Language Selection

உயிரியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேனீக்கள் தேன் கூட்டில் கூட்டமாக(சமூதாயமாக) வாழும்.இந்த தேன் கூடு வேளைக்கார தேனீயிடமிருந்து உருவாகும் மெழுகால் கட்டப்படும்.இது (தேன் வதை) இலேசானதும், அறுகோண வடிவமுடைய பல அறைகளாலானது.இவ் அறுகோண அமைப்பு மிகவும் உறுதியானது.இதனாலே தான் ஆகாய விமானங்களில் தேன்வதை போன்ற அமைப்பில் தயாரிக்கப்பட்ட அலுமினிய வலைச்சட்டகம் ஆகாய விமான உடலின் தகடுகளுக்கிடையில் இடப்பட்டுள்ளது.இதனால் ஆகாய விமானங்கள் உறுதியாகவும் இலேசானதாகவும் வெப்பத்தைத் தாங்கக்கூடியதாகவும் உள்ளது.

தேன் வதை தேனீகளின் வசிப்பிடமாக இருப்பதோடு களஞ்சியமாகவும் காணப்படுகின்றது.இங்கு சேமிக்கப்படும் தேன் அவற்றிக்கு உணவாக அமைவதோடு தேன் கூட்டைக் குளிர் நேரதில் வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகின்றது.

இந்த தேன்கூட்டை பாதுகாப்பதற்கு என சில வேலைக்கார தேனீக்கள் தேன்கூட்டின் மேல் பகுதியில் நியமிக்கப்பட்டிருக்கும்.இவை பிற பூச்சிகளை கூட்டினுள் செல்ல அனுமதிப்பதில்லை.இந்த தேனீக்கள் தங்களது சொந்த உயிரை பணயமாக வைத்தே பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றன.வேலைக்கார தேனீக்கள் தமது ஆயுதமாக கொட்டக் கூடிய கொடுக்கை பயன்படுத்தும். ஆனால் ஒரு முறை கொட்டியதன் பின்னர் திரும்ப வளருவதில்லை.(இராணித் தேனீக்கு கொட்டக் கூடிய கொடுக்குகள் மீண்டும் மீண்டும் வளரக்கூடியதாகும்,அதே நேரம் ஆண் தேனீக்கு கொடுக்கு காணப்படாது.)தேன்கூட்டின் பாதுகாப்பு பணியை வேலைக்கார தேனீக்கள் சுழற்சி முறையில் மாறி மாறி செய்கின்றன.தேன்கூட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் உழைக்காமல் உண்ணும் ஆண் தேனீக்கள் வெளியேற்றப்படும்!

வேலைக்கார தேனீயால் துரத்தப்படும் ஆண்தேனீ ஒன்று

வேலைக்கார தேனீக்களால் பூக்களிலிருந்து அமுதம்(Nector) என்னும் பதார்த்தம் உறிஞ்சப்படுகின்றது.இது தேனீக்களில் இரைப்பையில் பதப்படுத்தப்படுகின்றது.பின் அவை தேன் அடையில் சேமிக்கப்படுகிறது.இதில் நீர் அதிகளவும்,இயற்கையான மதுவங்களும் காணப்படும்.இதனால் தேன் நொதிப்பிற்கு உட்படும்.அதேவேளை தேன் அடை திறந்திருப்பதால் இதிலுள்ள நீர் ஆவியாகத் தொடங்கும்.இதனால் நீர்கொள்ளளவு குறைந்து தேன் செறிவடையும்.ஒரு நிலையில் தேன் நொதிப்பிற்கு போதிய நீரின்மையால் நொதிப்பு தடைப்படும்.இந்த நொதிப்புச் செயற்பாட்டை சரியான இடத்தில் நிறுத்த நீர் ஆவியாதல் உதவுகிறது.தொடர்ந்து நொதிப்பு நடைபெறும் பட்சத்தில் வெல்லங்கள் அற்ககோலாகிவிடும்.இவ்வாறு ஒரு வேலைக்கார தேனீயால் தனது வாழ் நாளில் 45 கிராம் தேனைச் சேகரிக்க முடியும்.ஒரு முழுமையான நல்ல ஆரோக்கியமான கூட்டில் 15 முதல் 23 கிலோ வரை தேன் காணப்படும்.

