01312023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

இலக்கிய சந்திப்பும் பிழைப்புவாதப் பிரமுகர்களும்

இன்று ஜரோப்பாவில் முற்போக்குகள் எனக் கூறிக் கொள்ளும் எல்லோரையும் நாம் முற்போக்குகளாக ஏற்காமையைப் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டியுள்ளோம். இம் முற்போக்குள் விமர்சனமா? என்று கேள்விக் கணைகளுடன் தாக்குகின்றார்கள். முற்போக்கு எனச் சொல்லிக் கொண்டவர்களின் எம் மீதான தாக்குதலை தொடர்ந்து நாம் இது தொடர்பாக விளக்க முற்பட்டோம். சமர் தனக்கென ஒரு அரசியல் கொள்கையைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையிலிருந்தே எமது விமர்சனம் அமைகிறது. நாம் எமது கருத்துக்களை அரசியலின்றி வெறும் தாக்குதலாகச் செய்யவில்லை. அப்படி அரசியலுக்கப்பால் தாக்குதல் செய்ததாக எழுத்திலோ எதிலோ சுட்டிக்காட்டின் சுயவிமர்சனத்தை நாம் பூரணமாகச் செய்யத் தயாராக இருக்கின்றோம். நாம் தனிநபர் மீது ஏன் இன்று விமர்சனத்தை முன் வைக்க வேண்டியுள்ளது என்பதை விளங்கப்படுத்தினோம். கடந்த சமர் இதழில் ஆசிரியர் தலையங்கம், இவ்விதழின் ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதியின் அடிப்படையில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அப்போது உதாரணத்துக்கு ஓரிரு விடயங்களே சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு பெண்ணுடன் ஏழு பேர் தொடர்பு கொண்டதை சுட்டிக்காட்டி (என்-எல்-எவ்-டி- வரலாற்றைப் படிக்கவும்) இதை விமர்சிக்கக் கூடாதா? ஜந்தாறு பெண்களை அரசியலைப் பயன்படுத்தி ஏமாற்றின் விமர்சிக்கக் கூடாதா? என்ற கேள்விகளை எழுப்பியிருந்தோம்.

 

இதைத் தொடர்ந்து உடனடியாக ஜெயபாலன் எழுந்து கடுமையான வார்த்தைகளால் வாயில் வந்தபடி சமரைத் தாக்கினார். அத்துடன் மாவோவை உதாரணத்துக்கு எடுத்தவர் சமர் சார்பாகப் பேசியவரைக் குறிப்பிட்டு உம்மை மாவோயிஸ்ட் என நம்பியதாகவும், மாவோவின் வாழ்வில் சம்மந்தப்பட்ட பெண்கள் தொடர்பாக மாவோ மீது அவதூறு சொல்வதாக கூறினார். ஜெயபாலன் கூறிய இக் கூற்று மாவோவுடன் ஒப்பிட்டு, அதை தனக்குப் பொருந்துவதை தாமாகவே ஏற்றுக்கொண்டார். மாவோ வரைமுறை மீறி பல பெண்களுடன் தொடர்புகொண்டிருந்தால் அது அடிப்படையில் தவறானது மட்டுமின்றி அது விமர்சனத்துக்குட்பட்டதே. மாவோவின் தத்துவங்களை ஏற்கும் நாம் அவரின் தவறுகளை விமர்சிப்பவர்களே. அப்படி மாவோ செய்திருந்தால் அதைச் சொல்லி ஜெயபாலன் செய்யின் அது மாவோவை சொல்லிப்பிழைக்கும் பிழைப்புவாதமே. மாவோ பெண்கள் தொடர்பாக மத்திய குழுவில் விவாதம் நடைபெற்றதாக அறிகின்றோம். அங்கு விமர்சனம், சுயவிமர்சனம் இது தொடர்பாக நடைபெற்றிருக்கும். இது தொடர்பாக பெரிதாக தெரிந்து கொண்டிராத நிலையிலேயே உள்ளோம். ஜெயபாலன் இதை நியாயப்படுத்தி தனது செயலை நியாயப்படுத்த முயன்றார். கடந்த காலப் போராட்டத்தில் ஜெயபாலன் பெண்களை சதைப் பிண்டங்களாக பயன்படுத்தியதை பலரும் அறிந்ததே. இவர் ஆண் பெண்ணுக்கிடையிலான உறவை தவறாகப் பயன்படுத்தினார். இவர் சமூக அரசியல் இயக்கத்தைப் பயன்படுத்தி அதில் பங்குகொண்ட பெண்களுக்கு தன் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் தசைகளை ரசித்தவர் தான். இதை மறுக்கமுடியாத வகையில் (உமாமகேஸ்வரன் கொலைகளை செய்தது போல்) கடந்த காலத்தில் இவருடன் இயக்கத்திலிருந்த அனைவரும் அறிவர். குறித்த பெண்கள் இவர் தம்மை மணம் செய்வார் (இவரின் பெண்விடுதலை தொடர்பான கருத்துக்கள் மீதான நம்பிக்கையில் ) என்ற நம்பிக்கையில் தம்மை இழந்தவர்கள் தான். நீர் மாவோவை வைத்து நியாயப்படுத்தாது சுயவிமர்சனத்தை மனப்பூர்வமாக செய்யவும். இவர் பேசி முடிந்த பின் சமர் ஆசிரியரை வெளியில் சந்தித்து தான் தவறாக பேசியதற்கு மன்னிப்பு கோரினார். மன்னிப்புக் கொடுக்க என்ன எம்மைக் கர்த்தர் என நினைத்தாரா? ஏனெனில் இது சுயவிமர்சனமாக அமையவில்லை. அடுத்த நாள் நடந்த சம்பவம் இதை உறுதி செய்தது.

