"என் வீட்டு பச்சைக்கிளி, நான் வளர்த்த அன்னக்கிளி"

 

இந்தப் பதிவிற்குப் பொருத்தமாக என்ன நிகழ்வைச் சொல்லலாம் என எண்ணியபடியே இன்றைய வெள்ளிக்கிழமைப் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 

இந்த நாட்டில் வெள்ளிக்கிழமை சினிமாப் பிரியர்களுக்குக் கொண்டாட்டமான ஒரு நாள்! 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு புதுப்படங்கள் வெளியாகும். 

பத்திரிக்கைகளுக்கும் இதன் விமரிசனத்தை எழுத ஒரு 4, 5, பக்கங்களுக்குத் தீனி கிடைத்துவிடும்.

 

ஆம்! இங்கு படம் வந்த அன்றே அத்தனைக்கும் விமரிசனம் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் வெளியாகிவிடும். 

பார்க்க விரும்பவர்களுக்கு வசதியாக! 

அப்படி என் கண்ணில் பட்ட படக்கதைதான் இப்போது நான் சொல்லப் போவது! 

 

படத்தின் பெயர் 'ஃப்லிக்கா'.[FLICKA].

கதையின் மையக் கருத்து சுருக்கமாகச் சில வரிகளில்!

 

" கேட்[Kate] என்னும் பருவத்தால் குழப்பமடைந்த [ஹரிஹரன் சொல்லாக்கப்படி, "ஹார்மோன்களின் தாக்கத்தால் சுருதி குலைந்த ஹார்மோனியம்"!!] ஒரு பருவப்பெண், பெற்றோர்கள் சொல்படி நடப்பதா, இல்லை தன் எண்ணக்கனவுகளின் படி நடப்பதா என்று ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறார். 

தற்செயலாக ஒரு காட்டுக் குதிரை [Wild horse] பக்கத்துக் காடுகளில் இருந்து இவருக்குக் கிடைக்கிறது.

அதை தங்களது பண்ணைக்குக்[Ranch] கொண்டு வந்து, கண்டிப்புக்குப் பெயர் போன தன் தந்தையின் எதிப்புக்கிடையே ஒரு பழகிய குதிரையாக்க[Trained horse] முடிவு செய்கிறார். 

 

தந்தையோ ஒரு ஊர் பேர் தெரியாத, ஜாதிக்குதிரையில்லாத, காட்டுக் குதிரை ஒன்று தன் கொட்டடியில் உயர் சாதிக் குதிரைகளுக்கிடையே வளர்ந்து அவற்றோடு கலந்து விடுமே என அஞ்சி, தீர்மானமாக மறுக்கிறார்!!

மேலும், காட்டுக் குதிரைகளைப் பழக்குவதும் கடினமான வேலை. 

 

இதை விட நிகழ்கால நமது நிகழ்வுகளுக்கு ஒரு சிறந்த உதாரணம் கொடுக்க முடியாது!

 

ஆனால் கேட்டோ,[Kate] இந்தக் குதிரையிடம் மனதைப் பறிகொடுத்து விடுகிறார்!

[கேட்ட, அடிக்கடி பார்த்த கதை மாதிரி இல்லை?] 

 

படிப்பு சரியாக வராத கேட்[Kate]டுக்கு அப்பாவிற்குப் பிறகு தானே இந்தப் பண்ணையை பராமரிக்க வேண்டும் என்ற ஆசை.

'நல்ல படிப்பு படித்துப் பெரிய ஆளாகணும், இதையெல்லாம் விட்டு' என்ற வேறு கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இவரது அண்ணனும் இதற்கு உடன்படுகிறார்............ 

இப்படிப் போகிறது கதை. 

குடும்பத்துடன் அனைவரும் சென்று காண வேன்டிய படம் என்று விமரிசகர் சிபாரிசு செய்கிறார்.

 

இதன் மையக் கருத்துதான் நமக்கு இங்கு வேண்டியது.

