நித்தியானந்தன் அ-ஆ-இ 13 இல் தற்கொலையை வீரம், தியாகம் எனக் கூறியது மட்டுமின்றி சமர் மீதும் மார்க்சிசத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் மீதும் பெயர் குறிப்பிடாத தாக்குதலை நடாத்தியுள்ளார். இது போன்று சிவசேகரமும் சுவடுகள் 44 இலும் வேறு சஞ்சிகைகளிலும் மார்க்சியத்தின் மீது தாக்குதலை நடாத்தியுள்ளார். தற்கொலையை ஒட்டிய கருத்தை ஆராய முன்பு இவர்கள் மார்க்சிசத்தின் மீது தாக்குதல் நடத்தும் பாணியை ஆராய்வோம்.

 

நித்தி தனது கட்டுரையில் மார்க்சிசத்தை உயர்த்தி பிடிப்பவர்கள் அறிவிலிகள், மூடர்கள் எனக் கூறி தனது மார்க்சிச விரோத உணர்வை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். எந்த மனிதனும் எந்த வர்க்கம் சார்பானவனோ அதன் மீது அறிவைக் கொண்டுள்ளனர். ஒருவனைப் பார்த்து அறிவிலி, மூடர்கள் எனச் சொல்வது என்பது பேராசிரியர்மாருக்குரிய அகங்காரத்தன்மையிலிருந்தே. அது தான் பேராசிரியர்கள் தமது பெயருடன் பேராசிரியர் என்ற பட்டத்தையும் இணைத்து மற்றவர்களை மந்தைகளாக இருக்க தாம் மேய்ப்பவர்களாக இருக்க விரும்புகின்றனர். நித்தியானந்தன் மார்க்சியத்துக்கெதிராக இன்றல்ல புலிகளில் இருந்தபோதே தாக்குதலைத் தொடுத்தவர். அன்று செந்தோழர் என கவிபாடியும் (வசைபாடியும்) பசைவாளிகள் என நையாண்டி செய்தும் (இவை விடுதலைப்புலிகளின் பத்திரிகையில் வெளிவந்தவை) பின் ரஜனி திராணகமவின் நினைவுக் கூட்டத்தில் ஆரம்பத்தில் மார்க்சிசத்தின் மீது தாக்குதலை நடத்தி...... தனது எதிர்ப்புரட்சி வர்க்கத்துக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறார்.

 

இவர் விடுதலைப்புலிகளின் பத்திரிகையில் கைதிகளை சித்திரவதை செய்யாதே எனப் பத்துக்கு மேற்பட்ட மாவோவின் கோட்பாட்டை அன்று போட்டு மக்களை ஏமாற்ற முனைந்தவர். இப்படிப் பல. பரீஸ் இலக்கியச்சந்திப்பில் மார்க்ஸ், பெண் உழைப்பு பற்றி கூறவில்லை மாறாக ஆண் உழைப்பு பற்றி குறிப்பிட்டதாக பொய்யைக் கூறி சபையின் கைதட்டல்களைப் பெற்றுக்கொண்டார். இன்று இக்கட்டுரையில் மாவோ மாபெரும் புரட்சியாளனாக கூறியபடி மாவோவை துணைக்கு அழைத்துள்ளார். இவர் அ-ஆ-இ இதழ் 12 இல் இலக்கிய சந்திப்பு தொடர்பாக எழுதிய மொட்டைக் கடிதத்தில் (இது அ-ஆ-இ இல் பிரசுரிக்கப்பட்டது.) இப் பத்திரிகையில் தத்துவாயுதம் செய்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்து சமூகத்தை ரட்சித்து விடப் போவதாக சில சூனியங்கள் பிதற்றுவதிலிருந்து எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் தத்துவம் எழுதுவதை தமது பிழைப்புக்காக என்பதையும் தனது எதிர்ப்புரட்சி சேவையையும் ஏற்றுக் கொண்டுள்ளார். எம் மண்ணை உண்மையில் நேசிப்பவர்களை சூனியங்களாக காட்டி தமது மேதாவித்தனத்தை தேசவிடுதலைப் போராட்டத்திற்கு எதிராக பயன்படுத்திப் புலிகளைப் பாதுகாக்கின்றார். அன்று புலிகளிலிருந்த போது தேடிய தற்கொலைக்கான ஆதாரத்தை இன்று முன் வைத்துள்ளார். புலிகளின் தற்கொலையைக் கோழைத்தனமென மக்கள் முன் சொல்லின் புலியின் வீழ்ச்சியை கண்டு அஞ்சி முண்டியடித்து புலிககாக குரல் கொடுத்துளளார். அவர் மீது நாம் வைத்த முநதைய விமர்சனங்கள் எதற்கும் பதிலளிக்க முடியாதவர் புலிகள் பாதிக்கப்படும் போது சிவரமணியைச் சொல்லி புலிக்கு வக்காலத்து வாங்குகின்றார்.

