Language Selection

 முந்தாஸர் அல் ஜெய்தி, ஈராக்கில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கொடுத்த செருப்படி உலகெங்கிலுமுள்ள புரட்சிகரஜனநாயக சக்திகளுக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளுக்கும் சொல்லொணா உற்சாகத்தைத் தந்துள்ளது.

 புரட்சிகரஜனநாயக சக்திகள் இச்செருப்படியை அமெரிக்க காலனியாதிக்கத்தின் மீது விழுந்த அடியாகவே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து கொண்டாடி வருவதோடு, முந்தாஸர் அல் ஜெய்தியை விடுதலை செய்யவும் கோரி வருகின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வின் அதிர்வுகளைத் தமிழகத்திலும் காண முடிந்தது. 


 திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள், புஷ் மீது செருப்பு வீசப்பட்டதைக் கேள்விப்பட்டவுடனேயே, 15.12.2008 அன்று மதியம் 2.30 மணியளவில், 20க்கும் மேற்பட்ட தோழர்கள் மையப் பேருந்து நிலையம்  பெரியார் சிலை அருகே கூடி, பட்டாசு வெடித்து, "போர்வெறியன் புஷ்ஷைச்  செருப்பால் அடித்தது சரியே'' என முழக்கமிட்டுப் பிரச்சாரம் செய்தனர்.  "போர்வெறியன் புஷ்ஷுக்குச் செருப்படி'' என அட்டையில் பெரிதாக எழுதி வைத்துப் பிரச்சாரம் செய்தது, சாலையில் வருவோர் போவோர் அனைவருக்கும் நடந்த விசயத்தை நெத்தியடியாகத் தெரிவிக்கும் விதமாக அமைந்தது. தோழர்கள் மழையினையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்தது மக்களின் கவனத்தையும் எளிதாக ஈர்த்தது.   


 மேலும், அப்பகுதியில் பேருந்துக்குக் காத்துநின்ற பயணிகள் அனைவருக்கும் கேக் கொடுத்துத் தோழர்கள் இந்நிகழ்வைக் கொண்டாடினர். மேட்டுக்குடிப் பெண்கள் தான் கேக்கை எடுத்துக் கொள்ளாமல் கலவரமடைந்தார்களேயொழிய, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாணவர்கள், பேருந்து நடத்துநர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து கேக்கை எடுத்துக் கொண்டு இக்கொண்டாட்டத்தில் பங்கு கொண்டனர். இப்பிரச்சாரத்தைத் தடுக்க முனைந்த போலீசாரிடமும் கேக்கைக் கொடுத்ததும், அவர்கள் செய்வதறியாது திகைத்து நின்று விட்டனர்.  போலி கம்யூனிஸ்டுகள்கூட கண்டு கொள்ளாத இந்நிகழ்வை, ம.க.இ.க., முன்முயற்சியோடு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ததை ""தமிழ் சுடர்'' என்ற நாளேடு செய்தியாக வெளியிட்டது. 


 கோவையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்   இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து 20.12.2008 அன்று ஒண்டிப்புதூர் சுங்கம் திடலில் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடியதோடு, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இச்சம்பவத்தின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரமும் செய்தன.  இப்பிரச்சாரத்தில் கோவை நகர ம.க.இ.க. செயலர் தோழர் மணிவண்ணன் உரையாற்றினார். 


 கரூரில் புரட்சிகர மாணவர்  இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் "அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்குச் செருப்படி'' எனத் தட்டிகளில் எழுதி வைத் துக்கொண்டு, பேருந்து நிலையத்தின் மையத்தில் நின்றபடி மக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.  அப்பேருந்து நிலையத்தைச் சேர்ந்த கடைக்காரர்கள் தாமாகவே முன்வந்து தோழர்களிடம் பணத்தைக் கொடுத்து, இன்னும் இனிப்பு வாங்கி மக்களுக்குக் கொடுக்குமாறு கோரி உற்சாகப்படுத்தினர். 


 சென்னையில் இப்புரட்சிகர அமைப்புகள் புஷ்ஷுக்கு விழுந்த செருப்படியை அமெரிக்கக் காலனி ஆதிக்கத்தின் மீதே விழுந்த செருப்படியாகச் சித்தரித்தும், முந்தாஸர் அல் ஜெய்தியின் வீரத்தைப் பாராட்டியும் நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டாடியிருந்தனர். 


 இந்நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் முன்முயற்சியோடு எடுத்த இவ்வியக்கம், அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்ப்பதில் தமிழகம் பின்தங்கிப் போய்விடவில்லை என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்தது.  


 பு.ஜ. செய்தியாளர்கள்