இந்தியாவில் சராசரியாக தினமும் 46 விவசாயிகள் தற்கொலையால் மடிகிறார்கள்.
2007ம் ஆண்டு கணக்கு படி, மகாராஷ்டிராவில் 4,238 விவசாயிக்ளும், கர்நாடகாவில் 2,135 விவசாயிகளும், ஆந்திராவில் 1,797 விவசாயிகளும் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.
-தேசிய குற்ற ஆவணப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல். (தினமலர் – 17.12.2008 – பக். 4)
****
தீவிரவாதத்துக்கு எதிராக இரண்டு மசோதாக்கள் நேற்று பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆளுங்கட்சிகளும், எதிர்கட்சிகளும் ஏகமனதாக நிறைவேற்றிவிட்டன.
மும்பைத் தாக்குதலுக்காக இந்த நடவடிக்கை என்கிறார்கள். இதே மும்பைக்கு அருகில் விதர்பா மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மட்டும் மேலே உள்ள கணக்குப்படி 4,238 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.
உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற முதலாளித்துவ பயங்கரவாத கொள்கைகளை இந்தியாவில் நிறைவேற்ற துவங்கி... கடந்த 14 ஆண்டுகாலமாக லட்சகணக்கான நம் விவசாயிகள் தற்கொலையில் மடிந்திருக்கிறார்கள். இன்றைக்கும் அது நிறுத்த முடியாத தொடர்கதையாக மாறியிருக்கிறது.
நம் விவசாயிகளுக்காக எந்த ஆளுங்கட்சி துடித்தது? எதிர்கட்சி துடித்தது? 
நேற்று 5 மணி நேரம் இரண்டு மசோதாக்களுக்காக விவாதித்து இருக்கிறார்கள். இறந்து போன விவசாயிகளுக்காக இவர்கள் எவ்வளவு நேரம் விவாதித்திருப்பார்கள். தீவிரவாதத்திற்காக இவ்வளவு மெனெக்கெடுக்கிற அரசு விவசாயிகளின் நல்வாழ்வுக்காக, தற்கொலைகளை தடுக்கும் விதமாக எத்தனை மசோதாக்களை நிறைவேற்றியிருப்பார்கள்?
இந்த நாட்டில் விவசாயின் உயிர் என்றால் துச்சமாக போய்விட்டது. மும்பை தாக்குதலில் உயிர் துறந்த காமோண்டாக்களுக்காக எத்தனை நெஞ்சங்கள் கண்ணீர் விட்டன. இருப்பினும் அந்த கமோண்டாக்களுக்காக பல்வேறு சலுகைகள், சம்பளங்கள் அரசு வாரி இறைக்கிறது. இந்த நாட்டின் உணவு உற்பத்திக்காக தன்னையே விதைக்கிற விவசாயிக்கு என்ன செய்தது?
ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் செய்கிற அத்தனை கேடுகெட்ட தில்லுமுல்லுகளின் சுமைகளை தாங்குபவர்கள் இந்த பாவப்பட்ட விவசாயிகள் தான். 
இந்தியா நாசமாய் போவதற்கு ஒரு குறியீடு இந்த விவசாயிகளின் சாவு.
நிலப்பிரபுக்கள், தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள், அதிகாரவர்க்கம் - இவர்களை காக்க மத்தியில், மாநிலத்தில் ஆளும் கட்சிகளும், எதிர்கட்சிகளும் இருக்கிறார்கள். 
நம் விவசாயிகளைக் காக்க நாம் தான் போராட வேண்டும்