பொதுத் தேர்தல் ஒன்றில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவது, இன்றைய உலகில் அபூர்வமாக நடக்கும் விடயம் தான். சைப்ரசில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள், கம்யூனிஸ்ட் கட்சி

 வேட்பாளருக்கு வாக்களிக்கும் அளவிற்கு, அந்நாட்டில் ஊழல், வேலையில்லாப்பிரச்சினை என்பன அதிகரித்து வருகின்றன.



நான் அங்கு தங்கியிருந்த, கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தின் போது, கடைத்தெருக்கள் எல்லாம் அந்தந்த நகரசபைகளின் செலவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
 இந்த வர்ணஜால வேடிக்கைக்கு குறிப்பிட்ட நகரசபை இரண்டு லட்சம் யூரோக்களுக்கு மேல் செலவிடுகின்றது. அதே நேரம் நகரவாசிகளுக்கு அத்தியாவசிய தேவையான பொதுப்போக்குவரத்து துறைக்கு செலவிட பணமில்லை என்று கைவிரிக்கும் அரசாங்கத்தை, ஒரு நாளிதழ் சாடியிருந்தது. உலகில் பொதுப் போக்குவரத்து துறை வளர்ச்சியடையாத நாடுகளில் சைப்ரசும் ஒன்று. லட்சக்கணக்கான மக்கள் வாழும் பெரு நகரங்களில் கூட ஒரு சில பேரூந்துவண்டிகள் குறிப்பிட்ட ஓரிரு வழித்தடங்களில் மட்டும் ஓடுகின்றன. அதுவும் கிழமைநாட்களில், பகல் வேளை மட்டும் தான். இரவில் அரிது. ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சேவை அறவே இல்லை. டாக்ஸி வாடகை ஒன்றும் மலிவானதல்ல. வசதியுள்ளவர்கள் தனியாக கார் வைத்திருக்கிறார்கள். வசதிகுறைந்தவர்கள் ஸ்கூட்டர், சைக்கிள் அல்லது கால்களை நம்பி வாழவேண்டியது தான். கார்கள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக, அரசும் பொதுப் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்யாது, பாராமுகமாக விட்டுவிடுகின்றது. அந்நாட்டில் வருடம் 24000 யூரோக்களுக்கு குறைவாக சம்பாதிப்பவர்கள், வருமான வரி கட்டத் தேவையில்லை. அதனால் வரி காட்டாதவர்களுக்கு, வசதி செய்து கொடுக்க முடியாது என்று அரசாங்கம் சிந்திக்கின்றது போலும்.

சைப்ரசில் குறைந்தது 1500 யூரோவுக்கு பாவிக்கப்பட்ட கார் வாங்கலாம். அது மட்டுமல்ல சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதும் இலகு. சாரதி பயிற்சியாளர்களை சோதிக்கும் பரிசோதகர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுப்பதாக உள்ளூர் வர்த்தக தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது. சில சைப்ரஸ்கார பணக்காரர்கள் தமது வயதுவந்த பிள்ளைகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக, பரிசோதகரை அழைத்து, ஆடம்பர உணவுவிடுதியில் விருந்து கொடுப்பதாக தெரிய வந்துள்ளது. அழகான இளம்பெண்கள் பரிசோதகருடன் ஓரிரவு படுக்கையை பகிர்ந்து கொண்டால், இலகுவாக அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.(Cyprus Mail) வீதிகளில் தறிகெட்டு ஓடும் சாரதிகளால், அந்நாட்டில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கின்றன என்பதை நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

நான் சைப்ரசில் இருந்த நாட்களில், சிறையில் இருந்து தப்பியோடிய ஒரு கிரிமினலின் கதை, உள்ளூர் ஊடகங்களில் பேசுபொருளாகி இருந்தது. உள்நாட்டில் "அல்கபோனே" என அழைக்கப்படும் உள்ளூர் மாபியா தலைவன், கொடூரமான இரட்டைக்கொலைகளுக்காக சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வந்தான். ஆறுமாதங்களுக்கு முன்பு வயிற்றுவலி என்று கூறி ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். அந்த பிரபல கிரிமினல் வைத்தியசாலை செலவுகளை தனது சொந்தப்பணத்தில் கட்டி வந்தது மட்டுமல்ல, அங்கிருந்த படியே தனது கூட்டாளிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளான். கிறிஸ்துமஸ் தினத்திற்கு சில நாட்கள் இருக்கும் நேரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாயிருந்த மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டான். இந்திய சினிமாவில் வருவது போல நடந்துள்ள இந்த சம்பவம், பாதுகாப்புத்துறையில் நிலவும் ஊழலுக்கு மிகச் சிறந்த உதாரணம். இதன் காரணமாக நீதி அமைச்சர் பதவி விலக நேர்ந்தது.

