இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் இதுவரை கண்டிராத மிகக் கொடியதும் மிகப் பெரியதுமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைக் கண்டு நாடே பீதியில் உறைந்து போயுள்ளது. கடந்த நவம்பர் 26ஆம் தேதியன்று இரவு 9.30 மணியளவில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் தொடங்கி, மும்பை நகரின் முக்கிய மையங்கள்,

 விமான நிலையம், ரயில் நிலையங்கள், மருத்துவமனை, ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் முதலான இடங்களில் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடுகுண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியும், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மும்பை நகரையே தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தும், தீவிரவாத எதிர்ப்பு அதிரடிப்படையின் தலைவரான ஹேமந்த் கார்க்கரே உள்ளிட்டு 200க்கும் மேற்பட்டோரைக் கொன்றும் 300க்கும் மேற்பட்டோரைப் படுகாயப்படுத்தியும் இத்தீவிரவாதிகள் வெறியாட்டம் போட்டனர்.


 இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட போதிலும் உலகின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, நன்கு திட்டமிட்டு, நன்கு பயிற்றுவிக்கப்பட்டு, அதி நவீன ஆயுதங்களுடன்  ""மரணத்தைக் கடந்தவன்'' எனும் பொருள் தரும் ""ஃபிடாயீன்'' (ஊஐஈஅஙுஉஉN) பாணி தாக்குதல் நடத்துவதை லஷ்கர்இதொய்பா, ஜெய்ஷ்இமொகம்மது ஆகிய இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் ஓர் உத்தியாகக் கொண்டுள்ளன.  அல்கொய்தாவினால் பயிற்றுவிக்கப்படும் இத்தீவிரவாதிகள், மும்பைக்குக் கடல் வழியே இரகசியமாக வந்து திட்டமிட்டு திடீர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர்.


 நியூயார்க், லண்டன், மாட்ரிட், கசபிளாங்கா, பாலி, ரியாத், கெய்ரோ என கோரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியான நகரங்களை ஒப்பிடும்போது, மும்பையில் மட்டும் திரும்பத் திரும்ப பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன. அது ஏன்?


 முதலாவதாக, அயோத்திபாபரி மசூதி இடிப்பு, அதைத் தொடர்ந்து மும்பை மற்றும் நாடு முழுவதும் இந்துவெறியர்கள் நடத்திய பயங்கரவாதப் படுகொலைகள், குஜராத்தில் ஏவிவிடப்பட்ட இந்துவெறி பாசிச பயங்கரவாதம், தடாபொடா கருப்புச் சட்டங்களைக் கொண்டு பாய்ந்த அரசு பயங்கரவாதம் ஆகியவற்றால் முஸ்லீம் மக்கள் வதைக்கப்படுவதற்குப் பழிதீர்க்கும் நோக்குடன் இத்தீவிரவாதக் குழுக்கள் இந்தியாவைக் குறிவைத்து "புனிதப் போர்'' (ஜிகாத்) தொடுக்கின்றன. இதேபோல் இஸ்ரேலிய ஜியோனிசம், அமெரிக்காவின் கிறித்துவ பயங்கரவாதம் ஆகியன இஸ்லாமிய மக்களை அடக்கியொடுக்குவதால் அந்நாடுகள் மீதும் "உலகு தழுவிய புனிதப் போர்'' என்ற பெயரில் திடீர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துகின்றன.


 இரண்டாவதாக, "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்'' என்று பிரகடனம் செய்து ஈராக் மற்றும் ஆப்கான் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, பாசிச அட்டூழியங்களை நடத்திவரும் அமெரிக்கப் பயங்கரவாதிகளின் விசுவாசக் கூட்டாளியான இந்தியா மீது, அதன் அரசியல்பொருளாதாரசமூக வாழ்வைச் சீர்குலைக்கும் நோக்கில் இத்தீவிரவாதக் குழுக்கள் தாக்குதல் தொடுக்கின்றன. இதேபோல ஆப்கானில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்குச் சேவை செய்யும் பாக். அரசுக்கு எதிராக, கடந்த ஆண்டில் பாக். தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள லால் மசூதியை ஆயுதங்களுடன் ஆக்கிரமித்துக் கொண்டு தாக்குதல் நடத்தி, ஐந்து நாட்களுக்கு அந்நாட்டையே அதிர வைத்தன.


 இந்நிலையில், பாகிஸ்தானிலிருந்து ஏவிவிடப்பட்டுள்ள பயங்கரவாதம் என்று பெருங்கூச்சல் போட்டும், மீண்டும் கருப்புச் சட்டங்களைத் திணித்து அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டும் இத்தீவிரவாதத்தை முறியடித்து விடலாம் என இந்துவெறியர்கள் முதல் போலி மதச்சார்பின்மை பேசும் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சிகள் நம்புகின்றன. ஆனால், எவ்வளவுதான் தீவிரமாக அரசு பயங்கரவாத ஒடுக்குமுறையை ஏவினாலும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை இந்திய ஆட்சியாளர்களால் முடிவுக்குக் கொண்டு வர முடியாது. தற்காலிகமாக ஓய்ந்தாலும் மீண்டும் கடல் வழியாக மட்டுமின்றி வான்வழியாகவும் தாக்கக் கூடும் என்ற அச்சம் இந்திய ஆட்சியாளர்களைப் பிடித்தாட்டுகிறது.


 இதற்கான காரண கர்த்தாக்களே இந்திய பாசிச ஆட்சியாளர்கள்தான்! இஸ்லாமிய பயங்கரவாதத்துக்குத் தூண்டுகோலாக இருப்பது, இந்திய ஆட்சியாளர்கள் ஏவிவரும் அரசு பயங்கரவாதமும் இந்துவெறி பாசிச பயங்கரவாதமும் தான்! இதனால் ஒருபுறம், இந்துவெறியாட்டம்  அரசு பயங்கரவாதப் படுகொலைகள்; மறுபுறம், இஸ்லாமிய பயங்கரவாத எதிர்த்தாக்குதல்கள் என்ற நச்சு சுழற்சிக்குள் இந்திய நாடும் மக்களும் நிரந்தரமாகச் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.


 பாக். எதிர்ப்பு இந்துத்துவமே இந்திய தேசியம் என்பது தவறு; அதேபோல, அல்லாவின் ஆட்சியை நிறுவும் புனிதப் போர் என்பதும் தவறு. இரண்டுமே மதவெறி பயங்கரவாதத்துக்கு இந்த நாட்டையும் மக்களையும் பலியிடுவதாகும். முன்னதற்குச் சான்று குஜராத்; பின்னதற்குச் சான்று மும்பை. இரத்தத்தை இரத்தத்தால் கழுவ முடியாது என்பதையே இவை நிரூபித்துக் காட்டுகின்றன.