 

அன்று தொடர்ந்து ஜெயபாலன் பாசாங்கு தொடாபாக இரு விடயங்களை சுட்டிக்காட்டினார். இது எம்மை மார்க்சிசத்தின் மீதும் தேசியத்தின் மீதும் பாசாங்கு செய்வதாக குற்றம் சாட்டினார். பாசாங்கு, மற்றும் மாவோ தொடர்பான கருத்துக்களை கூறி சமர் மீது தாக்குதலை தொடுத்த போது சபையிலிருந்தோர் கை தட்டி ஆரவாரித்தனர். மார்க்சிசத்தின் மீது எமது நிலையை பாசாங்கு எனச் சொன்னதுடன் மார்க்சிசத்தின் மீதும் தாக்குதலைத் தொடுத்தார். மார்க்சிசம் இறந்துவிட்டதென சொன்னதுடன் எப்படி ஏன் என்று சொல்லாமல் விட்டதுடன், எம்முடன் விவாதிக்க தயாரின்றி மாhக்சிசத்தை கதைப்பதைத் தடுக்கும் வகையில் நையாண்டி செய்து, தனிநபர் தாக்குதலாக மாற்றினார். தொடர்ந்து நடந்த கூட்டத்தொடரில் நாம் அனைத்துப் பிரச்சனைகளின் மீதும் அரசியலைக கொண்டுவர முற்பட்டபோது (மார்க்சிசமல்ல) அவர் தாக்குதலை நடத்தியதுடன், எம்மை பேசவிடாது தடுத்தார்.

 

மார்க்சிசம் இறந்து விட்டதெனச் சொல்லி வர்க்கப் போராட்டம் தொடர்பாக கதைக்க முற்பட்ட போது வெறுப்பைக் காட்டும் ஜெயபாலன் எந்த அரசியல் ஆய்வில் நின்று இம் முடிவைச் சொன்னார் எனப் பார்ப்போம் (ஜெயபாலன் பி-எல்-ஓ-டி-அமைப்பில் இணையும் முன் ஒரு சரியானதொரு அரசியலைக் கொண்டிருக்கவில்லை. அப்படி ஒரு சரியான அரசியலைக் கொண்டிருப்பின் பி-எல்-ஓ-டி-அமைப்பில் இணைந்திருக்கவே முடியாது. பி-எல்-ஓ-டி இல் இணைந்திருந்த ஜெயபாலன் பி-எல்-ஓ-டி-இன் உட்படுகொலையைத் தொடர்ந்து பலர் வெளியேறியபோதும் பி-எல்-ஓ-டி-க்கு மார்க்சிச மூலாம் பூசி நியாயப்படுத்தி பதவிக்காக அலைந்தவர். அத்துடன் இவர் இவ் அரசியலைப் பயன்படுத்தி பல பெண்களைப் தவறாகப் பயன்படுத்தியவர். பி-எல்-ஓ-டி இன் இயல்பான அழிவுடன் தானாக ஒதுங்கிக் கொண்ட ஜெயபாலன், தனது கடந்த காலத்தையோ தான் நியாயப்படுத்திய மார்க்சிசத்தையோ சுயவிமர்சனம் செய்யவில்லை. மாறாக அதே அரசியலைத் தொடர்ந்து பிழைப்புவாத நோக்கில் இன்று கடந்தகாலத்தின் மீதும் எந்த சுயவிமர்சனத்தையும் செய்யாது தொடரும் ஜெயபாலன் மார்க்சிசம் இறந்து விட்டதெனச் சொல்ல எந்தவித தார்மீக பலமும் கிடையாது.

 

அடுத்தநாள் பெண்விடுதலை தொடர்பான கருத்துக்கள் வெளிவந்தன. அதில் கருத்துச் சொன்ன நான்கு பெண்களில் மூன்று பெண்களின் கருத்துக்கள் இன்று ஜரோப்பாவிலுள்ள பெண்களின் பிரச்சனையைத் தொட்டு நின்றது. இது தொடர்பாக நாம் அவைகளைத் தீர்க்க என்ன மாதிரியான வேலைத்திட்டத்தை அதாவது எந்த வழிகளுக்கூடாகவெனக் கேட்க முற்பட்டபோது ஜெயபாலன் எம் மீது தாக்குதலைத் தொடுத்தார். தனிநபர் மீது அவதூறு செய்தார். குறித்த நபரின் மனைவி இதில் பங்கு கொள்ளாமையை சொல்லி அவர் மனைவியை அறையில் பூட்டி வைத்து விட்டு வந்ததாகச் சொன்னார். நோர்வேயிலிருந்து வந்த ஜெயபாலன் வாயில் வந்தபடி கண்மூடித் தனமான குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்துடன் தனது மனைவி மனநோயாளியாக உள்ளார் எனச் சொல்லி கண்ணீர் வடித்து கூட்டத்தின் அனுதாபத்தை பெற முயன்றார். மனைவியெனின் எந்த மனைவியெனத் தெரியாத நிலையில், மனைவி மனநோயாளியாவதற்கு தானே காரணம் என்பதை என்ன பேசுகின்றோம் எனத் தெரியாமல் ஏற்றுக்கொண்டார். அத்துடன் தான் தற்கொலை செய்ய முயன்றதாகவும் சொன்னார். இவரின் கண்மூடித்தனமான உளறல்களுக்கூடாக தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்டார்.

