமல் இல்லை. அமெரிக்காவில் இயங்கி வரும் பல்வேறு புரட்டஸ்தாந்து , பெந்தகொஸ்தே பிரிவுகளைச் சேர்ந்த மதவாத அமைப்புகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதும் நிதி திரட்டுவதும் இரகசியமல்ல. இந்தச் செய்திகள் மறுபக்கத்தில் அமெரிக்காவில் கிறிஸ்தவ மத அடிப்படைவாத அமைப்புகள் தற்போது அரசியலிலும் ஈடுபட்டுவருவதை மெய்ப்பிக்கின்றன.

சர்வதேச அரங்கில் மீண்டும் சூடுபிடித்துள்ள இஸ்ரேலிய-பாலஸ்தீன பிரச்சினையில் இந்த கிறிஸ்தவ அமைப்புகள் வெளிப்படையாகவே இஸ்ரேலின் பக்கம் நிற்கின்றன. அதிலும் அவர்கள் தீவிரமான அரசியல் நிலையெடுத்துள்ளனர். தற்போது அமெரிக்க அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட சமாதான வரைபடத்திற்கு உலக நாடுகள் மத்தியில் ஆதரவு எழுந்த போதும் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளர்ந்துள்ளது. இஸ்லாமியர் மனதைப்புண்படுத்தும்படி பேசி சர்ச்சையை உருவாக்கிய பாதிரியார் பேட் றொபேர்ட்சன் போன்றவர்கள் தாம் இந்தச் சமாதானத் திட்டத்தை எதிர்ப்பதாக பகிரங்கமாகக் கூறிவருவதுடன், சமாதானத்திற்கெதிராக கையெழுத்துகள் வாங்கி அமெரிக்க அரசிற்கு அனுப்பி வருகின்றனர். மொத்த அமெரிக்க வாக்காளர்களில் காற்பகுதியினர் இந்தக் கிறிஸ்தவ அமைப்புகள் சொல்வதைக் கேட்பவர்களாகவே உள்ளனர். பாலஸ்தீன எழுச்சிப்போராட்மான 'இன்டிஃபதா' வின் போது கிறிஸ்தவ மதகுழுக்கள் இஸ்ரேலுக்கான தமது ஆதரவைப் பெருக்கிக் கொண்டுள்ளனர்.

இவர்கள் இஸ்ரேலிய ஆதரவுப் பிரச்சாரத்துடன் நில்லாது செயலிலும் இறங்கியுள்ளனர். இஸ்ரேலில் (ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப்பகுதிகளில்) சென்று குடியேறும் யூதர்களுக்கு கொடுப்பதற்கென 20 மில்லியன் டொலர்களை அமெரிக்க கிறிஸ்தவ மதகுழுவொன்று திரட்டியுள்ளது. இந்தப்பணம் குடியேற்றக்காரர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க, வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட என வழங்கப்படுகின்றது. இது இஸ்ரேலிய அரசு வழங்கும் உதவித்தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாகும். மேலும் இரண்டு பிரபலமான பெந்தகொஸ்தே, புரட்டஸ்தாந்து அமைப்புகள் இணைந்து 'குடியேற்றக்காரரைத் தத்தெடுக்கும் திட்டத்தை' அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டத்தின்படி 14 ஆயிரம் குடியேற்றக்காரருக்கு தலா 55 டொலர் வீதம் வழங்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் இயங்கிவரும் "இஸ்லாமியர் புனர்வாழ்வுக் கழகம்" போன்ற அமைப்புகள் திரட்டும் பணம் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதம் வாங்கப் போய்ச் சேருவதாகக் கூறி இவ்வமைப்புகளுக்கு அமெரிக்க அரசினால் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அல்-கைதாவுடன் தொடர்பிருப்பதாகக் கூறி சில அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது அரசாங்கத்திற்கு இன்றுவரை இயலவில்லை. பொஸ்னிய, செச்செனிய போர்களின்போது சில இஸ்லாமிய உதவிநிறுவனங்கள் போராளிகளுக்கும் உதவி செய்தமை குறித்த செய்திகள் வந்துள்ளன. ஆனால் பொஸ்னியாவிலும், செச்செனியாவிலும் என்ன நடந்தது என்பது பற்றி அமெரிக்க அரசிற்கு அக்றையில்லை. அதுபோல பாலஸ்தீனப் பிரதேசத்தில் தோளில் இயந்திரத் துப்பாக்கியுடன் திரியும் சட்டவிரோத யூதக் குடியேற்றக்காரர்களுக்கு கிறிஸ்தவ அமைப்புகள் வழங்கும் உதவி குறித்தும் அமெரிக்க அரசுக்கு அக்கறையில்லை.

