தமிழ்மக்கள் இன்று எதை விரும்புகின்றனர்? இந்த யுத்தத்தையா? இந்த யுத்தத்தை ஆதரிப்பதையா? தற்காப்பு பெயரிலான மற்றொரு யுத்தத்தையா? அல்லது இவற்றில் இருந்து ஒரு விடுதலையையா? சொல்லுங்கள்! நெஞ்சில் துணிவிருந்தால், உங்களிடம் ஓரு துளி நேர்மை இருந்தால், அதைச் சொல்லுங்கள்.
தமிழ் மக்கள் விரும்புவதோ, யுத்தமற்ற சூழலில் வாழ்வதைத்தான். அது வன்னியிலா கொழும்பிலா என்பது கூட, அவர்களுக்குப் பிரச்சனையில்லை. ஏன் இந்த நிலைக்கு தமிழ் மக்கள் வந்து உள்ளனர்? ஏனென்றால், இந்த யுத்தம் எந்த உரிமைக்கான யுத்தமுமல்ல. தமிழரின் உரிமைக்கான யுத்தமுமல்ல, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைக்கான யுத்தமுமல்ல.
மாறாக இது மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம். அவர்களை அடக்கியொடுக்கி, யார் எப்படி ஏன் ஆள்வது என்ற முரண்பாட்டின் அடிப்படையில்; மக்கள் விரோதிகள் நடத்தும் யுத்தம். இவர்கள் யாரும், எந்த மக்கள் நலனில் இருந்தும் தாம் செயல்படுவதாக யாரும் நிறுவ முடியாது.
உணவைக் கொடுக்கவும், உணவை வாங்கித் தின்னவும், ஊர்வலம் விடுவதையும்;தான், இவர்கள் மக்கள் போராட்டம் என்கின்றனர். மக்களை அடக்கியொடுக்கி, அவர்களை நாய்களைப் போல் தமது கட்டுப்பாட்டில் அடிமையாக வைத்திருக்கும், தம் அதிகாரத்தைத்தான் இவர்கள் மக்களின் விடுதலை என்கின்றனர்.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இந்த யுத்தத்தில் அரசு வெற்றி பெற்றாலும் சரி, புலிகள் வெற்றி பெற்றாலும் சரி, அதில் அவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது. இதில் யார் வெற்றி பெற்றாலும், யார் தோற்றாலும் மக்கள் மேலான அடிமைத்தனமும் அடக்குமுறையும் ஒருநாளும் மாறாது.
மக்கள் வாழ்வின் மேலான இழப்புகள் தான், இவர்களின் வெற்றி தோல்வி விளையாட்டில் பணயப் பொருளாகியுள்ளது. மக்கள் தம் சுயவாழ்வின் அடிப்படைகளை எல்லாம் இழந்து, அடிமைகளாக இவர்களிடம் கையேந்தி நிற்கின்ற அவலம்.
இப்படி மக்களையிட்டு இரக்கம், மனிதாபிமானம் என எதுவுமற்ற காட்டுமிராண்டிகளின் யுத்தம் நடைபெறுகின்றது. மக்களுக்கு எந்த விடிவையும், விடுதலையையும் தராது, வாழ்வின் இழப்புகளையே தரும் யுத்தம். சிலரின் குறுகிய நலன் சார்ந்த யுத்தமாக, இது மாறிவிட்டது.
மக்கள் மேலான ஓடுக்குமுறையில் அனாதைகளாகவும், அடிமைகளாகவும் மாறி, வாழ்வதற்காக போராடுகின்றனர். எந்த மீட்பாருமின்றி, மக்கள் கையெடுத்து கும்பிடும் சோகம். மக்களின் சோகத்தை, அவர்களின் அவலத்தைக் கூட கேட்க நாதியற்றுப் போய்விட்ட ஒரு இனம். மக்களுக்கு இழைக்கின்ற குற்றங்களைக் கண்டிக்க கூட யாரும் இல்லையே என்ற சமூக ஏக்கம்.
இந்த அனாதை இனத்தின் மேல் சவாரி விடுகின்ற கூட்டங்கள் தான், அவர்களின் விடிவு பற்றி கொக்கரிக்கிறது. தமிழினத்தை தம் காலுக்கு கீழ் போட்டு மிதித்தபடி, தமிழினம் தம் பின்னால் நிற்பதாக பறைசாற்றும் பாசிச கோமாளித்தனமே, இன்று அதிகாரத்தின் மொழியாகின்றது.
இந்த தமிழ் சமூகத்தின் அறிவுத்துறை, மனித விரோத செயலுக்கு சலாம் போடும் கும்பலாக மாறி, நக்கி பிழைக்க முனைகின்றது. தமிழ் மக்களின் உரிமை பறிப்பு முதல் அவர்களை ஏமாற்றியும் மிரட்டியும் பறிக்கும் பணம் வரை, இந்தக் கும்பலின் சொகுசு வாழ்வுக்கு பயன்படுகின்றது.
இப்படி பேரினவாதத்தின் தயவில் அல்லது புலியின் தயவில் என்று கன்னை பிரித்து நிற்கும் அறிவுத்துறை, தம் அறிவின் பாசிசத்தரத்தை எண்ணி தம்மைத்தாம் மெச்சிக்கொள்கின்றனர்.
இப்படி மக்களுக்கு எதிராக இவர்கள் நடத்தும் அவலத்துக்கு, தீர்வாகவே புலியை ஆதரி அல்லது பேரினவாதத்தை ஆதரி என்கின்றனர். இப்படி இந்த கோசத்துக்குள், தமிழ் இனத்தின் மேலாகவே தூக்குக் கயிற்றைத் தொங்கவிட்டுள்ளனர்.
தமிழினத்தின் உண்மையான வாழ்வின் சோகத்தை, அதற்கு காரணங்களை இனம்காட்டி அவர்களின் விடிவிற்கு வழிகாட்ட யாரும் முன்வருவது கிடையாது. இதை முன் வைப்பது பைத்தியக்காரத்தனம் என்று சொல்லவும், அரசு அல்லது புலி ஆதரவு என்ற இதை முத்திரை குத்தி விடவும் தான் அறிவுலகம் முனைகின்றது.
இதன் பின்னணியில் இவர்கள் ஏதோ ஓரு வகையில் ஆதரிக்கும் மக்கள் விரோத யுத்தம், மனித கொடூரங்களையே விதைத்து விடுகின்றது. அனைத்து சமூக அடிப்படைகளையும், சமூக விழுமியங்களையும் உட்செரித்து அழித்துவிடுகின்றது. தமிழினம் சுயத்தை இழந்து, சுய சிந்தனையை இழந்து, அடிமைகளாகி நிற்பதா அவர்களின் விடுதலை!?
பி.இரயாகரன்
22.12.2008