 

அதே நேரம் ஜெர்மனியிருந்து வந்திருந்த பெண்ணொருவரும் (இவர் ஜெயபாலனின் தங்கை) வேறொரு பெண்ணும் இதே அவதூற்றைப் பொழிந்தனர். இவற்றிக்கும், அதற்கு முதல் நடந்த சமர் இதழ் மீதும், மார்க்சியத்தின ;மீதும் தொடுத்த தாக்குதலுக்கும் பதிலளிக்க முற்பட்ட போது எமக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் தாக்குதலாக மாறும் நிலையையும் அடைந்ததை தொடர்ந்து நாம் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதைக் கண்டித்து சபையிலிருந்து வெளியேறினோம். நாம் வெளியேறிய பின் ஜெயபாலன் சபையில் மன்னிப்புக் கேட்டிருந்தாராம். இவரின் மன்னிப்பென்பது அர்த்தமற்றது. தாம் எதையும் வாயில் வந்தபடி கதைத்துவிட்டு கர்த்தரிடம் மன்னிப்பு கேட்பது போல் கேட்பது சுயவிமர்சனமாகாது. முதல் நாளும், இரண்டாவது நாளும் இருமுறை மன்னிப்புக் கேட்டு சுயவிமர்சனமென்பதை பாவமன்னிப்பென்ற நிலைக்கு கேவலமாக்கியதை பார்க்க முடிகிறது. ஜெயபாலன் தன்;னை தேவையான நேரத்தில் இடதுசாரியென பறைசாற்றிக் கொள்பவர். அவர் மார்க்சியத்தின் மீது தாக்குதலை தொடுத்ததுடன், மற்றவர்கள் மார்க்சியத்தின் மீது தொடுத்தபோது, அவர் அங்கீகரித்து கைதட்டி ஆரவாரித்ததினூடாக மிகத் தெளிவாக ஒடுக்கப்படும் வர்க்கத்தை சுரண்டுவதை ஏற்றுகொண்டார்.

 

ஆரம்பத்தில் எமது கருத்துக்களை தொடர்ந்து பாரதி என்பவர் எம் மீது தாக்குதலை நடத்தினார். நாம் எமக்கென ஒரு கொள்கையிருக்கின்றதென சொன்னதை சொல்லி இவர்கள் பயங்கரவாதிகள் எனச் சொன்னது தான் தாமதம் சபை கர ஒலிகளால் நிறைந்தது. ஏகாதிபத்தியங்கள் முதல் மூன்றாம் உலக நாடுகளை ஆளும் அரசுகளும், ஏன் புலிகளும் கூட அவர்களுக்கெதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகள் எனச் சொல்லி அழைக்கின்றனர். இக் கருத்தை கூறியவர்க்கும், கைதட்டி பாராட்டுக் கொடுத்தவர்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் என்ன வேறுபாடு உண்டு. இவர்கள் அவர்களின் செல்லப்பிள்ளைகளாகவும், அவர்களின் இருப்பை அங்கீகரிப்பவர்களாகவும் இருந்தனர். தொடர்ந்து பாரதி அடுத்த நாள் பெண்கள் விடயத்தில் நாம் அரசியலுடன் பேசியதைப் பார்த்து கூறினார். இவர்கள் போப் போன்ற சமயவாதிகள் என்றார். இப்படி அவர் கூறியவுடன் பலத்த கரகோசங்களுடன் சபை மகிழ்ச்சியை தெரிவித்தது. இது இன்று எமக்கு மட்டும் நடந்ததில்லை. யார் புரட்சியை நேசித்தார்களோ அவர்கள் மீது அரசுகள் மற்றும் பித்தலாட்ட பேர்வழிகள் இது போன்ற குற்றச்சாட்டை அடுக்கியவர்களே. உளவாளிகள், சமயவாதிகள், பயங்கரவாதிகள், கொலைகாரர்கள்......என யார் சரியான புரட்சிக்கு குரல் கொடுக்கிறார்களே அவர்களுக்கு வளங்கப்பட்ட பட்டங்களே. இதை கூறிய பாரதியோ அதற்கு கைதட்டி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டவர்களோ, எதைச் செய்கிறார்கள் என்பதை பயங்கரவாதிகள், சமயவாதிகள் ............ என்ற கூற்றுக்களுடன் தம்மை இனம்காட்டிக் கொண்டார்கள்.