யூதக் குடியேற்றங்களுக்கு அமெரிக்காவிலிருந்து எவ்வளவு பணம் வருகிறது என்பது தெரியாது. நூற்றுக்கணக்கான கிறிஸ்தவச் சபைகள் யூதக் குடியேற்றக்காரர்களுக்கான மருந்துகள், பாடசாலை உபகரணங்கள் , குண்டு துளைக்காத பேரூந்து வண்டிகள் என்பன வாங்குவதற்கெனக்கூறி நன்கொடையளிக்கின்றன. பல தமிழ் கிறிஸ்தவர்கள் அங்கம் வகிக்கும் பில்லி கிரஹமின் (அமெரிக்காவில் பெரிய கோடீஸ்வரன்) "Safe Harbour International" என்ற கிறிஸ்தவச் சபை தென்சூடான் கிளர்ச்சிக் குழுவான SPLA க்கு உதவி வழங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிறிஸ்தவச் சபைக்கும் இஸ்ரேலுக்குமான தொடர்புகள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் இஸ்ரேல் சார்பு அரசியல் நிலைப்பாடு பகிரங்கமாகத் தெரிந்த விடயம்.

"கிறிஸ்தவ- சியோனிஸ்டுகள்" என அழைக்கப்படும் இந்த கிறிஸ்தவ மதவாதக்குழுக்கள் இஸ்ரேலை ஆதரிப்பதற்கான காரணம் என்ன ? "பைபிள் எனது சமாதான வரைபடம்" எனக்கூறுகின்றன சமாதானப் பேச்சுவார்தைகளை எதிர்க்கும் கிறிஸ்தவக் குழுக்கள். அவர்கள் பைபிளில் உள்ளதை அப்படியே நம்புகிறார்கள். பைபிளில் கூறியுள்ளபடி ஆண்டவரால் வாக்குறுதியளிக்கப்பட்ட புனித நிலத்திற்கு யூதர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். இனிக் கர்த்தரின் வருகைக்காக அவர்களின் இருப்பை நிச்சயப்படுத்த வேண்டிய கடமை தமக்குள்ளதாகக் கருதுகின்றனர். "சமாரியாவில் மீண்டும் நீங்கள் திராட்சை மரங்களை நடுவீர்கள் (ஜெரேமியா) " என்ற கூற்று பைபிளில் வருகிறது என்பதற்காக, சமாரியா (இன்று மேற்குக் கரை என்றழைக்கப்படும் பாலஸ்தீனப் பகுதி) சென்ற கிறிஸ்தவர்கள் அங்கே யூதக்குடியேற்றங்களில் திராட்சைக் கன்றுகளை நட்டனர். இவ்வாறு பைபிள்தான் எமது வழிகாட்டி, சட்டநூல் எல்லாமே அதன்படிவாழ்வதுதான் சிறந்தது என்று நம்பும் இவர்களை "கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள்" என அழைப்பதே பொருத்தம்.