 

பேராசிரியர் சிவசேகரம், நாம் சுவடுகள் இதழ் 43 இல் எழுதிய தற்கொலையை ஒட்டிய கருத்துகளுக்குப் பதிலளிக்காமல் தாக்குதலை நடத்தியுள்ளார். எம்மை செம்மஞ்சள் பத்திரிகையென குறிப்பிட்டு தனது கருத்தை வாதிடும் பலத்தை இழந்துள்ளார். இவர் அ-ஆ-இ- இதழில் கருக்கலைப்பு தொடர்பாக எழுதும் போது எம்மை இடதுசாரி குழு எனக் குறிப்பிட்டு தான் இடதுசாரிகளுக்கு எதிரானவர் என்பதை அக் கட்டுரையினூடாக தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் தாக்க முற்பட்டவர் சுவடுகளில் இடதுசாரிக்குழுவை செம்மஞ்சளாகத் தாக்கி தனது அந்தரமான நிலையைக் காட்டிக்கொண்டார். இவர் பல பத்திரிகைகளில் மார்க்சியத்தை உயர்த்துபவர்களைத் தாக்கி வருகின்றார். அதில் அதிதீவிர புரட்சியாளர்கள் எனச் சொல்லுகிறார். அப்படியாயின் அது என்ன? புரட்சியாளருக்கும் அதிதீவிரபுரட்சியாளருககும் என்ன வேறுபாடு? இப்படி சட்டம்பித்தனம், மேதாவித்தனம்,அதிமேதாவித்தனம், புரட்சி ஏற்றுமதியாளர், அதிதீவிர மார்க்ஸிட் எனப் பல. இவரின் எதிர்ப்புரட்சி பிழைப்புவாத நோக்கிலான இச் சொற்கள் விளக்கமற்ற சொற்றொடர்களே.

 

இனி நாம் கட்டுரையை ஆராய்வோம். பேராசிரியர் எழுதிய கருத்தில் ஜேர்மனிய இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவர் மீதும் வேறொருர் மீதும், சமர் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளார். மார்க்சிசத்தை கதைத்தோர் அறிவிலிகள் எனக்கூறி தனது பெரும் பூர்சுவாத்தன்மையை பாராட்டிக் கொண்டார். இவர் பலரின் கட்டுரையை ஆதாரத்துக்காக முன்வைத்தவர், அவைகளை எந்தப் புத்தகத்தில் எடுத்தார் என்பதை முன்வைக்கத் தவறியுள்ளார். இவைகள் உண்மையாக இருக்கலாம். ஆனால் நித்தியானந்தனின் எழுத்தில் நம்ப முடியாத தன்மையுள்ளது. காரணம் முன்பு ஒரு கூட்டத்தில் மார்க்ஸ் பெண் உழைப்பைப் பற்றிக் கூறவில்லை எனப் பொய்யைக் கூறி கைதட்டு வாங்கியவரே. ஒரு கட்டுரையில் வேறு யாருடைய கருத்தை முன்வைக்கும் போதும் ஆதாரத்தையும் முன் வைக்கவேண்டும். ஏனெனில் முன்னுக்கும் பின்னுக்கும், இடையிலும் கருத்தை சிதைத்துச் சொல்லாத ஒன்றை கற்பனையில் சொல்லி வாங்குபவர்கள் இப் பேராசிரியர்மார்களே.

