வேலனை மத்திய மகாவித்தியாலைய பிரான்ஸ் பழைய மாணவர் சங்க 13.2.2000 இல் நடத்திய வருடந்த நிகழ்ச்சியில், "விஞ்ஞான வளர்ச்சி மனிதனின் அமைதியான வாழ்க்கையை பாதிக்கின்றதா?"
என்ற தலைப்பில், பட்டிமன்றம் ஒன்று நடை பெற்றது. இந்த விடையம் மீதான மாற்று அபிராயங்கள் மூலம், உங்கள் சமூக அறிவை சிந்திக்க துண்டுவதே எனது நோக்கமாகும்.
விஞ்ஞானம் என்றால் என்ன? என்ற கேள்வி எழுப்பபடாத நிலையில், விஞ்ஞானம் பற்றிய தவறான அபிராயம், சார்பாகவும் எதிராகவும் மாறிவிடுகின்றது. இந்த கேள்வி பற்றி நாம் ஆராய்வோம்.
இயற்கையில் மனிதன், இயற்கை சார்ந்து வாழ்ந்த காலகட்டம்; பற்றி இன்றைய அறிவியல், குரங்கு நிலை என்று வரையறுக்கின்றது. இது குரங்கு மனிதனுக்கு முந்திய நிலை. குரங்கில் இருந்து குரங்கு மனிதனும், குரங்கு மனிதனில் இருந்து மனிதனும், பரிணாம் அடைந்த நிலை பற்றிய தெளிவான மாற்றம், மனிதனின் உழைப்பே ஆதாரமாக காணப்படுகின்றது. மனிதன் இயற்கையை கடந்து, இயற்கை மீதாக உழைப்பின் மூலம் செயற்கையாக தனது தேவையை அடையத் தொடங்கிய வடிவம்தான், மனிதனை குரங்கில் இருந்து பிரித்தெடுகின்றது. மனிதன் இயற்கை மீது தனது உழைப்பை கையாளத் தொடங்கிய முதல் வடிவமே, விஞ்ஞானத்தின் ஆதி மூலமாகும்.
உதாரணமாக கைகளை கொண்டு தடியை வளைக்க, ஊன்று கோலாக பயன்படுத்த, தடிமூலம் பாரங்களை தூக்க, பொருளை புரட்ட, எதிரியை அடிக்க, உணவை பிடிக்க, தோண்ட.... எனன என்னற்ற வகையில், மனிதன் தனது முதல் உழைப்பின் வடிவங்களை கையாண்ட போதே, அது விஞ்ஞானத்தின் மையமாக இருந்தது. விஞ்ஞானத்தை நிராகரித்த மனித வாழ்வு என்பது, இயற்கையை மட்டும் சார்ந்து வாழும் மிருக வாழ்க்கையே ஆகும்.
அனைத்து மனிதனும் தனது முதல் வாழ்வியல் போராட்டத்தில் அனைவரைப் போல பாட, ஆட, உழைக்கவும், பொருளைக் கண்டறியும் விஞ்ஞானியாகவும் திகழ்ந்தனர். இந்த வாழ்வியல் இயற்கை சார்ந்து, இயற்றை மீது உழைக்கும் வடிவத்தில் ஏற்பட்ட வேலைப் பிரிவினைதான், மனித பிளவின் முதல் பிளவுயாகும். இந்த வேலைப் பிரிவினை பொதுவான மனித உழைப்பை தாண்டி, நூட்பமான வகையில் தனிப்பிரிவுகளை உருவாக்கியது. இதுதான் சிறப்பான விஞ்ஞானிகளையும், கலைஞர்களையும் என பல்வேறு துறைசார்ந்து பிளiவின் ஊடாக, தனித் தன்மைகளை வெளிப்படுத்தியது. இந்த தனித்தன்மை கொண்ட, சிறந்த ஒரு துறை சார்ந்தவர்கள், படிப்படியாக மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு, மக்கள் காரணம் தெரியாது பயன்படுத்திய விஞ்ஞான அறிவியல்களை, தமது ஆய்வு கூடத்தில் பரிசோதித்து தனது கண்டுபிடிப்பாக நிலைநாட்டவும், தனது கண்டுபிடிப்பாகவும் உரிமை கோராவும் தொடங்கினர். உதாரணமாக வேப்பம் மரம் சார்ந்து நாம் பயன்படுத்தும் பல்துறை சார்ந்த அறிவில், இதுபோல் மஞ்சள் சார்ந்த அறிவியல், மக்களின் நீண்ட வாழ்வியல் அனுபவத்தின் விஞ்ஞான கண்டுபிடிப்பாக இருந்தது. ஆனால் இன்று அதை அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் உலகம் தழுவிய பன்நாட்டு கம்பனிகள், தமது கண்டுபிடிப்பாக, ஆய்வுகூட பரிசோதனையுடாக காரண காரியத்தின் விளைவை விளக்கி உரிமை கொண்டாடுகின்றன. இந்த உரிமைக்காக, நாம் வேம்பு மஞ்சள் சார்ந்த மருந்து மற்றும் பல்துறை சார்ந்த கண்டுபிடிப்புக்கு, மறைமுகமாக "கண்டுபிடித்தாக" உரிமை கோரும் நிறுவனத்துக்கு வரிகட்டுகின்றோம். இப்படி மக்களின் விஞ்ஞான அறிவியல் சிலரின் கண்டுபிடிப்பாகி, தனிநபரின் மூலதனமாகின்றது.
