காய்ச்சலா, தலையிடியா, உடல் உழைவா, மூட்டு வலியா எதுவானாலும் அஸ்பிரின் மருந்துதான். இவ்வாறு அது கைகொடுத்த காலம் ஒன்று இருந்தது. 

ஆம் சர்வரோக நிவாரணி போலப் பயன்பட்டது. ஆனால் வலியைக் குறைக்கவும், காய்ச்சலைத் தணிக்கவும் வீரியம் கூடியதும், பக்க விளைவுகள் குறைந்ததுமான புதிய மருந்துகள் வந்ததும் அதன் பிரபல்யம் மங்கத் தொடங்கியது. 

ஆனால் அதற்கு சென்ற சில ஆண்டுகளாக மீண்டும் மவுசு கூடிவிட்டது. மறுபிறப்பு எடுத்துவிட்டது. 

ஆம்! 'தினமும் அஸ்பிரின் சாப்பிட்டு வாருங்கள்' என வைத்தியர்கள் சிபார்சு செய்பவர்கள் தொகை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

யாருக்கு இது தேவை? 

மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதால்தான் மருத்துவர்களால் அதிகம் எழுதப்படும் மருந்தாக அஸ்பிரின் மாறிவிட்டது. 

ஒருவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்கனவே வந்திருந்தால் அது மீண்டும் வராமல் தடுப்பதற்கு தினமும் அஸ்பிரின் எடுக்க வேண்டியதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பக்கவாதம் அல்லது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளவர்களுக்கும் தேவைப்படுகிறது. 

இவை வருவதற்கான சாத்தியம் அதிகமுள்ளவர்கள் யார்? 

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அதிகமுள்ளவர்கள் ஆகியோருக்கு அதற்கான சாத்தியம் மிக மிக அதிகமாகும். 

புகைப்பவர்கள், தினமும் அதிகமாக மது அருந்துபவர்கள், அதீத எடையுள்ளவர்கள், உடலுழைப்பு உடற் பயிற்சி அற்றவர்கள், பரம்பரையில் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளவர்கள் ஆகியோருக்கும் சாத்தியம் அதிகமாகும். 

அஸ்பிரின் எவ்வாறு உதவுகிறது? 

அஸ்பிரின் மருந்தானது குருதியின் உறைதல் (Clotting) தன்மையைக் குறைக்கிறது. உதாரணமாக ஒருவருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். உடனடியாக இரத்தம் கசியும் இடத்திற்கு வெண்குருதி சிறுதுணிக்கைகள் (Platelets) வந்து குவியும். இவை திரண்டு, இரத்தத்தை கட்டிப்படுத்தி, கசிந்து கொண்டிருக்கும் இரத்தக் குழாய்களின் வாயிலை அடைத்து மேலும் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும். 

ஆனால் இவ்வாறு குருதி உறைந்து கட்டிபடுதல் இரத்தக் குழாய்களுள்ளும் ஏற்படலாம். முக்கியமாக மூளைக்கும், இருதயத்திற்கும் குருதியைக் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களுள் ஏற்பட்டால் அது ஆபத்தானது. கொலஸ்டரோல் காரணமாக அவை இரத்தக் குழாய்க்குள் படிந்து அவற்றின் இரத்தம் பாயும் பாதையை ஏற்கனவே ஒடுங்கச் செய்திருந்தால், அங்கு குருதி உறைந்து கட்டிபட்டு இரத்த ஓட்டத்தை தடைப்படுத்தும். 



அவ்வாறு அடைபடும் போதுதான் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன ஏற்படுகின்றன. அஸ்பிரின் மருந்தானது அவ்வாறு இரத்தம் உறைந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. 

எவ்வளவு அஸ்பிரின் தேவை? 

வழமையான அஸ்பிரின் மாத்திரைகள் 300 மிகி (300 milligrams (mg)அளவுடையவை. ஆனால் மாரடைப்பு பக்கவாதம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான மாத்திரைகள் 75 மிகி முதல் 100 மிகி வரையானவை மட்டுமே. இது அந்தத் தேவைக்கு போதுமானதாகும். 

இவற்றிலும் வெவ்வேறு வகைகள் உள்ளன. 

இரைப்பையில் கரையாது அப்பால் சென்று உணவுக் குழாயில் கரைவதை Enteric-coated aspirin என்பார்கள். இது முக்கியமாக இரைப்பை புண் உள்ளவரக்ளுக்காகும். இரைப்பையை உறுத்தாது அப்பால் சென்று கரைய வைப்பதன் மூலம் பாதுகாப்பு அளிக்கிறது. ஆயினும் இது சமிபாடடைந்து செயற்படுவதற்கு கூடிய நேரம் எடுக்கிறது. அத்துடன் இரைப்பையை உறுத்தாது என்ற போதும் இரைப்பை புண்ணிலிருந்து இரத்தம் கசிவதைக் குறைக்குமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. 

வேறு சில வாயில் வைத்துக் கரையவிடக் கூடியனவாக இருக்கின்றன. இவை விரைவில் உறிஞ்சப்பட்டு விடும். 