 

கத்தோலிக்கத் திருச்சபை தற்கொலையைக் கண்டிப்பதாகக் கூறியவர் தொடர்ந்து பைபிளின் தற்காலை செய்ததற்கான ஆதாரத்தை முன் வைத்துள்ளனர். ஒன்றுக்கு ஒன்று முரணான இந் நடவடிக்கை கற்பனாவாத உலகைக் கோருவதே. தற்கொலை பற்றிப் பலர் கருத்தை தொடுத்தவர் மொத்தத்தில் தற்கொலையை நியாயப்படுத்த முனைந்துள்ளார். தாம் தற்கொலையை ஊக்குவிப்பவர்கள் அல்ல எனக் கூறியபடி கண்டிக்க மாட்டோம் எனக் கூறியபடி இரட்டைத் தன்மையுடன் தற்கொலையை ஊக்குவிக்கின்றார். இது ஏன்? இன்று தற்கொலையை நாடி நிற்பவர்கள் இச் சமூக அமைப்பின் மீதான தாக்கத்திற்கு உள்ளானவர்களே. இவர்கள் இச் சமூக அமைப்பிற்கெதிராகப் போராடி இச் சமூக அமைப்பை மாற்றப் போராடும் நடவடிக்கை என்பது இப் பேராசிரியர்மார்களின் பெரும் பூர்வுசுவா கனவுக்களுக்கெதிரானதே. ஒரு புரட்சியைக் கண்டு நடுங்கிச் சாகும் இவர்கள் அப் புரட்சியளார்கள் இறந்துபோகக் கோருகின்றார்கள். இது ஒரு எதிர்ப்புரட்சி நடவடிக்கை, புரட்சியாளர்கள் தற்காலை செய்து சமூகத்தை மாற்ற முடியுமென ஊக்குவிப்பவர்கள் அல்ல. ஆனால் கண்டிக்க மாட்டோமெனக் கூறி மறைமுகமாக ஊக்குவித்தபடி இச் சமூக அமைப்பையும், ஏகாதிபத்தியத்தையும் காப்பாற்றுகின்றனர்.

 

இவ் விவாதத்திற்கு மாவோவின் எழுத்துக்களை ஆதாரமாக முன்வைத்துள்ளனர். மாவோவின் கருத்தை எங்கே எடுத்தார் என்ற ஆதாரத்தை முன்வைக்கவில்லை. ஆகவே நித்தியானந்தன் குறிப்பிட்ட கருத்து மட்டுமா மாவோவின் கருத்தென தெரியாதுள்ளது. இப் பெண் 1919 இல் தற்கொலை செய்திருந்தபடியால் மாவோவின் அப்போதைய வயது 25 மட்டுமே. 1919 மே மாதமே மாவோ முதன் முதலாக அரசியலில் பிரவேசித்த காலம் கூட. மாவோவின் இளமைக்கால எழுத்து சமூக விஞ.ஞானமாக முழுமையாக ஏற்று வெளிவந்திருக்க முடியுமா? என்ற வாதத்தை இக்கட்டுரை ஏற்படுத்திவிடுகின்றது. ஏனெனில் பின்னைய எழுத்துக்கள் முன்னைய எழுத்துகளுக்கு முரணானது. நாம் மாவோவின் ஆரம்ப எழுத்துக்களைப் பார்க்கவில்லை. ஆனால் நாம் எங்கெல்சின் எழுத்துக்களைப் பார்த்த போது அவரின் ஆரம்ப எழுத்துக்கள் பின்னைய எழுத்துக்களுக்கு முரணானதாகப் பலவுள்ளன. இன்று மார்க்சியத்துக்கு எதிராக எங்கல்ஸ்சின் பழைய எழுத்துக்களை முன் வைப்பவர்கள் பரிணாம விதியை நிராகரிப்பவர்களே.

 

1921 இல் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவான போதும் 1919 இல் மாவோ கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாடுகளில் நின்று இக் கருத்தை வைத்திருக்க முடியாது எனப் பார்க்கலாம். மாவோ 1919 இல் வைத்த கருத்தை ஒட்டி தோழர்களிடம் விமர்சனத்தை கோருகின்றார். இதன் பின் பின் இக் கருத்தை மாற்ற வாய்ப்பு இருந்திருக்கும். இது ஒட்டுமொத்த வடிவாக அன்று மாவோ கருதவில்லையென்பதை விமர்சனம் வைக்கக் N;காரும் போதே புரிந்துகொள்ளக் கூடியதே. மாவோவின் இளமைக்கால தவறான கருத்துக்களை, மற்றும் தவறான நடவடிக்கைகளை கைக்கொள்ள கோருவது பிழைப்புவாதமே. ஏனெனில் ஜரோப்பியக் கூட்டமொன்றில் மாவோவின் பெண் தொடர்புகளைக் கூறி ஜரோப்பிய பிரமுகர் ஒருவர் தன்னை நியாயப்படுத்த முனைந்து கைதட்டுக்களையும் வாங்கிக்கொண்டார். கடந்தகாலத் தத்துவவாதிகள் தமது வாழ்வில் இழைத்த எந்தத் தவறுகளையும் நாம் ஏற்பவர்கள் அல்ல. இப் பிழைப்புவாத பிரமுகர்கள் தத்துவவாதிகளின் சரியான கருத்தை நிராகிரித்தபடி அவர்களின் தவறுகளை மட்டும் எடுத்து தமது பிழைப்புக்கு நியாயம் கொடுக்கின்றனர்.

