சென்னையில் ஒரு தொழிற்பேட்டையில் உள்ள 30 பேர் வேலை செய்யும் அந்த சிறிய தொழிற்சாலையின் நிர்வாகியை வேலை நிமித்தம் சந்திக்க சென்றிருந்தேன். அங்கே ஒரு தொழிலாளி அவரிடம் மன்றாடிக்கொண்டிருந்தார். 



“திடீரென வேலையை விட்டு நிற்க சொன்னால் எப்படி சார்? வெளியில பல கம்பெனிகளில்ல லே-ஆப் விட்டுட்டாங்க! எங்கே போய் வேலை தேடுவேன்?” 

“நம்ப கம்பெனி நிலைமை உனக்கே தெரியும். இரண்டு மாசமா சம்பளத்தை ரெண்டா பிரிச்சு தர்றாங்க! நீயாவது இந்த மாசம் சம்பளம் வாங்கிட்ட! எனக்கு இன்னும் தரவேயில்ல! வர்ற மாசம் இன்னும் மோசமாகும். அதனால் தான் இப்பவே சொல்றேன்” 

“எதுக்கு என்னை நிப்பாட்டிறீங்க! வேலை அதிகமா இருந்தப்ப நீங்க எப்பவெல்லாம் ஓவர் டைம் பார்க்க சொன்னப்ப எல்லாம் தட்டாம பார்த்தேன். இப்ப போக சொன்ன எப்படி சார்?” 

“இது உனக்கு மட்டுமல்ல! ஏற்கனவே வேலை இல்லாம 7 பேரை அனுப்பியாச்சு. அடுத்த மாசம் என்னையே போக சொல்லக்கூட வாய்ப்பு இருக்கு! இதுக்கு மேலே நான் ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல!” 

அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல், கண்கலங்கி நின்றிருந்தார்.

 
***

 

இந்த காட்சி, மார்க்சிய ஆசான்கள் சொன்னதை நினைவுப்படுத்தியது. 
1600-h/marx_engels.jpg"> 
“ஆளும் வர்க்கத்தின் நலனுக்குத் தேவைப்படும் வரை மட்டுமே தொழிலாளிக்கு வாழ அனுமதி உண்டு என்ற இந்த இழிவான தன்மையைத்தான் நாங்கள் அழித்திட விரும்புகிறோம்” 

- மார்க்ஸ், எங்கெல்ஸ் – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. பக். 67 -1847ம் ஆண்டு. 
*** 

இந்தியாவில் உலகளாவிய பொருளாதார சரிவினால் பாதிப்பு இந்தியாவிற்கு கொஞ்சம் தாமதமாக தெரியும் என்றார்கள். நன்றாகவே தெரிய தொடங்கிவிட்டது. இப்பொழுதே பல நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்திக்கொண்டேயிருக்கின்றன. அமெரிக்காவில் வேலை இழந்தவர்களின் எண்ண்க்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. தொட்டிருக்கிறது. நம் நாட்டில் ஏற்கன்வே வேலையில்லா திண்டாட்டம் நிறைய. இப்பொழுது பல கோடிகளாக நிலை மோசமடைந்திருக்கிறது. 

வாகன தொழில் 

அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ் தொடங்கி, இந்தியாவில் டாடா மோட்டார்ஸ், 


ஹீண்டாய், அசோக் லேலேண்ட் நிறுவனங்கள் தயாரித்த வாகனங்கள் விற்காமல் செட்டிலேயே தூங்குவதால் மாதத்தில் பாதி நாள் தான் இயங்குகின்றன. 

அரசு கலால் வரியை 4% குறைத்து இருக்கிறது. எல்லா கார் நிறுவனங்களும் விலையிலிருந்து 20 
ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை குறைத்து இருக்கின்றன. இருந்தும் விற்பனையில் பெரிய முன்னேற்றமில்லை. 

இதை நம்பிக்கொண்டிருந்த பல நூறு சிறு தொழிலகங்கள் இயங்க முடியாமல் மூடப்பட்டு விட்டன. அப்படியே சில வேலைகள் செய்தாலும், வேலை தருகிற நிறுவனங்கள் முன்பெல்லாம் 1 மாதத்தில் பணம் தருவார்கள். இப்பொழுது 3 மாதங்கள் ஆகும். இந்த நிபந்தனையில் செய்வதானால் செய். இல்லையென்றால் விடு என்கிறார்களாம். 

மென்பொருள் துறை 

உலக வங்கிக்கான பணிகளை சத்யம் கம்யூட்டர்ஸ் செய்துவந்தது. கடந்த வாரம், தனது பணிகளை உடனே நிறுத்த சொல்லியும், மேலும் 8 ஆண்டுகளுக்கு தடைசெய்திருக்கிறது. டேட்டா பேஸ் திருடு போனதாய் குற்றசாட்டும் சொல்லியிருக்கிறது. இதனால் சத்யம் கலகலத்துப் போயிருக்கிறது. 

