01172021ஞா
Last updateச, 16 ஜன 2021 11am

புலிகளின் அழிவு நெருங்க,நெருங்க...

"இலட்சம் மக்களை உயிர்ப்பலிகொண்டவொரு ஈழப்போராட்டம் இறுதியில்
அந்த மக்களைப் பூண்டோடு அழித்து,அரசியல் அநாதைகளாக்கிச் சென்றுவிடப்போகிறது! பணத்தைச் சுருட்டி வைத்திருக்கும் வெளிநாட்டுப் புலிகளுக்குப் புலித் தலைமை அழிந்துஇலங்கையில் போர் முடிவுக்கு வருவது மிகவும் அவசியமானது.கையிலிருக்கும் பெருந்தொகை பணத்தை அங்கே,மூலதனமாக இடுவதற்கு அவசியாமான புலி அழிப்பு ஒரு வகையில் இவர்களும்
எதிர்பார்ப்பதே."

 

 

அரச பயங்கரவாத வான் தாக்குதற் கொலைகளும்,அதைக்காரணமாக்கிய இராஜ தந்திரங்களும் ஈழத்தமிழ்பேசும் மக்களை உயிர்திருப்பதற்கான சாத்தியப்பாட்டிலிருந்து மெல்ல மெல்லப் பெயர்த்தெடுத்து கொலைக் களத்துக்குள் தள்ளி விடுகிறது.இதுவரையான அனைத்துக் கொலைகளும் தனிநபர் பயங்கரவாதத்திலிருந்தும்-இயக்கப் பயங்கரவாதத்திலிருந்தும் அரச பயங்கர வாதமாக வியாபித்துக் கொண்டு, நமது சமூகத்துள் வாழும் சாதரண மக்களின் வாழ்வாதராத்தைப் பறித் தெடுக்கிறது.

வன்னி விடுவிப்பு யுத்தம்,பயங்கரவாதத்துக் எதிரான யுத்தம் எனும் பெயரில் ஆளும் மகிந்த அரசு செய்யும் இக் கொடூரமான யுத்தம் வெறுமனவே புலிகளை வேட்டையாடும் யுத்தமென்றும் கூடவே, அது தமிழ்பேசும் மக்களை விடுவிப்பதற்கான யுத்தமெனும் போர்வையில் இன்று தமிழர் குடிப்பரப்பெங்கும் வான் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.இவற்றை அரசியல் பகமையைக் காரணமாக வைத்துத் தமிழ் தலைமைகளெனும் போர்வையில் உலாவரும் மாற்றுக் குழுக்கள்-கட்சிகள் சிங்கள அரசிற்குத் துணைபோகும் அரசியலில் தமது கட்சி-இயக்க நலன்களை எட்ட முனைதல் முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும் எதிரான வரலாற்றுத் துரோகத்தை மீளச் செய்வதைத் தமிழ் பேசும் மக்களுக்கு ஜனநாயகம் கொணர்வதாகச் சொல்வது முற்று முழுதான சுத்துமாத்து அரசியலாகும்.


இன்றைய மாற்றுக் குழுக்கள் முதல் இலங்கையிலிருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும்-குழுக்களுக்கும் இந்தியப் பொருளாதார உதவி தாராளமாகக் கிடைக்கிறது.அவைகளின் அரசியல் வாழ்வுக்கு இந்தியா தினமும் பொருளாதார மற்றும் சகல அரசியல் ஆலோசனை உதவிகளையும் வழங்குகிறது.இதன் காரணத்தால் அவைகள் எஜமான விசுவாசத்தை மீறி நமது மக்களின் குருதி தோய்ந்த வாழ்வை மாற்றுவதந்குக் கரிசனையோடு அரசியல் செய்வதற்கில்லை!புதிய இவ்வாண்டை இலங்கை அரசு யுத்த ஆண்டாகவும் அதையே சமாதானத்துக்கும், யுத்தம் முடிவடைவதற்குமான ஆண்டாகப் பிரகடனப்படுத்துகிறது.இது,உண்மையில் புலிகளைப் பூண்டோடு துடைத்தெறிவதன் இந்திய ஒத்துழைப்பை நம்பியே மக்கள் மத்தியில் பிரகடனப்படுத்தப்படுகிறது.