 

ஏழை, பணக்காரன், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, படித்தவர், படிக்காதவர் என்று எத்தனை எத்தனை வகைகளிலோ இந்த வயதில் ஒரு ஆர்வம் இவர்களுக்குள் பிறக்கும். 

 

சிறு வயது முதலே ஒரு புரிதலுடன் வளர்க்கப் பட்ட குழந்தைகளும், பெற்றோர்களும் இதைச் சற்று இயல்பாகக் கையாளுவார்கள்.

ஒன்று,.... இது போன்ற நிகழ்வுகள் நடக்கவே வாய்ப்பில்லை; பெற்றோர்களும், பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டிருந்தால், 

அல்லது, 

அதையும் மீறி இப்படி நடந்தாலும் இது அனேகமாக ஒப்புக் கொள்ளப் பட்டுவிடும். 

அதிக பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. 

 

நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது இப்படி இல்லாத வீடுகளைப் பற்றித்தான்!

 

இது பற்றி சில தகவல்களைப் போன பதிவில் பார்த்தோம். 

 

எவ்வளவோ கட்டுப்பாடு, கோபதாபம், கண்காணிப்பு, இவையெல்லாவற்றையும் மீறி, இவர்கள் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது!

 

என்ன செய்ய வேண்டும் பெற்றோர்கள்? 

 

உடனே எரிந்து விழுந்து, கோப வசபட்டு, வாக்குவாதம் முற்றிச் சண்டையில் இறங்கி, அசிங்கப்பட்டுப் போவதே வழக்கமாக நம் காண்பது.

 

அதை விடுத்து, இப்படிச் செய்ய முற்பட்டால், சில நன்மைகள் விளையலாம்.

 

" நீ இது போன்று உன் உடலை மதிக்காமல், உணர்ச்சிக்கு அடிமைப் பட்டு, இப்படி ஒரு செயலில் இறங்கியது எங்களுக்கு மிகவும் வருத்தமா இருக்கு. உன் வயதுக்கோ, அல்லது இப்போதிருக்கும் உடல் வாகுக்கோ இது சரியென்று எனக்குப் படவில்லை. 

ஆனால், முடிவெடுக்கும் உரிமை உன்னுடையது மட்டுமே. 

இதனால் விளையப் போகும் எந்த ஒரு விளைவுக்கும் நீயே பொறுப்பேத்துக்கணும் என்பதையும் மனசுல வெச்சுக்க. 

அதைத் தெளிவாத் தெரிஞ்சிகிட்டு மேற்கொண்டு நீ எந்த முடிவை வேணும்னாலும் எடு. 

18 - 19 வயசெல்லாம் இதற்கான வயசே இல்லை என்பதை மட்டும் நல்லாப் புரிஞ்சுக்கணும் நீ. 

இதுலேர்ந்து வெளியே வர்றதுக்கு என்ன வித உதவின்னாலும் நாங்க செய்யக் காத்துகிட்டு இருக்கோம். 

 

அதையும் மீறி, நீ இதுல தொடரப் போறேன்னா, கர்ப்பத்தடை சாதனங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்க நம்ம லேடி டாக்டரைப் பாக்கறதுக்கு நான் ஏற்பாடு செய்யறேன். 

 

ஆனா, அப்படி ஒரு முடிவு நீ எடுக்கப் போற பட்சத்துல, இங்கே வீட்டில உனக்கு சில சலுகைகள் கடுமையாக்கப் படும், குறைக்கப்படும் அப்படீங்கறதையும் நீ புரிஞ்சுக்கணும். 

டயத்துக்கு வீட்டுக்கு வர்றது, இன்னின்னாரோடதான் பழகணும், ஆம்பளைப் பசங்க வீட்டுக்கு வரக் கூடாது, அப்படீங்கற சில விஷயங்களை நீ ஏத்துக்கணும்."

 

என்பதைத் தீர்மானமாகச் சொல்லுதல் மிகவும் முக்கியம்.

 

இதையே ஒரு சில மாற்றங்களுடன் ஒரு ஆண் பிள்ளைக்கும் சொல்லணும்.

