Language Selection

புதிய ஜனநாயகம் 2009

"மும்பய் தாக்குதலின்பொழுது உயிருடன் பிடிபட்ட முசுலீம் தீவிரவாதி முகமது அஜ்மலின் மீதான வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும். அவருக்காக வக்கீல் ஆஜராகவில்லை என்றால், அது மனித உரிமை

 மீறலாகிவிடும். இதற்காக அஜ்மலுக்காக ஆஜராக நான் தயார். இதற்காக பாகிஸ்தான் தூதரகம் என்னை அணுக வேண்டும். ஆனால், அஜ்மலைத் தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியாது'' என அறிவித்திருந்த மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் மகேஷ் தேஷ்முக்கின் வீட்டையும் அலுவலகத்தையும் சிவசேனா குண்டர்கள் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர். அதே சமயம், அஜ்மலுக்காக வாதாட முன்வந்த மற்றொரு வழக்குரைஞர் ப.ஜனார்த்தன் சிவசேனா குண்டர்களால் தாக்கப்படவில்லை. அவர் ஓய்வு பெற்ற "அட்வகேட் ஜெனரல்'' என்பதுகூட அவரின் "அதிருஷ்டத்திற்கு''க் காரணமாக இருக்கலாம்.


இந்து மதவெறி பிடித்த சிவசேனா குண்டர்களின் இந்தத் தாக்குதலைப் பத்தோடு பதினொன்றாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. சிவசேனாவின் இந்தச் சட்டவிரோதமான மிரட்டல் நடவடிக்கையை நகர்ப்புறத்தைச் சேர்ந்த நடுத்தர, மேல்தட்டு "இந்துக்கள்'' மனநிறைவோடு ஆதரிக்கிறார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும், பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள் அஜ்மலுக்காக யாரும் வாதாடக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்பொழுதுள்ள நிலையில் தனக்காக வாதாட ஒரு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் எனச் சட்டப்படிக் கோரும் உரிமை அஜ்மலுக்கு உண்டு. இந்த உரிமையை அவரிடமிருந்து பறிக்க வேண்டும் என்பற்காக, அஜ்மலை அந்நிய நாட்டைச் சேர்ந்த எதிரி என அறிவிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார் சகுனி சுப்ரமணிய சுவாமி.


குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் முசுலீம் தீவிரவாதிகளின் சார்பில் வாதாட முயலும் வழக்குரைஞர்கள் தாக்கப்படுவது மும்பய் தாக்குதல் வழக்கில்தான் முதன்முறையாக நடந்திருப்பதாக நீங்கள் கருதினால், அது தவறு. மத்தியப் பிரதேசத்தில் தார் என்ற சிறு நகரத்தில் உள்ள நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்கம், அந்நீதிமன்றத்தைச் சேர்ந்த எந்தவொரு வழக்குரைஞரும் தீவிரவாதிகளுக்காக ஆஜராகக் கூடாது எனப் பல மாதங்களுக்கு முன்பே தீர்மானம் நிறைவேற்றியிருப்பதோடு, அதனை அந்த நீதிமன்றம்கூடத் தட்டிக் கேட்க முடியாதபடி நடைமுறைப்படுத்தி வருகிறது.


இந்த "பத்வா''வை மீறி, ஒரு முசுலீம் தீவிரவாதிக்காக அந்நீதிமன்றத்தில் வழக்காடச் சென்ற நூர் முகம்மது என்ற வழக்குரைஞர், பா.ஜ.க.வின் இளைஞர் அணியைச் சேர்ந்த குண்டர்களாலும், (இந்து) வழக்குரைஞர்களாலும் கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்ற வளாகத்தினுள்ளேயே, நீதிபதியின் கண் முன்னாலேயே கடுமையாகத் தாக்கப்பட்டார். நீதிமன்ற வளாகத்தினுள் வன்முறை கூடாது என்று மட்டும்தான் நீதிபதியால் உபதேசிக்க முடிந்தது. அந்த அறிவுரையைக் கேட்ட வழக்குரைஞர்கள் வாயால் மட்டும் சிரிக்கவில்லை. இந்தத் தாக்குதல் பற்றி புகார் கொடுக்கப் போன நூர் முகம்மதுவிடம் தார் நகர போலீசார், "தான் தாக்கப்படவில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போகுமாறு'' அன்புக் கட்டளையிட்டார்கள்.


