05312023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

ஞாநியின் ‘தவிப்பு’ - நாவல் விமரிசனம்

“துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது” அரசியல் சித்தாந்தமல்ல

  • துப்பாக்கியால் ஞானஸ்நானம் பெற்றவர்களெல்லாம் போராளிகளா?
  • நீதியற்ற வழிமுறைகளைக் கோருகிற இலட்சியம் நீதியான இலட்சியமா?
  • உயிரைத் துறக்கும் போராளிக்கு நேர்மையைத் துறக்கும் உரிமை உண்டா?
  • -நாவல் விமரிசனத்தினூடாகப் பரிசீலிக்கப்படும் கேள்விகள் இவை.

     

     

ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்த ஞாநியின் (பத்திரிகையாளர்) ‘தவிப்பு’ எனும் நாவல் நூல் வடிவில் வெளிவந்துள்ளது.

இந்த நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் பேசிய ‘நந்தன்’ சிறப்பாசிரியர் சுப. வீரபாண்டியன், தனித்தமிழ்நாட்டிற்கான நியாயங்களை ஞாநி நேர்மையாக, தெளிவாகக் குறிப்பிட்டுள்ளாரென்றும், எனவே அந்த வகையில் உள்ளடக்கத்தில் தனக்கு முரண்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார்.

“பஞ்சாப், அசாம் மாநிலங்களில் நடந்த போராட்டங்களும் அவற்றை டெல்லி ஆட்சியாளர்கள் எதிர்கொண்ட விதமுமே இந்தக் கதைக்கு ஆதார நிகழ்ச்சிகள். அவற்றை தமிழ்ச் சூழலுக்குப் பொருந்துவதாக மாற்றி அமைத்துக் கற்பனை செய்திருக்கிறேன்” என்று தன் முன்னுரையில் கூறுகிறார் ஞாநி.

தனிநாடா - இல்லையா என்பது குறித்த அரசியல் விவாதம் நமது நூல் விமரிசனக் கட்டுரையின் வரம்புக்கு அப்பாற்பட்டது.

ஆனால், ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், தமிழ்நாட்டில் தற்போது பேசப்படும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் இருக்கின்ற தொப்புள் கொடி உறவை மறுக்கவியலாது.

இனி கதைக்கு வருவோம்.

இந்திய ஒருமைப்பாடு, அநீதிக்கெதிரான மிதவாத எதிர்ப்பு ஆகிய கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட, அரசியலெல்லாம் அதிகம் தெரிந்து கொள்ளாத தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான விஜயன்.

தனது சொந்த ஊரான செங்கல்பட்டில் பல இடங்களில் குண்டு வெடித்த செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைகிறான். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவனுக்கு உள்துறை அமைச்சகத்திலிருந்து அழைப்பு வருகிறது.

குண்டு வெடிப்பை நடத்திய தமிழ்நாடு விடுதலைப் புரட்சியாளர் குழு (தவிப்பு) என்கிற அமைப்பின் தலைமைக் குழுவினருடைய புகைப்படங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கோப்பினை விஜயனிடம் காட்டுகிறார் உளவுத்துறைத் தலைவர்.

விதவிதமான உயர்கல்வி கற்ற தமிழ் இளைஞர்களின் படங்களுக்கு நடுவே ஆனந்தி! அவனுடைய கல்லூரித் தோழி. நம்ப முடியாமல் அந்தப் புகைப்படத்தையே வெறித்துக் கொண்டிருந்த விஜயனிடம் “உங்களுக்கு இவளைத் தெரியுமா?” என்று கேட்கிறார் உளவுத்துறை அதிகாரி. “தெரியும்” என்கிறான் விஜயன். “அது எங்களுக்கும் தெரியும்” என்று பதில் வருகிறது.

மறுநாளே தவிப்பு குழுவினர் சென்னை தொலைக்காட்சி நிலைய இயக்குனரைக் கடத்தி விட்டனர் என்ற செய்தி வருகிறது. தவிப்பு குழுவினரைச் சந்தித்துப் பேசும் பொறுப்பு விஜயனிடம் ஒப்படைக்கப்படுகிறது. விஜயன் புறப்படுகிறான்.

ஆனந்தியின் புகைப்படத்தைப் பார்த்தது முதல் அவளை நேரில் சந்திக்கும் தருணம் வரை விஜயனின் சிந்தனையில் ஆனந்தியைப் பற்றிய பழைய நினைவுகள் கிளர்ந்தெழுகின்றன.

-விஜயனின் நினைவுகளினூடாக ஆனந்தியின் பாத்திரம் நாவலில் நிறுவப்படுகிறது.

ஆனந்தியை நேரில் சந்திக்கிறான் விஜயன். “நீ எப்படி இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாய்” என்று கேட்கிறான். எண்பதுகளில் போலீசால் கொலை செய்யப்பட்ட நக்சல்பாரி இயக்கத் தோழர் பாலனின் (நாவலில் இராஜன்) கதையைச் சொல்லி, “அதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை” என்று அப்போதுதான் தெளிந்ததாகச் சொல்கிறாள் ஆனந்தி.

தனித் தமிழ்நாடு கேட்பதற்கான நியாயங்கள் குறித்து ஆனந்தியும் அவளது தோழர்களும் வைத்த வாதங்கள் எதற்கும் விஜயனிடம் பதில் இல்லை. ஆனால் வன்முறை இதற்கு வழியல்ல என்ற கருத்து அவனிடம் ஓங்கி நிற்கிறது.

தவிப்பு குழுவினரின் கோரிக்கைகளில் சில அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதனடிப்படையில் நிலைய அதிகாரி விடுவிக்கப்படுகிறார்.

ஆனால் இந்தப் பேச்சு வார்த்தையினூடாக தவிப்பு குழுவினருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சன், தன்னைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறுகிறான். ‘எச்சரிக்கையாகப் பயன்படுத்துவது’ என்று முடிவு செய்கிறது தவிப்பு.

