05192022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

வாழ்வின் நியதிகள் புரட்சிகளும், மாற்றுக் கருத்துக்களும்!

"சுதந்திரத்திற்காக என்று சொல்லிக் கொண்டு பல்லை இளித்துக் கொண்டும், கெஞ்சிக் கொண்டும், தாழ்ந்து போவதும், மிருக பலத்தைக் கையாலுவதும், கீழ்தரமாக பணிந்து போவதும் மகா கேவலமானது. அரசாங்கம் என்னை ஆசிரியர் பொறுப்பினின்றும் விடுதலை அடையச் செய்துவிட்டது.  இனி நான் ஜெர்மனியிலே இருக்க வேண்டுமானால் எனக்கு நானே பொய்யனாக வேண்டும். என்னை நானே ஏமாற்றிக் கொள்ள வேண்டும். நேர்மையாளனாக ஜெர்மனியில் இனி நான் வாழ முடியாது."
- கார்ல் மார்க்ஸ் 
உலக வாழ்க்கை எப்படி நடைபெறுகிறது என்பதற்கும், எப்படி நடைப்பெற வேண்டும் என்பதற்கும் இடையே இருக்கும் வாழ்வியல் முரண்பாட்டையும் தகுதியான கல்வி அறிவுகையும் பெற்றிருந்த மார்க்ஸீன் இளைய பருவத்தில் கடுமையான மனப்போராட்டத்தை ஏற்படுத்தி இருந்தன. முரண்பாடுகளைக் குறித்த சிந்தனைகள் கோபங்கள் பல இரவுகளை தூங்கவிடாமல் துரத்தியது. எகலின் என்ற பிரபலமான தத்துவத்தை வகைப்படுத்தும் அளவுக்கு மார்க்ஸீக்கு பேரறிவு இருந்தது.
மார்க்ஸ் மிகச் சிறந்த கற்பனைவாதி. கற்பனைக்கு ஆக்கமும், படைப்புகளை எழுத்துக்களாகவும் ஆக்க முற்பட்ட போதே ஜெர்மானிய அரசிடம் முரண்பாடு ஏற்பட்டது. அதே இலக்கியத்திலும், தத்துவங்களிலும் அவருடைய சிந்தனைக்கு மாறாக முரண்பாடுகள் இருந்தன. எவற்றோடும் சமரசம் செய்து கொள்ளும் சிந்தனை அல்ல மார்க்ஸீன் சித்தாந்தம். 
´எகல்´ தத்துவத்தில் உலகம், மதம், அரசாங்கம், கடவுளின் படைப்புகள் என்றும், அவற்றில் தெய்வீக அம்சம் இருப்பதால் தான் மனிதர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை; செய்யவும் முடியாது என்பதாக எகல் வாதம் இருந்தது. ஆனால், எகலுக்கு மாறான தத்துவத்தை மார்க்ஸ் சமூகத்தின் முன் வைக்கிறார். 
மதம், அரசு, சமூதாயம் யாவும் மக்களிடம் இருந்து தான் வருகிறது. மக்கள் சக்திக்கு விரோதமாகவோ அல்லது வேறு சக்தி இருக்க முடியாது என்கிறார். அந்தக் கட்டத்திலேயே லட்விக் புயர்பாச் (Ludwig Fucrbauch) கற்பனா வாதத்தைத் தாக்கி பொருள் முதல் வாதத்தை (Materialism) ஆதரித்து உணர்ச்சியை தூண்டும் அருமையான கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். அவரின் கட்டுரைகள் ஜெர்மானிய இளைஞர்களை பெரிதும் கவர்ந்தன. மார்க்ஸையும் மற்றும் எகலியவாதிகளாக இருந்த இளைஞர் கூட்டம் புயர்பாச்சியவாதிகளாக மாறினர். மார்க்ஸீன் தீவிர ஈடுபாடும் தத்துவ ஆராய்ச்சியும் அவை குறித்த விவாதங்களையும் ஆரம்பித்திருந்தார். அடால்ப் ருடென் பெர்க் என்ற எழுத்தாளர், பிரெட்ரிக் கோப்பன் என்ற சரித்திர ஆசிரியர், ப்ருனோபாயெர் என்ற சமய நிபுணர் போன்றவர்களின் தொடர்பும் அறிமுகமானது. 