விஞ்ஞானம் மக்களின் வாழ்வியல் அனுபவங்களில் இருந்தும், தற்செயல் நிகழ்வுகளிலும், இயற்கை அவதானிப்பில் இருந்துமே உருவாகின்றது. விஞ்ஞானத்தை, அது சார்ந்த அறிவியலை பிறப்பின் முன்பிருந்தே மனிதன் பெற்றுவிடுவதில்லை. மனிதனின் வாழ்வியல் அனுபவத்தில் இருந்தே, இவை பிறக்கின்றது. இந்த மக்களின் வாழ்வியல் அனுபவத்தை மறுத்து தனிநபரின் கண்டுபிடிப்பாக மாற்றிய போது, கண்டுபிடிப்புகள் கூட வசதியானவனின் கண்டுபிடிப்பாக மாறிவிடுகின்றது. கண்டுபிடிப்புகள் பணச் செலவு கொண்ட ஆய்வு கூட வசதி தேவைப்படும் போது, கண்டுபிடிப்பும் வசதியை சார்ந்து விடுகின்றது. விஞ்ஞானம் வசதியை சராச்சரா, அது வசதியான நாட்டைச் சார்ந்து விடுகின்றது. இந்த கண்டு பிடிப்புக்கு மறைமுக வரி மற்றும் நேரடி வரி அறவிடப்படுவதால், விஞ்ஞானத்தின் விளைவுகளை பயன்படுத்தும் மக்கள் மேலும் எழ்மையை நோக்கிச் செல்லுகின்றனர். விஞ்ஞானம் என்பது இன்று வசதியானவனின் நோக்கத்தை பூர்த்தி செய்பவனாகி விடுகின்றது. இது விஞ்ஞானத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும், எல்லைக் கோடாகி விடுகின்றது. விஞ்ஞானம் மக்களிடம் இருந்து அன்னியப்பட அன்னியப்பட, விஞ்ஞானத்தின் விளைவுகளும் மக்களிடம் இருந்து அனியப்படுகின்றது. விஞ்ஞானம் படிப்படியாக மக்களை அடக்கியொடுக்கும் ஊடாகமாக மாறிவிடுகின்றது.
மனிதன் குரங்கில் இருந்து உருவானவன் என்ற போதும், சிலர் கடவுள் தோற்றுவித்தார் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். இந்த இரு போக்கிலும் மக்களின் நிலையைப் பார்ப்போம். உலகம் தோன்றிய பொழுதும், மனிதன் உருவான போதும் இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் இயற்கையில், மக்களின் பயன்பாட்டில் பொதுவாகவே இருந்தது. உலகில் உள்ள எல்லாச் செல்வமும் பொதுவாக, மக்கள் கூட்டத்திற்கு பொதுவாக இருந்ததே ஒழிய, தனிநபர் சொத்தாக என்றும் இருந்ததில்லை. மக்கள் கூட்டத்தின் முன் பொதுவாக இருந்த பொருட்கள் (சொத்து) எப்படி தனிமனித சொத்தாக மாறியது? இயற்கையிலான ப+மிக்கும், அதில் உள்ள பொருட்களுக்கும் எல்லை போட்டு இது உன்னுடையது, இது என்னுடையது என ஏற்பட்டது எப்படி? எப்படி சிலரிடம் சொத்துக் குவிந்தன? இவையே மனித சமுதாயத்தின் அவலத்திற்கு அடிப்படையாகும். இதுவே விஞ்ஞானத்தின் சபாக்கேடாகும். இங்கு திறமையோ, வீரமோ, வல்லமையோ அல்ல, மாறாக மனிதனை, அவனின் உழைப்பை அபகரிப்பதன் விளைவே, சொத்துக்கள், அறிவியல் மற்றும் அதன் விளைவுகள் இன்று தனிமனிதனுக்கு சொந்தமாகக் காரணமாகின்றது. இன்று உலகில் உள்ள எந்தப் பொருளை எடுப்பினும் அவை இயற்கையில் இருந்து எடுத்த பொருட்களின் தொகுதியே ஒழிய, வேறோன்றும் அல்ல. இயற்கையில் இருந்து எடுத்த பொருட்களின் மீது மனிதனின் உழைப்பு (செயற்பாடு) பொருட்களை மாற்றி மீட்டெடுக்க வழிகோலியது. உழைப்பு இல்லாது எந்தப் பொருளையும் மனிதன் பெற முடியாது. இந்த உழைப்பின் காரணகாரிய விளக்கமே விஞ்ஞானமாகும்.