புலிகள் தொடர்ந்து போரிட்டு போராளிகளை இழப்பதற்கும்,இதன் பயனாகத் தலைமையைத் துடைத்தெறியவும் இலங்கைச் சிங்கள அரசுக்கு அனுகூலமான கள நிலைமைகள் தென்படுகின்றன.இது,போரை இன்னும் வலிந்து நடாத்தும்.எனவே,புலிகளின் எந்த வியூகமும் இலங்கையின் இன்றைய கள நிலைமையில் வெற்றியைத் தருவதற்கில்லை.இதன் காரணத்தால் புலிகள் சமாதானப் பேச்சுக்கு சுயமாக முன் வந்தாலும் அவர்களை எவரும் செவிமடுக்கும் அளவுக்கு நிலைமை இல்லை.இந்தியாவும், அதை ஆளும் மறைந்த இராஜீவின் மனைவியுமான சோனியா காந்தியும் தனது தனிப்பட்ட வலியைக் காரணமாக வைத்துப் புலிகளை மிகவும் நிர்க்கதியாக்கித் தலைமையை அழிப்பதில் குறியாக இருக்கிறார்.இது,பழிக்குப்பழி என்ற மறைமுகமான அரசியலைக் கொண்டியங்குகிறது.இந்த உண்மை பரவலாக அரசியல் அரங்கில் விவாதமாக முன்வைக்கப்படவில்லை.இராஜீவ்காந்தியை இழந்த இந்தியாவும்,தனது கணைவனை இழந்த சோனியாவும் ஒரே தளத்தில் நிற்கிறார்கள்.அந்தத் தளம் புலிகளைப் பூண்டோடு அழிப்பதற்கான அனைத்துவகைக் காழ்ப்புணர்வையையும்,சாபத்தையும் கொண்டியங்குகிறது.சோனியாவின் நாளாந்த சுய துன்பந்திலிருந்து இது பெரும் பழி அரசியலாக முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களையும் பலிகொண்டு வருகிறது.இந்த உளவியலை வருங்காலங்களில் மிகக் கவனமாக ஆய்வுக்குட்படுத்தியாக வேண்டும்.

இன்றைய தினம் வன்னிப் பெரு நிலப்பரப்பெங்கும் பரந்து விரிந்து போர் புரியும் சிங்கள இராணுவதஇதுக்குடந்தையாக முழு உலகமுமே பின்னால் இருக்கும்போது அதன் போரிடம் ஆற்றல் மிகுதியாகவும்,புலிகளின் ஆற்றல் பின்னடைவாகிச் சிதைந்து பலவீனமாகுவதும் ஒன்றும் அதிசயமில்லை.அல்லது அவற்றை மறைப்பதற்கு எந்த அவசியமுமில்லை!

 

மக்களின் உரிமைகளைச் சொல்லிப் போரிட்ட தருணங்கள் யாவும் இன்றைய போருள் கிஞ்சித்தும் கிடையாது.புலிக்களுக்கு இயக்த்தைக் காக்கவேண்டியதும்,அதற்காக உயிர்ப்பலி கொடுக்க வேண்டியதுமான போராட்டச் செல்நெறி உருவாகியதன் பின்பு அதன் இலக்குத் தவறி போராட்டச் செல் நெறி தொடர் தோல்விகளையும் அளப் பெரிய களப் பலிகளையும் அவர்கள் தரப்புக்கு நாளும் தந்தவண்ணமுள்ளது வன்னிப் போராட்ட நிலைவரம்.என்றபோது இயக்த்தின் இருப்பு-தலைமையைக் காத்தலெனும் இருமுனை நோக்குகளுக்காகப் போராளிகள் தினமும் செத்த வண்ணமுள்ளார்கள்.இது,சாரம்சத்தில் மிகவும் பிழையானவொரு அரசியல் தந்திரத்தால் வந்த வினை.இன்றுள்ள பொருளாதாரக் காரணிகளையும் அதன் வர்க்கத் தளத்தையும் சரியாக மதிப்பிடத்தவறிய புலிகள் தமது அரசியலை வெறும் பேரம் பேசல் எனும் செல்வியூகத்தில் நடந்தேற்றிய நிலையில் இன்று பரிதாபகரமாக அழிக்கப்படுகிறார்கள்.

