07052022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

"பாலியல் கல்வி" - பெற்றோருக்கு [3]

கோவி கண்ணன் 'கோவி'ப்பதால், இனி நேரடியாக 'கல்வி' புகட்ட ஆரம்பிப்போம்!சரியா!

என்ன, எல்லாரும் சிலேட்டு, பலப்பம்லாம் எடுத்துகிட்டு வந்துட்டீங்கதானே!

 

'அடுத்தது, 3 வயதுக் குழந்தையின் பெற்றோர் அறிய வேண்டியது' எனப் போட்டவுடன் கோவியார் சிங்கையிலிருந்து தொலை பேசினார்!

"விட்டா எதை எழுதறதுன்னு ஒண்ணும் கிடையாதா?

மூணு வயசுக் குழந்தைக்கு என்னங்க தெரியும்?

அப்ப ஏங்க நாம கவலைப்படணும்?

அப்பவே போய் எதுனாச்சும் சொன்னோம்னா, தப்பா போயிறாதா?" என்று!

 

இது போன்ற 3 வயதுக் குழந்தையின் தாய் ஒருவர், ஒருமுறை என்னிடம் வந்து கேட்டார்கள், "டாக்டர்! என் பையன் என்னை விட்டு நகர மாட்டேன் என்கிறான்.

தனி ரூம், பெட் எல்லாம் போட்டு அவனைத் தூங்கச் செய்துவிட்டு வந்தாலும், ஒரு அரை மணி நேரத்தில் அங்கிருந்து எழுந்து என்னிடம் ஓடி வந்து கட்டிபிடித்துத் தூங்கினால்தான் அவனுக்கு நிம்மதி!

அதுக்கப்புறம் போகவே மாட்டான்!

எங்க பெட்லதான் மீதி ராத்திரி முழுவதும்!

இதனால், எனக்கும் என் கணவருக்குமிடையே பிரச்சினை வருகிறது!

நீ சரியாக வளர்ப்பதில்லை எனத் திட்டுகிறார். என்ன செய்வது?" என்று.

 

குழந்தைகள் வளரும் காலத்தில் பல நிகழ்வுகள்!

அவற்றை அப்படியே தேக்கி வைத்து மூளையின் ஒரு பகுதியில் போட்டு வைத்து சமயம் வரும் போது உபயோகப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு.

இன்று நாம் காட்டும் ஆசை, பாசம், அன்பு, கோபம், வெறுப்பு, விருப்பு, பொறாமை போன்ற பல்வேறு குணங்கள் ஏதோ திடீரென வருவதில்லை.

சிறுவயது முதலே, பார்த்து, உணர்ந்து, பழகிய நிகழ்வுகளின் விளைவே இவையெல்லாம்!

 

பிறக்கும் போதே அத்தனை மொட்டுக்களையும் வைத்துத்தான் பிறப்பிக்கிறோம்!

அந்தந்த நேரங்களில் அவை மலர்கின்றன!

[நம்ம பொன்ஸ் சொன்ன மாதிரி!]

 

சரி, ஒரு மூன்று வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும்?

 

அன்பின் அரவணைப்பு எப்படி இருக்கும் எனத் தெரியும்!

பால் குடித்த இடத்தின் சுவை தெரியும்!

பெண்ணென்றால் ரோஸ் நிறம்[pink]. ஆணென்றால், நீல நிறம்[blue] எனத் தெரியும்!

பொம்மை வைத்து விளையாடுவதா, இல்லை கார், ட்ரக் போன்ற விளையாட்டுப் பொருளா எனத் தெரியும்!

சொப்பு, டீ கோப்பைகளும், சமையலறை சாதனங்களும் வைத்து விளையாட பெண் குழந்தைகளுக்குத் தெரியும்!

கூடைப்பந்து, கிரிக்கட் போன்ற விளையாட்டுகள் ஆண் குழந்தைகளுக்குத் தெரியும்!

