இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். சுரண்டி தின்னும் வர்க்கமும், அதையண்டிப் பிழைக்கும் ஊடகவியலுக்கும் இடையில் மோதல். பாசிசம் மூலம் நாட்டை சுரண்ட முடியும் என்ற மகிந்தாவின் சிந்தனைக்கும், இதில்லாமலே சுரண்ட முடியும் என்ற எதிர்க்கட்சி ஊடகவியலுக்கும் மோதல்.

இப்படி இன்று முதலாளித்துவ எல்லைக்குள்ளான ஊடக சுதந்திரம், இலங்கையில் மறுக்கப்பட்டு பாசிசம் நிறுவப்படுகின்றது. இதற்கு எதிராக போராட, இரண்டு விடையத்தை எம்முன் சுட்டிக்காட்டுகின்றது.   
 
1. இலங்கையில் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிரான போராட்டம்.
 
2. முதலாளித்துவ ஜனநாயகத்தின் பெயரில், ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களின் உரிமைகளை மறுத்து வந்தவர்களுக்கு எதிரான போராட்டம்.
 
இவர்கள் இன்று இரண்டு அணியில் நின்றாலும், மக்களையிட்டு அக்கறையற்றவர்கள். இங்கு இதில் அணி சேராத, மக்களை சார்ந்து நின்று போராடுவதுதான் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தரும்.
 
ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்கள், இப்படி இரண்டுக்கும் எதிராக போராட வேண்டியுள்ளது. இதுவல்லாத அனைத்தையும் அம்பலப்படுத்தி போராடுவது, தெளிவுறவைப்பது அவசரமான பணியாக உள்ளது. எல்லா எதிர்ப்புரட்சிக் கும்பலும் இதை மறுக்கின்றது. வெறும் முதலாளித்துவ ஜனநாயகம், ஊடக சுதந்திரம் என்ற எல்லைக்குள் பிரமைகளை விதைக்கின்றது.
 
முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுக்கும் மகிந்த சிந்தனை 
 
முதலாளித்துவ ஜனநாயகத்தை புலிகளின் பகுதியில், புலிகள் முன் கூட்டியே மறுத்திருந்தனர். புலிகளின் அதிகாரம், வன்முறை நிலவக் கூடிய எல்லாத் தளத்திலும் இந்த சுதந்திரம் என்றும் இருக்கவில்லை. புலிகளின் பகுதியில் எந்த சுதந்திர ஊடகவியலும் செயல்பட முடிந்ததில்லை முடியவில்லை. 
 
இன்று அதையே அந்தப் பாதையையே, பேரினவாத அரசு தனது கொள்கையாக்கி வருகின்றது. பாசிசம் சாதாரணமான முதலாளித்துவ ஜனநாயக உரிமையை அனுமதிக்க மறுப்பது புதிய சூழல்;.   
 
இதை யுத்தம், புலியொழிப்பு என்ற கோசத்தின் கீழ் மகிந்தா சிந்தனை அமுல்படுத்துகின்றது. இதன் மூலம் பேரினவாத பாசி;ச சர்வாதிகாரம், ஓட்டுமொத்த இலங்கை மக்கள் மேல் இறுக்கப்படுகின்றது. இந்த வகையில், தனக்கு நிகரான மற்றொரு பாசிசம்  அவசிமலில்லை என்ற கொள்கையைத்தான், சுரண்டும் வர்க்கமும் சுரண்டும் சர்வதேசமும் தனது கொள்கையாக கொண்டு புலியை ஒடுக்க உதவுகின்றது. இலங்கையை சுரண்ட பாசிசத்தையே, ஆளும் வர்க்கங்கள் தேர்தெடுக்கின்றது. 
 
இந்தவகையில் ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான அனைத்து விமர்சனத்தையும் இல்லாதொழிக்க முனைகின்றது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் எச்ச சொசங்களையம் கூட இல்லாதொழிக்க முனைகின்றது. யுத்தம், சர்வதேச நெருக்கடி, யுத்தததின் முடிவால் எற்படும் நெருக்கடி, சுரண்டும் வர்க்கம் தாம் சுரண்டுவதை மறைக்க எதிரியற்ற (புலியில்லாத போதல்) சூழல் என்ற அனைத்தும், பாசிசத்தை ஆளும் வர்க்கம் தெரிவு செய்கின்றது. முதலாளித்துவ அடிப்படைகளை இது தகர்த்தெறிகின்றது.     
 