வன்னியின் பெரும் பகுதியை இராணுவம் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது.இன்றைய நிலவரப்படி பரந்தன் வீழ்ந்த கையோடு இரணைமடுவும் வீழ்ந்து புலிகளின் அனைத்துப் போராட்ட ஜந்திரத்துக்குமான வழங்கற்பாதைகளையும் மூடி,அவர்களை மேலும் இலகுவாகத் தோற்கடிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது சிங்களப்படை.இது புலிகளால் திட்டமிட்ட அனைத்து வியூகங்களையும் பொய்யாக்கி அவர்களைத் தோல்வியின் விளிம்பில் நிறுத்தியுள்ளது.இங்கே,போராளிகளைக் காப்பதற்கான அனைத்துப் பாதைகளும் தடுக்கப்பட்ட கையோடு போர் காத்திரமாகச் சிங்கள இராணுவத்தால் முன்னெடுக்கப்படுகிறது.இதன் அனைத்துப் பாதகமான பக்கங்களும் தமிழ்பேசும் மக்களின் அடிமை வாழ்வை மேலும் உறுதியாக்கி, அவர்களை இலங்கையின் மூன்றாந்தரமான குடிகளாக்கப் போகிறது.இதை வடக்குக் கிழக்கில் நேரடியாக அனுபவிக்கும் தமிழ்மக்கள் இன்று இப் பெரும் போரைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் அளவுக்கு இலங்கையின் கள நிலைமைகள் இருப்பதால்,புலிகள் தொடர்ந்து போராடிப் போராளிகளை இழப்பதைத் தவிர வெற்றி அவர்களுக்கு அமைவது கடினமாகவே இருக்கிறது.


இதனால், இந்தத் தமிழ்ச் சமுதாயத்தின் இருப்பை அசைத்துவிட முனையும் சிங்கள இனவாத அரசியலிலிருந்து, தமிழ் பேசும் மக்கள் விடுதலையடைதலென்பது மீளவும் பகற்கனவாகிறது.இன்றைய இலங்கையின் போர் அரசியல் நடவடிக்கைகளும்,புலிகளின் தடுப்புத் தாக்குதல்களும் தமிழ்பேசும் மக்களைக் காவுகொள்ளும் தந்திரத்தோடு நகர்கிறது.புலிகள் தமது இயக்க நலனுக்கான போரை முன்னெடுக்கும்போது சிங்கள அரசோ தமிழ் மக்களுக்கான ஜனநாயகத்தைக் கோரும் போராட்டத்தைத் தனது நலனோடு சேர்த்துத் தந்திர மாகப் புலிகளை-தமிழர்களை வென்று வருகிறது!இதற்கான சகல வழிகளிலும் தமிழ் மக்களுக்குள்ளிருக்கும் மாற்றுச் சக்திகளின் அனைத்து வளங்களையும் இலங்கை-இந்திய அரசியல் பயன் படுத்தி வருகிறது.


தமிழ் மக்களுக்குள் இருக்கும் இத்தகைய சக்திகளைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் தேசிய விடுதலையைச் சாதிக்க வக்கற்ற புலிகளால் சகல குறுங்குழுச் சக்திகளும் புலிகளுக்கு எதிரான சக்திகளாக மாற்றப்பட்டுள்ளார்கள்.தமது இனத்துக்குள் ஜனநாயகப் பண்பை மறுக்கும் புலிகளால் இத்தகைய நேச சக்திகள் அன்னியமாகிப் போகிறார்கள்.புலிகள் தமது இருப்பை இத்தகைய சக்திகள் அசைத்துவிடுமெனக் கருதுவதுகூட பாசிச முனைப்பின் நோய்க்கூறுதான்.இதனால் இலங்கை அரசின் அரச பயங்கரவாதமானது தமிழ் மக்களை நோக்கியல்ல மாறாகப் புலிப் பயங்கர வாதத்துக்கு எதிரானதாகச் சித்தரிக்கும் நிலைக்கு இலங்கை தயாராகிறது.இன்று புலிப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனும் போர்வையில் தமிழ்பேசும் மக்களின் தலைகளில் கொட்டப்படும் குண்டுகளை எவரும் மனித விரோதமாகப் பார்க்கவில்லை.மாறாகப் புலிப் பயங்கரவாதிகளைக் கொல்லும் குண்டாக உலகம் காணுவதன் தொடராக எவரும் எமது மக்களின் அழிவையும் பொருட்படுத்தாது, தமது நலன்களை இலங்கையில் தூக்கிப்பிடித்து,புலிப்பயங்கரவாதத்தைத் தோறு;கடிக்கிறதாகச் சொல்லி வன்னியில் சிக்கிய அப்பாவி மக்களை அழிக்கின்றார்கள்.


