Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

'நாம் உலகின் எந்த நாட்டினதும் தேசிய நலன்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்" என்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

'நாம் உலகின் எந்த நாட்டினதும் தேசிய நலன்களுக்கும் எதிரானவர்கள் அல்ல..... ஆனால் இந்தியப் பேரரசுடன் அறுந்து போன உறவை மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம்". 

 

போராடும் மக்கள் சக்திகளோடு அல்லாமல், மக்கள் விரோத இந்திய அரசோடு உறவுக்கு ஏங்குகிறார் புலிகளின் தேசியத் தலைவர். தென்னாசிய நாடுகள் மேலும், இந்திய தேசமெங்கும் வாழும் மக்கள் மேலும், அதிகாரத்தையும் அடக்குமுறையும் ஏவிவிட்டிருக்கும் ஆளும் சக்திகளின் உறவைத்தான், தேசியத் தலைவர் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்.

 

இந்த ஆளும் வர்க்கத்துக்கு எதிரான தமிழ்நாட்டு; மக்களின் எழுச்சி போராட்டம் என்பன, எமது போராட்டத்துக்கு ஒரு ஆதரவு சக்தி என்பதை நடைமுறையில் நாங்கள் காண்கின்றோம். ஆனால்   அவர்களையெல்லாம் புறந்தள்ளி, அப்போராடும் மக்களுக்கு விரோதமான மக்கள் எதிரியான இந்திய அரசோடு கைகுலுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

'மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம்" என்பதில், மீளவும் என்பதானது ஏற்கனவே இந்த உறவு இருந்தததாக ஒத்துக் கொள்கிறது. இடைமுறிவின்றி தொடர்ந்து இருந்திருப்பின் தற்போது தமிழீழம் என்ற குறிக்கோளில், ஆயிரம் ஆயிரம் மைல்களை தாண்டியிருப்போம் என்பதாகத்தானே பொருள் கொள்ளலாம்!?

 

இவ்வாறான ஒரு போக்கில் தான் மாத்தையா இந்திய நட்பை வலியுறுத்தியதாகச் சொல்லி, மாத்தையாவுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அதாவது இந்தியப் பேரரசோடு மோதல் வேண்டாம் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்ற போக்கில் சென்றதற்காக மரணதண்டனை வழங்கப்பட்ட அதே மாத்தையாவின் கருத்து, இன்று மரணதண்டனை வழங்கிய தேசியத் தலைவராலேயே மீளவும் ஒப்புவிக்கப்படுகிறது. அவ்வாறாயின் மாத்தையா இதுவரை காலமும் துரோகியாக இருந்தவர்,  தலைவரின் இவ் உரையின் பிற்பாடு தியாகியாகி மாவீரர் ஆகிவிட்டார் என்றல்லவா அர்த்தம்.

 

அதேவேளை இந்தியப் பேரரசு நடத்திய இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் போரிட்ட, அதாவது தேசியத் தலைவரின் வார்த்தையில் சொல்வதானால் இந்தியப் பேரரசின் உறவை அறுக்கப் போராடிய போராளிகளின் தியாகங்கள், வரலாற்றிலிருந்து ஒதுக்கப்பட வேண்டியவை என்கிறாரா!? இந்திய இராணுவத்தை வெளியேற்றிய, அதாவது உறவுக்கு இழுக்கை ஏற்படுத்திய இந்தப் போரில் மாய்ந்து போன போராளிகள் தியாகிகள், மாவீரர் என்ற நிலையிலிருந்து துரோகிகள் நிலைக்குப் போய்விட்டார்களா!?

 

அன்றைய தியாகிகள் பட்டியல் இன்றைய துரோகிகள் பட்டியலாகவும், அன்றைய துரோகிகள் பட்டியல் இன்றிலிருந்து தியாகிகள் பட்டியலாகவும், எதிர் முரணாக தலைகீழ் மாற்றம் பெற்றுவிட்டன பாரீர்.

