Language Selection

மக்கள் விரோத யுத்தத்தால் தமிழ் மக்களோ சொல்லொணாத் துயரங்களையும் துன்பங்ளையும் அனுபவிக்கின்றனர். இவை அவர்களின் தனிப்பட்ட பிரச்சனையா? இதற்காக கவலைப்படுவதோ, தேச விரோதமாக இன்று சித்தரிக்கப்படுகின்றது.

சமூகத்தின் பங்களிப்பு மறுக்கப்பட்டு, அவை தனிநபர்களின் சொந்த பிரச்சனையாக்கப்படுகின்றது. இந்த மனித அவலங்களுக்கு காரணம் யார்? மக்களா! சொல்லுங்கள்;. ஓருபுறம் அரசு என்றால் மறுபுறம் புலிகள். இதை இல்லையென்று, சொல்ல உங்களால் முடியுமா?

 

இப்படியிருக்க இவர்கள் காரணமில்லை என்று எப்படித்தான் கூறமுடிகின்றது. அதையும் ஒரு பக்கச்சார்பாக சொல்ல முடிகின்றது. எப்படித்தான் உங்களால் இவற்றை திரித்து பிரச்சாரம் செய்யமுடிகின்றது. இதன் மேலான உங்களின் அக்கறை, நேர்மை, உண்மை, மனிதப் பண்பு எல்லாம் போலியானது என்பதும், அவை போக்கிலித்தனமானது என்பதும் உண்மையாகின்றது. 

 

மக்கள் மேலான உங்கள் கரிசனை என்பது, உங்களின் குறுகிய பிரச்சார தேவைக்கானதாக இருப்பது வெளிப்படையாகின்றது. உங்கள் மக்கள் விரோத யுத்தத்துக்கு, இவை தேவையானதாக இருப்பதும் அம்பலமாகின்றது. இது மக்களின் துயரங்களையும் துன்பங்களையும் தம் பங்குக்கு போக்குவதில்லை. இவை அவர்களது மக்கள் விரோத யுத்தத்தை நியாயப்படுத்த உதவும் சமன்பாடுகள் தான். இதற்கு வெளியில் மக்களின் உண்மையான துன்பத்தை, யாரும் கண்டு கொள்வது கிடையாது. 

 

சமூகம் மீது உண்மையில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால், எதிரியைக் கை நீட்டி குற்றம்சாட்ட முன்னர் தம் பக்கத் தவறுகளை திருத்தச் சொல்லுவான். இதை யார் தான் நேர்மையாக செய்கின்றனர். சொல்லுங்கள்;. இரண்டு பக்கத்தினதும் எதிர்மறையான மனிதவிரோத கூறுகள், கணிதத்தில் வருவது போல் சமன் செய்யப்படுகின்றது. ஓருவரை ஓருவர் குற்றஞ்சாட்டி, தம் சொந்த மனித விரோத செயல்களை மூடிமறைக்கவே முனைகின்றனர்.   

 

தமிழ்மக்களின் மேலான பேரினவாதக் கெடுபிடி ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடுவதாக கூறும் புலிகள், தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கூட அனுமதிப்பது கிடையாது. மக்களை எதிரியாக அணுகி, அவர்களின் உரிமைகளைப் பறித்துவிட்ட புலிகள், படுகொலை அரசியல் மூலம் மக்களையே மிரட்டி அடிபணிய வைத்துள்ளனர். பின் இந்த மக்களுக்காக தாம் போராடுவதாக கூறுவதும், இந்த மக்களுக்கு எதிரான பேரினவாத ஒடுக்கமுறையை மனிதவுரிமை மீறலாக சித்தரிப்பதும், மக்களையே கேலி செய்வதுதான். மக்கள் மேல் தாம் ஒடுக்குமுறையை செய்தபடி, மற்றவனின் ஒடுக்குமுறைபற்றி பிதற்றுவது அர்த்தமற்றது.

 

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான உறவு என்பது, படுகொலையின் எல்லைக்குள் அஞ்சி நடுங்கும் வண்ணம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வெளியில், தமிழ்மக்கள் புலிகளின் பின் எந்த அரசியல் உணர்வுடனும் நிற்பதில்லை. இந்த எல்லைக்குள், ஒரு சமூகத்தின் மொத்த அவலம் அலையலையாக உள்ளது.