 

மாவோவின் தற்கொலையை ஒட்டிய கருத்து நித்தி குறிப்பிட்டது போல் அவை தான் எனின் நாம் தற்கொலை மீதான மாவோவின் கருத்தை நிராகரிக்கின்றோம். இனி மாவோவின் இக் கருத்தை ஆராய்வோம். மாவோ குறிப்பிட்ட அப் பெண்ணின் காதலில் ஏற்பட்டிருந்த இரும்புத்திரை அப் பெண்ணுக்கு மட்டுமா சீனாவிலிருந்தது? இல்லை மாறாக சீனா முழுக்க இதுவே நிலைமையாக இருந்தபோது ஏன் சீனாவில் முழுப் பெண்களும் தற்கொலையை கூட்டம் கூட்டமாகச் செய்யவில்லை. அங்கு பெண்கள் எதிர்த்துப் போராடுகின்றார்கள். மாவோ இதே கட்டுரையில் தான் தற்கொலையை ஏற்பவனல்ல மாறாக போராடவேண்டும் என்கின்றார். இப ;பெண்ணின் நிலையில் மாவோ இருந்திருப்பின் அங்கு மாவோ போராடியிருப்பாரே ஒழியே தற்கொலை செய்திருக்க மாட்டார். வேறொரு உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். சமர் குழுவில் உள்ள ஒருவர் முன்பு புலிகளின் வதைமுகாமில் சிக்கியபோது கண்கட்டப்பட்ட நிலையிலிருந்த அவரிடம் மாத்தையாவால் கேட்க்கப்பட்ட முதல் கேள்வி தற்கொலை செய்வதைப் பற்றி என்ன நினைக்கின்றாய் என்பதே. இதனூடாக புலிகளே மன உறுதியைப் பரிசோதிக்கும் ஒரு முக்கிய கேள்வியை கேட்டிருந்தனர்.

 

சிறைக்கூடங்களில் இரும்பு வலைக்குள் சிக்குண்டு போயுள்ள எத்தனையோ புரட்சியாளர்கள் தற்கொலை செய்கின்றார்களா? இல்லை அங்கு போராடுகின்றார்கள். எத்தனையோ பேர் அச்சிறையிலிருந்து விடுபட்டு போராடவில்லையா? ஏன் கிட்லரின் வதைமுகாமில் இலட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டபோது (சீனாவில் அப் பெண்ணுக்கிருந்த நிலையை விட மோசமான) யூதர்கள் அங்கும் போராடி இன்று உயிர் வாழவில்லையா?!!! இரும்புத்திரை என வர்ணிக்கும் இச் சமூக ஒழுங்குமுறை எப்போது தகர்க்கப்படுகின்றதோ அதனூடாகவே ஒவ்வொரு மனிதனும் இரும்பு திரையிலிருந்து வெளிவருகிறான். சீனாவில் அப் பெண்ணின் நிலையிலிருந்த பெண்கள் சீனப்புரட்சியுடன் விடுதலை பெற்றனர். ஏன் அப் பெண்ணும் இருந்திருப்பின் புரட்சியுடன் விடுவிக்கப்பட்டிருப்பாள். உலகில் மனிதன் தவிர்ந்த உயிரினம் தற்கொலையை தமது வாழ்வுக்காக மேற்கொள்ளுவதில்லை. அவை இச்சமூக ஒடுக்குமுறைக்கு ஏதிராகப் போராடி சில மடிந்து போகின்ற சில உயிர் வாழ்கின்றன. இதுவே உயிரியல் இயங்கியல் இயக்கம். உயிரினங்கள் மீது ஒன்று மாறி ஒன்றாக எத்தனை இரும்பு வலைகள். இன்று எயிற்ஸ்; நோய்க்கு உள்ளாகியிருக்கும் ஒருவன் மாற்றமுடியாது என கூறி தற்கொலையை நாடின் (இதை வீரம், தியாகம்) நாளை மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின் அவனின் மரணம் அர்த்தமற்றது. மாறாக வாழ்வுக்காக கோழைத்தனத்தை கைவிட்டு உயிர் வாழ வேண்டும். ஒருவனின் தற்கொலைக்காண காரணமாகவுள்ளவை (இங்கு நியாயமானவை மட்டும்) வெறுக்கப்படக்கூடியவையே. ஒரு மனிதன் தற்கொலையை செய்ய முன்பு சமூகத்திற்குப் பங்களிப்பு செய்திருப்பின் அவனின் அப் பங்களிப்பு வீரத்துக்கும், தியாகத்திற்கும் உரியது. அவனின் மரணம் கோழைத்தனத்துக்கும், துரோகத்தனத்துக்கும் உரியது. ஒரு மனிதன் சமூகத்துக்கு சரியாக சில காலமும், பின் துரோக நடவடிக்கையில் சில காலமும் ஈடுபடும் போது அவனின் சரியான காலத்தை சரியாகவும், துரோகத்தனமான காலத்தை துரோகமாகவும் ஆராயவேண்டும். துரோகத்தை சரியாகவோ, சரியை துரோகமாவோ பார்க்கக் கூடாது. இதுபோல் தான் தற்கொலையையும், அவனின் கடந்தகாலப் சமூகப் பணியையும் ஆராய வேண்டும்.