 

"தேசியத்தலைவர்" தான் ஒரு பரதேசியத் தலைவர் என்பதையே, தனது இவ்வுரையின் முலம் மீண்டும்  நிரூபணமாக்கியுள்ளார். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கு எதிராக போராடி மாண்டு போன அத்தனை போராளிகளின் இழப்பையும் கொச்சைப்படுத்தி, அவர்கள் இனியும் மாவீரர்கள் அல்ல என்கின்றாரா!? பொழிப்பரை வழங்க பாலசிங்கமும் இல்லை. இந்தியாவை எதிர்த்துப் போராடிய மாண்ட,   போராளிகளின் குடும்பங்களுக்கு இவ் இழப்புகள் அநியாய இழப்பாக காட்டி, அதை காட்டிக் கொடுத்துள்ளார்.

 

புலிகள் அன்று செய்த இயக்கப்படுகொலைகளுக்கு (குறிப்பாக ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கப் போராளிகளின் படுகொலைக்கான) காரணம், இவர்கள் இந்திய நட்புறவுச் சக்திகள் என்பதாக கூறியே பல நூறு போராளிகளை நரவேட்டையாடியவர்கள் புலிகள். குற்றுயிரும் குறையுயிருமாய் ரயர் போட்டு துடிக்க துடிக்க தீவைத்து தெருவெங்கும் பயங்கரம் விளைவித்தவர்கள்,  இன்று 'உறவை மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம்" என்கின்றனர்.

 

அன்று என்ன காரணத்துக்காக இப் படுபாதக கொலைகளை செய்தார்களோ, அதே இந்திய அரசின் கைகுலுக்க மண்டியிட்டு நிற்கின்றார்கள் புலிகள்.

 

அப்போதும் இப்போதும், ரெலொ ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கப் போராளிகள் தியாகிகளோ மாவீரர்களோ அல்ல. இவர்களது இயக்கத் தலைமைகளான சிறீ சபாரத்தினம், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா இன்று துரோகிகளிலிருந்து, தியாகிகளாக மாவீரர் பட்டியலுக்கு மாற்றம் பெற்று விட்டார்களா!?

 

கைக்கூலியான முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளை, இனி நாம்  மேள தாளங்களுடனும் மாலை மலர்களுடன் வரவேற்பளிக்க வேண்டியது தான் பாக்கி.

இந்திய இராணுவத்தை வெளியேற்ற கோரியவர்கள், இனி துரோகிகள் பட்டியலில் சேர்த்து துடைத்தெறியப்பட வேண்டியவர்கள். அவர்களை தூக்கி நிறுத்தபவர்கள் தான் இனித் தியாகிகள். தலைவர் அதைத்தான் கோருகின்றார்.

 

இத்; தியாகிகள் பட்டியலில் துரோகியெனக் கூறிய மாத்தையாவுக்கே இனி முன்னிடம் என்கிறார் தேசியத்தலைவர். மாத்தையா துரோகியாக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டது மாபெரும் வரலாற்றுத் தவறு என்கின்றார் தேசியத் தலைவர். பத்மாநபா, சிறீ சபாரத்தினம் போன்றோர் இந்திய அரசின் எடுபிடிகளாகியவர்களாதலால், அன்று அவர்கள் கொலைசெய்யப்பட்ட நிகழ்வுகள் இந்தியப் பேரரசின் உறவைக் காயப்படுத்தியவை தானே!? அந்த காயத்தை நாம் சரி செய்ய விரும்புகின்றோம் என்கின்றார். அப்படியாயின் இக்ககொலைக்காளானவர்கள் அவர்கள் தியாகிகளா!? இக் கொiலைகள் வரலாற்றில் இந்திய பேரரசுக்கு ஏற்படுத்திய வடுக்கள் அல்லவா!? எனவே இவ்வாறான வடுக்களை துடைத்தெறிய, இவர்களது மரணங்கள் தியாகிகளின் மரணங்கள் என்கின்றார் தேசியத் தலைவர்.