அந்த காலகட்டத்தில் தான் சைப்ரசின் முதலாவது மோசமான நிறவெறித் தாக்குதல் நடந்தது. 13 வயது ஆப்பிரிக்க சிறுமி(சைப்ரஸ் பிரசை) ஒருத்தி, அவள் படித்த பாடசாலை மாணவர்களால் மிருகத்தனமாக தாக்கப்பட்டாள். "கருப்பர்களே! உங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்லுங்கள்." என்று கத்திய படியே அந்த மாணவர்கள் தாக்கியதால், இது ஒரு நிறவெறித் தாக்குதல் ஆகும். மிகத் தாமதமாக அவ்விடத்திற்கு வந்த காவல்துறை, தாக்கப்பட்ட மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாது, அவளது தந்தை வந்து கூட்டிச் செல்லும் வரை பாடசாலையில் வைத்திருந்தது. இவ்வளவு நடந்தும், தாக்கிய மாணவர்கள் அவ்விடத்தில் நின்றிருந்த போதும், பொலிஸ் அவர்களை கைது செய்யவில்லை. அரசாங்கமும், தினசரிப் பத்திரிக்கைகளும் இந்த இனவெறி சம்பவத்தை வன்மையாக கண்டித்த போதும், சமூகம் பெரிதாக மாறிவிடவில்லை. சைப்ரசில் வாழும் வெளிநாட்டவர்கள் செய்யும் குற்றச் செயல்களை முதன்மைச் செய்திகளாக தெரிவிக்கும் ஊடகங்கள் அந்நாட்டு மக்கள் மனதில் இனவெறி நஞ்சை ஊட்டுகின்றன. வழக்கமாக எங்காவது ஒரு இடத்தில் திருட்டு நடந்தால், பொலிஸ் வெளிநாட்டவர்களை மட்டும் தான் சந்தேகப்பட்டு விசாரிக்கும்.


வருடந்தோறும் இலங்கை, இந்தியாவில் இருந்து பெருமளவு இளைஞர், யுவதிகள் உயர்கல்வி கற்க என சைப்ரஸ் வருகின்றனர். ஹோட்டல் முகாமைத்துவம், வர்த்தகம் போன்ற கற்கைகள் ஆங்கில மொழியில் வழங்கும் தனியார் கல்லூரிகள், ஐக்கிய இராச்சியத்துடன் ஒப்பிடும் போது பாதியளவு குறைவான கட்டணம் அறவிடுவது மட்டுமல்ல, விசா இலகுவாக கிடைப்பதும் இதற்கு காரணம். அப்படி வரும் (அனேகமாக கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த) இளைஞர்கள், பெரும்பாலும் ஏதாவது வேலை செய்து சம்பாதிப்பதற்காக வருகின்றனர். தாயகத்தில் இருந்து கிளம்பும் போது, தாம் போகுமிடம் ஐரோப்பிய நாடென்பதால், பலவித கனவுகளுடன் வருபவர்கள், சைப்ரஸ் வந்த ஓரிரு மாதங்களிலேயே மாயை அகன்று நாடு திரும்ப விரும்புகின்றனர். தணலாய் தகிக்கும் வெயிலுக்குள் கட்டிடம் கட்டும் சித்தாள் வேலை போன்ற, சைப்ரஸ்காரர்கள் செய்ய விரும்பாத கடினமான வேலைகளையே இவர்கள் செய்கின்றனர். கிடைக்கும் சம்பளமும் சொற்பம். அதிக பட்சம் மணித்தியாலத்திற்கு 5 யூரோ கிடைப்பது அரிது. இவ்வாறு கஷ்டப்படும் இளைஞர்கள் சிலர் சொந்த நாட்டில் உயர்கல்வி கற்றவர்கள். வெளிநாட்டு கனவால் தமது வாழ்க்கையை பாழாக்கியதாக உணர்கின்றனர்.


சைப்ரசிற்கு மாணவர்களாக வருபவர்கள் படிக்காமல், வேலை செய்கின்றனர் என்ற விடயம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நன்கு தெரியும். இன்னும் சொல்லப்போனால், அவ்வளவு மாணவர்களும் ஒழுங்காக கல்லூரிக்கு சமூகமளித்தால், அதற்கென வகுப்புகளையும், ஆசிரியர்களையும் ஒழுங்கு படுத்த வேண்டி இருக்கும். அந்த செலவு தமக்கு மிச்சம் என்று நினைக்கின்றது, கல்லூரி நிர்வாகம். மாணவர்களாக வரும் இளைஞர்கள் வருடாவருடம் குடிவரவு திணைக்களத்தில் தமது விசாவை புதிப்பிப்பதற்காக, கல்லூரிக் கட்டணத்தை ஒழுங்காக கட்டி வருகின்றனர். இதனால் மகிழ்ச்சியுறும் கல்லூரி நிர்வாகம், தேவைப்பட்டால் பரீட்சை வினாத்தாள்களை கொடுத்து, சித்தி பெற்றதாக புள்ளிகளும் போட்டுத் தருவார்கள். கொஞ்சம் கூடுதலாக பணம் கொடுத்தால் டிப்ளோமாவும் கிடைக்கும். காசே தான் கல்வியடா!

பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெரும் வரை, சைப்ரஸ் வளர்ச்சி குன்றிய மூன்றாம் உலக நாட்டைப் போல காட்சியளித்தது. துருக்கி படையெடுப்பிற்குப் பின்னர் பிரிக்கப்பட்ட "சைப்ரஸ் குடியரசு" ஆச்சரியப்படத்தக்க அளவிற்கு முன்னேறியது. அதற்கு முக்கிய காரணம், உல்லாசப் பயணிகளாகவும், (மலிவுவிலை) வீடு வாங்கும் ஓய்வூதியக்காரராகவும் வருகை தரும் பிரிட்டிஷ்காரர்கள். சைப்ரஸ் பொருளாதாரம் அவர்கள் கொட்டிய பவுன்களால் வளர்ந்த போது, விலைவாசியும் அதிகரித்தது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மற்றும் பவுணின் பெறுமதி இறக்கம், என்பன காரணமாக, பிரிட்டிஷாரின் வருகை வருங்காலத்தில் குறைய வாய்ப்புண்டு. இதனால் வேலையில்லாப்பிரச்சினை அதிகரிப்பதால், வெளிநாட்டவர்கள் வேண்டாவிருந்தாளிகளாக நடத்தப்பட வாய்ப்புண்டு.


ஐரோப்பிய யூனியன் என்ற கோட்டையின் கிழக்கு வாயிலாக கருதப்படும் சைப்ரசிற்கு அகதிகளாக வருபவர்களின் தொகை அதிகரித்து வருகின்றது. அந்நாட்டிற்குள் இலகுவாக நுழையக்கூடியதாக இருந்தாலும், அங்கிருந்து வேறு நாடுகளுக்கு போவது ( பெரும்பாலான அகதிகளின் விருப்பம்) கடினமானது. பெரும்பாலான அகதிகள் துருக்கி வந்து, பின்னர் அங்கிருந்து (துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள) வடக்கு சைப்ரசிற்குள் பிரவேசித்து, நிலக்கண்ணிகள் நிறைந்த எல்லைக்கோட்டை கடந்து தெற்கு சைப்பிரசினுள் நுழைகின்றனர். இவ்வாறு வரும் போது, மிதிவெடியில் அகப்பட்டு காலை இழந்தவர்கள் சிலர். அகதிகளாக வருபவர்கள், முன்பெல்லாம் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தில் பதிய வேண்டி இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்த பின்னர், சைப்ரஸ் அரசு அகதிகளை பொறுப்பெடுத்து வருகின்றது. இருப்பினும் விசாரணைகளின் பின்னர் தொண்ணூறு வீதமான அகதிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படுகின்றன. மேலும் தஞ்சக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் காலங்களில், அகதிகளுக்கான இருப்பிடமோ, அல்லது உணவோ வழங்கப்படுவதில்லை. இதனால் சட்டவிரோத வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலை.

சைப்ரசின் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அண்மையிலான அமைவிடம் காரணமாக, பாலஸ்தீன, லெபனானிய அகதிகளுக்கே இதுவரை காலமும் தஞ்சம் வழங்கப்பட்டு வந்தது. முன்பு ஒருமுறை பாலஸ்தீன இன்டிபதா போராட்டத்தின் போது, பெத்லஹெம் தேவாலயத்தினுள் சரண்புகுந்த ஆயுதபாணிகளை, சைப்ரஸ் வரவேற்று புகலிடம் கொடுத்து உலகப் புகழ் தேடிக்கொண்டது. அதேநேரம் அரசியல் ஆதாயமற்ற பிறநாட்டு அகதிகள், நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் சிறைகளில் அடைக்கப்பட்டு, நாடுகடத்தப்படுவது வழக்கமாக நடந்து வருகின்றது. சைப்ரஸ் என்னதான் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றாலும், இன்றும் கூட மூடப்பட்ட சமுதாயமாகவே இருக்க விரும்புகின்றது. என்னதான் வெளி அழுத்தங்கள் இருந்த போதிலும், அந்நியரை தம்மில் ஒருவராக ஏற்றுக்கொள்ளும் "பன்முக கலாச்சார சைப்ரஸ்" என்பது இன்றுவரை ஒரு கனவு மட்டுமே. .


(முற்றும்)
(இந்தக் கட்டுரையை தயாரிக்க உதவிய சைப்ரஸ் வாழ் நண்பர்களுக்கும், ஆங்கில மொழி நாளேடுகளுக்கும் எனது நன்றிகள்.)