 

வேலைக்கார தேனீக்கள் (பாகம் III)

 

பூக்களில் மகரந்தசேர்க்கைக்கு பெரிதும் உதவி செய்பவை வேலைக்கார தேனீக்கள் ஆகும்.இராணியைக் கவனிப்பது,முட்டையிலிருந்து வெளியேறும் குடம்பிகளை பாதுகாப்பது,அவற்றிற்கு உணவு கொடுப்பது,சுத்தப்படுத்துவது மற்றும் உணவு தேடுதல் என அனைத்து செயற்பாடுகளும் இந்த வேலைக்கார தேனீக்களால் மேற் கொள்ளப்படுகின்றன.
வேலைக்கார தேனீக்களின் கடமைகளில் ஒன்றான உணவுத் தேடலுக்கு தூர இடங்கள் செல்ல வேண்டி உள்ளது.தேனீக்கள் நிமிடத்திற்கு 11,400 முறை சிறகடிக்கின்றது.இவற்றால் மணிக்கு 15 மைல் என்னும் வேகத்தில் பறக்க முடியும்.தேனீக்கள் ஒரு பவுண்டு தேன் சேகரித்துக் கொண்டுவர ஒரு தேனீ சுமார் 45 000 மைல் தூரம் அலைந்து உழைக்க வேண்டும்.ஒரு கிலோ தேனைச் சேகரிக்க 40 இலட்சம் பூக்களிலிருந்து அமுதம்(Nector) என்னும் பதார்த்தம் உறிஞ்சி எடுக்கின்றன(!).இவ்வாறு ஒரு தேனீ தேன் இருக்குமிடத்தை கண்டு பிடித்துவிட்டால் மற்ற தேனீகளுக்கு உடல் அசைவின் மூலம் தெரிவிக்கின்றது.இந்த அசைவுகளே தேனீக்களின் நடனம் என்றழைக்கப்படுகிறது.

தேனீக்களை பற்றி பல ஆண்டுகள் ஆய்வு நடத்திய பிரெஞ்சு விஞ்ஞானி வான் பிரிச்(von frisch) தேனீக்களின் நடனம் பற்றி இவ்வாறு கூறுகிறார்.தேனீக்கள் உடல் அசைவுகளின் மூலம் தகவல் பரிமற்றம் செய்கின்றன.வேவு பார்க்கும் தேனீக்கள் பூந்தோட்டத்திற்குச் சென்று தேனை பருகியபின் தன் கூட்டருகே சென்று மற்ற தேனீக்களுக்கு நடனத்தின் மூலம் தகவலை தெரியப்படுத்தும்.இந்த நடனம் மூலம் உணவு இருக்குமிடம்,திசை,தூரம் என்பவற்றை தெரிவிக்கின்றன.தேனீக்கள் இரண்டு விதமாக நடனமாடுகின்றன.உணவு 300 அடி தூரத்திற்குள்ளே எனின் வட்ட நடனத்தையும்,300 அடி தூரத்திற்கு வெளியே எனின் வாலாட்டும் நடனத்தையும் ஆடுகின்றன.நடனத்தின் நெளிவு ,விரைவு மாறுபடுவதன் மூலம் உணவு இருக்கும் திசையை காட்டுகின்றது.இதனை புரிந்து கொண்ட மற்ற தேனீக்கள் அவ்விடத்தை நோக்கி படையேடுக்கும்.

தொடரும்...

 

இராணியின் ஆட்சி (பாகம் II )

 

தேனீ கூட்டமாக வாழ்பவை.பலமான, ஆரோக்கியமான கூட்டத்தில் ஒரு இராணித்தேனீ ,சில ஆண் தேனீகள் மற்றும் சும்மார் 50 000 தொடக்கம் 60 000 வரையான வேலைக்கார தேனீகள் வாழும்.இராணித் தேனீயே அக்கூட்டத்தில் பெரிய தோற்றத்தைக் கொண்டிருக்கும்.இராணித்தேனீ இல்லாவிடின் அக்கூட்டமே கட்டுப்போக்கான சேர்ந்து வாழும் பண்புகளை இழக்கின்றன.இராணித்தேனீ இலிங்க முதிர்ச்சி பெற்ற தேனீ ஆகும்.இதன் தொழில் இனவிருத்தி மட்டுமே.இங்கு முக்கிய விடயம் இராணித் தேனீயை உருவாக்கும் சக்தி வேலைக்கார தேனீயிடமே உண்டு.

