Language Selection

புதிய ஜனநாயகம் 2009

டிசம்பர் 14, 2008 நள்ளிரவு நேரத்தை ஈராக்கும், உலகமும் அவ்வளவு எளிதாக மறந்து விடாது. அன்றுதான், ஈராக் மக்களுக்கு "ஜனநாயகத்தை'' வழங்கியிருப்பதாகச் சொல்லிக் கொண்டு திரியும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்

 ஜுனியருக்கு ஈராக் மக்களின் சார்பாக, அந்நாட்டைச் சேர்ந்த முந்தாஸர் அல்ஜெய்தி என்ற பத்திரிகையாளர் செருப்படி கொடுத்தார்.


அல் ஜெய்தி வீசிய செருப்பு புஷ்ஷைத் தாக்காமல் குறித் தவறிச் சென்றிருக்கலாம். ஆனால், அதற்காக யாரும் வருத்தப்படவில்லை. புஷ்ஷை நோக்கி அடிப்பது போல ஒருவரது கை நீண்டிருந்தால்கூட உலகம் மகிழ்ந்திருக்கும். அந்தளவிற்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஈராக் மக்களாலும், பெரும்பாலான உலக மக்களாலும், ஏன் அமெரிக்க மக்களாலும் வெறுக்கப்படுபவர் என்பது ஊரறிந்த உண்மை.


ஈராக் மக்கள் அல் ஜெய்தியைக் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்கள். அவரை விடுதலை செய்யக் கோரி ஈராக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. பல நாடுகளில் அல் ஜெய்தியின் வீரத்தைப் பாராட்டிக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. இன்று இணையதளத்தில் பிரபலமான விளையாட்டு எது தெரியுமா? ஜார்ஜ் புஷ்ஷின் உருவத்தைச் செருப்பால் அடிக்க வேண்டும். விளையாடுபவர் குறி தவறாமல் அடிக்க அடிக்க அவர் பக்கம் புள்ளிகள் ஏறிக்கொண்டே போகும். இவ்விளையாட்டில் வென்றால் "ஆம், உங்களால் முடியும்!'' என்ற பாராட்டு உங்களுக்குக் கிடைக்கும். இந்த செருப்படியை உலகமே கொண்டாடுகிறது என்பதற்கு இவையெல்லாம் சாட்சியங்கள்.


அல் ஜெய்தியின் செயலை நாம் அமெரிக்க மேலாதிக்கத்தின் மீது விழுந்த அடி என்கிறோம். ஆனால், புஷ்ஷோ அத்தாக்குதலை மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளும் முயற்சி எனக் கொச்சைப்படுத்தி, தான் பட்ட அவமானத்தைத் துடைத்துக் கொள்ள முயலுகிறார்.


அல் ஜெய்தி புஷ்ஷை நோக்கித் தனது ஷூவை முதன்முறை வீசியபொழுது, "இது ஈராக்கியர்கள் தரும் பரிசு; உன்னை வழியனுப்ப வைக்கும் முத்தம் இதுதான், நாயே!'' என முழக்கமிட்டுள்ளார். இரண்டாம் முறை ஷூவை வீசியபொழுது, "கைம்பெண்கள், அநாதைகள் மற்றும் ஈராக்கில் கொல்லப்பட்டவர்களின் சார்பாக இது!'' என முழக்கமிட்டுள்ளார். மலிவான விளம்பரம் தேடிக் கொள்பவனின் வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளா இவை? அல் ஜெய்தி தனது தொலைக்காட்சி நிறுவனத்திற்கு செய்திகளைத் தொகுத்து வழங்கும்பொழுது, "ஆக்கிரமிக்கப்பட்ட பாக்தாத்திலிருந்து, அல் ஜெய்தி'' என்றுதான் குறிப்பிடுவாராம். அந்தளவிற்கு அவரது மனத்தில் ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு, காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


இது மட்டுமா? இந்தக் "குற்றத்திற்கு' அல் ஜெய்திக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கக் கூடுமாம். இதற்காக அவரோ அவரது குடும்பத்தினரோ வருத்தப்படவில்லை. மலிவான விளம்பரம் தேடிக் கொள்பவன் சிறை, தண்டனை என்றவுடனேயே, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு புஷ்ஷின் காலில் விழுந்திருப்பான்.