 

நம்ம ஊருல, ஆம்பளைன்னா எது வேணும்னாலும் செய்யலாம்னு ஒரு மனப்பான்மை இருக்கு. 

அது உங்க வீட்டுல வேண்டாமே! 

பெண்ணுக்கு என்ன நீதியோ, அதையே தயங்காமல் ஒரு ஆணுக்கும் செய்ய முற்படுங்கள்.

 

இதைப் பார்த்து ஆணுக்கு உங்களிடம் ஒரு பயம் வரும்.

அவன் தங்கைகளுக்கு ஒரு மரியாதை உங்கள் மேல் பிறக்கும்.

 

முறையற்ற உடலுறவினால், பலவித நோய்களும் வர வாய்ப்பிருக்கிறது என்பதை ஒரு மருத்துவர் மூலமாக இவர்களுக்குத் தெரியப் படுத்தல் மிக அவசியம்.

ஹெர்பிஸ்,[Herpes] கொனோரியா,[gonorrhea] பால் வினை நோய்,[Venereal Disease] HIV/AIDS போன்ற நோய்களுக்கு இதுவே[Sexual intercourse] அடிப்படை நுழைவாயில் [Gateway] என்பது, ஒரு விழிப்புணர்வை இவர்களிடம் ஏற்படுத்தும்.

 

இதைச் செய்வது உங்கள் கடமையும் கூட.

 

இத்துடன், சம்பந்தப்பட்ட பையன் அல்லது பெண்ணின் வீட்டாரோடு ஒரு தகவல் தொடர்பு, நேராகவோ அல்லது மிகவும் நம்பிக்கையான ஒரு நண்பர்/உறவினர் மூலமாகவோ ஏற்படுத்தி, இரு தரப்பையும் விழிப்புடன் இருக்கச் செய்வதும் ஒரு விதத்தில் நல்லதே!

 

ஆனால், இதில் பலவித சிக்கல்கள் இருக்கின்றன.

 

ஏதாவது ஒரு இடம் சற்று மோசமானவர்களாகவோ, அல்லது இந்த சமாதானத் தூதுவரே நாளை வில்லனாக மாறும் அபாயமோ இருக்கிறது!

 

நிலைமைக்கு, சூழ்நிலைக்குத் தக்கவாறு அனுசரித்து நடந்து கொள்ளவும்.

எல்லா இடங்களிலும் இது சரியாக வரும் என்று சொல்லிட முடியாது.

 

மனத்தில் இருத்திக் கொள்ளவேண்டிய ஒரு விஷயம் இது.

 

பதிவுக்குப் பதிவு சொல்லி வருவது போல, 

ஒரு நண்பனாய், 

தோழியாய், 

அக்கறை உள்ள ஆசானாய், 

அன்புள்ளம் கொண்ட தாய் - தந்தையாய் 

இருக்க வேண்டியது உங்கள் தலையாய பொறுப்பு.... நாளைய உலகில் இவர்கள் தலை நிமிர்ந்து வாழ.

 

 

சரி, உடலுறவு கர்ப்பத்தில் கொண்டு வந்து விட்டது!

 

இதை எப்படி எதிர் கொள்ளுவது ?? 

 

தீபாவளி எல்லாம் நல்லபடி முடித்து பட்டாஸெல்லாம் வெடித்துவிட்டு வாருங்கள் !

 

இந்தப் பட்டாஸை அப்புறம் கொளுத்தலாம்!

 

[அப்படியே இன்னொரு முக்கியமான விஷயம்! 

இது போல அனைவரும் மகிழ்ச்சியாகக் கூடியிருக்கும் நேரம் கூட, வாய்ப்பிருந்தால், உங்கள் வயதுக்கு வந்த பெண்ணோடு தனித்துப் பேச ஒரு சந்தர்ப்பம் உள்ள நேரம்தான்! 

முடிந்தால் கொஞ்சம் பேசிப் பாருங்களேன், ப்ளீஸ்!]

 

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html