இந்த உழைப்பையும், உழைப்பின் காரண காரிய தொடர்பை விளக்கும் விஞ்ஞான சூத்திரங்களையும், மக்களிடம் இருந்து ஏமாற்றி அபாகரித்து, அதிக உழைப்பை, அறிவை யார் ஒருவன் கூடுதலாக ஏமாற்ற முடிந்ததோ, அவன் தான் பொதுச் சொத்தை தனதாக்க முடிந்தது. இது தான் உலக அவலத்திற்கு அடிப்படையாகும்.
இயற்கையில் எல்லாப் பொருளும் பெறுமதியற்றவை. உண்மையில் அதன் பெறுமதி பூச்சியமே ஒழிய, தனியாக அதற்கு பெறுமதி இருப்பதென்பது மனிதனை ஏமாற்றுவதாகும். ஏனெனில் எல்லாப் பொருட்களும் பெறுமதி அற்ற, இயற்கையின் விளைவே ஆகும். இயற்கையில் எடுக்கும் எல்லாப் பெறுமதி அற்ற பொருட்களின் மீது ஏற்படுத்தும் மாறுதல், மனித உழைப்பு மூலம் நகர்த்தப்படுகின்றது. மனித உழைப்புத்தான் அப்பொருளை மனிதனின் பயன்பாட்டிற்கு இயற்கையில் இருந்து மாற்றி அமைக்கிறது. இந்த பயன்பாட்டுப் பொருட்களின் மீதான உழைப்பு சக்திதான், ஒவ்வொரு பொருட்களுக்கும் வேறுபடுகிறதே ஒழிய, அப்பொருட்களின் பெறுமானம் எப்போதும் பூச்சியம் தான். எல்லோரும் உழைப்பார்களாயின், உழைப்பின் பயன்பாடு பூச்சியமானது. இயற்கையில் இருந்து சேகரிக்கும் பொருட்களின் பெறுமானம் பூச்சியமாகவும் உள்ளது. எனவே எல்லோரும் உழைக்கும் போது, உழைப்பு சமனாகி, உற்பத்தியின் பின் பொருட்களின் விலையும் பூச்சியமாகின்றது. இன்று உடல் உழைப்பில் ஈடுபட மறுப்பின், அல்லது அது நின்று போயின் உலகத்தில் எந்தப் பொருளையும் பெற முடியாது போய்விடும். முளை உழைப்பு எப்போதும் உடல் உழைப்பைச் சார்ந்தே உள்ளது. இருந்து போதும் இன்று மூளை உழைப்பு உடல் உழைப்பைவிட முன்னுக்கு உள்ளது எனின், அது உடல் உழைப்பில் ஈடுபடுபவரின் உழைப்பை சுரண்டி மறைக்க செய்யும் சதியாகவே உள்ளது. உலகில் அமைதி என்பது பெறுமதியற்ற இயற்கையின் பொருள் மீதான, எல்லா மனிதனின் உழைப்பையும் பயன் படுத்திக் கிடைக்கும் பெறுமதியற்ற பொருளை, தேவையுடன் பயன் படுத்தும் உலகம் தோன்றும் போது தான், உண்மையில் சமாதானம் உருவாகும். இங்குதான் விஞ்ஞானத்தை மக்கள் நலன் சாhந்து பயன்படுத்துவது நிகழும். இல்லாத வரை மக்கள் தமக்குள் மோதுவது தவிர்க்க முடியாத நிகழ்வாக உள்ளது. இதை ஆதார பூர்வமாகப் பார்ப்போமாயின் மதங்கள் கூறுகின்றன, ஆண்டவன் செல்வத்தைக் கொடுக்கிறான். எனவே ஆண்டவனை வணங்குங்கள் என்கின்றன. ஆண்டவனே பூமியையும் அதன் செல்வத்தையும் படைத்ததாகக் கூறும் மதங்கள், அந்த செல்வத்தை தனிமனிதனுடையதாக எந்த ஆண்டவன் எப்போது ஏற்படுத்தினான் என விளக்குவது இல்லை. ஆண்டவன் படைத்தாக கூறும் செல்வத்தை, வழிபாடு மூலம் தனிமனித சொத்தாக சூறையாட முடியும் எனக் கூறுவது ஏன்?. இது எந்த மதத்திற்கும் விதிவிலக்கல்ல. வழிபாடுங்கள் எல்லாம் கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றும் மதம், நாட்டுக்கு நாடு உள்ள ஏற்றத் தாழ்வை விளக்குவதில்லை. ஆண்டவன் நாட்டுக்கு நாடு ஏற்றத் தாழ்வைத் தந்துள்ளதாக அல்லவா அர்த்தப்படும். இதுபோல் உள்ள பல ஏமாற்றங்களைக் காணமுடியும்.