யூதக் குடியேற்றக்காரரும் பைபிளின்படி இந்த நிலம் தமக்கு உரித்தானதென நம்புகின்றனர். பைபிளின் பழைய ஏற்பாடு யூத மதத்தவருக்குரியது. இதனை அவர்கள் "தோரா" என அழைப்பர். 50 ஆண்டுகளுக்கு முன்பு இன்று இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாடு, பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்டது. அப்போது அங்கே வாழ்ந்த யூதர்கள் மிகச் சிறுபான்மையினர். பிற்காலத்தில் ஐரோப்பாவில் இருந்து வந்த யூதர்களே இன்று இஸ்ரேலியப் பெரும்பான்மைச் சமூகமாக வாழ்கின்றனர். இவர்கள் வாழும் பெருமளவு நிலங்கள் அங்கே காலங்காலமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீன அரபுக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டவை. ஆனால் இந்த அத்துமீறலை பைபிளைக் கொண்டு நியாயப்படுத்துகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமது மூதாதையர் விட்டுச் சென்ற இடத்திற்கு தாம் மீண்டும் வந்துவிட்டனராம். ஆகவே இஸ்ரேலின் சுதந்திரத்திற்கு முன்பு இடம்பெற்ற போர் பாலஸ்தீன மக்கள் மீதான பயங்கரவாத வன்முறை (அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசே இதனைக் கூறியது) சொத்துகள் சூறையாடல் எல்லாமே பைபிளின் அடிப்படையில் நியாயமானவை. இதனைத்தான் 1967 ன் பின்பு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலங்களில் குடியேறியுள்ள யூதர்கள் தொடர்கின்றனர். இஸ்ரேலின் மேற்குப் பகுதியில் வாழும் யூதர்களில் பலர் மதசார்பற்ற ஐரோப்பியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள். இதற்கு மாறாக பாலஸ்தீனப் பகுதிகளில் வாழும் யூதர்கள் மத நம்பிக்கையாளர்கள். உடைஉடுப்பதில், உணவுப்பழக்கத்தில் மத ஆச்சாரங்களைப் பிசகாது பின்பற்றுபவர்கள். 

சமாதான ஒப்பந்தப்பிரகாரம் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை இஸ்ரேலிய அரசு வெளியேற்ற முயன்ற போது "இந்த நிலம் எமக்கு ஆண்டவரால் அளிக்கப்பட்டதனால், நாம் வெளியேறமாட்டோம்" என்று அடம் பிடித்தார்கள். குடியேற்றக்காரர்கள் அங்கே கடவுளை மட்டும் வணங்கிக் கொண்டு சும்மாவிருக்கவில்லை. யூதத் தீவிரவாதிகள் என்று அறியப்படுவோரில் பெரும்பான்மையானோர் இந்தக் குடியேற்றக்காரர்கள். வெளிப்படையாக இனவாதப் பிரச்சாரம் செய்யும் "காஹ்" என்ற அமைப்பு அமெரிக்க அரசினால் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. பலஸ்தீனப் பாடசாலைகளுக்குக் குண்டுவைத்தல், பாலஸ்தீன வயல்களை எரித்து நாசம் செய்தல் என்பன இந்த இயக்கத்தின் அறியப்பட்ட சில செயல்கள். இந்த இயக்க உறுப்பினர்களில் ஒருவன் பள்ளிவாசலுக்குள் தொழுதுகொண்டிருந்த பலஸ்தீனர்களைச் சுட்டுக்கொன்றான். பின்னர் அவன் ஒரு மனநோயாளி என அறிவித்தார்கள்.