இந்த வகையில் மிரட்டுதல், பயங்காட்டுதல், சொத்தை அழித்தல், கொல்லுதல், என்று பேரினவாத பாசிசம் தனது இனத்தின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஊடகவியல் மேலான தாக்குதல், இதில் ஒரு அம்சம். தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்டிருந்த அரச பயங்கரவாதம், இன்று தனக்கு எதிரான சிங்களக் கட்டமைப்பை தகர்க்க முனைகின்றது. இலங்கையில் நிலவும் அரச பயங்கரவாத நிறுவனம், வெறுமனே தமிழ் மக்களுக்கு மட்டும் எதிரானதல்ல. 1971லும், 1989-1990 களிலும், பல பத்தாயிரம் சிங்கள இளைஞர்களை கொன்று குவித்தது. இந்த அரச பயங்கரவாதம் தான், தமிழ் மக்களையும் வேட்டையாடியது. இது தான் இன்று சர்வாதிகாரத்தை நாடுகின்றது.  
 
இந்த அரச பயங்கரவாதம் சிங்கள இனவெறியுடன், தமிழ் ஊடகவியல் மீதான தாக்குதலை தொடங்கிய போது, புலி அடையாளத்தைப் பயன்படுத்தியது. இதன் மூலம் சிங்கள ஊடகவியலையே பிரித்தது. இப்படித் அது தமிழ் ஊடகம் மேல் தாக்குதலைத்  தொடங்க, அதன் நேர்மையற்ற தன்மையை பயன்படுத்தியது. அது கொண்டிருந்த புலிசார்பு  புலித்தன்மையை, புலியாக முத்திரை குத்தியது. இதன் மூலம் தமிழ் ஊடகவியல் மீது பொதுத்தாக்குதலை நடத்தியது. இப்படி தமிழ் ஊடகவியலை பிரித்து ஒடுக்கிய பேரினவாதம், இன்று சிங்கள ஊடகவியலைத் தாக்கத் தொடங்கியுள்ளது.
 
முதலாளித்துவ ஊடக சுதந்திரம் (இது உண்மையில் மக்களுடன் இருக்கவில்லை என்ற போதும்; கூட) மறுக்கப்படுவது என்பது, பொதுவான ஜனநாயக அடிப்படைகளையே தகர்த்தெறியத் தொடங்கியுள்ளது. புலிகள் அதிகாரத்தில் உள்ள பிரதேசத்தில் இதைக் கோரி நடந்த போராட்டம் முடியமுன்னம், இது எமக்கு மற்றொரு பேரிடிதான்.
 
இன்று இலங்கையில் பேரினவாதப் பாசிசமோ, ஒரு சமூக அமைப்பு வடிவமாக மாறி வருகின்றது. இலங்கை மக்கள் மேல் பேரினவாதம், தன் சர்வாதிகார ஒடுக்குமுறையை ஏவிவிட்டுள்ளது. இதன் மூலம் பாசிசமே, ஓரே ஆளும் வர்க்கமாக மாறுகின்ற போக்கு முனைப்பு பெறுகின்றது.
 
இந்த நிலையில் இதற்கு பலர் அடிமைப்படுகின்றனர் அல்லது விலகி ஒதுங்கிக்  கொள்கின்றனர். இவ்வளவு காலமும் மக்களை சுரண்டியும், ஒடுக்கியும் வாழ்வதை போற்றியவர்கள், அதற்கு துணை நின்றவர்கள் பாசிசத்தைக் கண்டு ஒதுங்கி வழிவிடுகின்றனர். மக்களை சார்ந்து போராட தயாரற்று, அதற்கு துணையாக ஒதுங்கிப் போகின்றனர்.     
 
இந்த நிலையில் தமிழ் ஊடகவியலைச் சேர்ந்த அரைப் புலிகள், நாட்டை விட்டு  செல்லவேண்டிய துன்பவியல் பற்றிப் புலம்புகின்றது. சொந்த மக்கள் மேல் நிலவிய பாசிசத்தை ஆதரித்து நின்ற இந்தக் கும்பல், சிங்கள பாசிசத்தை பற்றி மட்டும் இன்று வேடிக்கையாக கதை சொல்லுகின்றனர்.
 
இந்தக் கும்பல் தம் சொந்த மண்ணைவிட்டு வெளியேறி, கொழும்பில் புகலிடம் பெற்றே ஊடகவியல் சுதந்திரம் பேசியவர்கள். புலிகள் பிரதேசத்தில் இருந்து சுதந்திரமாக ஊடகவியல் பேசமுடியாது, வக்கற்றுக் கிடந்தவர்கள் இவர்கள். தமது சுட்டு விரலைக் கூட இதற்கு எதிராக நீட்டியது கிடையாது.  இன்று நாட்டைவிட்டே வெளியேற வேண்டிய அவலம் பற்றி மட்டும் புலம்புகின்றனர். இப்படி ஊடக சுதந்திரம் பற்றி பக்கச்சார்பாக சொல்லிப் பிழைக்கின்ற பிழைப்பு. மக்களை இழிவுபடுத்தி, அவர்களை ஏமாற்றி நடக்கும் ஊடக சுதந்திரம் தான். 
 