 

ஒரு புரட்சிக்கு தலைமை தாங்கும் ஒருவன் சிறைவாழ்வையும், தலைமறைவு வாழ்வையும் கைக்கொள்கின்றான் எனில், அங்குள்ள நெருக்கடியான இரும்புத்திரை தற்கொலையை நியாயப்படுத்த நியாயமான காரணமாகக் கொள்ளலாமெனில் எல்லாப் புரட்சித் தலைவர்களும் இறந்து போகவேண்டுமா? இப்படி தற்கொலையைச் செய்யின் அப் புரட்சிகர இயக்கத்தை நடுவீதியில் விட்டு துரோகத்தைக் கைக்கொள்கின்றான். தனது கோழைத்தனத்துடன் கூடிய இத் தற்கொலை புரட்சிகரப் போராட்டத்தில் எத்தனை பெரிய இழப்பைச் செய்கிறது. தலைமையை விட கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள் எதிர் நோக்கும் நெருக்கடிகள் அவர்களை தற்கொலை செய்யக் கோர முடியுமா? தலைமை தாங்கியவர்கள் நெருக்கடிகளைச் சொல்லி கூட்டமாக தற்கொலை செய்ய முடியுமா? வீரம் தியாகம் எனச் சொல்லின் வீரம் தியாகம் என்பவற்றுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுகின்றன. இப்படியான இரும்புத் திரையில் உள்ள ஒருவன் தற்கொலை செய்யின் அவனை வீரன் தியாகியெனத் பாராட்டின் அதே இரும்புத்திரையிலுள்ள ஒருவன் தற்கொலை செய்யாமல் போராடின், கோழை, துரோகியெனச் சொல்ல முடியும் தானே. சிவரமணி போன்றோர் தற்கொலைகளை தியாகம், வீரம் எனின் அதே சிவரமணிக்கு உள்ள நிலையிலுள்ளவர்கள் தற்கொலை செய்யாமையை துரோகிகள், கோழைகள் எனச் சொல்லமுடியும். மறுதலையாக எம் மண்ணில் தற்கொலைக்குப் பதில் எதிர்த்துப் போராடுபவர்கள் வீரர்களாகவும், தியாகிகளாகயும் உள்ளனர். இன்று புலிகளின் வதைமுகாமிலுள்ள 5000 கைதிகள் சிவரமணியின நிலையை விட மோசமான நிலையிலுள்ளவர்கள். அவர்கள் தற்கொலையைச் செய்யாது தமது வீரம் நிறைந்த தியாகத்தைப் புரிகின்றனர். புலிகளின் சிறையிலுள்ளவர்களை விட குறைந்த நெருக்கடிகளையே கொண்டிருந்த சிவரமணி தனது தற்கொலையை கோழைத்தனத்துடன் கைக்கொண்டதே. இதற்கு எதிர்மாறாக நெருக்கடிகளைச் சந்திப்பவர்கள் வீரர்களாக வாழ்கின்றனர்.

