12032022
Last updateபு, 02 மார் 2022 7pm

கோர்வையற்ற எண்ணங்களாக மதத்தீவிரவாதம் !

தீவிரவாதம் என்ற தீம்புயல் மதங்களில் மையம் கொண்டிருப்பது ஒப்புக் கொள்ளவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை அனைவருமே புரிந்து கொள்வது நல்லது. மதத்தை மையப்படுத்தி தீவினையாற்றும் தீவிரவாதிகள் எவரும் சாத்தானின் பிள்ளைகளாக மேலுலகத்தில் இருந்து குதித்து வந்துவிடுவதில்லை. இங்கே பூமியில் தாய்களின் மார்பில் பாலறுந்தியவர்களே.

 இவர்கள் ஒரே இரவில் மனமாற்றப்பட்டார்கள் மூளைச் சலவை செய்யப்பட்டார்கள், மதத்திற்கும் இவர்களுக்கும் தொடர்புகளே இல்லை என்னும் வாதம் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஏற்க்கப்படும், அல்லது சொல்லிக் கொண்டு இருக்கப்படும் என்பதை நன்கு சிந்திக்க வேண்டும்.

மதக்கூட்டங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் அனைத்து கூட்டங்களில், தத்தமது இறை நம்பிக்கையைவிட மாற்று மதத்தினரை எப்படி எதிர்கொள்ளவேண்டு,ம் தூற்றவேண்டும் என்பதையெல்லாம் மிகச் சரியாகச் சொல்லிக் கொடுக்கும் மதங்கள் எதுவுமே, தத்தமது மதத்தில் முளைக்கும் தீவிரவாத விதைகளை தீயிலிட்டு பொசுக்காமல் மதத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்கிற சாக்கு போக்குகள் வரும் காலத்தில் எள்ளி நகையாடப்படும் மேலும் தூற்றப்படும்.

நாங்கள் உத்தமர்கள் எங்கள் மதமே புனிதமானது என்பதைப் போன்ற வாதமே சகமனிதனை சுட்டுவீழ்த்துவதும், உடமைக்கும் உயிருக்கும் உத்தரவாதமின்மையைத் தரும் மதத் தீவிரவாதிகளின் மத்தியில் இருக்கும் எதோ ஒரு மதம் சார்ந்த கொள்கையின் இருக்கும் எதோ ஒரு தவறான (புரிதலில்) ஒன்றாகவே இருக்கிறது. இது போர் செய்வது தருமம் என்றும் வலியுருத்துக்கும் கீதையாக இருந்தாலும் சரி, புனித போர் என்று சொல்லப்படும் 'ஜிகாத்' ஆக இருந்தாலும் சரி. எல்லாம் ஒரே விதமான மனித குல வேரறுப்பு மகாவாக்கியங்கள் தாம்.

எங்கள் மதம் தீவிரவாதம் போதிக்கவில்லை என்று துன்பவேளையில் யாழிசைப்பவர்களே, தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள் ? பிறக்கும் போதே தீவிரவாதிகளாக பிறந்தவர்களா ? நேற்றுவரை நம்முடன் இருந்தவன் ஒருவனே நாளை நம் முன் தீவிரவாதியாக வந்து நம்முன் வந்து நிற்கிறான் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். நான் சிறுவனாக இருந்த போது என்னுடன் விளையாடிய இரு மத சிறுவர்களும் இன்று மதச்சார்பு என்ற பெயரில் முகங்களையே மாற்றிக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் யாவரும் இறைநம்பிக்கை ஊட்டப்படாமல் தீயவர்களின் கூடாரத்திலேயே வளர்ந்தவர்கள் அல்ல.

எங்கள் மதங்களுக்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை என்பது காலவதியாகிப் போகும் செய்தியாகிக் கொண்டிருப்பதை உணர்பவர் எவரோ அவர்களே மதங்களில் இருக்கும் தீமையை உணர்ந்து அகற்ற முன்வருவர். சீழ்பிடித்த சிரங்கை மருந்திடாமல் மறைப்பது அதை மேலும் பெரிதாக்கி உடலையே இழக்க நேரிடும் என்பதை உணர்க்க.

தீவிரவாதிகள் யார் ? என்ன செய்கிறார்கள் ? என்கிற புரிந்துணர்வு இருந்தால், செத்துப் போவதில் என் மதத்தைச் சேர்ந்தவனும் இருக்கிறான் என்கிற புரிந்துணர்வு இருக்கும். இதோ மதத்தீவிரவாதிகள் முன்பு சமாதானம் பேசும் மதவாதிகள் எவரையும் தன் மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக எவனும் கொல்லாமல் விடுவதில்லை. திரிசூலத்தில் இருக்கும் மூன்று முனைகளில் நடுவில் இருப்பது தன் மதத்தைச் சேர்ந்தவர்களை அழிப்பதற்கே என்ற அரைகூவலும், தீவிரவாத வெறியில் தம் மதத்து மசூதிக்குள்ளேயே வெடிகுண்டு வீசுவதும் ஒன்றே. தீவிரவாதத்திற்கான காரணம் மதத்தின் மையமாக இருப்பது கண்கூடாகத் தெரியும் போது, எரிந்து கொண்டிருப்பதை அறிந்தும் உடையில் தீப்பற்றவில்லை என்று சொல்லி ஏமாற்றி தன்னை தீயின் நாக்குக்கு தீக்கிரையாக்கும் செயலுக்கு ஒப்பானது.

மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை என்பதை மதவாதிகள் சொல்லக் கூடாது. மதவாதிகள் அவ்வாறு தொடர்ப்புகளை துண்டித்து காட்டும் போது பொதுமக்களே சொல்லுவார்கள். மதத்தீவிரவாதத்தால் சந்தேகத்தின் பெயரால் கைதாகுபவர்கள் அப்பாவி மதப்பற்றாளர்கள் மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல. அவர்களால் கொல்லப்பட்டுள்ளவர்களிலும் அப்பாவி மதப்பாற்றாளர்களும், மதமே வேண்டாம் என்று மண்டியிட்டு கெஞ்சுபவர்களும் உண்டு. இறந்தவர்களுக்கான இரக்கம் சிறிதும் இன்றி மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பே இல்லை என்னும் சீற்றமோ, போலிக் கண்ணீரோ மதத்தைக் காப்பாற்றும் நெடுநாளைய அணைப்பாக இருக்கவே முடியாது.

மதத்தீவிரவாதம் என்ற சொல் மதம் வேண்டாம் என்று சொல்பவர்களைவிட மதப்பற்றாளர்களாலேயே மிகுந்து சொல்லப்படுகிறது என்பதையும் உணர்க. மிகச் சரியான இறைநம்பிக்கை உடையவர் எவருமே மதச் சிந்தனைக்கும், இறை நம்பிக்கைக்கும் தொடர்பில்லை என்று சரியாக புரிந்து கொண்டிருப்பர். மதத்தின் தீவிரவாதத் தன்மைகளைச் சுட்டிக் காட்டும் போது அவர்களில் ஒருவரும் அதனை இறைவனை பழிப்பதாக எண்ணி மறுக்கவும் மாட்டார்கள்.

******

இறைவன் சாத்தானின் பிடியிலும், மாயையின் பிடியிலும் மனிதன் சிக்கி இருப்பது சொல்வது, மனிதன் மதங்களின் பிடியில் சிக்கி இருப்பது குறித்தான சொல்லே என்பதாகத்தான் எனக்கு புரிகிறது.

http://govikannan.blogspot.com/2008/11/blog-post_30.html&type=P&itemid=82468