யூதக் குடியேற்றக்காரரின் தீவிரவாத அமைப்புடனான தொடர்பு பகிரங்கமாகத் தெரிந்த பின்னும் ஒவ்வொரு குடியேற்றக்காரருக்கும் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுதபாணிக் குடியேற்றக்காரர்கள் அடிக்கடி விளையாட்டுக்காக அயலில் வாழும் பலஸ்தீனர்கள் மீது சுடும் சம்பவங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீனரின் குடியிருப்பு மீது கல்வீசுவது, தம்மைக் கடந்து போகும் பாலஸ்தீனர்களை இனவாத வார்த்தைகளைப் பிரயோகித்து இழிவுபடுத்துவது என்பன இவர்களுக்குச் சர்வசாதாரணமானவை. எந்தவொரு சர்வதேசச் செய்தி ஊடகமும் இந்தச் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இஸ்ரேலியர்கள் மீதான இன்னொரு குற்றச்சாட்டு பிராந்திய விஸ்தரிப்புப்பற்றியது. ஒருமுறை இஸ்ரேலின் தேசியக்கொடியைப் பாருங்கள்.அதன் நடுவில் நட்சத்திரமும் மேலும் கீழுமாக இரண்டு நீலக்கோடுகளும் இருக்கும் நட்சத்திரம் முன்னொருகாலத்தில் இஸ்ரேலை ஆட்சி செய்த டேவிட் மன்னனின் அரச இலச்சினை. அப்படியானால் அந்த இரண்டு கோடுகள் ? இஸ்ரேலிய அரசு இதுபற்றித் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை. ஹமாஸ், ஹிஸ்புள்ளா போன்ற அரபு-இஸ்லாமிய வாத விடுதலை இயக்கங்கள் விசித்திரமான விளக்கம் கொடுக்கின்றன. 

அந்த இருகோடுகளில் ஒன்று ஈராக்கில் ஓடும் ஈயூப்பிரதீஸ் நதியையும் மற்றையது எகிப்திலோடும் நைல்நதியையும் குறிக்கும். ஆகவே இவற்றிற்கிடைப்பட்ட பிரதேசத்தை இஸ்ரேல் உரிமை கோருகிறது என்பது அவர்களது வாதம். பைபிளில் கூறப்பட்டுள்ள ஆபிரகாமிற்கு ஈயூப்பிரதீஸ், நைல்நதிகளுக்கடையிலான பிரதேசத்தை வழங்க ஆண்டவர் விரும்பியதாக வரும் ஒரு கூற்றைத் தவிர இதற்கு வேறு ஆதாரமில்லை. பைபிளில் கூறப்பட்டுள்ள பல இடங்கள் இன்றைய இஸ்ரேலில் மட்டுமல்லாது ஜோர்தான், எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளிலும் உள்ளன. பைபிளை நம்புபவர்களுக்கு இவையெல்லாம் புனித ஸ்தலங்கள்தான்.

ஈராக் பிரச்சினையின் போது பைபிள் கதைகள் அரசியல் மயமாகின. ஈராக்கின் பழம்பெருமை வாய்ந்த புராதனப்பொருட்களின் கொள்ளைக்குப்பின்னால் இஸ்ரேலியர்கள் இருந்ததாக ஈராக்கியர்கள் தெரிவித்தனர். அதேபோல வட ஈராக்கின் குர்திய விடுதலை இயக்கங்கள் இஸ்ரேலியக் கைக்கூலிகள் என்றும் சில துருக்கியப் பத்திரிகைகள் எழுதின. எது எப்படியிருந்தபோதும் ஈராக்கில் சதாமின் வீழ்ச்சியினால் தனக்குச் சவாலாக இருந்த எதிரி இல்லாமல் போய்விட்டதாக இஸ்ரேல் மகிழ்ந்தது மட்டும் உண்மை.

ஈராக் அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் வந்தமை அரசியல் ரீதியில் இஸ்ரேலுக்கு நன்மையளிக்க வல்லது. "இஸ்ரேல் யாராலும் வெல்லமுடியாத நாடு" என்ற பைபிள் வாசகம் மெய்ப்பிக்கப்பட்டு விட்டதாக கிறிஸ்தவ சியோனிஸ்டுகள் தமது பிரச்சாரங்களில் கூறிவருகின்றனர். ஆனால் இவர்கள் எப்போதும் பைபிளில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டுமே வாசிக்கும் பழக்கமுடையவர்கள். பைபிள் ஒருபோதும் இஸ்ரேலியர்களின் செயல்களை முழுக்கமுழுக்கச் சரியென்று வாதாடவில்லை. இஸ்ரேலியர்களின் மனித உரிமை மீறல்களை கடவுள் கண்டித்துத் தண்டனை கொடுத்ததாக பலவிடயங்களில் வருகிறது. சுவாரசியமாக, பாபிலோனிய (இன்று ஈராக்) மன்னனிடம் அடிபணியவைப்பேன் என்று கடவுள் கூறுவதாகவும் ஒரு வாசகம் உள்ளது. (ஜெரேமியா 27: 6-17).