 

இக் கட்டுரையில் வேறொரு இடத்தில் எதிர்நீச்சல் போட்ட மகத்தான அனுபவத்திலிருந்த சிவரமணிக்கு(பயண முகவர் நிலையம்) முகவரியை கொடுத்திருக்கலாம் எனப் பேராசிரியர் நையாண்டி செய்துள்ளார். இங்கு சிவரமணி போன்றோர் தற்கொலை செய்வதற்கு ஊக்கப்படுத்தி, மேலும் சிவரமணி போன்று மண்ணிலுள்ளவர்களுக்கு தற்கொலையை தீர்வு எனக் கூறி தற்கொலை செய்யக் கோருகின்றார். நாட்டை விட்டு ஒருவன் தப்பித்து வருவது அவனின் கடந்தகால அரசியல் பணியை ஒட்டியேயொழிய பிழைப்புக்காகவல்ல.

 

மாவோ அப் பெண் தற்கொலை செய்வதற்குக் காரணமாக இருந்த மூன்று காரணங்களை முன் வைத்தார். இது 1921 இல் உருவான கம்யூனிஸ்ட கட்சியின் அடிப்படை முரண்பாட்டுக்குட்பட்டதே. இம் முரண்பாட்டை தீர்த்துக் கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. இப் பெண்ணின் இம் முரண்பாடு ஒரு புரட்சியினூடாக தீர்க்கப்பட்டிருக்க முடியுமே ஒழிய அதைக்கண்டு அஞ்சி அதிலிருந்து விடுபட தன்னைதான் அழித்துக் கொள்வதல்ல. மாறாக வீரத்துடன் எதிர்த்துப் போராடவேண்டும். இன்று இந்தியாவில் பெண் ஒடுக்குமுறையின் தீவிரத் தன்மையால் அங்குள்ள பெண்கள் தற்கொலை செய்வது தீர்வாகுமா? ஏன் இதன் விளைவாக கருவில் உள்ள பெண் சிசுவைப் அழிப்பதும், பிறந்த பின் பெண் குழந்தைகளைக் கொல்வதும் தற்கொலைக்கு ஒத்ததேயாகும.; நீ தற்கொலை செய்வதைவிட இப்போதே சா எனச் சமூக அங்கீகாரத்தோடு கொல்கிறார்கள். இவைகளை வீரம், தியாகம் எனின் போராடுபவர்களை என்னவென்று சொல்வது? கோழைகள் என்பதா?

 

புரட்சியின் போது சிறையிலுள்ள ஒருவன் மரணத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போது அவன் தனது உயிர் வாழ்வுக்காகக் காட்டிக் கொடுக்க முடியும் தானே. இதை வாழ்வுக்கான வீரம், தியாகம் எனச் சொல்லமுடியுமா? நித்தியின் வாதத்தில் இவை வீரம், தியாகமே. சாவா, வாழ்வா என்ற நிலையில் வாழ்வுக்காகக் காட்டிக்கொடுக்கும் தன்மை வீரமல்ல தியாகமல்ல மாறாக துரோகத்தனமே. இங்கு சாவை எதிர்த்துப் போராடும் வாழ்வே வீரத்துக்கும் தியாகத்திற்கும் உரியது. சிவரமணி மணணில்(அவர் தப்பித்து வெளிவர முடியாத நிலையிருந்திருப்பின் மட்டும்) நெருக்கடியை முகம் கொடுத்து போராடியிருக்க வேண்டும். புலிகள் கைது செய்திருப்பின் ஏன் 5001 வது கைதியாக மாறியிருக்க முடியாது. மாறாக தற்கொலை செய்வதன் ஊடாக புலிகள் அழியப் போவதில்லை. மாறாக புலிகளின் அடக்குமுறையை நேரடியாக ஈடுபட்டு அம்பலபட்டு போகாத வரையில் தன்னைத்தான் கொன்று புலிகளுக்கு ஏற்பட்டிருந்த இக்கட்டிலிருந்து புலிகளை காப்பாற்றி விடுகிறார். இத் தன்மையிலிருந்து நித்தி தற்கொலையை புலிகளிடம் (இங்கு புலிகள் அம்பலமாவதை தடுக்க) பிடிபடாமல் இருக்க ஊக்குவிக்கின்றார். தொழிற்சங்கங்களுக்கு தலைமை தாங்கும் பலர் இன்று துரோகத்தை கடைப்பிடிக்கின்றனர். அவர்கள் கூட இந்த இரும்புத்திரையைக் காரணமாக கூறி தமது நிலையை நியாயப்படுத்த முடியும். தற்கொலை, காட்டிக்கொடுப்பு புரட்சி ஊழியர்களை அந்தரத்தில் விட்டுச்செல்லல், எல்லாமே துரோகத்தனமான கோழைத்தனமாகும்.