 

பாரதி பேசிய இரு முறையும் சமர் மீது முரண்பாட்டுக்குள் முரண்பாடு கொண்டதாகக் கருத்துக் கூறியவர் முரண்பாட்டை சுட்டிக்காட்டவில்லை. மீண்டும் கேட்டோம் என்ன சொல்லுகிறீர்களென்று ஆனால் அவரால் எதையும் விளங்கப்படுத்த முடியாமல் வெறும் வார்த்தைகளை மட்டும் கொட்டி உளறினார். கூட்டத்தில் ஓரிருவர் அரசியல் நிலையில் நின்று பிரச்சனைகளைப் பார்க்க முற்பட்டபோது எம்மை நோக்கி பாரதி கேட்டார் எத்தனை பேர் வந்தீர்கள் என்று. இதற்கூடாக இவர்கள் மார்சிசத்தைக் கதைப்பதையோ, அதை நேசிப்பவர்களையோ வெறுப்புடன் பயங்கரவாதிகள், சமயவாதிகள் என அலறி தமது ஏகாதிபத்திய விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார்கள்.

 

பாரதி கார்த்திகை 92 இன் 21ம், 22ம் திகதிகளில் ஜெர்மனியில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார். அதில் இடம்பெற்ற விடயங்களாவன,

 

1) தேசியவாதம்

 

2) தேசியவாதமும் மார்க்சிசமும் ஒரு தொடர்பற்ற கூட்டு

 

3) தமிழ் தேசியம்

 

இந் நிகழ்ச்சிகளில் மார்க்சிசத்தை வெறுக்கும் பாரதி உட்பட சிலர் கலந்து கொண்டதுடன், வேறு சிலரும் இதில் மார்க்சிசத்தை வெறுக்கும் இவர்களின் கலந்துரையாடலின் நோக்கு எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் இவர்கள் மார்க்சிசத்தை நேசிப்பவர்களை பயங்கரவாதிகள், சமயவாதிகள்,..... எனச் சொல்வதனூடாக இவர்கள் சரியான ஒரு தேசிய விடுதலையைச் சிந்திப்பவர்களைக் குழப்புவது அல்லது அழிக்கும் நோக்குடன் சில பிரமுகர்கள் தமது பிழைப்பை நடத்துவதற்கு வழியமைத்ததே இந்நிகழ்வு.

 

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சிவசேகரம், மார்க்ஸ்ட், மனிதனும் மாசுபடும் சூழலும், ஜரோப்பிய இலக்கியஙகளும் நாமும்........ எனப் பல நிகழ்ச்சியில் உரையாற்றினர். இவர் ஆற்றிய உரைகள் எதிலும் இடதுசாரி அரசியலைக் கைவிட்டு தனது போலிமுகத்தை(அது அல்லது இதுவென) காட்டிக்கொண்டார். இவர் மார்க்சிசத்தை கதைத்தபோது அதற்கெதிராக குரல் கொடுத்ததுடன் கதைப்பதைத் தடுப்பதில் முன்னின்று செயற்படுத்தினார். கலாமோகன் வாசித்த கதையைத் தொடர்ந்து அசோக் என்பவர் கேட்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பாக பிரஞ்சு மொழியில் சிறந்த இலக்கியம் இல்லையே என்று. அக் கேள்விக்கு கலாமோகனே பதிலளிக்கவேண்டிய நிலையில் சிவசேகரம் கருத்து சுதந்திரத்தைப் மறுக்கும் வகையில் செயற்பட்டார். பிரஞ்சுப் புரட்சியும் சமகால இலக்கியமும் என்ற தலைப்பில் நாளை ஒருவர் கட்டுரை வாசிப்பாh.; அப்போது அவர் இதற்கு பதில் சொல்வார் என்றும், இப்போது கேட்க முடியாதென்றார். அடுத்தநாள் கட்டுரை வாசித்தவர் அதற்கு பதிலளிக்கவில்லை. கருத்துக்குப் பதிலளிப்பதைத் தடுத்ததுடன் இதை நாம் சுட்டிக்காட்டி இதன் தலைப்பு .ஜரோப்பிய இலக்கியமும் நாமும் எனச் சொன்னதுடன், தெரியாவிட்டால் தெரியாதெனச் சொல்வது தானே என்றோம். நாம் அந்நேரம் இந்த தலைப்பை மாறி உச்சரித்த சிவசேகரம் தலைப்பே சரியாகத் தெரியாமல் விமர்சிப்பதாகச் சொன்னதுடன் கேள்விக்குப் பதிலளிப்பதை வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டார். சிவசேகரம் எப்போதும் தனது கருத்துக்களை நேரடியாகச் சொல்லாமல் நழுவல் போக்குடன் சொல்பவரே. இவர் இலங்கையிலுள்ள சீனசார்பு புதியஜனநாயக் கட்சியின் ஒரு முக்கிய உறுப்பினரானவர். இவர் அனைத்துப் பிரச்சனைகளையும் பாராளுமன்ற வழிகளுடாக தீர்க்கப்பட முடியும் எனக் கருதுபவர். அதாவது 1970—1977 க்கிடைப்பட்ட காலத்திலிருந்தே சிறிமா சார்பு அரசுக்கள் போன்ற வடிவங்களால் தீர்க்க முடியுமெனக் கருதுபவர். சிறிமாவின் காலம் பொற்காலம் எனக் கருதுபவர். இன்று {-ஜ-தே-க- இடத்துக்கு மாற்றுத் தலைமையை(கூட்டு முன்னணியை) ஆதரிக்கத் தயாராகவுள்ளார். இவர்கள் தாம் அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதில் நம்பிக்கையற்றவர்கள். தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டுபவர்களுக்குச் சேவை செய்யக் கோருபவர்கள். இக் கட்சியிலுற்ற சிவசேகரம் போன்றோர்pன் கருத்து எப்போதும் புதியஜனநாயக கட்சியின் சார்பானதாகவே உள்ளது. அக்கருத்துக்கள் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டவை. இவர் பின் இடதுசாரிக் கருத்துக்களை உச்சரித்துக்கொண்டு தொழிலாளர்களை தமது அதிகாரத்துக்குட்படுத்தி போராடுவதை தடுக்கும் பச்சோந்திகள்.