யாரும் எந்த நாட்டிற்கெதிராகவும், மனித உரிமைகள் மீறல் பற்றிக் கண்டிக்கலாம். இஸ்ரேலைத் தவிர. யூத நலன் காக்கும் சங்கங்கள் இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்களை, கண்டனங்களை யூத எதிர்ப்புப் பிரச்சாரங்களாகத் திரிபுபடுத்துகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து பல ஐரோப்பியர்கள் பாலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலைக் கண்டிக்கத் தயங்குகின்றனர். ஏனெனில் கண்டிப்பவர்களை உடனடியாக நாஸிஸத்துடன் தொடர்புபடுத்திக் கதைக்கும் பழக்கம் யூதர்கள் மத்தியில் உள்ளது. பைபிளில் யூதர்களின் தீர்க்கதரிசி மோஸஸ் கூட இஸ்ரேலியர்கள் தமது நாட்டில் வாழும் அந்நியர்களை அடக்கக்கூடாது, சமமாக நடத்தவேண்டும் என்று கட்டளையிடுகிறார். "உன்னைப் போலவே அந்நியனையும் நேசி, நீங்கள் எகிப்தில் அந்நியர்களாக இருந்ததை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்" எனவும் பைபிள் கூற்றுண்டு. இவையெல்லாவற்றையும் இன்று பலஸ்தீனர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக அடக்கும் இஸ்ரேலியர்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

"சமாதானத் திட்டத்திற்கு ஆதரவளிக்காதீர்கள். கடவுளின் சாபத்திற்குள்ளாகாதீர்கள்" என்று அமெரிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றன கிறிஸ்தவ மத அடிப்படைவாத அமைப்புகள். அவர்களைப் பொறுத்தவரை இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலைச் செயல்கள் எல்லாம் கடவுளின் விருப்பப்படிதான் நடந்தன. இவ்வாறு கடவுளின் பெயரால் மனித உயிர்களை அழிப்பதை நியாயப்படுத்துபவர்கள் யூத-கிறிஸ்தவ மதங்களில் இருப்பதை உலகம் கண்டுகொள்வதில்லை. தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் கிறிஸ்தவர்களை பல யூதர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் சில யூத மதத் தலைவர்கள் இந்த கிறிஸ்தவ-சியோனிஸ்டுகளின் உள்நோக்கங்களையிட்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியுள்ளனர். ஏனெனில், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் இஸ்லாமியரை மட்டுமல்ல யூதர்களையும் தமது எதிரிகளாக இனங்காண்கின்றனர். அவர்கள் ஊழிக்காலத்தின் இறுதியில் தோன்றப்போகும் யேசுக்கிறிஸ்துவுக்காகக் காத்திருக்கின்றனர். அந்த இறுதிப் போரில் யூதர்களும் அழிக்கப்பட்டு விடுவரென நம்புகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர், இஸ்ரேலுக்குள் தங்கியிருந்த அமெரிக்கக் கிறிஸ்தவத் தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். ஜெருசலேமில் இருக்கும் அல் அக்ஸா மசூதியைக் குண்டுவைத்துக் தகர்க்கத் திட்டமிட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. உலக முஸ்லீம்களுக்கு மெக்காவிற்கு அடுத்த புனித ஸ்தலமான அல் அக்ஸா தகர்க்கப்பட்டால் ஏற்படப்போகும் பயங்கர விளைவுகள் இஸ்ரேலுக்குப் பாதகமாக இருக்கும் என்பது இஸ்ரேலிய அரசுக்குத் தெரியும். கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் பைபிளில் குறிப்பிட்ட (உலக அழிவென்ற) ஊழிக்காலத்தைத் தாமே செயற்கையாக உருவாக்கத் துணிந்துவிட்டார்கள் போலும்.கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்