ஒரு கூட்டில் ஒரு இராணித் தேனீ மட்டுமே இருக்கும்.ஆகவே இராணித்தேனீ முதுமையானதன் பின் அல்லது தேனீகளின் எண்ணிக்கை கூடி தேன் கூடு பெரிதடைந்து விடின் வேலைக்கார தேனீகள் தங்களுக்கான புதிய இராணியை (தலைமையை)உருவாக்கும்.இந்த இராணித்தேனீ உருவாவது பிரத்தியேகமான அறையிலாகும்.இந்த அறை மற்ற அறைகளை விட அளவில் பெரியதாகவும் நிலைக்குத்தாகவும் அமைந்திருக்கும்.வேலைக்கார தேனீக்களின் தலையில் அமைந்துள்ள சுரப்பியொன்றிலிருந்து சுரக்கப்படும் Royal Jelly (அரச உணவு)எனப்படும் பதார்த்தத்தை தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட குடம்பிக்கு உண்பதற்கு வழங்கி அந்த குடம்பியை இராணித்தேனீயாக உருவாக்குகின்றன.
இந்த இராணித்தேனீ அதன் அறையிலிருந்து வெளியேறி பறக்கத் தொடங்கும்போதே ஆண் தேனீயுடன் சேர்க்கைக்குட்படும்.இதன் போது தனது வாழ்க்கைக் காலத்திற்கு தேவையான விந்துக்களை சேர்த்துக்கொண்டு அறைக்குத் திரும்பும்.இராணித்தேனீ ஒரு நாளைக்கு 2 000 முட்டைகளை இடக்கூடியது.இராணித்தேனீ கருக்கட்டப்பட்ட,கருக்கட்டப்படாத முட்டைகள் இரண்டையும் இடும்.அதில் கருக்கட்டப்படாத முட்டையிலிருந்து 24 நாட்களுக்குப் பின் ஆண் தேனீயும்,கருக்கட்டப்பட்ட முட்டையில் இருந்து 21 நாட்களுக்குப் பின் வேலைக்கார தேனீயும் உருவகின்றது.முட்டையில் இருந்து 16 நாட்களுக்குப்பின் உருவாகுவது இராணித்தேனீ ஆகும்.

ஆண் தேனீக்களின் கண்கள் இராணி,மற்றும் வேலைக்கார தேனீக்களின் கண்களை விட இரு மடங்கு பெரியதாகும்.இதன் உடல் வேலைக்கார தேனீக்களின் உடலை விடவும் பெரியது.ஆண் தேனீக்களின் ஆயுள் காலம் 90 நாட்கள் ஆகும்.வேலைக்கார தேனீக்கள் இலிங்க முதிர்ச்சியற்றவை.வேலைக்கார தேனீக்களின் வாழ்நாள் 28 முதல் 35 நாட்கள் ஆகும்.இராணித்தேனீ இரண்டு வருடங்களுக்கு மேல் உயிர் வாழும்.

தொடரும்...

 

தேனீக்கள் (பாகம் I )

 

சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப் படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் விளங்குபவை தேனீக்கள் ஆகும்.தேனீக்கள் ஏப்பிடே ( Apoidea) குடும்பதைச் சேர்ந்த ஒர் பூச்சி வகை ஆகும்.உலகின் அந்தாட்டிக்கா கண்டத்தைத் தவிர எல்லாப் பகுதிகளிலும் வாழும் இந்த தேனீக்கள், ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன.உலகில் கண்டு எடுக்கப்பட்ட தேனீக்களின் உயிர்ச் சுவடுகளில் ஒன்று,தேனீக்கள் உலகில் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்வதை உறுதி செய்கின்றது.

தேனீகளுக்கு இரண்டு சோடி சிறகுகளும் முன்று சோடி கால்களும் உண்டு.முன் கால்கள் பின் கால்களை விட சிறிதாகும்.இதன் தலையில் அதிக உணர்திறன் மிக்க உணர் கொம்பு காணப்படும்.தேனீயின் வாயுறுப்பு பூக்களிலிருந்து தேனை உறிஞ்சுவதற்கு ஏதுவாக நீண்டு தும்பிக்கை போலிருக்கும்.

தேனீக்களில் மிகச்சிறியது Trigona minima என்னும் தேனீ ஆகும்.இது 21mm நீளம் உடையது.

இந்துனோசியாவில் 1859 ஆம் ஆண்டு முதன் முதலில் Alfred Russel Wallace என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பெண் Megachile pluto தேனீயே உலகின் மிகப்பெரிய தேனீ ஆகும்.இத்தேனீ இனத்தில் பெண் தேனீ 39mm வரையும் ஆண் தேனீ 23mm வரையும் வளரும்.இத்தேனீ இனம் பற்றி பல வருடமாக எந்த தகவலும் இல்லாத நிலையில் இத்தேனீ இனம் அழிவடைந்திருக்கும் என கருத்ப்பட்டது.ஆனால் 120 வருடங்களுக்குப் பின் அதாவது 1981 இல் அமெரிக்காவைச் சேர்ந்த Adam Messer என்பவரால் மீளவும் மிக அரிதாக சில Megachile pluto தேனீக்களும் இதன் ஆறு கூடுகளும் இந்துனோசியாவில் உள்ள இரண்டு தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடரும்..