இலங்கை அரசோடு முன்னமே தமது பதவி நலனுக்காகச் சோரம் போன தமிழ்க் குழுக்கள் இன்றைக்குப் புலிகளின் பயங்கரவாத முனைப்பைச் சரியாகப் பயன்படுத்துவதால் அந்த இராஜதந்திரத்துக்குப் பலியாவது உண்மையான மாற்றுச் சக்திகளே.இவர்கள் புலிகளின் ஜனநாயக விரோதத்தை முதன்மைப்படுத்தும் நிலைக்குப் புலிகளின் நடவடிக்கைகள் தலைகால் தெரியாது தாண்டவமாடுவதால் எமது நிரந்தர எதிரியான ஆளும் சிங்களச் சியோனிச அரசு தமிழரின் முதன்மையான எதிரியெனும் நிலையை இழந்து தற்காலிகமாகத் தன்னை மறைக்கின்றது.இதனால் மாற்றுச் சக்திகள் புலிகளை வீழ்த்துவதே முதன்மையான பணியாகச் செயற்படும்போது இது இந்திய-இலங்கை அரசுகளின் நீண்ட நாள் திட்டத்தை வலுவாக்கிவிடுகிறது.அதாவது,சோனியா அம்மையாரின் "நீயா"படப் பழிக்குப் பழி இன்று புலியைப் பூண்டோடு துடைத்தெறியப் போகிறது.இங்கே,அழிவது அப்பாவி மக்களின் குழந்தைகள்தாம்!இவர்கள் குறித்து எந்தப் பயங்கரவாத அகராதி என்ன தீர்ப்புச் சொல்லும்?தேசத்தைக் காப்பதற்காகக் களமாடும் இளைஞர்களைப் பயங்கர வாதிகளாக்கிய பெருமை புலித் தலைமைக்கே சாரும்!

 

 

அப்பாவி மக்களைத் தமிழ்பேசும் மக்களென்ற ஒரே காரணத்துக்காக முன்றாம்தர மக்களாக அடக்கியொடுக்கிய இலங்கைச் சிங்கள அரசோ இன்று எமது மக்களின் ஜனநாயவுரிமைக்காகப் போராடுவதாக உலக அரங்கில் பரப்புரை செய்கிறது.இதன் உச்சக்கட்டமாகப் புலிகளின் ஜனநாயக மறுப்பும்,ஏகப்பிரதிநிதித்துவக் கொள்கையும் இவர்களின் கோசமாகவும்,போராட்டத்துக்கு ஏற்ற கோசமாகவும் மாறுகிறது.இதன் செயற்பாடானது தமிழ்மக்களின் நேச சக்திகளை(மாற்றுக் கருத்தாளர்கள்,மாற்று இனங்கள்) இன்னும் அன்னியப்படுத்தி இலங்கையின் அரச விய+கத்துள் வீழ்த்தித் தமிழர்களின் உரிமைகளுக்கு எதிரான தளத்தில் அவர்களை நிறுத்துகிறது.இத்தகைய சூழலைத் திட்டமிட்டு ஏற்படுத்திய இலங்கையின் அரச தந்திரமானது மிக நேர்த்தியாகத் தமிழரின் அரசியல் வாழ்வைப் படுகுழியில் தள்ளித் தமிழ்பேசும் மக்களை மீள முடியாத அரசியல் வறுமைக்குள் இட்டுள்ளது.புலிகளின் அழிவோடு தமிழ்பேசும் மக்களுக்குச் சோற்றுப் பார்சலை வழங்கிப் பெரும் புரட்சிகரமான விடுதலையை மக்கள் பெறுவதற்குத் துணை நிற்கிறது இந்தியா!ஆரம்பத்தில் பற்பல குழுக்களை உருவாக்கி இலட்சம் மக்களைக் கொல்லத் தூண்டிய இந்திய அயலுறுவுக் கொள்கை, இன்று தமிழ்பேசும் மக்களை வெறும் கையாலாகாத இனமாக்கி விடுகிற அதே தளத்தில் இலங்கையின் மற்றைய சிறுபான்மை இனங்களான முஸ்லீம் மற்றும் மலையக மக்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தி உளவியல் அச்சத்தைச் செய்கிறது.இதை ஜனநாயக விரோதமான செயலாகவே நாம் பார்க்கிறோம்!