பணமும் ஆயுதங்களும் ஏற்பாடு செய்து தருகிறது உளவுத்துறை. குழுவினரிடன் குடிப் பழக்கமும் உல்லாசமும் பரவுகிறது. பணத்துக்காக போதை மருந்து கடத்தல் துவங்குகிறது.

ஆனந்தியும் சில தோழர்களும் எதிர்க்கின்றனர். பிறகு ஒரு நாள் சக தோழர்களாலேயே கொல்லப்படுகின்றனர்.

விஜயன் அழுகிறான். தன்னைப் போல தெளிவு பெற வாய்ப்பு இருந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்க்கிறவர்களாக மட்டுமே இருந்துவிட்டதனால்தான், டெல்லியில் அதிகாரத்தில் வந்து அமரும் யாரோ ஒருவனின் அயோக்கியத் தனத்துக்காக அன்பும் அறிவும் ததும்பும் இளைஞர்கள் பலியாக்கப்படுகிறார்கள். எனவே அரசியலில் ஈடுபடுவதென முடிவு செய்கிறான்.

செங்கல்பட்டில் இடைத் தேர்தலில் நிற்கும் மத்திய உள்துறை அமைச்சருக்கெதிராகப் போட்டியிட்டு வெல்கிறான்.

ஒரு அமைச்சன் தனது சொந்த அரசியல் லாபத்துக்காகப் போராளிக் குழுவொன்றைப் பகடைக் காயாக்கிக் கொண்டான் என்பதல்ல பஞ்சாப், அசாம், காஷ்மீர் பிரச்சினைகளின் அனுபவம். உறவாடி, ஊடுறுவி, கைக்கூலிகளை உருவாக்கிக் கெடுப்பது என்பது, ‘ஒருமைப்பாட்டையும்’, பிராந்திய மேலாதிக்கத்தையும் காப்பாற்ற இந்திய அரசு மேற்கொள்ளும் போர்த் தந்திரமாகவே உள்ளது.

அதேபோல ஆனந்தியுடனான விஜயனின் நட்பும், அவனிடம் தங்கிக் கிடக்கும் ஆனந்தியைப் பற்றிய நினைவுகளும், எட்டாண்டுப் பிரிவை நியாயப்படுத்துவனவாக இல்லை.

ஆனந்தியின் மரணத்தினால் குற்ற உணர்வுக்கு ஆளாகும் விஜயன், அதிகாரிகள் - அமைச்சர் - உளவுத்துறை ஆகிய அனைவரிடமும் நெருங்கியிருந்து சூடுபட்ட பின்னரும், நம்பிக்கையுடன் தேர்தலில் நிற்கிறான் - வெல்கிறான். இது வலிந்து ஒட்டவைக்கப்பட்ட முடிவாக இருக்கிறது.

-இவ்வாறு நாவலின் பாத்திரப் படைப்பு, கலைத் தன்மை, ஒத்திசைவு ஆகியவற்றை நாவலின் வரம்புக்குள்ளேயே நின்று விமரிசிக்கலாம்.

ஆனால் நாவலின் மையமான கதாபாத்திரங்களான போராளிகள், அவர்களது சிந்தனை, நடவடிக்கைகள், அவை எழுப்பும் கருத்தியல் ரீதியான வினாக்கள் ஆகியவற்றினூடாக ‘விடுதலை இயக்கம்’ என்பதைப் புரிந்து கொள்வது அதைவிட முக்கியமானது.

இதை ஒரு இயக்கத்தின் கதையாகச் சொன்னால், தியாக உள்ளம் கொண்ட படித்த இளைஞர் குழுவொன்று சிறிது வழி தவறியதால் அழிந்த கதை என்று சொல்லலாம்.

அல்லது ஆனந்தியின் கதையாகச் சொல்வதென்றால், கவிதை உள்ளமும் தலைமைப் பண்புகளும் கொண்ட ஒரு பெண், சக தோழர்களின் தவறுகளால் அநியாயமாகப் பலியான கதை என்று சொல்லலாம்.

“தொடர்கதை முடிவடைந்து பத்து மாதங்களுக்குப் பிறகும் எங்கேனும் சந்திக்கும் ஏதோ ஓர் வாசகர் ‘ஆனந்தி செத்துப் போயிருக்க வேண்டியது அவசியம்தானா?’ என்று கேட்டுக் கொண்டுதானிருக்கிறார். எனக்குள்ளும் அதே கேள்வி இருக்கிறது” - என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஞாநி.

கதை சொல்லப்பட்டிருக்கிற முறையிலும் சரி, வாசகர்கள் பழக்கப்பட்டிருக்கும் முறையிலும் சரி, இது ஆனந்தியின் கதைதான். எனவே ஆனந்திக்காக வாசகர்கள் வருந்துவதில் வியப்பில்லை.

“பலவீனமில்லாத இயக்கம் இருக்க முடியாது; போராளிகள் மடிந்தாலும் போராட்டம் தொடரும் என்று முடித்திருக்க வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் சுப. வீ.

தவிப்பு இயக்கத்தின் பலம் எது பலவீனம் எது? ஆனந்தி உயிர் பிழைத்திருந்தால் - ஆனந்த விகடன் வாசகர் அடையக்கூடிய மன ஆறுதலுக்கு மேல் - வேறென்ன நடந்திருக்கும்? தேர்தல் பாதையில் நம்பிக்கை கொண்ட விஜயனும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட ஆனந்தியும் உண்மையில் அரசியல் எதிர்த்துருவங்களா?

இந்தக் கேள்விகளுக்கு நாம் விடை காண முயல வேண்டும்.

“ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், நல்லெண்ணம் மிக்க சில முட்டாள்தனமான நம்பிக்கைகள் அறிஞர்களின் மூளைகளில் ‘தேவையான முறையில்’ தோன்றுகின்றன” என்றார் பிளக்கானவ்.

அத்தகைய அறிஞர்கள் ‘வீரர்களாகவும்’ ஆகிவிடும்போது அவர்கள் தம்மை உயர்வகை மானிடர்களாகப் ‘பணிவுடன்’ கருதிக் கொள்கிறார்கள்.

அவர்கள் மக்களை எவ்வளவுதான் நேசித்தாலும் மக்களை பூச்சியங்களின் கூட்டம் என்றே ‘அன்புடன்’ மதிப்பிடுகிறார்கள்.

பூச்சியங்களுக்குத் தலைமை வகிப்பதன் மூலம் அவற்றுக்கு மதிப்பை ஏற்படுத்தித் தருகின்ற “எண்கள்” என்ற தகுதியில், மக்களின் ஜீவமரணப் பிரச்சினைகளில் அவர்களை ஈடுபடுத்தாமலேயே, அவர்கள் மத்தியில் பணியாற்றாமலேயே, அவர்களுக்காக முடிவெடுக்கும் உரிமையைத் தம் கையிலெடுத்துக் கொள்கிறார்கள். இது தம்முடைய தியாகத்துக்கு மக்கள் வழங்க வேண்டிய ‘நியாயமான விலை’ என்று உளப்பூர்வமாக நம்புகிறார்கள்.

எதார்த்தமே கொள்கையின் உரைகல்லாக இருக்க வேண்டும் என்ற விஞ்ஞானத்தை இவர்கள் மறுக்கிறார்கள். தங்கள் சொந்த மன உணர்வுக்கேற்ப யதார்த்தத்தைப் பிசைந்து கொள்கிறார்கள்.

இத்தகையவர்கள்தான் தவிப்பு குழுவினர்.

சிந்தனை ஒன்று - முகங்கள் மூன்று

மக்களாகிய மந்தைகள் மீது ஒருவகை வெறுப்புக் கொண்ட குமாரசாமி; அனுதாபம் கொண்ட ஆனந்தி. இவையிரண்டும் ஒரே நடுத்தர வர்க்க சிந்தனையின் இரண்டு முகங்கள்.

பண்பாட்டு விழுமியங்கள், கலை ரசனை, அறநெறிகள் போன்ற அனைத்திலும் குமாரசாமியுடன் தீவிரமாக வேறுபடும் ஆனந்தி தனித் தமிழ்நாடு என்ற அரசியல் கொள்கையில் மட்டும் உடன்படுவதால் இருவரும் தவிப்பு குழுவின் மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள்.

மற்றெல்லாவற்றிலும் ஆனந்தியுடன் ஒத்திசைவு கொண்ட விஜயன், வன்முறைப் பாதையை மறுக்கின்ற ஒரே காரணத்தால் அந்நியன்.

விஜயனும் ஆனந்தியும் வேறானவர்களா? இல்லை. இவர்களும் கூட அதே சிந்தனையின் இரண்டு முகங்கள்தான்.

அதனால்தான் ஆனந்தி ஒரு தீவிரவாதக் குழுவின் உறுப்பினர் என்று கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைகிறான் விஜயன். “பொருந்தாத பொருட்கள் - ஆனந்தியும் துப்பாக்கியும், ஆனந்தியும் வெடிகுண்டும். ஆனந்தியும் கடத்தலும். இவை எப்படிப் பொருந்த முடியும்” என்று அதிசயிக்கிறான். அவளை நேரில் சந்திக்கும்போது கேட்கிறான்.

ஆனந்தி பதில் சொல்கிறாள்: “எங்களுக்கும் இந்த வன்முறை சம்மதம் இல்லைதான்… அதன் மொழியில் பேசினால்தான் அதற்குப் (அரசுக்கு) புரிகிறது என்பதால் குண்டுகளை வெடிக்க வேண்டியிருக்கிறது.”

“ஒரு நல்ல நண்பனோடும் இடைவெளி வைத்துப் பேச வேண்டிய நிலைக்கு என்னைத் தள்ளியிருக்கிற சூழ்நிலை எனக்கு அலுப்பாக இருக்கிறது. இந்த வன்முறைகள் எப்போது முடியும் என்ற தவிப்பு என்னை அலைக்கழிக்கிறது.. இதையெல்லாம் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு எங்களைத் தள்ளியிருக்கிற உங்கள் அரசாங்கம் மீது எனக்கு மேலும் மேலும் வெறுப்பாயிருக்கிறது. நிறைய முகமூடிகளை அணிந்து கொண்டு போராட வேண்டியிருப்பது அலுப்பாக இருக்கிறது… ஒவ்வொரு முகமூடியாக உதற வேண்டியிருக்கிறது. வன்முறை கூட ஒரு முகமூடிதான். எங்கள் உண்மையான முகங்கள் வேறு. நீ அதைப் புரிந்து கொண்டால் நான் எவ்வளவு சந்தோஷப்படுவேன்.”

ஆம்! ஆனந்தியும் துப்பாக்கியும் பொருந்தாத பொருட்கள்தான் என்று அவளே விளக்கிவிட்டாள். இந்தக் குமுறலைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.

கட்டாயத்துக்கு ஆளானவர்கள்!

“இதையெல்லாம் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு எங்களைத் தள்ளியிருக்கும் அரசாங்கம்…” - எதையெல்லாம்? நகரின் மத்தியில் குண்டு வைத்து பொதுமக்களைக் கொல்வது போன்ற ‘புரட்சிகர’ நடவடிக்கைகளையெல்லாம்!

கட்டாயத்திற்கு ஆளானவர்கள்! எப்பேர்ப்பட்ட புகழ்மிக்க சொற்றொடர்! தனது சொந்த நடவடிக்கைக்கான தார்மீகப் பொறுப்பிலிருந்து நடுத்தர வர்க்கம் விடைபெற்றுக் கொண்டுவிட்டது!