யாஹீ சர்வதேச அளவில் 10% வேலை நீக்கமும், இந்தியாவில் 3% வேலை நீக்கமும் செய்திருக்கிறது. 

இப்படி மென்பொருள் துறையில் தினமும் பலரை வீட்டுக்கு அனுப்பி வைத்துகொண்டிருக்கிறார்கள். பல கண்ணீர் கதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. 

இது தவிர வேலையில் இருப்பவர்களுக்கு... போக்குவரத்து வசதிகளை குறைப்பது, கட்டாய விடுப்பு, போனஸ் குறைப்பு, விடுப்பு சரண்டர் கிடையாது என சலுகைகளை வெட்டுகிறார்களாம். சில நிறுவனங்கள் உணவுக்கு கூட சம்பளத்தில் பிடித்துகொள்கிறார்களாம். 

எல்லா ஊழியர்களும் திட்ட மேலாளர் (Project leader), குழு மேலாளர் (Team Leader) மனம் கோணாமல் நடந்துகொள்கிறார்களாம். 

இது தவிர, செயற்கை வைர பட்டை தீட்டலில் தொழில் பாதிப்பில் 1 லட்சம் பேர் வரை வேலை இழந்திருக்கிறார்கள். 

இப்படி எல்லா துறைகளிலும் வேலை நீக்கப் பட்டியல் நீள்கிறது. 

பாரளுமன்றத்தில் வேலை இழப்பு பற்றி ஒரு கேள்வி பதிலில் கடந்த ஆகஸ்ட்- அக்டோபர் வரை மட்டும் 65500 பேர் வேலை இழந்திருக்கிறார்கள் என தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர்கள் எல்லாம் புள்ளிவிவரத்தை தான் அறிவிக்கிறார்கள். இதற்கான மாற்றுத்திட்டம் என்ன என்பதெல்லாம் அவர்கள் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு வேறு முக்கிய அலுவல்கள் இருக்கிறது. 

இந்த மோசமான நிலைக்கு யார் காரணம்? 

நிதிமூலதன கும்பல்களும், இதை ஆட்டி வைத்த முதலாளிகளும், பங்குச்சந்தை சூதாடிகளும், இதற்கு வழிவகுத்த முதலாளித்துவ அரசுகள் தான் காரணம். தாராளமயம், தனியார்மயம், உலகமய கொள்கைகள் தான் காரணம்
. 



20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிதிமூலதனம் பற்றி லெனின் ஆய்ந்து சொல்லியிருக்கிறார். 

நிதிமூலதனத்தின் வேர் முதலாளித்துவத்தின் உபரி உற்பத்தியில் இருந்து தான் எழுகிறது. சமூக உற்பத்தியில் எழும் மூலதனம், உபரி உற்பத்தியால் மீண்டும் மூலதனம் போட வழி இல்லாமல் நிலை உருவாகுகிற பொழுது, மூலதனத்தை பெருக்குவதற்காக மூலதனம் நிதி மூலதனமாக உருவெடுக்கிறது. 

மீண்டும் மீண்டும் இப்படி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எழும் பொருளாதார நெருக்கடி சமூகத்தை அநாகரிக நிலைக்கு தள்ளிவிடுகிறது. கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும், முதலாளித்துவம் பல இலட்சகணக்கான உழைக்கும் மக்களின் உயிர்களை கொன்று குவிக்கிறது. 

முதலாளித்துவம் என்றைக்கோ வரலாற்று அரங்கில் காலாவதியாகிவிட்டது. இன்றைக்கு முதலாளித்துவம் அதன் தலையில் தொடங்கி வால்வரை அழுகி நாறி போய்விட்டது. அதற்கு ஒரு பாடைகட்டி புதைகுழியில் தள்ளும் வேலை மட்டும் பாட்டாளிகள் செய்ய வேண்டும். 

அதற்கு தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அறிவுஜீவிகள், தேசிய முதலாளிகள் என அனனவரும் ஒரு புரட்சிகர கட்சியில் ஒன்றிணைந்து வேலை செய்வது தான் முதன்மையானது. 


பின்குறிப்பு : இந்த மோசமான நிலைமையில் சந்தோசப்படுகிற ஒரே நபர் மின்சார துறை 
அமைச்சர் ஆற்காடு வீராசாமி தான். தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை மே 2009ல் தரப் போவதாக அறிவித்திருக்கிறார். 

அவரால் பிப்ரவர் 1ந் தேதி முதலே தடையில்லா மின்சாரம் தந்துவிடமுடியும். எப்படி சாத்தியம் என்கிறீர்களா? 

தொழில்கள் முடங்கி, தமிழ்நாட்டில் பாதி சுடுகாடாய் மாறும் பொழுது, எதற்கு மின்சாரம் தேவைப்படும்?