இந்த இராஜ தந்திமானது தமிழ்பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் நிர்மூலமாக்கும் பாரிய அழிப்பு அரசியலை முன்னெடுப்பதாக இருக்கிறது.இதன் உள்ளார்ந்த நடவடிக்கையாக ஜனநாயகத் தற்கொலை இலங்கையில் நடந்தேறுகிறது. இதைப் புலியின்பெயரால் செய்யக்கூடிய நிலையில் இலங்கை அரசியல் உள்ளது.இலங்கையின் இராணுவமானது தவிர்க்க முடியாத அனைத்துக் குடிசார் உரிமைகளையும் தனது நேரடியான கண்காணிப்பின்கீழ் கொணர்ந்து, மக்கள் மத்தியில் தீர்க்கமானவொரு அடக்குமுறைய நிரந்திரமாக விதைத்து பாசிசமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதை நேரடியாக உணர்வதாக இருந்தால் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய கண்காட்சி நிகழ்வுகளே சாட்சியாகும்.இது,எமக்குப் பாகிஸ்த்தான் பாணி அரசியலைக் கண்முன்னே கொணர்கிறது.இது,இலங்கைக்கு மட்டுமல்ல இனி இலங்கைபோன்ற தேசிய இனவிடுதலைப் போராட்டம் நிறைவுபெறாத நாடுகள் அனைத்துக்கும் இதுவே வாழ்வாகப்போகிறது.


இது, புலிகளின் அரசியல் திறமையற்ற போருக்கும்,பாசிச நடவடிக்கைகளுக்கும் கிடைத்த பாரிய அரசியல் பின்னடைவு.இந்தப் பின்னடைவுக்குப் பின்பான காலம் அதாவது,புலிகளின் அழிவுக்குப் பின்பான காலம் தமிழ்பேசும் மக்களின் குறைந்த பட்ச ஜனநாயகக் கோரிக்கைகளுக்காக அரசியல் செய்யும் தலைமைகளை வலுவிழக்கவைக்கும்போது நமது உண்மையான சுயநிர்ணயக் கோரிக்கை,அதன் வாயிலான அரசியல் வாழ்வு கானல் நீராகப் போவதுதான் உண்மை.இதனால் வெளி நாடுகளிலுள்ள புலிகளுக்கு எதுவித நட்டமுமில்லை.அவர்கள் தம்மிடம் ஒதுங்கிய பாரிய சொத்துக்களை முதலீடு செய்து தப்பித்துக் கொள்வார்கள்,ஆனால் தமிழினத்தின் அரசியல் வாழ்வானது அதே இனவொடுக்குமுறை அரசியலாகவே இலங்கையரசால் முன்னெடுக்கப்பட்டு, இந்த மக்கள் காணாமற்போவார்கள்.


இலட்சம் மக்களை உயிர்ப்பலிகொண்டவொரு ஈழப்போராட்டம் இறுதியில் அந்த மக்களைப் பூண்டோடு அழித்து,அரசியல் அநாதைகளாக்கிச் சென்றுவிடப்போகிறது! பணத்தைச் சுருட்டி வைத்திருக்கும் வெளிநாட்டுப் புலிகளுக்குப் புலித் தலைமை அழிந்து இலங்கையில் போர் முடிவுக்கு வருவது மிகவும் அவசியமானது.கையிலிருக்கும் பெருந்தொகை பணத்தை அங்கே,மூலதனமாக இடுவதற்கு அவசியாமான புலி அழிப்பு ஒரு வகையில் இவர்களும் எதிர்பார்ப்பதே.


ப.வி.ஸ்ரீரங்கன்
01.01.2009