நாம் எதிர்பார்த்தது போல் 450 வருடங்கள் பழைமை வாய்ந்த முஸ்லீங்களின் பாரம்பரியம் மிக்க பாபர் மசூதியை, பாரதிய ஜனதா, விஸ்வ இந்து பரிசத், பஜ் ரங்தத் ஆகிய பிழைப்புவாத அரசியல் மத வெறி கும்பல்களால் பாமர உழைக்கும் மக்கள் வெறியூட்டப்பட்டு மசூதி உடைப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மனித நாகரீகத்துக்கு சவாலாக நடத்தபட்ட இச்சம்பவத்தில் ஆயிரத்தி நூறு மனித உயிர்கட்கு அதிகமாகவும், இது சம்மந்தமாக ஏற்கனவே தொடர்ந்து வந்த தாக்குதலில் 3000 மனித உயிர்கட்கு அதிகமாகவும் பலி கொடுக்கப்பட்டுள்ளது.

 

வறுமை, பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவசிய தேவைகள் புறக்கணிப்பு, இனவொடுக்குமுறை, பொலிஸ் அடக்குமுறை ஆகிய முரண்பாடுகளால் வர்க்கரீதியில் அணிதிரண்டு வரும் உழைக்கும் பாமர மக்களை நிலபிரபுத்துவ, தரகுமுதலாளித்துவ சக்திகள் பந்தாடி கூறுபோடும் பிழைப்புவாத அரசியலில் இது ஓர் அங்கம் மாத்திரமே.

 

ஆளும் காங்கிரஸ் பிழைப்புவாதிகள் மசூதி கட்டித் தரப்படும் என அறிவித்ததை நோக்குமிடத்து, எதிர்காலத்தில் தொடரவிருக்கும் பேச்சுவார்தையிலோ உயர்நீதி மன்ற தீர்ப்பின் மூலமோ, மசூதியையும் ராமர் கோயிலையும் ஒரே நேரத்தில் அமைத்து சமன் செய்ய முயற்சிக்கலாம். எது எப்படி அமைந்த போதிலும் இராமர் கோயில் அமைவது உறுதியாகியுள்ளது. இதுகாலவரையிலும் சிறுபான்மை முஸ்லீம்கள் ஆங்காங்கே மதத்தின் பெயரரல் தாக்கபட்டபோதிலும், அயோத்தியின் அதிரடி நடவடிக்கை மூலம் போலிமதச்சார்பின்மை முழு உலகத்திற்க்கும் அம்பலப்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையோடு பிணைந்துள்ள மதம் மக்களின் அழிவுகளை மாத்திரமே காலத்திற்கு காலம் நமக்கு பெற்றுத் தந்துள்ளது.

 

நாட்டைச் சூறையாடவும், மக்களின்; வாழ்வை அபகரிப்பதற்கும் புராண கால இராமரை நாடிநிற்கும் இப் பிழைப்புவாதிகளுக்கு உழைக்கும் மக்களால் மாத்திரமே சரியான தண்டனை வழங்கமுடியும்.