 

தியாகிகளையும் துரோகிகளையும் இடம் மாற்றி இழிவுபடுத்தும் தேசியத் தலைவரின் பேச்சு, தேசியத் தலைவர் தேசியத் தலைவரே அல்ல என்பதை தெட்டத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றது.

 

யாரோ இடையில் வந்து முடிச்சுப் போட்டு மூட்டி வைத்து விட்டதனால் தான், இந்தியப் பேரரசோடு போருக்குப் புறப்பட்டு போராளிகளை இழந்தோம் என்கின்றார். மக்கள் அதனால் அவலங்களைச் சந்தித்தார்கள் என்கிறார் தேசியத் தலைவர். இப்படி எதுவும் நடக்காவிட்டால், இந்தியா இன்று இவர்களது இலட்சியமான தமிழீழத்தை தாம்பாளத்தில் வைத்து தந்து விட்டிருக்கும் என்கிறார் தேசியத் தலைவர். ஏன் இன்றும் கூட இந்தியப் பேரரசோடு உறவைச் சீர்செய்து கொள்வதே, தமிழீழத்தின் சாத்தியப்பாட்டுக்கான நிபந்தனைகளில் ஒன்று என்கின்ற போக்கில் தேசியத் தலைவர் அறைகூவல் விடுகின்றார். போராட்டத்தலைமையின் தீர்மானகரமாக பாத்திரம் இந்தியப் பிச்சைப் பாத்திரமே என்று கூறுவதுடன், கையேந்தி நிற்கும்படி தமிழ்மக்களை கேட்டுக் கொள்கின்றார் தலைவர்.

 

இந்தியப் பேரரசின் (குறித்துக் கொள்க : போராட்டத்துக்கு ஆதரவான பரந்துபட்ட இந்திய மக்கள் சக்தியல்ல) உறவென்பதன் ஊடாக, தான் ஒரு வெறும் தரகு என்பதையும் கூறியிருக்கின்றார்.

 

தேசியத் தலைவரின் மாவீரர் உரை ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவே இருக்கின்றது. பெரும்பாலான விடயங்கள் அப்படியே அவர்களுடைய நடைமுறைக்கே பொருந்திப் போயிருக்கின்றது.

 

இந்திய இராணுவம் தமிழ்மக்கள் மேல் ஏவிவிட்ட பயங்கரங்களை கொலைகளை ஒரு கெட்ட கனவாக மறந்து விடும்படியும், ராஜீவ் காந்தி; கொலைசெய்யப்படாமல் இருந்திருந்தால் தமிழீழமே இன்று சாத்தியப்பட்டிருக்கும் என்றும், குறிப்பாலுணர்ந்து கொள்ளும்படியும் தமிழ்மக்கள் அனாதைகளாக   விடப்பட்டிருக்கின்றார்கள்.

 

ராஜீவ் வாழ்க இந்தியப் பேரரசு வாழ்க என்று கோசம் எழுப்புங்கள் மக்களே. இந்திய இராணுவமே மீண்டும் வருக. மாலைகளோடும் உபசாரங்களோடும் வீதிகள், தெருக்கள் பட்டி தொட்டிகளெல்லாம் நாங்கள் உங்களை இன்முகத்துடன் வரவேற்க மீண்டுமொருமுறை காத்திருக்கின்றோம்.

 

வேறென்ன செய்யச் சொல்லுகின்றீர்கள். உங்கள் பூட்ஸ் காலடியோசை கேட்க, எங்கள் குழந்தைகள் ஏங்குகிறார்கள். இந்திய இராணுவ சிப்பாய்களே உங்கள் நகக் கீறல்களின் சுவையறிய, எங்கள் பெண்களும் தாய்மார்களும் தங்கள் முதுகுகளை மீண்டும் தயார்படுத்தி வைத்திருக்கிறார்கள். வருக வருக, தமிழீழத்துடன் வருக.

 

சிறி
29.11.2008