 

இவர்கள் பாட்டாளி வர்க்கக் கருத்துக்களை உச்சரித்தவர்களைக் கண்டு வெறுப்பதுடன், அவர்களின் கருத்து சுதந்திரத்தை மறுக்கத் தம்மால் இயனறவரை முயல்வார். இதை நாம் 1971----1977 க்கிடைப்பட்ட காலத்தில் சிறிமா மக்களின் கருத்து சுதந்திரத்தை பறித்ததுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவர் தனது கருத்துக்களை நேரடியாகச் சொல்லாமல், அடிப்படையைத் தொடாமலும் நசுக்கிவிடும் போலிகளே. இவர் வர்க்கப் போராட்டத்தை ஏற்பவரல்ல. இன்று ஒடுக்குபவர்கள் வன்முறைகளுக்கூடாக ஆளுகின்றார்கள். ஒடுக்கப்படும் மக்கள் அதற்கெதிராக வன்முறைகளுக்கூடாகவே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்பதை ஏற்றது கிடையாது. இவர் பாராளுமன்ற வழிகளுக்கூடாக சமூகத்தை மாற்றிவிடமுடியும் எனச்சொல்லி தமது பிழைப்பை சீனாவுடன் நடத்துகின்றனர். சீனா இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதைக் கூடக் கண்டிக்க திராணியற்ற பிரமுகப் பச்சோந்திகள்.

 

மார்கழி 92 இன் சுவடுகள் இதழில் சிவசேகரத்தின் கருத்துக்களையொட்டி விமர்சனம் வெளி வந்திருந்ததது. அக் கருத்துக்களுடன் உடன்படுகிறோம். அதே நேரம் இது தொடர்பாக நாம் ஆராய்வோமாயின் தற்கொலை என்பதை வீரம், தியாகம் எனச் சிவசேகரம் வர்ணித்ததுடன் புலிகளின் பேச்சாளராகவும் மாறியிருந்தார். அண்மையில் பி.பி.சி. யில் புலிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பிரபாகரன் சயனைற் அருந்தும் தற்கொலைக் கொலையாளிகளின் வீரம், தியாகம் பற்றிச் சொன்ன கருத்துக்கும் சிவசேகரத்தின் கருத்திற்கும் வேறுபாடு கிடையாது. எதிரியிடம் சிக்காமலிருக்க தற்கொலை தான் ஒரே மார்க்கம் எனின் புலிகளிடம் இன்று சிக்கியுள்ள 5000 க்கும் மேற்பட்ட கைதிகளும் சயனைட் அருந்தி இறந்திருக்க வேண்டும். புரட்சியெனக் கூறி சிவசேகரம் போன்றோர் தலைமைகளில் இருந்திருந்தால் இன்று புலிகளின் வதைமுகாமிலுள்ள 5000க்கும் மேற்பட்டவர்களும் மரணித்திருக்க வேண்டும். உண்மையான புரட்சிவாதி தற்கொலைக்குப் பதில் சிறைவாழ்வை எதிர் கொள்ளல் வேண்டும். அவ் வாழ்வை எதிர் கொள்வதே வீரம் மட்டுமின்றித் தியாகமுமாகும். சிவரமணி போன்றோரின் தற்கொலை என்பது அடிப்படையில் கோழைத்தனமானது. சிவரமணி வெறும் கவிதைகள் மட்டுமென்ற நிலையிலிருந்தததுடன், தனது அரசியல் பாதையை வகுத்துக் கொள்ளாத நிலையிலிருந்ததும் தற்கொலைக்கான காரணம் எனலாம். கலை கலைக்காக மட்டுமென்ற வாதம் உடையவர்கள் கூட சில பிரச்சனைகளைக் கண்டு அதன் மீதான வெறுப்புடன் தற்கொலைகளை நாடுகின்றனர். அப் பிரச்சனைகளை மாற்றத் திராணியற்ற இவர்களின் மரணம் கோழைத்தனமானது. இதைத் தியாகம் வீரம் எனப் பிதற்றி சிவரமணியைச் சொல்லிப் பிழைக்கும் சிவசேகரத்தின் அரசியல் இதுவே.

