தி.மு.கவின் வெற்றி அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னரே மூன்று இடைத்தேர்தலிலும் ஹாட்ரிக் அடித்த சாதனை நாயகன் அழகிரி என்று உடன்பிறப்புகள் மதுரையின் மூத்திரச் சந்துகளைக்கூட விட்டுவைக்காமல்

 கட்டவுட்டை எழவைத்தார்கள். இதுவரை தமிழக தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவில் சுமார் 90% வாக்குப் பதிவு நடந்ததுமே சாதனை நாயகன் அழகிரி தி.மு.கவின் வெற்றியை ஊடகங்களுக்கும், உலகிற்கும் அறிவித்துவிட்டார்.

karuna-jaya

மற்ற கட்சிகளுக்கும் இதுதான் முடிவென்று தெரிந்திருப்பதால் தி.மு.க மோசடி செய்து வென்றிருப்பதாக பாடும் வழக்கமான பல்லவியை சுரத்தின்றி சொல்லிவிட்டு அதே மோசடியை எப்படி அடுத்த தேர்தலில் செய்ய முடியுமென்பதை ஆராயப் போய்விடுவார்கள். ஊடகமோ இது அழகிரி பாணி அரசியலின் வெற்றி என அட்டைப்படக் கட்டுரைகள் வெளியிட்டு அது தொடர்பான அரசியல் கிசுகிசுக்களை அதாவது அழகிரியின் வளர்ச்சியை ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ளுவார், இனி மாறன் சகோதரர்கள் அழகிரி பக்கம் சாய்வார்களா இல்லை அவரை முந்துவதற்கு ஸ்டாலினையும் கனிமொழியையும் அதிகமாக ஃபோகஸ் செய்வார்களா, என்று பிய்த்து உதறும்.

alagiri

புரட்சித் தலைவியோ தனது பாணியை கையிலெடுத்துக் கொண்டிருக்கும் அழகிரியை எப்படி வீழ்த்துவது, அதற்கு தேவைப்படும் கோடிகளை எப்படி அமுக்குவது அல்லது ஏற்கனவே அமுக்கியதில் எவ்வளவு செலவழிப்பது என பணக்கணக்குகளை மனக்கணக்காய் போட்டுக் கொண்டிருப்பார். அம்மாவுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் போலிக்கம்யூனிஸ்டுகள் தி.மு.கவின் இந்த ‘இமாலய’ வெற்றியை வைத்து கூட்டணி மாறியதில் தப்பு செய்துவிட்டோமோ என சுயவிமர்சனம் செய்து சுய குழப்பத்தில் இருப்பார்கள். மதில் மேல் பூனையாக நிற்கும் இராமதாசோ தனது சந்தர்ப்பவாதத்திற்கு புதிய பொழிப்புரை எழுதி பழைய கூட்டணிக்கே திரும்புவோமா என்று தைலாபுரத்தில் தீவிர டிஸ்கஷினில் இருப்பார். வை.கோ போன்ற அரசில் அனாதைகள் நிலைமை இன்னும் மோசம் என்பதால் அவர்கள் என்ன யோசிப்பார்கள் என யாராலும் அறுதியிட முடியாது.

 

திருமங்கலத் தேர்தல் அறிவித்திருக்கும் நிலவரப்படி தமிழகத்திற்கு ஒதுக்கவேண்டிய தொகையை தலைமையிடம் வாங்கவேண்டிது குறித்து ‘தேசியக்’ கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.கவின் தமிழ்நாட்டு தலைமைகள் தமது விண்ணப்பத்தை வெயிட்டாகத் தயாரித்துக் கொண்டிருக்கும். இப்போது இரு கூட்டணிகளிலும் இடமில்லையென்பதால் பா.ஜ.கவிற்கு வேண்டுமானால் தேவைப்படும் அந்தத் தொகை தேர்தலுக்கு பின்பு பயன்படலாம். மற்றபடி திருமங்கலம் இடைத்தேர்தல் வழிகாட்டும் ஒரே விசயம் பணம் எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதுதான்.

 

திருமங்கலத்தில் வாக்களிக்கும் தகுதி உள்ள 1,55,000 பேருக்கும் அதாவது ஒவ்வொரு ஒட்டுக்கும் தி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளும் கொண்டு சேர்த்த தொகை ஐந்தாயிரம் ரூபாயாம். இது போக போனசாக செல்போன், கிரைண்டர், மிக்ஸி, திருநெல்வேலி அல்வா என பலபொருட்கள் விநியோகப்பட்டிருக்கின்றன. இப்படிப் பணம், பொருள் வாங்குவதை ஒரு கட்சி செய்யும்போது மற்றகட்சி இதை புகார் தெரிவித்தால் மக்கள் அப்படி புகார் தெரிவித்த கட்சியின் மீது காய்ந்து வையும் அளவுக்கு இந்த பணநாயக உ ணர்வு தலைவிரித்தாடியிருக்கிறது. இரு கட்சிகளும் மக்களுக்கு பணமாய் கொடுத்த அளவு எழுபத்தியெட்டு கோடிக்கும் அதிகம் என இந்தியா டுடே எழுதுகிறது. இது உண்மையானால் லதா அதியமான்தான் தமிழ்நாட்டிலேயே காஸ்ட்லியான எம்.எல்.ஏ.