யூதர்களைக் கொலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மனிதாபிமானமுள்ள ஜெர்மன் அதிகாரிகளை உள்ளாக்கிய நாஜி அரசு, நம்மூரின் ‘நேர்மையான’ அதிகாரிகளை ஊழலுக்கு உடன்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கும் அமைச்சர்கள், ‘முற்போக்கு’ இளைஞர்களை வரதட்சிணை வாங்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கும் பெற்றோர்கள்!

இந்த இரண்டு வார்த்தைகள் அளிக்கும் தார்மீகப் பாதுகாப்பில்தானே நடுத்தர வர்க்கம் வாழ்ந்து கொண்டிருக்கிறது!

அப்படியானால் இந்த வன்முறைக்கு யார் பொறுப்பேற்பது? ‘இந்த வன்முறை கூட ஒரு முகமூடிதான்’ என்று கூறி தார்மீகப் பொறுப்பை முகமூடியின் மீது சுமத்துகிறாள் ஆனந்தி. “நிறைய முகமூடிகளை அணிந்து கொண்டு போராட வேண்டியிருப்பது அலுப்பாக இருக்கிறது” என்கிறாள்.

புரட்சி என்பது முகமா, முகமூடியா?

விந்தை! ஒரு சராசரி மனிதன், தனக்கு ஏற்கனவே அணிவிக்கப்பட்டிருக்கும் முகமூடிகளை ஒவ்வொன்றாகக் கழற்றியெறியும் முயற்சியினூடாகத்தான் புரட்சியாளனாக மாறுகிறான். சாதி, மதம், இனம், சமூக அந்தஸ்து, தகுதி போன்ற பல முகமூடிகளைப் பிய்த்தெறியும் துன்பமும் புரட்சியாளனாக, முரணற்றவனாக உருவாகும் இன்பமும் பிரிக்கவொண்ணாதவை.

வன்முறை என்பது புரட்சியாளனின் முகமூடி அல்ல; சூழ்நிலையின் கைதியாக, தன் சொந்த விருப்பத்துக்கு விரோதமாக ஈடுபடும் இழிந்த நடவடிக்கையல்ல வன்முறை.

ஒரு புரட்சிகர அமைப்பும் அதன் உறுப்பினரும் சுதந்திரமாக, அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து உணர்வுப் பூர்வமாக ஈடுபடும் நடவடிக்கை. உயிருக்குப் போராடும் மனிதனைக் காப்பாற்றுவதும், எதிரியைக் கொலை செய்வதும் அவனது உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகள்தான்.

ஆனால் “நான் அவளில்லை” என்கிறாள் ஆனந்தி. அவள் விஜயனின் ‘பழைய’ ஆனந்திதான். புரட்சிக்காரி என்பதுதான் அவளுடைய முகமூடி. அதனால்தான் அவளுக்கு‘அலுப்பாக’ இருக்கிறது.

தமிழன் திருந்த மாட்டான்!

தங்களது சொந்த மன உணர்வின் அடிப்படையில் சமூக நிலைமையை மதிப்பிட்டதால் தோன்றுவது தவிப்பு; அதே மன உணர்வுக்கு மக்களும் வரவில்லை என்பதால் ஏற்படுவது அலுப்பு.

இதே அலுப்புதான் ‘தமிழன் திருந்த மாட்டான்’ என்று அறிஞர்களைப் பேச வைக்கிறது. “எனக்கென்ன வந்தது. நான் வசதியாக வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம்” என்று அங்கலாய்க்க வைக்கிறது.

தமது வாழ்க்கை வசதிகளை விட்டொழித்ததன் மூலம் தங்களது விடுதலையைச் சாதித்துள்ளதாக அவர்கள் கருதுவதில்லை. “உங்களுடைய விடுதலைக்காக மற்றவர்கள் இழக்க விரும்பாததை நான் இழந்தேன்” என்று மக்களுக்கு நினைவு படுத்துகிறார்கள். “நினைத்திருந்தால் நான் நடுத்தர வர்க்க அற்பனாகவே வாழ்ந்திருக்க முடியும்” என்று சொல்வதன் மூலம், தற்போது தான் அணிந்திருப்பது முகமூடிதான் என்பதை மக்களுக்கு நினைவு படுத்துகிறார்கள்.

இந்த முகமூடிக்காரர்களின் அலுப்பின் உள்ளே உறைந்திருப்பது நடுத்தர வர்க்க மேட்டிமைத்தனம்; பூச்சியங்களுக்குத் தலைமை தாங்கும் ‘எண்களின்’ அகம்பாவம்!

இந்த அலுப்புதான் பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகியவை குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளை ஏளனத்துடன் நிராகரிக்கிறது. தங்கள் சொந்த நடைமுறை குறித்த விமரிசனங்களை வன்மத்துடன் எதிர்கொள்கிறது.

எயிட்ஸ் விளம்பரத்தின் நீதி!

நாவலுக்கு வருவோம். “ஆயுதம் தருகிறேன். பணமும் தருகிறேன். என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தவிப்பு குழுவினரிடம் கூறுகிறான் உள்துறை அமைச்சன்.

“அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை” என்று கருதுகிறது மத்தியக் குழுவின் பெரும்பான்மை. ‘இது ஆபத்தானது’ என்கிறாள் ஆனந்தி.

இது இலட்சியத்துக்கு எதிரான நடைமுறை என்றோ, நெறி தவறிய செயல் என்றோ ஆனந்தி கூறவில்லை. இதிலிருக்கும் ‘ஆபத்தை’ மட்டுமே சுட்டிக் காட்டுகிறாள்.