 

ரதி உங்கள் வாதம் அடிபட்டு விட்டதெனத் தொடங்கிய நித்தியானந்தன் மார்க்சிசத்தை அவதூறு செய்து தனது கடந்தகால அரசியலின் தொடர்ச்சியை இனம் காட்டினார். உங்கள் வாதம் அடிபட்டுவிட்டது என்றதனூடாக சமூக மாற்றத்தை விரும்பிய அனைவரின் கருத்துக்களையும் சுட்டிக்காட்டினார். எமது வாதம் இச்சபையிலும் சரி, உலகத்திலும் சரி இன்றும் உயிர் வாழ்வது மட்டுமின்றி அதுவே உலகத்தை மாற்றும் தன்மை கொண்டது. இன்று சோவியத் முதல் சீனா வரை ஆட்சியிலுள்ள சீரழிந்த முதலாளித்துவமே(நித்தியானந்தன் விரும்புவது போல்) சமூகப் பிரச்சனையைத் தீர்க்க முடியுமெனக் கூறி ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் மூலம் அந்நாட்டின் மக்கள் முன்பு இருந்ததைவிட மிக மோசமான வறுமைக்குள் சென்றதுடன் மோசமான அடக்கு முறையையும் எதிர்கொள்கின்றனர். அந்நாடுகளில் மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் கம்யூனிஸ்ட்கள் இன்று மீண்டும் வீறுநடை போடுவதை இவர் போன்றவர்கள் கண்ணிருந்தும் குருடான அரசியல் குருடர்களுக்குத் தெரிய நியாயமில்லைத்தான்.இன்று மார்க்சிசம் அதாவது வர்க்கப் போராட்டம் உலகை மாற்ற முடியாதெனின் இவரும், இவர் போன்றோரும் வைக்கும் தீர்வு தான் என்ன? நித்தி, உமக்கு முதுகெலும்பு இருப்பின் நீரும், உமது சகபாடிகளும் சேர்ந்து வர்க்கப் போராட்டத்திற்கான மாற்றுத் தீர்வை (மாற்று வழியை) முன் வையுங்கள். உங்கள் அனைத்துக் கருத்தின் மீதும் அத் தீர்வையும், வழியையும் வையுங்கள். எது உங்கள் தீர்வு?

முகமூடிக்குள் நின்று பேசுவதைக் கைவிடுங்கள். எது உங்கள் அரசியல் வழியோ அதை முன்வையுங்கள்.

 

இவரும், இவர் போன்றவர்களும் அப்படி வைக்கவே போவதில்லையென நாம் நம்புகிறோம். ஏனெனில் வர்க்கப் போராட்டமே சுரண்டலை ஒழிக்கும். அது பிழையெனின் சுரண்டலை ஆதரிக்கும் இவர் போன்றவர்கள் எப்படி தமது அரசியல் கருத்துக்களை நேரடியாகச் சொல்லிப் பிழைக்க முடியாமல் போய்விடும். இவருடைய அரசியல் நிலையைச் சிறப்பாகப் புரிய வைக்க ஒரு சில உதாரணங்களைப் பார்க்கலாம். கடந்தகாலத்தில் இவர் விடுதலைப்புலிகளின் தத்துவவாதியாகவும், விடுதலைப்புலிகளின் பத்திரிகையாசிரியராகவும் இருந்தவர். அவற்றில் பல பல கட்டுரைகளையும் கவிதைகளையும்(இவை தாம் இவரின் இலக்கியங்கள்) எழுதியவர். (இன்று வரை அதை சுயவிமர்சனம் செய்யவில்லை. எப்படிச் செய்வார். அதுவே இன்று வரையான அரசியல்) அவற்றில் ஈ.பி.ஆர்-எல்-எவ்-வைச் செந்தோழர்கள் என நக்கலடித்து கவிதை வடித்தவர். அன்று செந்தோழர்கள் மீதிருந்த வெறுப்பு (புலிகளின் அரசியல்) இன்று வர்க்கப் போராட்டத்தைப் பற்றிக் கதைத்தவுடன் அதே தொடருடன் தாக்குதலை நடத்துகிறார். இதைத் தொடரும் இவரின் நடவடிக்கைக்கு மேலுமொரு உதாரணம், பிரான்சில் நடந்தவொரு கூட்டத்தில் இராமையா தொடர்பாக நித்தியானந்தன் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியைப் புலிகள் குழப்ப முயன்றனர். பலர் குழப்பத்திற்கெதிராகக் குரல் கொடுத்தனர். இதில் ஒருவர் நித்தியானந்தனைப் பார்த்து நீ யார் எனக் கேட்டதற்கு அவர் தான் ஒரு மனிதன் என்றும் சேட்டின் நிறத்தையும் சொல்லி தன் முகமூடியை இறுக்கப் போட்டுக் கொண்டார். அவனின் கேள்வியின் அர்த்தம் இதுவே. நானும் நீயும் சேர்ந்தே பல கொலைகளைச் செய்ததுடன் அதை நியாயப்படுத்தினோம். அத்துடன் நடந்த கொலைகளைச் செய்ததுடன் அதை நியாயப்படுத்தி அரசியல் முலாம் கொடுத்தது, எம்மை இயக்கத்தில் சேர்த்ததும் நீயே. அப்படியிருக்க இன்று என்ன நீ ஜனநாயகம் பற்றிப் புரட்டுகின்றாய்.? என்பதே அதன் அர்த்தம். அதற்கு அவர் சுயவிமர்சனத்துடன் (உண்மையில் கடந்தகால தனது அரசியலை கைவிட்டிருந்தால்) பதிலளிக்காமல் தனது போலிமுகங்களைக் காப்பாற்றிக் கொண்டார்.

