புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, (பு.ஜ.தொ.மு), வரும் ஜனவரி 25ஆம்தேதியன்று சென்னை அம்பத்தூரில் ""முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு'' என்ற தலைப்பில் மாநாடொன்றை நடத்த திட்டமிட்டு, மக்களிடையே முழுவீச்சாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.12.08) அன்று, இப்பிரச்சாரத்தையொட்டி தோழர் ஜெயராமன், தோழர் வெற்றிவேல் செழியன் முதலான ஆறு பு.ஜ.தொ.மு. தோழர்கள் சென்னை பல்லாவரம் பகுதியில் பிரச்சாரம், நிதி வசூலுக்காக சென்றனர். கொடிகளோடு செஞ்சட்டையணிந்த தோழர்கள் அப்பகுதிக்கு சென்றதுமே, அவர்களை எதிர்கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த சி.பி.எம். செயலாளர் ஜீவா தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட சி.பி.எம் (டைஃபி) கும்பல். தோழர்களுடைய சைக்கிளை எட்டி உதைத்து, கும்பலாகத் தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற தோழர் வெற்றிவேல் செழியனை ஒருவன் மிகக்கடுமையாக நெஞ்சில் தாக்கியுள்ளான். உருட்டுக் கட்டைக் கொண்டு ஒருவன் தாக்கியதில், தோழர் ஜெயராமனின் தோள்பட்டை இறங்கியுள்ளது.
உடனடியாக, நேரே பல்லாவரம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க தோழர்கள் சென்றுள்ளனர். அங்கே, தோழர்கள் செல்வதற்கு முன்னரே, பல்லாவரம் பகுதி சி.பி.எம். புரோக்கர் ரணதிவே என்பவர், நக்சலைட்டுகள் தங்களைத் தாக்கி விட்டதாகப் பொய் புகார் கொடுத்திருந்தார். தோழர்களின் புகாரின்படி, தாக்கியவர்களை கண்டுபிடிப்பது சிரமம் எனக் கூறி, முதல் தகவல் அறிக்கையைப் பதிய மறுத்து விட்டது போலீசு.
அடித்து விரட்டினால் ஓடி விடுவார்கள் எனத் தப்புக் கணக்குப் போட்ட சி.பி.எம்; நிலைமை முற்றுவதை உணர்ந்து, சமாதானமாகப் போய் விடலாம் எனக் கூறியுள்ளனர். குரோம்பேட்டையில் போலி கம்யூனிஸ்டுத் தொழிற்சங்கத்தைப் புறக்கணித்து, பு.ஜ.தொ.மு.வில் உணர்வுள்ள சி.பி.எம். அணிகள் இணைந்ததனால் ஏற்பட்ட எரிச்சலின் விளைவாகவே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அதே நாளின் இரவில் சென்னை கோடம்பாக்கத்தில் சி.பி.எம்.மின் கலை இலக்கிய அமைப்பான த.மு.எ.ச. தனது மாநாட்டையொட்டி நடத்திய கலை இரவில், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை விற்பனை செய்வதற்காக ஒரே ஒரு பு.ஜ.தொ.மு. தோழர் சாலையில் கடை பரப்பி வைத்திருந்தார். இரவு 12 மணிக்கு அங்கே வந்த பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 10 டைஃபி "குடிமகன்கள்' (சி.பி.எம். குண்டர்கள்) போதைத் தலைக்கேற, பொதுமக்கள் முன்னிலையிலேயே கெட்ட வார்த்தைகளால் ஏசி, கடையை எடுக்கச் சொல்லி காலித்தனம் செய்துள்ளனர். தோழர் கையிலிருந்த விலைவாசி உயர்வுக்கு எதிரான 300 துண்டுப் பிரசுரங்களை பிடுங்கி, அங்கேயே தீக்கிரையாக்கியுள்ளனர்.
போலி கம்யூனிஸ்டுகளான சி.பி.எம் கட்சியினர் மாநிலத்திற்கு ஒரு வேசம் போடுவதாக பிற அரசியல் கட்சிகள் அவர்களை குற்றம் சாட்டுவது வழக்கம். ஆனால், எல்லா மாநிலங்களிலும் அவர்களிடம் காணப்படும் ஒரே ஒற்றுமையான அம்சம், பொறுக்கித்தனம். வங்கத்தின் நந்தி
கிராமம் முதல் தமிழகத்தின் காரப்பட்டு வரை தமது கொலைவெறியாட்டத்தை நடத்தி, தமக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் கொடியின் நிறத்தில் மட்டுமே வேறுபாடு என்பதை நாள்தோறும் நிரூபித்து வருகின்றனர்.
பாசிச ஜெயாவுக்குப் பொருத்தமான கூட்டணிதான்!
பு.ஜ.செய்தியாளர்கள், சென்னை.