மகிந்தாவின் பாசிசம் திரொக்சியத்தின் கோமணமாகின்றது
 
மகிந்த முதலாளித்துவ ஊடக சுதந்திரத்தை பறிக்க, அதை திரோக்சியத்தை கோவணமாக்க முனையும் தேசம் நெற் கும்பல். ஊடகம், ஊடகவியல் என்று பந்தி போட்டு, அதில் தின்பதே ஜனநாயகம் என்று கூறியவர்கள். அதில் சமூக விரோத கழிசடைகள் எல்லாம் சேர்ந்து தனிமனித அவதூறுகள் மூலம் கும்மியடித்தவர்கள், இன்று ஊடகவியல் பற்றி புலம்புகின்றனர். ஊடக 'சுதந்திரம்" 'ஜனநாயகம்" என்று புலம்புகின்றனர். 
 
'சுதந்திரம்" என்பது தனிப்பட்ட நபர்களின் உரிமையில்லை. மாறாக மக்களின் உரிமையை முன்னிறுத்தி, அதற்காக போராடும் உரிமை தான் சுதந்திரம். மக்களின் உரிமை என்பது, சக மனிதனால் ஒடுக்கப்படுவதற்கு எதிரானது. சுரண்டப்படுவதற்கு எதிரானது. இதற்கு வெளியில் இதைச்செய்ய, சுதந்திரம், உரிமை என்பது அருவருக்கத்தக்கது. இதைத்தான் தேசம் நெற் செய்தது. 
 
மற்றவனை ஒடுக்காத மக்களின் உரிமையைக் கோரியும், அதை பாதுகாப்பதும் தான் ஊடகவியலின் அறம். இதற்கு வெளியில் மனிதத்தன்மை கிடையாது. இதுவல்லாத எதுவும் ஊடாக சுதந்;திரமல்ல. இதை மறுப்பது, ஊடக சுதந்திரத்தின் பெயரில் மக்களை ஒடுக்கும், சுதந்திரத்தையும் உரிமையையும் பிரகடனம் செய்கின்றது.
 
பேரினவாத பாசிசம் பத்திரிகையாளர்கள் மேல் நடத்திய காட்டுமிராண்டித்தனத்தை அடுத்து, தேசம் நெற் சுதந்திரம் பற்றி ஒப்பாரிவைக்கின்றது. ஊடகத்தின் பெயரில் மக்களுக்கு எதிரான கழிசடைகளின் தயவில் இணையத்தை நடத்திக்கொண்டு திரியும் புறம்போக்குகள், ஊடகவியல் தத்துவம் பற்றி கொட்டாவிவிடுகின்றனர்.
 
இதில் அரைவேக்காட்டு சேனன் ஊடகவியல் பற்றி எழுத, அதை சிறிரங்கன் மறுபிரசுரம் செய்கின்ற நிலைமை. புலியல்லாத அனைவரும் ஒன்றேயென்று நம்பும், 1990 கால சூழலில் இருந்து இன்னமும் சிறிரங்கன் வெளிவரவில்லை. அவர்களை (எதிரிகளை)  நண்பர்களாக, தோழர்களாக அனுசரித்து நிற்கும் அறியாமையும் பலவீனமும். புதிய சூழல், இதில் பலர் இன்று இடம்மாறிவிட்டதைக் கூட ஜீரணித்து உள்ளவாங்க முடியாத உணர்ச்சி மயம்.
 
சேனன் பேசும் ஊடக சுதந்திரம், அமெரிக்கா பேசும் சுதந்திரம் தான். இவர்கள் பேசும் ஊடக சுதந்திரம், வர்க்க அமைப்பில் வர்க்கம் கடந்தது. சேனன் போல் தான், அமெரிக்க ஏகாதிபத்தியம் கூட சுதந்திரம் பற்றி வகுப்பு எடுக்கின்றது.
 
'பேச்சுரிமை ஒவ்வொரு மனிதனிதும் அடிப்படை உரிமைகளில் ஒன்று" என்கின்றார் தேசம் நெற் அன்னக்காவடியான சேனன். இப்படித்தான் அமெரிக்காவும் சொல்கிறது.
 
பேச்சுரிமை என்பது, வர்க்க அமைப்பில் பக்கச்சார்பானது. ஜனநாயகம் எப்படியோ அப்படித்தான்;. உன் பேச்சுரிமை மூலம் மக்களை ஒடுக்க அதைச் சொல்ல உரிமை உனக்கு கிடையாது. அதேபோல் சுரண்டும் உரிமையும் கிடையாது. இதை ஆதரிக்கும் உரிமை, அதை மற்றவனுக்கு சொல்லும் உரிமை கிடையாது. ஜனநாயகத்தின் பெயரில், சுரண்டும் உரிமை கிடையாது. 
 