 

இங்கு பேராசிரியர் இன்னுமோரிடத்தில் தற்கொலை கோழைத்தனம் என்ற வாதம் குறுட்டுத்தனமானது என வாதிட்டுள்ளார். அப்படிப் பார்த்தால் தற்கொலை வீரம். இதுவே பேராசிரியரின் வாதம். இங்கு தற்கொலை ஊக்குவிக்கப்:படுகிறது. இன்னுமோர் இடத்தில் தற்கொலைப்படை போல் முன் செல்வது தற்கொலைத் தாக்குதலை குறிப்பிட்டு இதை தற்கொலையென வருணித்திருந்தார். நித்தி தற்கொலையை சரியாக வகுத்துக் கொள்ள முடியாதுள்ளார். எந்த உயிரினத்தை எடுக்கும் போதும் அவை தமது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அவை (பெற்றோர்)தற்கொலைப்படை போல் (பேராசிரியரின் பார்வைப்படி) மோதி சிலவேளைகளில் மரணித்துப் போகின்றன. தமது வாழ்வுக்காகப் போராடும்போது மரணிப்பதை தற்கொலையென வாதிடமுடியாது. அதுவே உயிரின இயஙகியல் விதி. இதனூடாகவே உலகில் உள்ள எல்லாம் வாழ்கின்றன.

 

பேராசிரியர் மேலும் தென்கொரிய தொழிலாளி தாய்சுன், மாவோவின் மனைவி சியாங்சிங், எல்சல்வடோர் கொரில்லாத் தலைவர் கார்ப்பியோ, மட்டக்களப்பு கவிஞ்ர் சுபத்திரன், ......இவர்களின் தற்கொலைகளை சுட்டிக்காட்டியுள்ளார். மற்றும் லெனின் மரணிக்க நஞ்சு கோரினார் எனின் அதே நோயால் பீடிக்கப்பட்ட அனைவரும் நஞ்சுகோரமுடியும், இங்கு தற்கொலை செய்ய முடியுமென நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது. ஏன் லெனின் வேறு வழிகளில் தற்கொலை செய்ய முடியாது போயிருக்கவில்லை. மாறாக நோயின் கடுமை இயல்பாகவே கோர வைக்கிறது. இதை இப்படிப் பார்க்கலாம். கடவுள் இல்லையெனச் சொல்லுபவன் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கடவுளே எனச் சொன்னால் கடவுள் இருக்கிறான் என்று ஏற்றுகொண்டவன் ஆகிவிடுமா? மாறாக சிறுவயதிலிருந்து இச் சமூக அமைப்பு ஊட்டி வளர்த்த கருத்துக்கள் தம்மை அறியாமல் வெளிப்படுவதே. சுயசிந்தனையை ஒரு விதத்தில் இழந்த நிலையில் இப்படிக் கோருவதேயாகும். லெனின் போன்றோர் சாதாரண மனிதர்களே. அவர்களே விமர்சனம், சுயவிமர்சனங்களைக் கடைபிடித்தவர்கள். மற்றவர்களுக்கு அதைப்பற்றி கூறி ஏற்க வைத்தவர்கள். தவறான எக் கருத்தையும் வெளியிடாதவர்கள் எனக் கூறுபவர்கள் இயங்கியலையும், பரிணாம விதியையும்; நிராகரிப்பவர்களே. நித்தியானந்தனால் பட்டியலிடப்பட்டவர்கள் இச் சமூக நெருக்கடிகளைக் கண்டு அவர்களின் வாழ்வுத்தளத்தில் நின்று போராட அஞ்சி தம்மை தாம் அழித்து தமது கோழைத்தனத்தை வெளிபபடுத்தியவர்கள். இவர்களின் தற்கொலைக்கு முந்திய வாழ்வு வீரத்துக்கும், தியாகத்துக்கும் உரியது. இவர்களின் தற்கொலை சமூகத்துக்குச் செய்த கோழைத்தனத்துடன் கூடிய துரோகமே.

