தமிழ் பேசுவதை தரக்குறைவாக கருதி, இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலத்தை பேசும் "தங்கிலீஷ்காரர்கள்" பற்றி நான் கூறத் தேவையில்லை. உலகில் எத்தனையோ நாடுகளில், மொழிச் சிறுபான்மை மக்கள் தமது தாய்மொழியில் பேச தடை உள்ளது. பல "தேசிய அரசுகள்" அப்படித்தான் பெரும்பான்மை மொழியின் ஆதிக்கத்தை பிறரின் மீது திணித்தன. பிரான்ஸில் நீண்டகாலமாக பாஸ்க், ஒக்கிடண்டல், பிறேதைன் மற்றும் ஜெர்மன் போன்ற சிறுபான்மை மொழிகளை பாடசாலைகளில் கற்பிக்க தடை இருந்தது.

வீதிகளில் அந்த மொழிகளை உரையாடுவது கூட குற்றமாக்கப்பட்டது. அவ்வாறுதான் பிரெஞ்சு அங்கே தேசிய மொழியாகியது. சிறி லங்காவில் சிங்களமும், மலேசியாவில் மலேயும் என பிற்காலத்தில் பரவிய "தேசிய மேலாண்மை மொழி" அரசியலுக்கு, பிரான்ஸ் அன்றே உதாரணமாக திகழ்ந்தது.

சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த நாடு லாட்வியா. சோவியத் காலத்தில் ருஷ்ய மொழி உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. கணிசமான அளவு ரஷ்ய மொழி பேசும் மக்கள் லாத்வியாவில் வேலைவாய்ப்பு கிடைத்து குடியேறி இருந்தனர். தொன்னூறுகளில் லாட்வியா சுதந்திர நாடாகிய பிறகு, அங்கே மீண்டும் தேசியவாத சக்திகள் தலையெடுத்தன. லாட்வியா மொழி உத்தியோகபூர்வ மொழியானதுடன், வேலைவாய்ப்புக்கு அந்த மொழியில் சித்தி பெற்ற சான்றிதல் வைத்திருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டது. இதனால் பல ரஷ்யர்கள் (இன்றைய லாட்வியா குடியரசில் சிறுபான்மை இனம்) பாதிக்கப்பட்டனர். சிறுபான்மையினரை மேலும் அடக்கும் நோக்கில், கடந்த டிசம்பர் மாதம் புதிய சட்டம் ஒன்று அமுலுக்கு வந்துள்ளது. "பொது இடங்களில் அந்நிய மொழி பேசுபவர்கள் 100 டாலர் அபராதம் செலுத்த வேண்டும்." அதாவது லாட்வியாவில் நீங்கள் ஆங்கிலம் பேசினாலும் நூறு டாலர் அபராதம் கட்ட வேண்டும். இருப்பினும் இந்த சட்டம் ரஷ்ய மொழிச் சிறுபான்னையினருக்கு எதிராகவே வந்துள்ளது என்பது வெள்ளிடைமலை.
பார்க்க: Words could cost you dear in Latvia

இதற்கிடையே துருக்கியில், அடக்கப்பட்ட குர்து இனம் சில ஜனநாயக உரிமைகளை அண்மைக்காலமாக பெற்றுள்ளனர். இதுவரை காலமும் துருக்கியில் குர்து மொழி பேசும் சிறுபான்மை இனமக்கள் இருப்பதாக துருக்கி அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவந்த காலம் மாறி, 2009 ஜனவரி முதலாம் திகதி முதல் குர்து மொழி தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்து வைத்ததன் மூலம், அந்த மொழிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

துருக்கியில் 1980 ம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி, குர்து மொழி பேசுவதை தடைசெய்தது. பாடசாலைகளில் உத்தியோகபூர்வ மொழியான துருக்கி மொழியில் மட்டுமே போதிக்கப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. துருக்கி மொழி அரிச்சுவடியில் இல்லாத, ஆனால் குர்து மொழியில் உள்ள விசேட எழுத்துகளான X, W, Q போன்ற எழுத்துகளில் பெயர் வைத்திருப்பது கூட குற்றம் என்ற வேடிக்கையான சட்டமும் இயற்றப்பட்டது. துருக்கி மொழியும், குர்து மொழியும் லத்தீன் எழுத்துகளை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இராணுவ ஆட்சி நீங்கி, ஜனநாயகம் மீண்ட போதும் 42 வது சட்டத்திருத்தம் மூலம் இது தொடர்ந்தது.

இத்தகைய அடக்குமுறை வரலாற்றுக்குப் பின்னர், தற்போது துருக்கி அரசு குர்து மொழி தொலைக்காட்சி சேவையை தொடங்கியதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. டென்மார்க்கில் இருந்து செய்மதி மூலம் ஒளிபரப்பாகும் ROJ TV, குர்திய மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. தடைசெய்யப்பட்ட பிரிவினை கோரும், PKK இயக்கத்தின் பிரச்சார ஊடகம் என, துருக்கி அரசு கருதும் ROJ TV இற்கு எதிராக, துருக்கி அரச தரப்பு செய்திகளை கொண்டு செல்ல, TRT 6 எனப்படும் இந்த புதிய குர்து மொழி தொலைக்காட்சியை பயன்படுத்த உள்ளது. மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுத்து, ஜனநாயகத்தை மேம்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் கொடுத்த அழுத்தம் மற்றொரு காரணம். ஐரோப்பிய யூனியன் உறுப்புரிமை பெற துருக்கி கடும் முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.