தனிமனிதன் உரிமை, மற்றவன் மேலான உரிமையல்ல. இதனால் அது மற்றவனால் மறுக்கப்படும். அதை மறுப்பாக கூச்சல் எழுப்புவது தான், சேனன் போன்றவர்கள் முதல் முதலாளித்துவ அற்பர்கள் எழுப்பும் உரிமை பற்றிய கூச்சல்கள்.     
 
தனிமனித உரிமை என்பது, சமூகத்தின் உரிமைக்கு எதிரானது. தனிமனித உரிமை சமூகத்தின் உரிமைக்கு உட்பட்டது. இதை மறுக்கின்ற திரொக்சியம் முதல் முதாலளித்துவம் வரை, ஒரே குட்டையில் உரிமைகாக மூழ்கி எழுகின்றனர். 
 
நிலவும் வர்க்க அமைப்பில் பேச்சுரிமை, ஜனநாயகம் எல்லாம் பக்கச் சார்பானது. இதையெல்லாம் கொண்டிராத வரையறைக்குள் நின்று, சமூகத்தை அணுகுவது, உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. தேசம்நெற் என்ற ஊத்தை இணையத்தில்,  சோவியத் மக்கள் மற்றும் ஸ்ராலின் மீது, மகிந்தாவின் பாசிச பின்னணியிசையுடன் தாக்குதலை நடத்துகின்றனர்.
 
லெனின் மேற்கோளை அள்ளித் தெளிக்கும் இவர்கள், லெனினை ஏற்றுக்கொண்டது கிடையாது. லெனின் வைத்த தேசிய சுயநிர்ணயம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்pன் கீழ் தொடரும் வர்க்கப் போராட்டம், என எதையும் ஏற்றுக்கொண்டது கிடையாது திரோக்சியம். லெனினை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டும், அதை திரித்தும் உரிமை சுதந்திரம் பற்றிப் புலம்புகின்றனர்
 
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுகொள்ளாத திரோக்சியம், லெனின் மேற்கோளை பொருத்தமற்ற இடத்தில் அள்ளிதெளிக்கின்றது. 'தோழர்களே! தொழிலாளர்களே! இனி நீங்கள்தான் அரசின் தலைமைத்துவத்தில் இருக்கிறீர்கள் என்பதை நன்றாக ஞாபகத்தில் வைத்துகொள்ளுங்கள். நீங்களாக ஒன்றிணைந்து உங்கள் அரச கருமங்களை உங்கள் கையில் நீங்கள் எடுப்பதற்கு வேறு யாரும் உதவப்போவதில்லை. உங்கள் வேலையில் இறங்குங்கள். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பியுங்கள். யாருக்காகவும் தாமதிக்காதீர்கள்." இங்கு லெனின் தொழிலாளர்களே இது உங்கள் ஆட்சி என்று சொல்வது, மற்றவர்கள் (சுரண்டும் பிரிவின்) ஆட்சியை மறுப்பதை அடிப்படையாக கொண்டது. அவர்களுக்கு எதிராக போராடக் கோருகின்றது. அங்கு ஆட்சி அமைத்த தொழிலாளி வர்க்கம், வர்க்க சர்வாதிகாரத்தை மற்றைய வர்க்கங்கள் மேல் நிறுவியது. இது தன் வர்க்கமில்லாத மற்றைய வர்க்கங்களையே ஒடுக்கியது. மற்றைய சுரண்டும் வர்க்கங்கள் அங்கு இருந்ததும், அதற்கு எதிரான சர்வாதிகாரம், அதன் பேச்சுச் சுதந்திரத்தை மறுத்தது. இதில் லெனினும் அடுத்து ஸ்ராலினும் இதற்காக போராடினர். இங்கு சர்வாதிகாரம் சுரண்டும் உரிமையை, அதற்கு சலுகை வழங்கும் அனைத்தையம் அனுமதிக்க மறுக்கின்றது. இதற்கு சார்பான கருத்தை மறுக்கின்றது. அனைவரையும் உழைத்து வாழக் கோருகின்றது. உழையாது மற்றவன் உழைப்பில் வாழ்வதை ஒடுக்குகின்றது.
 
இந்தியாவில் பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தால், சாதியின் பெயரில் சாதியத்தை நியாயப்படுத்தும் அனைத்தும் ஒடுக்கப்படும்;. அந்த வாழ்க்கை முறையே ஒழிக்கப்படும். இது கருத்துத் தளத்தில் கூட. 
 
இந்த வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சோவியத்தில் நிலவியது. இதை கொச்சைப்படுத்தும் சேனன் மற்றும் தேசம்செற் கொம்பனிக்கு, மகிந்தவின் பாசிச சர்வாதிகாரம் துணைநிற்கின்றது.
 
பி.இரயாகரன்
10.01.2009