மகிந்த சிந்தனையும் பிரபாயிசமும், மனிதத் தன்மையற்ற கெடுபிடியான இரக்கமற்ற ஒரு மக்கள் விரோத யுத்தத்தையே நடத்திவருகின்றது. இதில் சிக்கி தவிக்கும் மக்களையிட்டு எந்த அக்கறையற்ற சுயநலமே, இன்று எங்கும் புரையோடிக்கிடக்கின்றது. இதனால் பாதிக்கப்படும் மக்களையி;ட்ட எமது அக்கறை தான், இதை செய்பவர்கள் இவர்கள் மேலான எமது கடும் விமர்சனமாக மாறுகின்றது.
இதனால் எமக்கு மகிந்த சிந்தனை மேலும், பிரபாயிசம் மேலும் எந்தவிதமான கருசனையும் அக்கறையும் கிடையாது. அதுவோ வெறுக்கத்தக்கது. வெந்த புண் மேல் வேல் பாய்ச்சும் வகையில், வரண்டு போன பாசிசத்தால் வக்கிரமடைந்து கிடக்கின்றது.
இதுவோ, மக்கள் மேல் ஈவிரக்கமற்ற வகையில் இயங்குகின்றது. மற்றவன் அழிவில், தான் வாழ நினைக்கின்றது. இது குறுகிய தன்னல நோக்கம் கொண்டது. அப்பாவி தமிழ் மக்கள் மேல், பலாத்காரமாகவே இந்த யுத்தம் திணிக்கப்பட்டுள்ளது. இந்த யுத்தம் ஏன், எதற்கு என்று தெரியாது, மக்கள் அதில் பலியாகின்றனர்.
தப்பிச் செல்ல முனையும் முயல்கள் போல், மக்கள் அங்குமிங்கும் நெளிந்தோட முனைகின்றனர். அவர்கள் அனுபவிப்பதோ சொல்லொணாத் துயரங்கள். தம் குழந்தைகளை புலியென்று கொன்று போடும் பேரினவாத பாசிசத்தின் முன் மண்டியிடும் மக்கள் ஒருபுறம், மறுபுறத்தில் தம் குழந்தைகளை புலிகளிடம் பறிகொடுத்துவிட்டு விரட்டப்படும் நாயைப் போல் மக்கள் கல்லெறி வாங்குகின்றனர்.
இப்படி அங்குமிங்கும் எண்ணற்ற ஆயிரம் விதமான துயரங்கள். கண்ணீரே வற்றி வரண்டு போய்விடுமளவுக்கு, மக்கள் அழுது தீர்க்கின்றனர்.
தமிழ் மக்களின் வாழ்வோ, துயரங்களின் வாழ்வாகி விடுகின்றது. வாழ்வின் அனைத்து துயரங்களையும் தமிழ் இனம் அனுபவிக்கின்றது. கைக் குழந்தையைக் கூடத் தாலாட்டி பாலூட்ட முடியாத மனித அழிவுக்கான மனித விரோதிகளின் யுத்தத்தில், தமிழ் இனம் சிக்கி அழுதே அழிகின்றது.
இந்த மக்கள் விரோத யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளின் அழிவோ, அவர்களின் கண்ணெதிரேயே துரிதமாகி வருகின்றது. இந்த நிலைமையில் இருந்து புலிகள் தாம் தப்பிப் பிழைக்க ஒருபுறமும், புலியை அழித்தொழிக்கவும் முனையும் அரசும் மறுபுறமுமாய், இப்படி இருதரப்பும் தமிழ் இனம் மேல் தம் கடுமையான ஈவிரக்கமற்ற கெடுபிடியான நெருக்கடிகளை திணித்து அவர்களின் கழுத்தை இறுக்குகின்றனர்.
தமிழ்மக்கள் மூச்சுவிட முடியாத வண்ணம், அங்குமிங்குமாக குடிகொண்டுள்ள பாசிசம் படமெடுத்தாடுகின்றது. மக்களோ, இந்த மக்கள் விரோத யுத்த சூழலைவிட்டு வெளியேற விரும்புகின்றனர். தம் வாழ்க்கையையே நாசமாக்கும், இந்த யுத்தத்தை வெறுத்தொகுக்கி தப்பி செல்வது தான் வாழ்வின் மீதான நம்பிக்கையாக கொண்டு, அதற்காக அவர்கள் போராட முனைகின்றனர்.
எந்த வழிகாட்டலுமற்ற மக்களின் சுய போராட்டம்
இன்று இதுவோ வெளிப்படையாக அரங்கேறுகின்றது. வாழ்வதற்கான போராட்டமாக மாறுகின்றது. புலியை மீறி, சொந்த முடிவை எடுக்கின்ற துணிவு, இன்று அதிகரித்து வருகின்றது. இவை அனைத்தும் மக்கள் விரோத யுத்த கெடுபிடிகளையொட்டி அரங்கேறுகின்றது.
புலிகள் சொல்வதே தேவவாக்கு என்று கண்ணை மூடிக்கொண்டு திணித்த பாசிச காலம், மலையேறிவிட்டது. புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று நம்பிய காலம் தகர்ந்து வருகின்றது. தமழ்மக்களின் சூரிய கடவுளாக பிரபாகரனைக் காட்டிய விம்பம் நொருங்கி உடைகின்றது.