சத்திர சிகிச்சைகளும், நிறுத்துவதும் 

இவற்றைத் தினமும் உட்கொள்வது அவசியமாகும். தொடர்ந்து உபயோகிப்பவர்கள் இதனைத் திடீரென நிறுத்துவது கூடாது. திடீரென நிறுத்தினால் அது எதிர்விளைவை ஏற்படுத்தி, பக்கவாதம் மாரடைப்பு வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கக் கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

வேறு நோய்களுக்காக சத்திரசிகிச்சைக்கு செல்ல வேண்டி நேர்ந்தால் இதனை ஒரு வாரத்திற்கு முன் நிறுத்த வேண்டியிருக்கும். நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை பெறுங்கள். பாரிய சத்திரசிகிச்சைகளுக்கு மாத்திரமின்றி பல் பிடுங்குவது போன்ற சாதாரண சத்திர சிகிச்சையாக இருந்தாலும் நீங்கள் தினம் அஸ்பிரின் எடுப்பதை மருத்துவரிடம் முற்கூட்டியே சொல்ல மறக்க வேண்டாம். 

பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாதா? 

தினமும் அஸ்பிரின் சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாதா? எல்லோருக்கும் இது உகந்ததா? பெரும்பாலானவர்களுக்கு இதனை உட்கொள்வதில் எத்தகைய பிரச்சனைகளும் ஏற்படாது. ஆயினும் கீழ் கண்டவர்கள் விடயத்தில் அவதானம் தேவை. 

அஸ்பிரின் மருந்திற்கு ஒவ்வாமை (Allergy) உள்ளவர்கள் அதனை எடுக்கக் கூடாது. குடற்புண் உள்ளவர்கள் அதிலும் முக்கியமாக அதிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டவர்கள் எடுக்கக் கூடாது. பக்க வாதத்தில் இரண்டு வகை உண்டு. முன்னர் கூறியவாறு குருதி உறைதலால் ஏற்படுபவர்களுக்கு இது நல்லது. மாறாக குருதிப் பெருக்கால் பக்கவாதம் ஏற்படுபவர்களுக்கு இது நோயைக் கூட்டக் கூடும். இதனை சி.டி ஸ்கான் போன்ற பரிசோதனைகளாலேயே கண்டு கொள்ள முடியும். 

அத்துடன் குருதி உறைதல் குறைபாடு நோயுள்ளவர்களும் உபயோகிக்கக் கூடாது. அஸ்பிரின் மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மதுபானம் அருந்துவதை மிகவும் குறைக்க வேண்டும். ஏனெனில் இரண்டும் சேரும்போது மருந்தின் செயற்பாட்டு வீச்சு அதிகரிப்பதுடன் இரைப்பைக்கும் கூடிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். 

மாரடைப்பின்போது 

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதற்கான அறிகுறிகள் திடீரென தோன்றினால் ஒரு சாதாரண அஸ்பிரினை உடனடியாக மென்று விழுங்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அல்லது மேற் கூறிய குறைந்த வலுவுள்ள அஸ்பிரினில் நான்கு உடனடியாக எடுக்க வேண்டும். 

தினமும் அஸ்பிரின் மாத்திரை எடுப்பவர்களுக்கும் இது பொருந்தும். மென்று விழுங்கும் போது அஸ்பிரின் விரைவில் குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு உடனடியாகச் செயற்படும் என்பதை நினைவில் வைத்திருங்கள். 

ஆயினும் பக்கவாதம் ஏற்பட்டால் மாரடைப்பிற்கு எடுப்பதுபோல உடனடியாக அஸ்பிரின் எடுக்கக் கூடாது. 

ஏனெனில் எல்லாப் பக்கவாதங்களும் குருதி கட்டிபடுவதால் ஏற்படுவதில்லை. சில சிறுஇரத்தக் குழாய்கள் வெடிப்பதால் ஏற்படுகின்றன. அவ்வாறானவற்றுக்கு அஸ்பிரின் கொடுத்தால் குருதி கசிவது அதிகமாகி நோய் தீவிரமடையும். 

புதிய மருந்து 

இப்பொழுது குருதி உறைதலைக் குறைக்கும் அஸ்பிரின் மருந்திற்கு பதிலாக புதிய வகை மருந்தான குளபிடோகிறில் (clopidogrel)பாவனைக்கு வந்துள்ளது. இது சற்று அதிக விலையானது. அஸ்பிரின் மருந்தால் பக்கவிளைவு ஏற்படுபவர்களுக்கு ஏற்றது. அத்துடன் பல தருணங்களில் அஸ்பிரினுடன் சேர்த்தும் மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். 

மருத்தவ விஞ்ஞானம் அதீத வளர்ச்சி கண்டுள்ள இன்றைய கால கட்டத்திலும் அஸ்பிரினின் உயிர் காக்கும் ஒளடதமாகக் கைகொடுப்பதுடன், எளிதாகக் கிடைப்பதும், எல்லோருக்கும் கிட்டக் கூடிய விலை குறைந்த மருந்தாக இருப்பதும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய விடயம் என்பதில் சந்தேகம் இல்லை. 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் 
குடும்ப மருத்துவர் 

நன்றி:- வீரகேசரி 04..01.2009