 

இதுதான் போட்டியின் இலட்சணமென்றால் இனி தேர்தலையை யார் மக்களுக்கு அதிகம் பணம் கொடுக்க முடியுமென தேர்தல் கமிஷன் ஏலமே நடத்தி அதிலிருந்து முடிவை அறிவிக்கலாமே? சில கிராமங்களில் இப்படி ஏலம் விட்டு யார் அதிக பணத்திற்கு ஏலம் எடுக்கிறார்களோ அவர்களின் கட்சிக்கு வாக்களிப்பது வழக்கம். இதை சட்டப்பூர்வமாக அறிவித்து விட்டால் பிரச்சினையில்லை. திருமங்கஙலத்தில்   இந்த பணநாயகத்தின் மகிமையால் கிட்டத்தட்ட 90 சதவீதம் வாக்குப் பதிவு நடந்திருக்கிறது. அந்த அளவு ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு பணம் காரணமாயிருக்கிறது. வழக்கமாக வாக்குப்பதிவு மந்தமென்றால் மக்களிடம் ஜனநாயக உணர்வில்லை என்று சலித்துக் கொள்ளும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் இனி திருமங்கலத்தின் வகையில் ஜனநாயகம் தழைத்தோங்குவதால் பெருமையடையலாம்.

 

திருமங்கலத்தின் தேர்தல் வெற்றிக்கு தி.மு.கவின் பணபலமும், அதை சாத்தியமாக்கிய அழகிரியின் தந்திரமும் காரணம் என்பது முதன்மையானதல்ல. இந்த பணவசதியும், தந்திரமும் ஜெயலலிதாவுக்கும் உண்டு என்பதால் இது அரிதான விசயமும் அல்ல.

 

திருமங்கலம் தேர்தல் உலகிற்கு அளித்திருக்கும் முக்கியமான விசயம் என்னவென்றால் ஒரு தொகுதியின் முழுமக்களையும் விலை கொடுத்து வாங்கமுடியும் என்பதுதான். ஒரு சிலரை ஊழல்படுத்துவது போய் ஒரு ஊரையே ஊழல் படுத்தி வெற்றியை சாதிக்க முடியும் என்பதையே இந்த இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது. ஏற்கனவே இது போலிஜனநாயகத்தை அமல்படுத்தும் தேர்தல் என்றாலும் இப்படி பணத்தை இறைத்து மக்களின் வாக்குகளை கைப்பற்றமுடியும் என்றால் அந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. பொதுவாக தேர்தல், அரசியல் பற்றி அவையெல்லாம் சாக்கடை என்று அரசியல்வாதிகளை ஊடகங்கள் கேவலப்படுத்துவது நாமறிந்தது. ஆனால் இப்பொது அதையெல்லாம்  ஒன்றுமில்லையென ஆக்கிவிட்டது மக்களின் இந்த விலைபோன சங்கதி.

 

இப்படி சில ஆயிரங்களுக்கு மக்கள் விலைபோவது என்பது எல்லாவகை அயோக்கியத்தனங்களையும் நியாயப்படுத்திவிடும். பணத்திற்கு விலைபோகும் இந்த மக்கள் சாதிவெறிக்கும், மதவெறிக்கும் ஏன் ஆட்பட மாட்டார்கள்? கல்வியும் சுகாதாரமும் தனியார் மயமாகிவிட்ட நிலையில் இப்படி ஊழலில் மூழ்கியிருக்கும் மக்கள் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு வர மாட்டார்கள். பொருளாதாரச் சுரண்டலில் சிக்கியிருக்கும் மக்களை இப்படி விலை போகும் ஊழல் பண்பு மேலும் அடிமைகளாக்குவதற்குத்தான் உதவி புரியும். உலகமெங்கும் வரலாற்றில் பல சர்வாதிகாரிகள் இப்படித்தான் எலும்புத் துண்டுகளை வீசி தங்களுக்கென ஒரு சமூக அடிப்படையை உருவாக்கியிருக்கிறார்கள். திருமங்கலமும் அப்படி ஒரு அத்தியாத்தை தமிழகத்தில் துவங்கியிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் எந்த வேட்பாளர், கட்சி வென்றனர் அல்லது தோற்றனர் என்பது முக்கியமல்ல. மக்கள் விலை போயிருக்கிறார்கள் என்பதுதான் கவலைப்பட வேண்டிய சேதி.

 

மக்களிடம் நிலைகொள்ளத் துவங்கியிருக்கும் இந்த பிழைப்புவாதத்தை  எதிர்த்துப் போராடுவதுதான் நம் முன் உள்ள கடமை. தி.மு.க, அ.தி.மு.க இன்ன பிற ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் எந்த ஒரு அநீதிக்காகவும் தமிழகத்தை விலைக்கு வாங்கலாம் என்பது நிலைநிறுத்தப்படும்.