கூட இருக்கும் அண்ணனோ, தம்பியோ, தங்கையோ, தமக்கையோ ஒரே தொட்டியில் அமர்ந்து, குளித்து, நீரிறைத்து விளையாடும் போது ஆண், பெண் இருவருக்குமிடையே இருக்கும் உறுப்பு வேறுபாடுகள் தெரியும்.

தாய், வீட்டில் பார்த்துக் கொள்ள யாரும் இல்லையென்பதால், குழந்தையை முன்னே விட்டு, தான் குளிக்கும் போது,.... பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் இடையே உள்ள உருவ வேறுபாடுகள் தெரியும்!படுக்கையறையில் சில பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்த்து, ஒன்றும் புரியாமல், ஆனால் அதே நேரம் அதை நினைவின் ஒரு மூலையில் போட்டு வைக்கத் தெரியும்!

 

ஆச்சரியமாக இருக்கிறதா?

இதுதான் உண்மை!மருத்துவ வல்லுநர்கள், உளநிலை வித்தகர்கள் கண்டறிந்து சொல்லும் உண்மைகள்!

 

நான் சொன்னது பாலியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே!

இன்னும், அப்பா அம்மா சண்டை போடுவது, அடுத்த குழந்தை பிறந்தவுடன், தன்னை விட்டு, அதை கொஞ்சுவதைக் கவனிப்பது போன்ற நிகழ்வுகளைச் சொல்லப் போனால், பதிவின் நீளம் அதிகமாகி, நோக்கம் சுருங்கி விடும் அபாயம் இருப்பதால் சொல்லாமல் விடுகிறேன்!

 

மேற்சொன்னவைகளை வைத்து தவறாக எண்ண வேண்டாம்!

இவற்றின் தீவிரமும், பொருளும் புரியாத வயதுதான் இது!

ஆனால், மனதில் நிறுத்திக் கொள்ளப்படுபவை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!

 

இந்த வயதுக் குழந்தைகள் சாதாரணமாகக் கேட்கும் கேள்விதான் நான் பதிவின் தலைப்பாய்ச் சொன்னது!

 

"அம்மா! நான் எங்கேருந்து வந்தேன்?"

 

எப்போது இது வரும் என எதிர்பாராததால், எதை வைத்து இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது என்னும் உணர்வு இல்லாததால், பெரும்பாலான பெற்றோர்களின் பதில் இப்படித்தான் இருக்கும்!

 

"அதுவா கண்ணு! நீ சாமிகிட்டேர்ந்து வந்தே!"

"இதெல்லாம் உனக்கெதுக்கு இப்போ?"

"ஒரு பூதம் கொண்டு வந்து ஒரு நாளு உன்னைய இங்க போட்டுது!"

"ஏய்! குழந்தை கேக்குது! என்னா சொல்லப் போற?, நான் சொல்லட்டுமா?"போன்ற பொறுப்பற்ற பதில்களே!

 

மாறாக என்ன சொல்லலாம்?

 

" நீ என் வயித்துக்குள்ளே ஒரு ஸ்பெஷல் இடத்துல வளர்ந்தே! இதோ பாரு, அதோட வரிகள்!"

"நானும் அப்பாவும் நீ வேணுமின்னு சொல்லி உன்னிய இங்கு கொண்டாந்தோம்"

 

இது போன்ற தெளிவான, எளிமையான பதில்களால் குழந்தை அந்த வயதில் மேற்கொண்டு கேளாமல் திருப்தியடைந்துவிடும்!

உங்கள் மேல் இன்னும் பாசம் கொள்ளும்!

அது வளர, வளர, மேற்கொண்டு சொல்லிக்கலாம்!

 

பதிவு நீள்கிறது!

இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டும்!

அடுத்த பதிவில் தொடர்வோம், ........

 

அவர்கள் பாலியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது என்னென்ன இந்த வயதில்

 

http://kasadara.blogspot.com/2006_08_01_archive.html