"புது வருஷம்"

உயிர் உதிரும் உடலும் உணர்வுந்துறந் தொதுங்குங்
களத்தில் புதிதாய்ப் புலம்ப வருக புத்தாண்டே, வருக!
தாயும் சேயும் வான்படைக் குண்டாற் சிதையுமொரு தெருவில்
வன்னி விடுவிப்புக் கொடும் போர் துரத்தக்

கொடுங் கோன் முறை அரசு செய் மகிந்தா தமிழாய் உதிர்க்க

 

 

தமிழர் இல்லமும் வீழ்ந்தது
இரத்தமும் கொட்டியது
சிதறிய அன்னை விழியில்
ஈக்கள் மொய்த்தன ஒன்றாய்ப் பத்தாய்

இடியாய் நீ கொட்டிய குண்டுகள்

மக்களுக்கானது அல்ல என்பாய்
பயங்கர வாதத்துக்கு எதிர் எனும்
பம்மாத்து இலங்கைத் தேசியத்துள்
என்னைக் கரைக்க முனைகையில்
ஆத்தையின் பிணத்தில் அடுப்பெரித்து

அன்னம் புசிக்க -நீ
அரிசிப் பருக்கை இட்டு யாழ்ப்பாணத்தில்
வடக்கும் தெற்கும் ஒன்றாய்ப் புணர்ந்ததை
ஒப்புக்குரைத்து கிழக்கின் வசந்தம் மீட்டுகிறாய்
ஒத்துக் கொள்கிறேன், வடக்கும் தெற்கும் பிணைந்தே கிடக்கட்டும்!

அதுவே வரலாறு முழுதும் சாத்தியமுங்கூட-இஃது
சரியானதுங்கூடத் தலைவரே!இலங்கைத் தேசத்தின்
ஒப்பாரும் மிக்காருமற்ற தேசியத் தலைவரே-நீ
ஐ.நா.வில் மட்டுமல்ல யாழ்பாணத்துக்கும் தமிழில்
உனது அரசியலை மொழி பெயர்க்கிறாய் வான்படை வழி

தேசத்தின் மொழிகள் இரண்டையும் தெரிந்திருக்கும் தலைவர்
மதிக்கத் தக்கவரே!, மாண்புடையவரே!!என்றபோதும்
காரணமே இல்லாது களத்தில் மட்டுமல்ல
பன்னைப் பாயிலும் கொல்லப்படுவோரைப் பயங்கரவாதிகள் என்கிறாயே?
அடுக்குமா? பிணத்துள் பால் குறித்து ஆய்தலும்

எதிர்ப்பால் வினைபுரிதலுக்குச் சோடிசத்தின் சுகம்
அனுபவித்துக் களிகொள் மனதொடு
தேசத்தின் மகத்துவஞ் சொல்லும் நீங்கள்
தேசத்தைப் புணர்ந்தவருள் அடக்கமில்லையா?
கொண்டையுள் மலர் திணித்திருப்பவர்கள்

யோனியில் சன்னம் புதைத்துக்
காட்சிக்குக் காட்சிப் புணர்வுயர் நெகிழ்ச்சியில்
புண்ணாக்காக்ப்படும் பிணம்கூடப் பால்வினைப் பயனுள்
 

புத்தன் தேசத்துக்கு மகிமை சேர்க்க்கலாம்
ஆத்தையின் சேலையையுருவி உன்னிடந்தந்து

இலங்கைத் தேசியத்துள் பிணைந்து புணர
எமக்கொன்றும் உன் இராணுவத்தின் அரிப்பு இல்லை-அது
இல்லவே இல்லை!கோவணத்தைக் குடையும்
உன் கூட்டத்தின் பசிக்குப் பண்ணைகளைத் திறந்துவிடு
தெற்குள் திரண்டகொங்கைக்குக் கோவணங்கட்டி

புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும்
மரணங்களும் அப்படியே எமக்கு-எனினும்
புணரும் தருணம் பிணமென்ன
பெண்ணென்ன பேரின்பம் வதைத்தலில் வந்து போகும்-என்
தேசத்துப் புத்தர்களுக்கு இனியும்!!!


ப.வி.ஸ்ரீரங்கன்
31.12.2008