இந்த அச்சுறுத்தல்களையெல்லாம் மீறி அந்த பரிதாபத்துக்குரிய முசுலீம் தீவிரவாதிக்காக வாதாடும் பொருட்டு நூர் முகம்மது மீண்டும் தார் நகருக்குச் சென்றபொழுது, நூர் முகம்மது மயங்கிச் சரியும் அளவிற்குத் தாக்கப்பட்டார். மயங்கிக் கிடந்த அவருக்கு உதவி செய்தால், தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் முசுலீம்கள் யாரும் நூர் முகம்மதுவை நெருங்கக்கூடவில்லை. ஒரு "இந்து' இளைஞன்தான் நூர் முகம்மதுவை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தான்.


உத்திரப்பிரதேசத்திலுள்ள பைசாபாத் நகர நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்கமும் எந்தவொரு வழக்குரைஞரும் தீவிரவாதிகளுக்காக வாதாடக் கூடாது என "பத்வா'' விதித்திருக்கிறது. இதனை மீறி, லக்னோ நகரைச் சேர்ந்த முகம்மது ஷோயப் என்ற வழக்குரைஞர், ஹக்கீம் முகம்மது தாரிக் காஸ்மி என்ற "தீவிரவாதி'க்காக வாதாட பைசாபாத் சென்றபொழுது, அவர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வைத்துத் தாக்கப்பட்டார். இத்தாக்குதல் பற்றித் தெரிந்திருந்தும் நீதிபதி அதனை ஒப்புக்குக்கூடக் கண்டிக்கவில்லை. போலீசாரும் இத்தாக்குதல் பற்றி வழக்குப் பதிவு செய்ய மறுத்து விட்டனர். "பைசாபாத் நீதிமன்றத்தைச் சேர்ந்த இந்து வழக்குரைஞர்களுள் பெரும்பாலோர் சங்கத்தின் சட்ட விரோதத் தீர்மானத்தை ஆதரிப்பதாகவும், சில இந்து வழக்குரைஞர்கள் இத்தீர்மானத்தை எதிர்த்தபொழுதிலும் அதனை வெளிப்படையாகக் கண்டிக்க முன்வரவில்லை'' என்று கூறுகிறார், முகம்மது ஷோயப்.


பொதுமக்களை வகைதொகையின்றிக் கொல்லும் பயங்கரவாதிகளின் சார்பாக வாதாடக் கூடாது என்ற தீர்மானத்தை, தார்மீகக் கோபம் என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும் என்று நியாயப்படுத்தலாம். ஆனால், பயங்கரவாதத்தின் மீது நகர்புறத்து நடுத்தர வர்க்கம் கொண்டுள்ள இந்த தார்மீகக் கோபம் நடுநிலையானதாக இல்லை என்பதுதான் உண்மை.


மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்து பயங்கரவாதிகளை வெளிப்படையாகக் கண்டிக்கும் அளவிற்கு "இந்துக்களிடம்'' தார்மீகக் கோபம் பொத்துக் கொண்டுவரவில்லை. எந்தவொரு வழக்குரைஞர் சங்கமும் அக்குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்குரைஞர்கள் வாதாடக் கூடாது எனத் தீர்மானம் இயற்றியதாகத் தெரியவில்லை. முசுலீம் தீவிரவாதிகளின் சார்பாக வாதாட முயலும் வழக்குரைஞர்களைத் தாக்கும் சிவசேனாவும், பா.ஜ.க.வும் மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்து பயங்கரவாதிகளைக் காப்பாற்றுவதற்காக நிதி திரட்டுவது, வழக்குரைஞர்களை நியமிப்பது என வெளிப்படையாக இறங்கியுள்ளன. இந்த இரட்டை வேடத்தை தார்மீகக் கோபம் எனக் கூறுவது மோசடித்தனமானது. இந்த தார்மீகக் கோபத்தின் ஆணி வேராக இருப்பது இந்து மதவெறியும் முசுலீம் வெறுப்பும்தான்.