 

இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் நித்தியை திலகர் வந்து சந்திக்க அழைப்பு விடுத்தார். அப்போது இவருக்கு ஒத்துழைப்பாக நின்ற பலரின் கருத்துக்களையும் மீறி திலகரைச் சந்தித்தார். நித்தி திலகர் தனியாகச் சந்தித்து சிற்றுண்டி உண்டு மகிழ்ந்தனர். இரு முரண்பட்ட அரசியலைக் கொண்டவர்கள்(உண்மையில் அப்படியல்ல) சுமூகமாக சிரித்து கதைத்து மகிழ்ந்தனர். இதில் அவர்கள் அரசியல் கதைக்கவில்லை என்று யாரும் வாதிடமுடியாது. நித்திக்கு அரசியல் நேர்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் புலிகள் தமது அரசியலில் நம்பிக்கையுள்ளவர்கள். அவர்கள் நித்தியுடன் பொழுது போக்குக்காக அழைத்துக் கதைக்கவில்லை. அவர்கள் தேவையுடன் மட்டும் அழைப்பவர்களே. சந்திப்பு முடிந்து வெளியில் வந்த நித்தி தாம் என்ன கதைத்தோமென தமது ஆதரவாளர்களுக்கு கூடச் சொன்னதில்லை.

 

இந்நிகழ்வு இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது புலிகளுக்கும், பிரோமதாசாவுக்குமிடையில் நடந்த இரகசிய தேன்நிலவைப் போன்றதே. புலிகள் தமது உறுபபி;னர்களுக்கோ, மக்களுக்கோ தம்முடைய இரகசிய தேன்நிலவு பற்றிச் சொல்லவில்லை. சொல்லப் போவதும் இல்லை. அதே அரசியலின் தொடர்ச்சியே. நித்தி திலகர் தேன்நிலவு பற்றி தமது ஆதரவாளர்களுக்கோ, மக்களுக்கோ சொல்லவில்லை, சொல்லப் போவதுமில்லை. இது புலிகள், பிரோமதாசா, தமக்கிடையே அரசியல் வேறுபாடு இல்லை என்பதையும் மக்கள் வர்க்கப் போராட்டத்தை நடத்தாமல் தடுக்கும் நோக்கில் இன்று யுத்தத்தை நடத்துவது போல் நித்தி, திலகர் சந்திப்பும் தமக்கிடையில் அரசியல் வேறுபாடின்மையையும் வர்க்கப் போராட்டத்தை தடுக்க (புலிகளின்; அரசியலை ஒதுக்க முயலும்) மூன்றாவது பாதையாளர்) தமக்கிடையில் முரண்பட்டிருப்பது போல் காட்டிக்கொள்வதன் அவசியத்தை புலிகள்- பிரேமதாசா போல் புரிந்து கொண்டனர்.

 

நித்தி தொடர்ந்து இலக்கியச் சந்திப்பில் நாவலன் என்பவர் சொன்ன கருத்தின் மீது அவை நாசிகளின் கருத்து என்று தனது தாக்குதலை நடத்தினார். இவர் நாசிகள் பற்றி ஓரிரு கட்டுரைகளை எழுதிவிட்டால் (அரசியல் இன்றி சம்பவங்களை) மட்டும் தான் எதிர்ப்பாளர்கள் என்ற முகமூடியை போட்டு விடுகிறார். நாவலன் சொல்லிய கருத்து வெளிநாடுகளில் 90 வீதமானவர்கள் பொருளாதார அகதிகளே என்பது. இப் புள்ளிவிபரம் சரியானதா என்பதைவிட இங்கு புகலிடம் பெற்றோரில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார அகதிகளே. இவர்கள் இலங்கையில் ஏற்பட்ட யுத்தமும் பொருளாதார நெருக்கடியும் இவர்களை இங்கு வர வைத்தது. நித்தி இவர்கள் அனைவரையும் அரசியல் அகதிகள் எனக் கருதுபவரெனில் இலங்கையிலுள்ள அனைவரும் அரசியல் அகதிகள் தான். இவர்கள் அனைவரிலும் இருந்து அரசியல் ரீதியில் அரசு மற்றும் விடுதலை இயக்கங்களின் கொலைப்பயமுறுத்தல் உள்ளவர்களையே மிகுதி பத்து(10) வீதமான அரசியல் அகதிகளுக்குள் நாவலன் குறிப்பிட்டார். இலங்கையியுள்ளோர் அனைவரையும் அரசியல் அகதியென ஏற்பின் நாட்டில் உள்ள அனைவரும்(முழுத் தமிழ்மக்களும்) நாட்டைக் கைவிட்டு இங்கு குடிபெயந்து வந்திருக்க வேண்டும். இதைத் தான் இங்குள்ளவர்கள் அனைவரையும் அரசியல் அகதிகள் என நித்தி அங்கரீத்துச் செய்ய நினைப்பது.