விஞ்ஞானம் பற்றிய அறிவியல் இன்று செல்வந்த நாடுகளில், செல்வந்தர்களின் சொத்தாக இருப்பதனால், அது மக்களுக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது. விஞ்ஞானம் மக்களின் வாழ்வை வளப்படுத்துவதற்கு பதில் சிலரின் சொத்துக் குவிப்புக்கு உதவுவதாக மாறிவிடுகின்றது. வசதியானவன் தனது செல்வத்தை பெருக்க விஞ்ஞானத்தை தனது கருவியாக்கின்றான். மக்கள் தொடர்ச்சியாக விஞ்ஞானத்தில் இருந்து அன்னியமாகின்றனர். விஞ்ஞானம் மக்களை கண்காணிக்க, அடக்கியாள, மக்களின் அறியாமையை ஏற்படுத்த, சூனியமான மனித மிருங்களை உருவாக்க பயன்படுகின்றது. மக்களின் நலன் சார்ந்து, மக்களின் வாழ்வை இலகுபடுத்த விஞ்ஞானம் பயன்பட வேண்டுமாயின், விஞ்ஞானம் மக்களின் சொத்தாக வேண்டும். விஞ்ஞானம் தனிமனித நோக்கத்தை பூர்த்தி செய்வதை கடந்து, சமூகத்தின் நலன்னை தேவை பூர்த்தி செய்யும் வகையில் சமுதாயம் மாற்றப்பட வேண்டும். இல்லாத வரை விஞ்ஞானம் ஆக்கத்தை விட, அழிவையே மூலதனமாக கொள்கின்றது. இன்றைய சமுதாயத்தில் விஞ்ஞானம் மனிதர்களின் சமுதாய நலனை அடிப்படையாக கொண்டு ஆக்கத்தை முன்னிறுத்த தவறி, தனிமனிதர்களின் நலன்களை முதன்மைபடுத்தி, அழிவை கொண்டு மூலதனத்தை ஆக்கின்றது. இது விஞ்ஞானத்தில் தவறல்ல. இவை மனிதனின் தவறு. விஞ்ஞான வளர்ச்சி மனிதனின் அமைதியான வாழ்க்கையை பாதிக்கின்றதா? எனின் இல்லை. மாறாக விஞ்ஞானம் யாரின் கையில் எந்த சமூகம் சார்ந்து கணப்படுகின்றதோ, அதனால் சமூகம் பாதிக்கப்படுகின்றது. விஞ்ஞானம் உயிலுள்ளவையல்ல. விஞ்ஞானத்தை தவறாக பயன்படுத்தும் மனிதன் தான், அதை தனது மூலதனத்தை பெருக்கும் நோக்கில் துஷ்பிரயோகம் செய்கின்றான். அதாவது மனிதனின் தனிநபர் நலன்கள், ஒட்ட மொத்த சமுதாய நலனுக்கு எதிராக இருப்பதே இதன் அடிப்படையாகும். விஞ்ஞானம் ஆக்கத்துகுக்கும், அழிவுக்கு தானாக சுயட்சையாக வழிகாட்டவில்லை. மனிதனின் சமுதாய நோக்கம் அழிவை நோக்கி விஞ்ஞானத்தை நடத்திச் செல்லுகின்றது. விவாதம் மனிதன் விஞ்ஞானத்தை சரியாக கையாளுகின்றான இல்லையா என்பதே. அதாவது மனிதனின் சமுதாய நோக்கம் சரியானதா இல்லையா என்பதே, இங்குள்ள விவாதமாகும். தனிமனித சமூக நோக்கமே விஞ்ஞான வளர்ச்சியை தவறாக பயன்படுத்தி, மனிதனை பிளந்து வாழ்க்கையை போராட்டமாக்கிவிட்டான். பேராட்டத்தில் மக்களின் சமூகநலன் வெற்றி பெறும் போது, மனிதனின் அமைதியான வாழ்க்கை ஒட்டுமொத்த சமூக நலன்கள் மீது ஏற்படும்.