அடிமைத்தனத்திற்கு எதிராக, விடுதலைக்காகப் போராடுபவர்களை மலினப்படுத்துவது ஆதிக்கவாதிகளின் அற்பக்குணம். அந்த வகையில்தான் புஷ்ஷின் விமர்சனத்தையும், அல் ஜெய்தி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டதாக ஈராக் அரசு பிரச்சாரம் செய்து வருவதையும் பார்க்க முடியும்.
இத்தாக்குதலை ஈராக்கில் சுதந்திரம் இருப்பதன் அறிகுறி எனக் கூறிச் சமாளித்துள்ளார், புஷ். முட்டாள் புஷ்ஷின் வாயிலிருந்து விழுந்த "அறிவார்ந்த'' வார்த்தைகள் இவை. ஆஹா! ஈராக்கில்தான் எப்பேர்பட்ட ஜனநாயகம் நிலவுகிறது! புஷ்ஷை நோக்கி செருப்புகள் பறந்தவுடனேயே மெய்க்காப்பாளர்கள் அல் ஜெய்தியின் மீது பாய்ந்து, அவரைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போனார்கள். புஷ், பத்திரிகையாளர்கள் மத்தியில் சுதந்திர சமூகம் குறித்துக் கதையளந்து கொண்டிருந்தபொழுது, ஈராக் போலீசார் அல் ஜெய்தியை அடிக்கும் ஓசையும், அத்தாக்குதலில் காயமுற்ற அல் ஜெய்தியின் ஓலமும் அனைவரின் காதுகளிலும் விழுந்தது. "ஈராக்கிற்கு ஜனநாயகத்தைக் கொண்டு வந்து விட்டதாக கூறும் புஷ் அவர்களே, உங்கள் வார்த்தை உண்மையானால், அல் ஜெய்தியை உடனே விடுதலை செய்யுங்கள்'' எனக் கோரி பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு, பல தரப்பினரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஈராக்கில் உள்ள அமெரிக்க அடிவருடி அரசாங்கமோ அல் ஜெய்தியை எப்படியாவது தண்டித்துவிட வேண்டுமெனக் கருவிக் கொண்டிருக்கிறது.


ஈராக்கிற்கு விருந்தினராக வந்த அடுத்த நாட்டின் அதிபர் மீது செருப்பை வீசலாமா? எனப் பதைபதைத்து, இச்சம்பவத்தைக் கண்டித்திருக்கிறார்கள், சில கனவான்கள். ஐயா, கனவான்களே, உங்கள் வீட்டுக்குள் ஒரு திருடன் புகுந்து விட்டால் அவனைத் துரத்தியடிக்கத் தடியைத்தானே தேடுவீர்கள். அமெரிக்க அதிபர் புஷ் நீங்கள் "கருதுவது' போல விருந்தினன் அல்ல; ஈராக்கின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்கப் புகுந்திருக்கும் திருடன். அதற்காக, கடந்த ஐந்தாண்டுகளில் 12,97,997 ஈராக்கியர்களைக் கொலை செய்தவன். அந்த பசுத்தோல் போர்த்திய புலியைத் துரத்தியடிக்க தடியைத் தூக்கிக் கொண்டு போனால் பாதுகாப்பு அதிகாரிகள் பிடுங்கிக் கொண்டு விடுவார்கள் என்பதால்தான், அல் ஜெய்தி சமயோசிதமாகத் தனது ஷூவையே ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டார். வல்லவனுக்கு பூட்ஸும் ஆயுதம்!


அல் ஜெய்தி புஷ்ஷைக் கொன்றிருந்தால், மன்மோகன் சிங் போன்ற புஷ்ஷின் அடிவருடிகள் அந்தப் போர்க் குற்றவாளியைத் தியாகியாக்கிப் புகழ்ந்து தள்ளியிருப்பார்கள். ஆனால், செருப்படி வாங்கிக் கட்டிக்கொண்ட புஷ்ஷுக்கு ஆறுதல் சொல்லவும் முடியாது; அவரது "சகிப்புத் தன்மையை'ப் புகழவும் முடியாது. அதனால் இந்த அவமானத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள். குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க இரும்புக் கவசம் மாட்டிக் கொள்ளலாம். ஆனால், செருப்பு வீச்சில் இருந்து எப்படித் தப்புவது? இந்தப் பயம்தான் இவர்களை ஆட்டிப் படைக்கிறது.


ஈராக்கில் செருப்படி வாங்கிக் கொண்டு ஆப்கானிஸ்தானுக்குப் பறந்து வந்த புஷ், அங்கும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டார். காபூல் நகரத்தில் நடந்த அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பத்திரிகையாளர்கள் ஷூவைக் கழட்டி வைத்துவிட்டுக் கூட்டத்துக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்களாம்!


எத்தனை பாதுகாப்பு வளையத்திற்குள் நின்று கொண்டாலும் விடுதலைக்குப் போராடும் மக்களின் குறியிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களும் அவர்களது எடுபிடிகளும் தப்ப முடியாது என்பதற்கு இச்சம்பவம் இன்னுமொரு சான்று. "உங்களுக்கு ஒவ்வொரு முறையும் அதிருஷ்டம் அடிக்க வேண்டும்; எங்களுக்கு அதிருஷ்டம் ஒருமுறை வாய்த்தால் போதும்'' என ஒரு போராளி கூறியிருப்பது கவித்துவமான உண்மை. அதை உலகுக்கு உணரச் செய்த முந்தாஸர் அல் ஜெய்தியின் வீரத்திற்கும், அவருக்குத் தக்க சமயத்தில் ஆயுதமாகப் பயன்பட்ட அந்த 10ஆம் நம்பர் ஷூக்களுக்கும் நமது நன்றி உரித்தாகுக!


· குப்பன்