தம் வாழ்வை சுற்றிய நிகழ்வுகளில் இருந்தே, மக்கள் இதைத் தகர்த்தெறிவது அன்றாட செய்தியாகின்றது. மக்கள் புலிகளின் பாசிச கெடுபிடிகளை எல்லாம் மீறி, அவர்களை மிஞ்சி தப்பியோடத் தொடங்கியுள்ளனர். அன்றாடம் புலிகளின் திறந்தவெளிச் சிறைக்கூடத்தில் இருந்து தப்பி வரும் மக்கள் ஒருபுறம், இதை விட 10 மடங்கு தப்பிவரும் வழியில் புலிகளினால் கைப்பற்றப்பட்டு வதைக்கப்படுகின்றனர் என்ற உண்மை எம்மை அதிர வைக்கின்றது. எம் உற்றார் உறவினர்களின், வாழ்வின் கதியிது.
மக்கள் புலிகளிடமிருந்து தப்பி வருவதும், இதனால் அதிகரித்த கெடுபிடியை மீறி மக்கள் வாழ்வுக்காக தாமே போராடுவது உயர்நிலை அடைந்துள்ளது. புலிகளின் விருப்பையும், நோக்கையும் மீறி, அவர்கள் அடக்கியாள கையாளும் அதிகார வடிவத்தையும் மீறி, தம் வாழ்வுக்கான மக்களின் சொந்த போராட்டம் அவலங்கள் நிறைந்ததாகவே அமைகின்றது. உயிர் இழப்புகள் முதல் மயிர் கூச்செறியும் அனுபவங்கள் ஈறாய் புலிகளிடமிருந்து தப்பியோடும் முயங்சிகள் அமைகின்றது.
மக்களின் சுயாதீனமான முடிவுகள், சுதந்திரமான சிந்தனையாகி வருகின்றது. இப்படியான மீறல்கள், புலிக்கு எதிரான மக்களின் செயல் சார்ந்த ஆரம்பப் படிநிலைதான்.
இதை விடுத்து டக்கிளஸ்சின் படுகொலை அரசியலை ஆணையில் வைத்து வடக்கு மக்களை ஊர்வலம் விடுவதும், இதே போல் கருணா - பிள்ளையான் கிழக்கில் மக்களை கூட்டுவது எல்லாம், மக்கள் போராட்டமாகாது. இவை புலிகளிடம் கற்று, மக்களை கூட்டுவதற்கு கையாளும் பாசிச வழிகள். இவை எவையும் மக்கள் போராட்டமல்ல. கூட்டத்தைக் கூட்டுவதும், உணவுப் பாசலை வாங்கி தின்பதும் மக்கள் போராட்டமாகாது. இதன் பின் மக்களை அச்சுறுத்தும் படுகொலை அரசியல் முதல் கண்காணிப்பு வடிவங்கள் வரை கையாண்டு, மக்களை அவர்களின் சொந்த விருப்பின்றி மறைமுகமாக மிரட்டி அடிபணிய வைக்கும் வன்முறை மூலம் திரட்டுவது நடந்தேறுகின்றது.
இதற்கு மாறானது மக்கள் தப்பியோடுவது. அது அவர்களின் சொந்த சுயாதீனமான முடிவு சார்ந்தது. மக்கள் தம் சொந்த வாழ்வுக்கான போராட்டத்தை அடிப்படையாக கொண்டு, அவர்கள் அதை தமக்காகவே செய்கின்றனர்.
இது மக்கள் மத்தியில் மட்டும் நிகழவில்லை. புலிகளினுள், இது மேலும் துல்லியமாக வெளிப்படுகின்றது. புலிகளின் அடிப்படை விதியையே, புலிகள் இன்று மீறுகின்றனர். புலிகள் சரணடைவதும், அவர்கள் கைது ஆவதும் எதைக் காட்டுகின்றது. சயனைட் உண்டு மரணிக்க மறுப்பதன் மூலம், தம் வாழ்வுக்காக அவர்கள் தாம் சிந்திப்பதை வெளிப்படுத்துகின்றது. இது புலிகளின் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும், சறுக்கலைக் காட்டுகின்றது. தாம் எதற்காக ஏன் போராட வேண்டும், எதற்காக ஏன் சாகவேண்டும் என்ற சுய கேள்விகள், இன்று சரணடைவாகவும் மரணமற்ற கைதுகளாகவும் மாறுகின்றது. புலி உறுப்பினர்கள் சுயாதீனமாக சிந்திக்கவும், செயலாற்றவும், தமக்காகவும் வாழவும் தொடங்கியுள்ளனர்.
புலிகள் தலைமையின் தேர்வு சண்டையிட்டு மரணி அல்லது தற்கொலை செய் என்கின்றது. இந்தப் போதனையை புலி உறுப்பினர்கள் மீறத் தொடங்கியுள்ளனர். இது இன்று வெளிப்படையாக, வெளிவரத் தொடங்கியுள்ளது.
மக்களும் இந்த நிலையைத் தேர்ந்தெடுத்திருப்பது, தம் வாழ்வுக்கான அடையாளம் காணுதலாகும்;. இதன் பின் எந்த சி;த்தாந்தமும் கிடையாது. தனிமனிதன் தன் வாழ்வின் எல்லையில், இதைத் தவிர வேறுவழியில் எதை தேர்ந்தெடுக்கவும் முடியாது. இதன் தொகுப்பும், அனுபவமும் தான், மக்கள் திரள் போராட்டத்தின் முன் நிபந்தனையாகும். இது கடந்த 25 வருடத்தின் பின் நடக்கின்ற, முக்கியமான பண்பு மாற்றமாகும்.
பி.இரயாகரன்
27.12.2008