 

சாதிப்போராட்டத்தில் சுபத்திரன் போல் மாவோவின் மனைவி போல் (நால்வர் குழு) எல்சல்வடோர் கொரில்லாத்தலைவர் போல்.... பலரும், தற்கொலைக்குப் பதில் இச் சமூகத்துடன் போராடி உயிர் வாழும் வீரர்களாகவும், தியாகிகளாகவும் போராடியிருக்க வேண்டும். இன்று சோமாலிய மக்கள் எலும்புக்கூடுகளாக வாழ வேண்டுமா? என நித்தியானந்தனிடம் கேட்பின் இல்லை தற்கொலை செய்வது சிறப்பு என வாதிடுவார். அம் மக்களின் வாழ்வும் விடிவற்ற இரும்புப்பிடிக்குள்ளானதே. இவர்கள் வாழ்வுக்காக எலும்புக்கூடுகளாகப் போராடுகின்றனர்.

 

புலிகள் தற்கொலையை முன்னெடுத்த போது எதிரியின் கைகளில் பிடிபடக் கூடாது எனக் கூறியபடி (இதை மீண்டும் இக்கட்டுரையில் நித்தி கூறியுள்ளார்.) எதிரியை மிகைப்படுத்தி பிரமிப்பில் ஆழ்த்திப் போராடும் புரட்சியாளர்களை கோழைகள் எனக் கூறி தற்கொலையை வீரம் எனச் சொல்லி தீர்வாக முன்வைக்கின்றனர். வரலாற்றில் எத்தனை சிறைக்கைதிகள் எதிரியின் பிடியில் சிக்கிய பின்னும் இன்று உயிர்வாழவில்லையா? போராட்டத்துக்கு தலைமை தாங்கவில்லையா? எதிரியுடன் மோதி இறக்கவில்லையா? இவர்களையெல்லாம் கொச்சைப்படுத்தி தற்கொலையின் முடிவுக்கான காரணத்தின் விழைவை வீரமெனப் பாராட்டி ஊக்குவிக்கின்றனர். தற்கொலையின் முடிவுக்கான காரணத்தின் விழைவை போராடியே வெல்ல முடியும்.

 

புலிகளில் இணையும் ஒருவனை எடுப்பின் அவன் சமூகத்திற்கு எனப் போராட வரும் தன்மை (இங்கு பிழைப்புக்காக வரும் பிரமுகர்களையல்ல) தியாகத்திற்கும், வீரத்திற்கும் உரியது. ஆனால் போராட வந்த பின் புலியின் ஒருவனின் நடவடிக்கை துரோகத்திற்கு உரியதாக மாறிவிடுகின்றது. இதுபோல் தான் சிவரமணியின் கவிதைகள் (இங்கு கவிதைகள் ஆராயப்படவேண்டும்) வீரத்துக்கும், தியாகத்திற்கும் உரியதாக இருக்கலாம். ஆனால் சிவரமணியின் மரணம் துரோகத்துக்கும், கோழைத்தனக்கும் உரியது. பேராசிரியர், சிவரமணி போன்றோர் ஈழத்தில் தறகொலை செய்ய வேண்டுமென்கின்ற அதேநேரம் இங்கு ஈழத்தை நோக்கி குரல் கொடுப்பவர்களைப் பார்த்து ஏற்றுமதி செய்து ரட்சித்து விடப்போவதாகச் சில சூனியங்கள் பிதற்றுவதாகக் கூறி புலிகளின் இருப்பை பாதுகாத்துள்ளார். புலிகளின் தற்கொலை கோழைத்தனமானது என நாம் சொல்லவில்லை வீரம் எனச் சொல்லி வக்காலத்து வாங்கியும், மற்றும் புரட்சியாளர்கள் புலிகளின் அடக்குமுறைக்கு உள்ளாகும் போது மக்களின் மத்தியில் ஏற்படப்போகும் பாதிப்பிலிருந்து புலிகளைப் பாதுகாக்க தற்கொலையை ஊக்குவித்தபடி புலியெதிர்ப்பாளர்களாக தம்மைக் காட்டி பிற்போக்கு அரசியலை பாதுகாக்க முயல்கின்றார்கள் இப் பிழைப்புவாதப் பிரமுகர்கள்.