Diplomats Society என்ற சங்கத்தின் சார்பாக தத்துவங்களை கூடி விவாதிக்கும் இடத்தில் அனைவரும் தம்முடைய சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்ளவும், ஆய்வுக்கும் உட்படுத்தவும் ஆரம்பித்திருந்தனர். மார்க்ஸீன் தெளிவான பேச்சும் திறமையும், கொள்கை, கோட்பாடுகளும் எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. நீண்டகால அனுபவமுள்ள தத்துவவாதிகள் கூட மார்க்ஸீன் சிந்தனையில் ஈடுபாடு ஏற்பட்டிருந்தது. 
கல்லூரி வாழ்க்கை முடிவடைந்ததும் மார்க்ஸீக்கு கல்லூரியில் ஆசிரிராக வேலைக்கு செல்ல விரும்பினாலும் அரசாங்கம் மாணவர்கள் மத்தியில் முற்போக்கு கருத்துக்களை புகுத்திவிடாமல் இருக்க ஆசிரியர்களை கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் வைத்திருந்தது. சுதந்திரம் இல்லாத கல்லூரி ஆசிரியர் வேலை தனக்கு ஒத்துவராது என்ற எண்ணத்தால் அதை கைவிட்டார். 
1842- இல் ஜனவரி ஒன்றில் ரைன்லாந்து கெஜட் என்ற பத்திரிக்கை வெளிவந்தது. மார்க்ஸீம், ப்ருனோ என்பவரையும் கட்டுரைகள் எழுத அழைக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு  பின் அப்பத்திரிக்கையின் ஆசிரியராக மார்க்ஸீக்கு பதவி கிடைத்தது. பத்திரிக்கைகளும் சூடுபிடிக்கத் தொடங்கின. வாசகர்களின் எண்ணிக்கை மிக அதிகமானது. மார்க்ஸீன் கட்டுரையை மக்களிடம் புதிய அரசியல் பார்வையையும், விழிப்புணர்வையும் உண்டாக்கி இருந்தன. அரசிடம் எச்சரிக்கை உணர்வு வந்தது. ரைன்லாந்து கெஜட் பத்திரிக்கையை தணிக்கைச் சட்டங்களுக்கு உட்படுத்தியது. கடுமையான கண்காணிப்புகளை அடக்குமுறைகளை கையாண்டது. மார்க்ஸீக்கு வெறுத்துப் போய்விட்டது. கருத்துக்களை தணிக்கை செய்வதில் அவருக்கு உடன்பாடில்லை. அதனால கருத்துச் சுதந்திரம் இல்லாத இடத்தில் எனக்கென்ன வேலையென்று ஆசிரியர் பதவியில் இருந்து விலகினார். 1833-ல் மார்ச் மாதத்தில் பத்திரிக்கையும் மூடப்பட்டது. 
மிகுந்த மனஉளைச்சளுக்கு உள்ளான மார்க்ஸ் தன் நண்பனுக்கு கடிதம் எழுதுகிறார் :
"சுதந்திரத்திற்காக என்று சொல்லிக் கொண்டு பல்லை இளித்துக் கொண்டும் கெஞ்சிக் கொண்டும், தாழ்ந்து போவதும், மிருக பலத்தைக் கையாலுவதும், கீழ்தரமாக பணிந்து போவதும் மகா கேவலமானது. அரசாங்கம் என்னை ஆசிரியர் பொறுப்பினின்றும், விடுதலை அடையச் செய்துவிட்டது. இனி நான் ஜெர்மனியிலே இருக்க வேண்டுமானால் எனக்கு நானே பொய்யனாக வேண்டும். என்னை நானே ஏமாற்றிக் கொள்ள வேண்டும். நேர்மையாளனாக ஜெர்மனியில் இனி நான் வாழ முடியாது."
சிந்தனையாளர்களுக்கு அரசாங்கம் என்னும் போலிக் கட்டமைப்புகள் இப்படியாகத்தான் துரத்தியடிக்கின்றது வாழ்வின் எல்லை வரை. இருப்பினும் புரட்சிகள் மாற்று சிந்தனைகள் உருவெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. வாழ்வின் நியதிகளில் ஒன்றாகிவிட்டது புரட்சிகளும், மாற்றுக் கருத்துக்களும்!
தமிழச்சி
05/01/2009

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்