அமெரிக்க சரித்திரத்தில் முதல்தடவையாக தொழிலாளர்கள் ஒரு தொழிற்சாலையை தமது உடமையாக்கியுள்ளனர். அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் இயங்கி வந்த, "Republic Windows" என்ற தொழிலகம் அண்மைய நிதிநெருக்கடி காரணமாக, நஷ்டத்தில் நடத்த முடியாமல் இழுத்து மூடிவிட்டது.
தொழிற்சாலை நிர்வாகம் கடந்த டிசம்பர் 5 ம் திகதியன்று, அதாவது கடைசி வேலை நாளன்று, வேலை செய்த அனைத்து தொழிலாளருக்கும் 3 நாள் நோட்டீஸ் கொடுத்து பணி நீக்கம் செய்தது. சட்டத்திற்கு மாறான இந்த திடீர் பணி நீக்கத்தை எதிர்த்த தொழிலாளர்கள், தொழிற்சாலையை விட்டு விலக மறுத்து, அங்கேயே தங்கி விட்டனர். நிர்வாகத்தை வீட்டிற்கு அனுப்பி விட்டு, தொழிலாளர்கள் தொழிற்சாலையை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
கடந்த காலங்களில் ஜெர்மனியில் நடந்தது போல தொழிலாளர்கள் தொழிற்சாலையை எடுத்து நடத்துவார்களா? என்பது தெரியவில்லை. ஆனால் இன்று வரை தொழிலகத்தை ஆக்கிரமித்து மறியல் செய்யும் தொழிலாளருக்கு, அவர்கள் அங்கம் வகிக்கும் United Electrical, Radio and Machine Workers of America (UE)என்ற தொழிற்சங்கம் பக்கபலமாக இருக்கின்றது. தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் லத்தீன் அமெரிக்க கண்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு புஷ் வழங்கிய 700 பில்லியன் உதவித் திட்டத்தின் கீழ் லாபமடைந்த "Bank of America" வங்கி தான், இந்த நிறுவனத்திற்கு இவ்வளவு காலமும் கடன் வழங்கி வந்தது. ஆனால் தன்னை காப்பாற்றிக் கொண்ட வங்கி, சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்திற்கு கடன் கொடுக்க மறுத்து விட்டதாகவும், அதனாலேயே தொழிற்சாலையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதை நம்பிய தொழிலாளர்கள் டிசம்பர் 3 ம் திகதி, சிக்காக்கோ நகரில் உள்ள வங்கி காரியாலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களது குறைகளை கேட்டறிந்த வங்கி, தொழிற்சாலை நிர்வாகத்தை பேச வருமாறு அழைத்து. ஆனால் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் அங்கே சமூகமளிக்க மறுத்து விட்டனர். அதற்கு எதிர்வினையாகவே, தொழிலாளர்கள் தொழிற்சாலையை தமது உடமையாக்கியுள்ளனர். நிர்வாகம் பல கோடி டாலர் பணத்தை திருடியிருக்கலாம் என்று வதந்தி ஒன்று பரவியதால், தொழிலாளர்கள் தொழிற்சாலை கணக்கு புத்தகங்களை பரிசோதித்துள்ளனர். சிக்காகோ தொழிலாளர் போராட்டம் இன்றுவரை(நான்காவது நாளாக) தொடர்கின்றது. நிதிநெருக்கடி காரணமாக அமெரிக்கா முழுவதும் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். தமது உரிமைக்காக எப்படி போராடுவது என்பதைக் காட்டிய சிக்காகோ தொழிலாளர்கள், அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு:
Workers, facing shutdown, take over Chicago factory building