ஆபத்து எதில்தானில்லை? ஆர்ப்பாட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடு நடக்கும் ஆபத்து இருக்கிறது; ஆதிக்க சக்திகளை எதிர்த்தால் கொலை செய்யப்படும் ஆபத்து இருக்கிறது; ஏன், உண்ணாவிரதம் இருந்தால்கூட செத்துப் போகும் ஆபத்து இருக்கிறது.

உளவுத்துறையைப் பயன்படுத்துவது என்ற முடிவு தங்கள் இலட்சியத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்தையோ, தங்கள் நாணயத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்தையோ, மக்களுக்கு ஏற்படுத்தவிருக்கும் ஆபத்தையோ ஆனந்தி கருதவில்லை. தங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை எண்ணியே கவலைப்படுகிறாள்.

எயிட்ஸ் தடுப்பு விளம்பரங்களும் கூட இப்படித்தான் சொல்கின்றன. “உங்கள் மனைவியைத் தவிர யாருடனும் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள். அப்படி வைத்துக் கொள்வதென்றால் ஆணுறை அணியுங்கள்.”

முதல் வரியில் ஒழுக்கக் கோட்பாடு. இரண்டாவது வரியில் ஆபத்தைத் தடுக்கும் எச்சரிக்கை. ஆணுறை அணிந்து ஆபத்தைத் தவிர்ப்பவர்களின் கள்ளத்தனம், அதன் காரணமாகவே நல்லொழுக்கமாகி விடுமா?

தந்திரங்கள்

ஆம். அப்படித்தான் ஆகிவிடுகிறது! இந்திய உளவுத்துறை, இந்திய இராணுவப் பயிற்சி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டபோதும் அமைதிப்படையை எதிர்த்து நின்றதனால் புலிகள் நெறி தவறாதவர்களாகி விட்டார்கள்; அது மட்டுமல்ல, “எச்சரிக்கையாகப் பயன்படுத்திக் கொள்ளும்” இந்தக் கோட்பாடு, விடுதலைப் போராட்டத்தின் “நடைமுறைத் தந்திரம்” என்ற அரசியல் அந்தஸ்தையும் பெற்றுவிட்டது.

இதே தந்திரத்தின் அடிப்படையில், ஈழத்தமிழர்களின் போராட்டம் இந்துக்களின் போராட்டம் என்று கூறி தாக்கரேயின் ஆதரவைப் பெறலாம்; காஷ்மீர் விடுதலையை எதிர்ப்பதன் மூலம் ஈழ விடுதலையைத் துரிதப்படுத்தலாம். எதுவும் செய்யலாம்.

ஆனால் இவையெதுவும் போராளிகளின் ஆளுமை மீது, போராளி அமைப்பின் மீது, அவர்களது நேர்மை, நல்லொழுக்கத்தின் மீது, அவர்களது இலட்சியத்தின் மீது ஒரு சிறிய கீறலைக் கூட ஏற்படுத்தாது என்பதுதான் அவர்களது ஆதரவாளர்களின் நம்பிக்கை.

ஏனென்றால் “இலட்சியம், வழிமுறைகளை நியாயப்படுத்துகிறது.”

· இதுதான் தவிப்பு குழுவினரின் கோட்பாடு. அவர்கள் மட்டுமல்ல இந்திய அரசின் துணைகொண்டு ஐ.ஆர்.8 போல தமிழீழத்தைக் குறுகிய காலத்தில் அறுவடை செய்ய எண்ணிய ஈழத்தின் எல்லா ‘தவிப்பு’ குழுக்களுக்கும் இதுதான் கோட்பாடு.

இவர்கள் மட்டுமல்ல; எப்படியாவது தனித்தமிழ்நாடு பெறத் தவிப்பவர்கள், எப்படியாவது புரட்சியை விரைவுபடுத்தத் துடிப்பவர்கள், எப்படியாவது (ஜெ யுடன் சேர்ந்தாவது) பாரதிய ஜனதாவைத் தோற்கடிக்க முயலும் போலி கம்யூனிஸ்டுகள்…. இன்னோரன்ன அனைவருக்கும் இதுதான் கோட்பாடு.

அதனால்தான் கடத்தல்காரர்களிடம் மாமூல் வாங்குவது, அவர்களையே இயக்கத்தில் சேர்ப்பது, பேருந்து நிலையங்களில் குண்டு வைத்து மக்களைக் கொல்வது போன்ற நடவடிக்கைகளும் ஆனந்திக்கு முறிவை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் “இலட்சியம் வழிமுறைகளை நியாயப்படுத்துகிறது.”

நீதியான லட்சியம்
நீதியற்ற வழிமுறைகள்

“நியாயப்படுத்துகிறது” என்ற இந்தச் சொல்லே நியாயமற்ற ஒரு கொள்கை அல்லது செய்கைக்கு, அது தன்னியல்பில் பெற்றிராத ஒரு தகுதியை வலிந்து அதற்கு வழங்கும் மோசடியாகும். நெறியற்ற நடவடிக்கைகளுக்கு ‘இலட்சியப் போர்வை’ போர்த்தி மறைக்கும் பித்தலாட்டமாகும்.

இலட்சியம் வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை; தீர்மானிக்கிறது. அதே போல, வழிமுறைகளும் இலட்சியத்தின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

இலட்சியத்திற்கு உகந்த வழிமுறை கடைப் பிடிக்கப்பட வில்லையானால், எத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றனவோ அதற்குப் பொருத்தமான இலட்சியத்தையே அடைய முடியும்.

“நீதியற்ற வழிமுறைகளைக் கோருகின்ற இலட்சியம் நீதியான இலட்சியமல்ல” என்றார் மார்க்ஸ்.

