12062021தி
Last updateச, 09 அக் 2021 9am

உங்களுடன் சமர்

தமிழீழப் போராட்டம் தேக்க நிலையடைந்து, தற்காப்பு யுத்தத்தில் ஈடுபட்டிருந்து. த-ஈ-வி-புலிகளும் ஜ-தே-க- அரசும் பல தடவைகள் பேச்சுவார்த்தை நாடகம் காட்டியதையும் மக்கள் அறிவார். இதில் ஒரு கட்ட தொடர்சியான தற்போதைய பொலிஸார் விடுதலையும், பொருளாதார தடைநீக்கமும் மக்களுக்கு வித்தை காட்டுவது போல் காட்டப்படுகின்றன.

 

ஒரு கொத்து அரிசி 50 ரூபா விற்கும் நிலையும் மக்களின் அவலமும் சற்றேனும் நகரவி;ல்லை. எது எப்படி இருந்தபோதிலும் த-வி-பு- அதிகாரிகளுக்கு பொருட்கள் வந்து சேர்ந்து விட்டன. இச் சூழ்நிலையிலேயே சமர் தனது 8 இதழை வெளியிடுகின்றது.

 

தீவிர இடதுசாரிகள்! கறாரானபோக்கு! போன்ற பதங்களால், ஜரோப்பிய விமர்சகர்களால் சாடப்படும், சில மனிதத்துவவாதிகளால் நாம் பண்பற்றவர்களாக ஒரு பக்க நியாயம் கூறப்பட்டும், எந்தவொரு மக்கள் போராட்டத்துக்கும் பொருளாதார முன் நிபந்தனை அவசியமில்லை, என்று விவாதிக்கும் திரிபுவாதிகள், மக்களை மூளைச்சலவை செய்வதையும் எதிர்கொள்ளும் சமர் அறிவுபூர்வமாகவும், பொருள்முதல்வாத நோக்குடனும், கருத்துக்களை முன்வைத்து தொடர்ந்தும் விவாதிக்குமென்பதை சமர் வாசகர்களுக்கு கூற வேண்டிய நிர்ப்பந்தம் இச்சூழ்நிலையில் எமக்குண்டு. இன்றைய நிலையில் ஜனரஞ்சகமான பாணியில் நேர்மையான புரட்சிகர அரசியல் நடத்த முடியும் என்பதில் சமருக்கு உடன்பாடில்லை.

 

பேச்சில் ஒன்று, எழுத்தில் ஒன்று, இசைவானோர் மத்தியிலிலொன்றும் பேசி எதிர்காலத்தில் எலும்புத்துண்டுகளை எதிர்பார்த்து அரசியல் கட்சிகளில் தங்கள் பெயரை பதிவு செய்தவர்களும், ஜரோப்பிய அரங்கில் முற்போக்குப் பிரமுகர்களாக வேடமிட்டுத் திரிவோரையும், தொடர்ந்து அம்பலப் படுத்த சமர் உறுதி பூண்டுள்ளது.

 

இச் சேவையினுடாக ஆரோக்கியமானதோர் ஜக்கிய முன்னணியைக் கட்ட சமர் தனது பங்களிப்பைச் செய்ய முனைவதை தனது கடமையாகவே கருதுகின்றது. திரிபுவாதத்துக்கெதிரான போக்கில் எவ்வித ஈவிரக்கமற்ற போக்கையும், அனைத்துப் போராட்டங்கட்கும், வர்க்கப் பார்வையை முதன்மைப்படுத்தி, பாட்டாளிவர்க்க சிந்தனையை மக்களை முன்னணிப் படையாக்கும் பணியில் சமர் முன்னோக்கி பயணிக்கும் என்பதையும் கூறி வைக்கிறோம்.