 

அதிகாரமும், அது உரையாடும் மொழியும், அணுகும் பண்பாடும் என அனைத்தும், இதற்கு உட்பட்டதுதான். இதை பாதுகாக்கும் பிரச்சாரங்கள், புனைவுச் செய்திகள் முதல் ஊடகச் சுதந்திரம் வரை, தமிழ் மக்களின் எதார்த்ததைப் பேச மறுப்பதில் தான் அவைகளின் சுதந்திரம் அடங்கியுள்ளது. இந்த எல்லைக்குள் தான், புலிப்பாசிசம் தமிழ் சமூகம் மீதேறி தன் சிம்மாசனத்தை நிறுவியுள்ளது. கொடூரமும் கொடுமையும் கொண்ட அதிகாரம் மூலம், தமிழ் மக்களை வதக்கியெடுக்கின்றனர். 

 

தமிழ் மக்கள் அனுவிக்கின்ற துயரங்கள், அவர்களின் தனிப்பட்ட பிரச்சனையாகிவிடுகின்றது. எதார்த்தத்தில் பாசிசம் இதை கண்டு கொள்ளமறுத்து விட்ட நிலையில், இவை தனிப்பட்ட விடையங்;களாகி விடுகின்றது. அவன் அவன் எப்படி அழுத புரண்டாலும், சமூகம் அதற்காக போராட மறுப்பதுதான் போராட்டமாகிவிட்டது.

 

உதாரணமாக இந்த மக்கள் விரோத யுத்தம், தன் படுகொலைகள் மூலம் வடக்கு கிழக்கில் மட்டும் அண்ணளவாக ஒரு லட்சம் பெண்களை விதவையாக்கியுள்ளது. வடக்கு கிழக்கு மண்ணில் எஞ்சி வாழும் தமிழ்மக்களில் 10 முதல் 15 சதவீதமான பெண்கள், பெண்களில் 20 முதல் 30 சதவீதமான பெண்கள் இன்று விதவைகளாக வாழ்கின்றனர். இந்த சமூகம், இந்த மானுடம், இந்த தேசியம், அவர்களுக்கு என்ன தீர்வை வழங்கியுள்ளது. சொல்லுங்கள். இதை வழங்கத்தான் அனுமதிக்கின்றதா!? சொல்லுங்கள். 

 

துயரங்களுக்கு எம் சமூகத்தால் ஆறுதல் கூறவும், அவர்களுக்கு ஓரு புதிய வாழ்வை வழிகாட்டவும் கூட முடிவதில்லை. சமூக வழிகாட்டல் என்பது பாசிசத்துக்கு எதிரானது என்பதால், இதை புலிப் பாசிசம் அனுமதிப்பதில்லை. இந்த விதவைகள் எந்த வருமானமுமின்றி தவிப்பும், தம் குழந்தைகளை பராமரிக்க முடியாது திண்டாடும் வாழ்க்கை, இளமையுடன் கூடிய பாலியல் தேவையை விதவைக்கு மறுக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பில் உளவியல் கோளாறும், ஆணாதிக்க காம பார்வைக்குள் அல்லலுறும் பெண்மை என்று, எத்தனை எத்தனை கொடூரங்கள் கொடுமைகள். யுத்தமும், இதை முன்னெடுக்கும் பாசிச சமூக வக்கிரமும், இந்த துயரத்தைப் போக்குவதில்லை. மாறாக அதை ஆறாக பெருக வைக்கின்றது.

 

இதை நாம் கண்டு கொள்வதே துரோகமாக்கப்படுகின்றது. மக்கள் விரோத யுத்த வெறியர்களால் பலாத்காரமாக விதவையாக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை சுற்றிள்ள இந்த சோகம், துன்பம் என்று எதையும், மனிதமும் கண்டு கொள்வது துரோகமாக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் தான் இன்று துன்பங்கள் துயரங்களின் பின்னுள்ள உண்மைகள் உள்ளது. 

 

இப்படி எம் மண்ணில் மக்கள் படுகின்ற ஆயிரம் விதமான வாழ்வியல் அவலங்கள், அதுவே வாழ்வாக பெருக்கெடுக்கின்றது. இதை மக்கள் அனுபவிப்பது தான் தேசியம் என்கின்றனர். இதை இனம் கண்டு போராடாது, மக்கள் எந்த விடுதலையையும் அடையமுடியாது.  

 

பி.இரயாகரன்
23.12.2008