இலட்சியத்திற்கும் - வழிமுறைக்கும், அறிவியலுக்கும் - அறநெறிக்கும், கொள்கைக்கும் - நடைமுறைக்கும் இடையே இருக்க வேண்டிய இணைப்புக் கண்ணியை மார்க்சியத்தின் துணை கொண்டு மட்டுமே அறிவியல்பூர்வமாக நிறுவ முடியும்.

அரசியல் - அறவியல் முரண்பாடு

தாக்குதல் - தற்காப்பு, போராட்டம் - சமரசம், தியாகம் செய்தல் - தேவையற்ற தியாகத்தைத் தவிர்த்தல் போன்ற பல பிரச்சினைகள் தோற்றுவிக்கின்ற ‘அரசியல் - அறவியல்’ முரண்பாடுகளை மார்க்சியத்தின் துணை கொண்டு மட்டுமே அறிவியல் பூர்வமாகப் பரிசீலித்து விடைகாண முடியும்.

மற்றெல்லா இசங்களும், அவற்றைப் பின்பற்றும் இயக்கங்களும் ‘குத்துமதிப்பாக’ இவற்றைப் பற்றிப் பேசலாம்; அவரவர் வசதிக்கேற்ப வரையறுத்துக் கொள்ளலாம்; தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். அவற்றில் ஓர் ஒருங்கிணைவு இருக்க முடியாது.

போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் எதிரியுடன் தற்காலிக சமரசம் செய்து கொள்வதன் ‘அரசியல் தேவை’ குறித்து ஒருவர் பேசினால், அதனையே ‘துரோகம்’ என்று அறவியல் வழிநின்று இன்னொருவர் சாட முடியும்.

“அமைச்சனின் கூலிப்படையாக மாறுவதற்கா இத்தனை தியாகங்கள் செய்தோம்” என்று ரவித்தம்பி அறவியல் (தார்மீக) ஆவேசத்துடன் கேட்கும் போது, “ஆளும் வர்க்கங்களின் உள் முரண்பாடுகளைப் பயன்படுத்துவதில் என்ன தவறு” என்று குமாரசாமி அரசியல் ரீதியாக அதற்கு மடையடைக்க முடியும்.

நாவல் முழுவதிலும், தவிப்பு குழு முழுவதிலும், அவர்களுடைய சிந்தனை - செயல்பாடு முழுவதிலும் இந்த முரண்பாடு நிரம்பியிருக்கிறது.

நாய் விற்ற காசு கடிக்கும்!

கோப்பை நிரம்பிவிட்டது; அது வழிவதற்கான கடைசித் துளி மட்டுமே தேவைப்படுகிறது. அந்தக் கடைசித்துளிதான் போதை மருந்துக் கடத்தல்.

“நாய் விற்ற காசு குரைக்காது, போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படாது: வேறு எந்த நாட்டுக்காரனோ பயன்படுத்தட்டும்” என்று கூறுகின்ற தமிழ்மணி, குமாரசாமியின் நியாயங்களை ஆனந்தி எதிர்க்கிறாள்.

போதைப் பொருள் கடத்தலை நிறுத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் விடுதலை இயக்கத்தைக் கடத்தல் இயக்கமாக மாற்றி, அந்தக் கடத்தலுக்கு ‘உதவி செய்யாவிட்டால் கொன்றுவிடுவோம்’ என்று இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவரையே மிரட்டிய தமிழ்மணி, குமாரசாமி போன்றோர் இயக்கத்தில் தொடர்ந்து இருப்பதைப் பற்றி ஆனந்திக்கும் குழுவினருக்கும் ஆட்சேபம் எதுவும் இல்லை.

அப்பாவியா - விஷமியா?

ஒரு மனிதனை எப்படி மதிப்பீடு செய்வது? வேறொரு இடத்தில் இதற்கு விளக்கம் தருகிறாள் ஆனந்தி. தவிப்பு குழுவினால் கடத்தப்பட்ட பாண்டே எனும் அதிகாரியை - தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் - கொன்று விடுவோம் என்று ஆனந்தி கூறிய போது “அதெப்படி நியாயம்” என்று கேட்கிறான் விஜயன்.

“ஒருவரை அப்பாவி என்றோ விஷமி என்றோ ஒட்டு மொத்தமாக வர்ணித்துவிட முடியாது. பாண்டே சாதுவான நல்ல மனிதராக இருக்கலாம். நீ கூடத்தான்… ஆனால், அரசாங்கத்தின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கும் போது, உங்கள் நடவடிக்கைகள் எமது தமிழ் மக்களுக்குச் சாதகமாக இருக்கின்றனவா, எதிரானவையா என்பதைப் பொறுத்துத்தான் உங்கள் அப்பாவித்தனம் தீர்மானிக்கப்படும்” என்கிறாள் ஆனந்தி.

இந்த அளவுகோலை குமாரசாமிக்கும் பொருத்த வேண்டும் என்று ஆனந்தி எண்ணவில்லை. பாண்டேயைப் போல கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பில் அல்ல, முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் உள்ள குமாரசாமி, ஜனநாயக விரோதமாக தன்னிச்சையாக முடிவுசெய்த போதை மருந்து வியாபாரம் அப்பாவித்தனமானதா? அறியாமையால் செய்த பிழையா?

குமாரசாமியை ஒரு போராளி என்றே மதிப்பிடுகிறாள் ஆனந்தி. “ஒரு மனிதனை ஒட்டுமொத்தமாக இன்ன தன்மை கொண்டவரென்று வரையறுத்து விட முடியாது” என்ற ஆனந்தியின் சிந்தனையும் இங்கே வேலை செய்கிறது.

கலப்பற்ற மனிதன் உண்டா?

தன்னுடைய அனைத்து சுய முரண்பாடுகளையும் நியாயப்படுத்துவதற்கு நடுத்தரவர்க்கம் தன் கைவசம் வைத்திருக்கும் வாளும் கேடயமும் இந்தக் கோட்பாடுதான்.