இரண்டாம் உலகப் போரின்பொழுது யூத இன மக்களை இலட்சக்கணக்கில் படுகொலை செய்த (ஆர்.எஸ்.எஸ்.இன் குருமார்களான) "நாஜி''க் குற்றவாளிகளுக்குக்கூடத் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டிருக்கும்பொழுது, அதே உரிமையை முசுலீம் தீவிரவாதிகளுக்கு அளிப்பதனால் நீதி செத்துப் போய்விடாது. மேலும், ஒருவரின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் நிரூபணம் ஆகும்வரையில் அவரை நிரபராதியாகத்தான் பார்க்க வேண்டும் என்பதுதான் இயற்கையான நீதி பரிபாலனமுறை. குற்றம் சாட்டப்பட்டவர், தான் விரும்பும் வழக்குரைஞரைத் தனக்காக வாதாட நியமிக்கும்படி கோரும் உரிமையை இந்தியக் குற்றவியல் சட்டம் 303ஆவது பிரிவு வழங்கியிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் வழக்குரைஞரை வைத்துக் கொள்ளவில்லையென்றால், நீதிமன்றமே அவரின் சார்பாக வாதாட ஒரு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் என்றும் அச்சட்டம் கூறுகிறது.


இந்த சட்ட நடைமுறைகளை வெளிப்படையாக மீறி "பத்வா'' பிறப்பிக்கும் வழக்குரைஞர்களின் வாதாடும் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஒப்புக்காக ஒரு மிரட்டலை விடுக்கக்கூட எந்தவொரு நீதிமன்றமும் தயாராக இல்லை. உச்சநீதி மன்றம்கூட ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து வழக்குரைஞர்களின் அடாவடித்தனத்தை ஒப்புக்காகக் கண்டித்துவிட்டு, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாகக் குற்றம் சுமத்தப்பட்ட அப்சல் குருவுக்காக வாதாட நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் "சேம் சைடு கோல்'' போட்டதை அறிந்த பிறகும், அப்சலுக்கு கீழ் கோர்ட்டில் அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதி மன்றத்திடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?


முசுலீம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு வழக்குகள் திறந்த நீதிமன்றங்களில் நடைபெறுவது கிடையாது. பிணை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சட்டபூர்வ உரிமைகள், முசுலீம் என்ற ஒரே காரணத்திற்காகவே நீதிமன்றங்களாலும் மறுக்கப்படுகின்றன. இப்படிபட்ட நிலையில் தீவிரவாத வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களின் சார்பாக வழக்குரைஞர்கள் வாதாடக் கூடாது என மிரட்டுவதும், தீர்மானம் போடுவதும் அவர்களை எவ்வித விசாரணையுமின்றித் தண்டிக்க வேண்டும் என்ற பச்சையான பாசிசத் திமிரைத் தவிர வேறெதுவும் கிடையாது.


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்வானி; மும்பய்க் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பால் தாக்கரே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்து மதவெறி பயங்கரவாதிகள், வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கியும், சாட்சிகளை மட்டுமல்ல நீதிமன்றங்களையே மிரட்டியும் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். இந்து பயங்கரவாதத்தைக் கண்டும் காணாமல் காலத்தை ஓட்டும் கட்சி சார்பற்ற "இந்து'' நடுத்தர வர்க்கம், முசுலீம் பயங்கரவாதிகளை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என முண்டிக் கொண்டு நிற்கிறது. இதற்காக சட்டபூர்வ பாசிச ஆட்சியை ஏற்றுக்கொள்ளக்கூட அது தயாராகி விட்டது. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு காங்கிரசு கூட்டணி ஆட்சியும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்துவிட்டது. இனி, முசுலீம் தீவிரவாதிகளின் சார்பில் வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது எனத் தீர்மானம் போட வேண்டிய அவசியம் எழாது.


· செல்வம்