 

நாசிகள் சொல்லும் பொருளாதார அகதிகள் என்ற கூற்று வேறொரு நோக்கில் வெளிவந்ததே. நாசிகளின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்க்க ஒரு வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை புறம் தள்ளி கறுப்பினத்தவர் என்று முகம் கொடுத்தே புரட்சியை தடுக்க முயல்கின்றனர். இங்குள்ள அகதிகளை வெளியேற்றாதேயென நாமும் கோருகின்றோம். எந்த அடிப்படையிலெனின் இன்று இலங்கையில் நடைபெறும் யுத்தம், மற்றும் மக்களின் வறுமைக்கு காரணம் இந் நாடுகளே. யுத்தத்தை நடத்துபவர்களும் இவர்களே. இவ் யுத்தத்தை நடத்துவதனூடாக எம்மக்களை ஒட்டச் சுரண்டி கொழுப்பவர்களும் இவர்களே. அங்கு உள்ள நிலைமைக்கு இவர்களே காரணமாக இருக்கும் போது எம்மை வெளியேற்ற எக்காரணத்தையும் கூறமுடியாது என்பதே. இதே நோக்கில்(அரசியல் ரீதியில்) நாசிகளுக்கு எதிராக கருத்துக்களை கூற மறுத்து கருத்துக்களை திரிபுபடுத்தி நித்தி போன்றார் பிழைப்பதுடன் நாசிகளின் அரசியலை தொடர்கின்றார். அதாவது புலிகளின் அரசியலுக்கும், நாசிகளின் அரசியலுக்கும் எந்த வேறுபாடும் கிடையாத நிலையில் கடந்தகாலத்தில் புலிகளின் கொள்கைகளின் வகுப்பாளராகச் செயற்பட்ட நித்தி அதை சுயவிமர்சனம் செய்யாததுடன், திலகருடன் தேன் நிலவுகளை நடத்தும் இவர், தான் சொல்லும் கருத்துக்களில் அரசியலை நேரடியாகச் சொல்ல மறுப்பவர், மார்க்சிசம் இறந்து விட்டதென சொல்வதின் அர்த்தம் புரிந்து கொள்ளக் கூடியதே.

 

1984 இன் ஆரம்பத்தில் டெலோ அமைப்பிலிருந்து மேற்குறிப்பிட்ட நாவனும், நேருவும்(இவர் பின்னால் என்-எல்-எவ்-டி உறுப்பினர் என சுட்டுக் கொல்லப்பட்டவர்) மற்றும் வேறு சிலரும் தப்பியோடிய நேரம் இவர்களுக்கேற்பட்ட உயிராபத்தைத் தடுப்பதாக் கூறி புலிகள் பாதுகாப்பு வழங்கினர். அப்போது இவர்களுக்கு பொறுப்பாக இருந்த நித்தி பாதுகாப்பு என்ற பெயரில் புலிகளுடன் இணையும்படி வற்புறுத்தியதும், அது சாத்தியமாகாது போக அவர்களை மிரட்டிய நித்தி பின் அவர்களை வேறு இயக்கம் அமைக்கக் கூடாதெனச் சொல்லி எச்சரித்தார். இதன் பின் இவர்களின் பாதுகாப்பிலிருந்தும் தப்பித்துச் செல்லவேண்டிய நிலையேற்பட்டது. இதுவே நித்தியின் பாத்திரம் புலிகளுக்குள்.

 

நித்தி ஒரு கட்டத்தில் மார்க்ஸ்சைக் கூட விபச்சாரத்துக்கு அழைத்துக் கொண்டார். மார்க்சிசம் பெண்களின் உழைப்பை பற்றி சொல்லவில்லை மாறாக ஆணின் உழைப்பு பற்றி மட்டுமே கூறினார் என்றார். ஆண் உழைப்பு தொடர்பாக மார்க்சின் கருத்தை ஏற்காத நித்தி புலிகளின் பிரச்சாரகராக நின்று மார்க்சித்தைக் திரிபுபடுத்தினார். மார்க்ஸ் எப்போதும் ஆண் பெண் உழைப்பைப் பிரித்து தனது தத்துவத்தைக் கூறவில்லை. முதாலாளித்துவத்தின் தோற்றம் (இது நித்திக்கு தெரியாது) உழைப்பின் தேவையோடு பெண்களை ஈடுபடுத்தியது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி மீதே மார்க்ஸ்சின் தத்துவம் உருவானது. அதாவது முதலாளித்துவ வளர்ச்சியில் உழைப்புத் தொடர்பாக விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்து வெளிவந்ததே. இன்று வரை முதலாளித்துவவாதிகளுட்பட(நித்தி போன்ற வகையறாக்கள் தவிர) மார்க்ஸ்சின் தத்துவத்தையே ஏற்றுள்ளனர். உழைப்பு என்பது. ஆண், பெண்ணுக்குப் பொதுவானதே. நித்தி போன்றோரே மார்க்ஸ்சை விபச்சாரத்துக்கு கூப்பிட்டு பிழைக்க முயல்வதுடன், தனது புத்திஜீவித்தனம் என்று தனது முட்டாள்தனமான அரசியலை வெளிப்படுத்தினார்.

 


பி.இரயாகரன் - சமர்