ஒரு பொருள், மனிதன் அல்லது இயக்கத்தின் பன்முகத் தன்மையை ஆராய்ந்து, அதன் சாராம்சமென்ன என்பதை வரையறுத்து, பிறகு அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சியை மதிப்பிடுவதுதான் அறிவியல் நோக்கு.

“இயற்கையிலும் சரி சமுதாயத்திலும் சரி, ‘கலப்பற்ற’ நிகழ்வுகள் எவையும் இல்லை.” ஆனால் ஒரு நிகழ்வின் தன்மையை இன்னதென்று வரையறுத்துச் சொல்லும் நேரத்தில், அதில் இது கலந்திருக்கிறதே “என்பதை யாரேனும் நினைவுபடுத்துவாரானால் அவர் அளவு கடந்த அசட்டுப் புலமை வாய்ந்தவராகவோ அல்லது சொற்புரட்டராகவோ எத்தராகவோதான் இருக்க வேண்டும்” என்றார் லெனின்.

சந்தனக் கடத்தல், போதை மருந்து கடத்தல், உளவுத்துறை உறவு ஆகிய எதை வேண்டுமானாலும் தமிழர் விடுதலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் கண்ணோட்டம், பழமைவாதம், ஆணாதிக்கம் ஆகிய அனைத்தும் குமாரசாமியிடம் இருக்கின்றன. எனினும் அவனை போலீசு சித்திரவதைக்குப் பணியாத உயிரைத் துச்சமாக மதிக்கும் போராளியாகவே மதிப்பிடுகிறாள் ஆனந்தி.

இந்த நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய சுப.வீரபாண்டியனும் இதையேதான் வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். “பலவீனமில்லாமல் ஒரு இயக்கம் இருக்க முடியாது.”

பலத்தை வென்றது பலவீனம்!

ஆனால் என்ன விந்தை! பலவீனம் பலத்தை அழித்துவிட்டது. ஆனந்தி கொலை செய்யப்படுகிறாள். ஆனந்தியின் கருத்துக்களை ஆதரித்த வேலு என்ற மத்தியக்குழு உறுப்பினர் விஜயனுக்கு எழுதிய கடிதம் நாவலின் இறுதிப் பகுதியில் வருகிறது.

“அடுத்து வரும் நாட்களில் எங்கள் இயக்கம் மக்கள் முன்பு கொச்சைப் படுத்தப்படும். நாங்கள் செய்த தவறுகள் அம்பலப்படுத்தப்படும். அந்த வேளையில் தமிழ் விடுதலைப் போராளிகள் என்றாலே இப்படித்தான் என்ற கருத்து மக்கள் மனதில் தோன்றத் தொடங்கும்.

இல்லை. அப்படி இல்லை. ஒழுக்கம், அறநெறிகள், மனித நேயம் இவற்றில் ஆழ்ந்த பற்றுள்ள பல போராளிகள் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டதால்தான் இந்தச் சீரழிவுகள் நிகழ்கின்றன என்பதை மக்கள் உணரச் செய்ய வேண்டும். அதை உங்களைப் போன்றோரால்தான் செய்ய முடியும் என்பதாலேயே இந்தக் கடிதம். எங்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டி அல்ல, எமது மானத்தை, சுய மரியாதையைக் காப்பாற்றவே இக்கடிதம்.”

இழக்க ஏதுமில்லாப் போராளிகள்!

தம்மையும், ஆனந்தியையும் அறநெறியில் பற்றுக் கொண்டவர்களாகக் கூறுகிறார் வேலு. அறநெறியில் பற்றுக் கொண்ட ஆனந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பு உள்துறை அமைச்சனை சந்திக்கிறாள். தமிழகத்தில் தங்களை நசுக்கும் நோக்கத்துடன் இறக்கப்பட்டிருக்கும் ராணுவம் உடனே விலக்கப்பட வேண்டும் என்று கோருகிறாள். “விலக்காவிட்டால்?” என்று கேட்கிறான் அமைச்சன்.

ஆனந்தி பதிலளிக்கிறாள். “எங்களுடன் நீங்கள் நடத்திய பேரம் பற்றி முதலமைச்சர் ஆறுமுகத்துக்கும், பொது மக்களுக்கும் அறிவிப்போம். அது பகிரங்கமாவதில்எங்களுக்கொன்றும் இழப்பு இல்லை. நீங்கள்தான் தேர்தலில் நிற்கிறீர்கள்!”

“எங்கள் தவறுகள் அம்பலமாகும்; நாங்கள் கொச்சைப்படுத்தப் படுவோம். இருப்பினும் அதைச் சந்திப்போம். ஆனால் உன்னை அம்பலப்படுத்தாமல் விடமாட்டோம்” என்றுகூடச் சொல்லவில்லை ஆனந்தி.

அமைச்சன் பதவியை இழக்கலாம்; தேர்தலில் தோற்கலாம்; ஆனால் அவனிடம் இழப்பதற்கு மானம் இல்லை. இலட்சியமும் இல்லை.

எங்களுக்கும் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிறாள் ஆனந்தி. ஆனால் வேலுவோ “இந்த உறவாடலில் நாங்கள் இழந்தவை ஏராளம்” என்று கடிதம் எழுதுகிறார்.

கள்ள உறவின் இரகசியங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் திறமையில்தான் இவர்களது “அறநெறியின் ஆன்மா” ஒளிந்திருக்கிறது போலும்!

இந்தியா ராஜீவை இழந்தது
ஈழம் விடுதலையை இழந்தது

ஈழப் போராளிகளுடனான இரகசிய உறவில் இந்திய அரசு ராஜிவ் காந்தியை இழந்தது; சில நூறு சிப்பாய்களை இழந்தது. ஈழ மக்களோ தம் விடுதலையை இழந்தார்கள். ஆனந்திகளுக்கோ இழப்பு ஒன்றுமில்லை!

தாங்கள் தமிழ் மக்களுக்கிழைத்த நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றியோ, அவர்களது ‘விடுதலை’யைத் தொலைத்தது பற்றியோ அக்கடிதம் வருந்தவில்லை: தங்கள் மானத்தை சுயமரியாதையைக் காப்பாற்றவே கவலைப்படுகிறது. தங்களது நடவடிக்கையின் சமூக விளைவுகளை எண்ணி வருந்தாமல், தன் நிலை எண்ணி வருந்தும் அறிவாளிகளின் உளவியல் இது.

பூச்சியங்களுக்குத் தலைமை தாங்கும் அகம்பாவத்தில் திளைத்திருந்த ‘மதிப்பு மிக்க’ எண்கள், இதோ தன்னிரக்கத்தில் வீழ்ந்து விட்டன!

அந்த இடத்தில் சிக்கெனப் பொருந்துகிறது ஆனந்திக்குப் பிடித்தமான சுந்தர ராமசாமியின் (பசுவய்யா) கவிதை.

நான் விடைபெற்றுக் கொண்டுவிட்ட
செய்தி
உன்னை வந்து எட்டியதும்
நண்பா பதறாதே.
ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல்
எதுவும் அதில் இல்லை.
இரங்கற்கூட்டம் போட
ஆட்பிடிக்க அலையாதே
நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மனச் சோர்வில் ஆழ்ந்து கலங்காதே.

கலாச்சாரத் தூண்கள் (சாகித்திய அகாதமி போன்றவை) தன்னை கவுரவிக்க வேண்டுமென்ற விருப்பம், விருப்பம் நிறைவேறாததால் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வு, அந்தக் கோபத்தில் வெடிக்கும் தடித்தனம் என்ற வசவு, நானும் இலைதானா - மரமில்லையா என்ற ஆதங்கம், பிறகு இலைகளின் மீது அனுதாபம்!

இதுதான் ஆனந்திக்குப் பிடித்தமான கவிதை என்றால், நாவலாசிரியர் இக்கவிதை மூலம் ஆனந்தியின் பாத்திரத்திற்குப் பெருமை சேர்க்கவில்லை.

தன்னிரக்கம்

மக்களுக்காக மரிக்கும் போராளி, தனது மறைவுக்காக மக்கள் கண்ணீர் சிந்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. தனக்காக கலாச்சாரத் தூண்கள் கண்ணீர் சிந்த வேண்டும் என்று எண்ணுபவன் போராளியல்ல; கலாச்சாரத் தூண்களால் அலங்கரிக்கப்படும் அரசவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகப் ‘புரட்சி’யை ஒரு கருவியாகப் பயன்படித்துபவன்.

இந்தக் கவிதையின் அழகியலைக் கொண்டு ஆனந்தியின் அரசியலை மதிப்பிடலாமெனில், “எங்களைக் கண்டு கொள்; எங்களை அங்கீகரி; எங்களுடன் பேசு” என்று அரசை நிர்ப்பந்திப்பதற்காகக் குண்டு வெடிக்கும் ‘அழுத்த அரசியல்’தான் (Pressure politics) அது.

ஆனால் போராளிகள் என்பவர்கள் மக்களால் கண்டுகொள்ளப்படுவற்காக, அங்கீகரிக்கப் படுவதற்காக மக்களிடம் பேசுபவர்கள், அவர்களைத் திரட்டுபவர்கள், அவர்களைப் பேச வைப்பவர்கள், அவர்களைப் போராடச் செய்பவர்கள். ஆம்! ‘பூச்சியங்களின்’ பின்புலத்தில்தான் எண்களின் மதிப்பு உயர்கிறது.

***

ஆயுதம் தாங்கிய விஜயன்தான் ஆனந்தி! ஆயுதம் ஏந்திய அமைச்சன்தான் குமாரசாமி! ஆயுதம் தாங்கிய அமிர்தலிங்கம்தான் பிரபாகரன்!

தவிப்பு எனும் ஆயுதம் தாங்கிய அறிஞர்களின் ஊனம் அவர்களது மூளையில்தான் இருக்கிறது. அவர்களது அரசியல் சித்தாந்தம் ஒரு வேளை அவர்களுக்கு அழிவைத் தேடித்தராமல் இருந்திருந்தால், தமிழ் மக்கள் தங்களுக்கு நேரவிருக்கும் அழிவை எதிர்த்துப் போராட நேரிட்டிருக்கும.

***

இது சீனப் புரட்சியின் ஐம்பதாவது ஆண்டு. தோழர் மாவோவின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்றைக் குறிப்பிட்டு முடித்துக் கொள்வோம்.

“துப்பாக்கிக் குழாயிலிருந்துதான் அரசியலதிகாரம் பிறக்கிறது” என்றார் மாவோ. சமாதான மாற்றம், தேர்தல் பாதை என்று சரணடைந்த போலி கம்யூனிசத்திற்கு அளிக்கப்பட்ட பதில் அது.

அந்த வாக்கியம் ஓர் அனைத்தும் தழுவிய உண்மை. தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமல்ல, முதலாளி வர்க்கத்திற்கும் அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழாயிலிருந்துதான் பிறக்கிறது.

போராளிகளையும் புரட்சியாளர்களையும் இனங்காண்பதற்கான அடையாளமே துப்பாக்கிதான் என்று கருதியிருப்போர், மாவோவின் அந்த மேற்கோளை அருள்கூர்ந்து இன்னுமொருமுறை படியுங்கள்.

துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியல் அதிகாரம்தான் பிறக்கிறது. அரசியல் சித்தாந்தம் பிறப்பதில்லை.


புதிய கலாச்சாரம், அக்டோபர் - 1999

http://vinavu.wordpress.com/2008/12/19/thavib2/&type=P&itemid=86565